Fast, Vighasa! | Anusasana-Parva-Section-93a | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 93)
பதிவின் சுருக்கம் : உண்ணாநோன்பின் குறியீடுகள்; தவங்களுக்கும் உண்ணாநோன்புகளுக்கும் இடையிலான வேறுபாடு; ஒருவன் விகஸம் உண்பவனாகும் நிலை ஆகியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஒரு பிராமணரின் அழைப்பின் பேரில், (உண்ணா) நோன்பை நோற்கும் பிராமணர்கள், (அந்தச் சிராத்தத்தில் அளிக்கப்படும்) ஹவியை உண்டால், தங்கள் நோன்பு தவறிய வரம்புமீறலுக்காக அவர்கள் குற்றம் சுமத்தப்படலாமா? (அல்லது அவர்கள் அத்தகைய அழைப்பைப் பெறும்போது அந்தப் பிராமணரின் அழைப்பை மறுக்க வேண்டுமா?) ஓ! பாட்டா, இஃதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "வேதங்களில் குறிப்பிடப்படாத அத்தகைய நோன்புகளை {அவேதோக்த விரதங்களை} நோற்கும் பிராமணர்கள் தங்கள் விருப்பத் தூண்டுதலின் பேரில் உண்ணலாம். எனினும், வேதங்களில் குறிப்பிடப்படும் நோன்புகளை நோற்கும் பிராமணர்களைப் பொறுத்தவரை, ஓ! யுதிஷ்டிரா, சிராத்தம் செய்பவனின் வேண்டுகோளுக்கு இணங்க சிராத்த ஹவியை உண்பதன் மூலம் அவர்கள் தங்கள் நோன்பைக் கெடுத்த குற்றம்புரிந்தவராகக் கருதப்படுவார்கள்" என்றார்.(2)
யுதிஷ்டிரன், "சில மனிதர்கள் உண்ணா நோன்பை {உபவாஸத்தை} தவம் என்கின்றனர். உண்மையில் தவமானது உண்ணா நோன்புடன் அடையாளங்காணத் தக்கதா? இல்லையா? ஓ! பாட்டா, இஃதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(3)
பீஷ்மர், "ஒரு மாத காலமோ, அரை மாத {ஒரு பக்ஷ} காலமோ தொடர்ந்து உண்ணா நோன்பிருப்பதைத் தவம் என்றே மக்கள் கருதுகிறார்கள். எனினும், தன் உடலைத் துன்புறுத்திக் கொள்பவன் தவசியாகவோ, கடமைகளை அறிந்தவனாகவோ கருதத்தக்கவனல்ல என்பதே உண்மை[1].(4) எனினும், துறவானது தவங்களில் சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஒரு பிராமணன் எப்போதும் உணவைத் தவிர்ப்பவனாகவும், பிரம்மச்சரியம் என்றழைக்கப்படும் நோன்பை நோற்பவனாகவும் இருக்க வேண்டும்[2].(5) ஒரு பிராமணன் வாக்கையும் {பேச்சையும்} தவிர்த்து எப்போதும் தன்மறுப்பைப் பயின்று வேதமுரைக்க வேண்டும். அந்தப் பிராமணன், அறமீட்டும் விருப்பத்தால், திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளும், உறவினர்களும் சூழ இருக்க வேண்டும். அவன் உறங்கக்கூடாது {எப்போதும் உறங்கிக் கொண்டிருக்கக்கூடாது}.(6) அவன் இறைச்சியைத் தவிர்க்க வேண்டும். அவன் எப்போதும் வேதங்களையும், சாத்திரங்களையும் படிக்க வேண்டும். அவன் எப்போதும் வாய்மை பேசி, தன்மறுப்பைப் பயில வேண்டும்.(7) அவன் விகசம் (தேவர்களுக்கும், விருந்தினர்களுக்கும் படைத்த பிறகு எஞ்சும் உணவை) உண்ண வேண்டும். உண்மையில் அவன் தன் வசிப்பிடத்திற்கு வரும் அனைவரையும் விருந்தோம்பலுடன் வரவேற்க வேண்டும். அவன் எப்போதும் அமுதம் (விருந்தினர், பணியாட்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் உண்ட பிறகு எஞ்சும் உணவை) உண்ண வேண்டும். அவன் சடங்குகள் அனைத்தையும் முறையாக நோற்று, வேள்விகளைச் செய்ய வேண்டும்" என்றார்.(8)
[1] "அஃதாவது, உடலைத் துன்புறுத்தும் உண்ணா நோன்பானது தவத்திற்கு இணையானதாகக் கருதத்தக்கதல்ல. உண்மைதவம் என்பது வேறாகும். அத்தகைய உண்ணா நோன்பை நோற்பவனை ஒரு தவசியாகக் கருத முடியாது. மேலும், அத்தகைய உண்ணா நோன்புகள் பலன் தருவதற்குப் பதிலாகப் பாவம் நிறைந்தவையாகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். இங்கே மூலத்தில் ஆத்மதந்திரோ என்று இருக்கிறது. "உடலின் வடிவத்தைக் கெடுப்பவன் என்பது இதற்கான பொருளாகும்" என்று கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில் இருக்கிறது.[2] இரண்டாம் வரியில் வரும் உபவாசம் என்பது குறிப்பிடப்படும் இரு நேரங்களுக்கிடையில் உண்ணாமல் இருப்பதைக் குறிக்கிறதேயன்றி, உடலைத் துன்புறுத்தும் உண்ணாநோன்பைக் குறிக்கவில்லை. மேலும் ஒருவன் பற்றில்லாமலேயே மிக ஆடம்பர உணவையும் உண்ணலாம். ஒருவன், உண்ணாமல் தவிர்த்தாலும், மிக ஆடம்பர உணவை உண்மையில் அனுபவிப்பவனாகவே கருதப்படுகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஒருவன் எப்போதும் உண்ணா நோன்புகளை நோற்பவனாகக் கருதப்படுவது எவ்வாறு? அவன் நோன்புகள் நோற்பவனாவது எவ்வாறு? ஓ! மன்னா, அவன் விகசத்தை உண்பவனாவது எவ்வாறு? எதைச் செய்வதன் மூலம் அவன் விருந்தினர்களுக்குப் பிடித்தமானவன் ஆகிறான்" என்று கேட்டான்.(9)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "காலையிலும், மாலையிலும் குறிப்பிடப்படும் நேரங்களில் மட்டுமே உணவை எடுத்துக் கொண்டு இடைப்பட்ட நேரத்தில் எந்த உணவையும் தவிர்ப்பவன், உணவைத் தவிர்ப்பவனாக {உண்ணா நோன்பிருப்பவனாகச்} சொல்லப்படுகிறான்.(10) ஒருவன் தான் மணந்து கொண்ட மனைவியிடம் மட்டும், அவளது பருவகாலங்களில் மட்டும் கலவி புரிபவனாக இருந்தால் அவன் பிரம்மச்சரிய நோன்பை நோற்பவனாகச் சொல்லப்படுகிறான். எப்போதும் கொடையளிப்பதன் மூலம் ஒருவன் வாக்கில் {பேச்சில்} வாய்மைநிறைந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(11) {வேள்வியில்லாமல்} ஒன்றுமில்லாமல் கொல்லப்படும் விலங்குகளில் இருந்து கிட்டும் இறைச்சிகள் அனைத்தையும் தவிர்ப்பதன் மூலம் ஒருவன் இறைச்சியைத் தவிர்ப்பவனாகிறான்[3]. கொடைகள் அளிப்பதன் மூலம் ஒருவன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். பகல் நேரத்தில் உறக்கத்தைத் தவிர்ப்பதன் மூலம் அவன் எப்போதும் விழிப்புடன் இருப்பவனாகக் கருதப்படுகிறான்.(12) விருந்தினர்கள், பணியாட்களின் தேவைகளுக்குத் தொண்டாற்றிய பிறகு எஞ்சுவதையே எப்போதும் உண்பவன், எப்போதும் அமுதத்தை உண்பவனாகச் சொல்லப்படுகிறான்.(13)
[3] "வேள்வியில் கொல்லப்படும் விலங்குகளின் இறைச்சி அனுமதிக்கப்படுகிறது. அத்தகைய இறைச்சியை உண்பதன் மூலம் ஒருவன் இறைச்சி உண்பவனாவதில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பிராமணர்கள் (உணவை) உண்ணும் வரை உண்ணாமல் தவிர்ப்பவன், அத்தகைய தவிர்த்தலின் மூலம் சொர்க்கத்தையே வெல்பவனாகக் கருதப்படுகிறான்.(14) தேவர்கள், பித்ருக்கள், உறவினர்கள், சார்ந்திருப்பவர்கள் ஆகியோருக்குப் படைத்த பிறகு எஞ்சுவதை உண்பவன் விகசம் உண்பவனாகச் சொல்லப்படுகிறான்.(15) அத்தகைய மனிதர்கள், பிரம்மனின் வசிப்பிடத்தில் பேரின்ப உலகங்கள் பலவற்றை அடைகிறார்கள். ஓ! மன்னா, அங்கே அவர்கள் அப்சரஸ்கள் மற்றும் கந்தர்வர்கள் ஆகியோருடன் வசிக்கிறார்கள்.(16) உண்மையில், அவர்கள் தேவர்கள், விருந்தினர்கள், பித்ருக்கள் துணையுடனும், தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் சூழவும் திளைத்து அனைத்து வகைகளிலும் அந்த உலகங்களில் இன்புற்றிருக்கிறார்கள். இதுவே அவர்களுடைய உயர்ந்த கதியாகிறது" என்றார் {பீஷ்மர்}.(17)
அநுசாஸனபர்வம் பகுதி – 93அ வில் உள்ள சுலோகங்கள் : 17/147
ஆங்கிலத்தில் | In English |