Gifts - deserving and not! | Anusasana-Parva-Section-93b | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 93)
பதிவின் சுருக்கம் : கொடைபெறத் தகுந்தவர், தகாதவர் யார் என்பதைக் குறித்து விருஷாதர்ப்பிக்கும் சப்தரிஷிகளுக்கும் இடையில் நடந்த உரையாடல்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "பிராமணர்களுக்குப் பல்வேறு வகைக் கொடைகளை மக்கள் கொடுப்பது காணப்படுகிறது. எனினும், ஓ! பாட்டா, கொடையாளிக்கும், கொடைபெறுபவருக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன?" என்று கேட்டான்.(18)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பிராமணன் நீதிமானிடம் இருந்தும், நியாயமற்றவனிடம் இருந்தும் கொடைகளைப் பெறுகிறான். கொடையாளி அறவோனாக இருந்தால் அதைப் பெறுபவன் சிறு களங்கத்தையே {பாவத்தையே} ஈட்டுவான். மறுபுறம் கொடையாளி அறமற்றவனாக {அதர்மியாக} இருந்தால் அதைப் பெறுபவன் நரகத்தில் மூழ்குவான்.(19) இது தொடர்பாக, ஓ! பாரதா, விருஷாதர்ப்பிக்கும், முனியெழுவருக்கும் {சப்தரிஷிகளுக்கும்} இடையில் நடந்த உரையாடல் ஒன்று பழைய வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.(20)
கசியபர், அத்ரி, வசிஷ்டர், பரத்வாஜர், கோதமர் {கௌதமர்}, விஷ்வாமித்திரர், ஜமதக்னி, கற்புக்கரசியான (வசிஷ்டரின் மனைவி) அருந்ததி ஆகியோர் அனைவருக்கும் பொதுவாகக் கண்டை என்ற பெயரில் பெண் பணியாள் ஒருத்தி இருந்தாள். பசுஸகன் என்ற பெயரைக் கொண்ட ஒரு சூத்திரன் அளவது கணவனானான்.(21,22) கசியபரும், பிறரும், பழங்காலத்தில் தியான யோகத்தின் துணை கொண்டு பிரம்மத்தை அடைய விரும்பி கடுந்தவங்களைச் செய்தபடியே உலகம் முழுவதும் திரிந்து கொண்டிருந்தனர்.(23) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, அந்தக் காலத்தில் கடும் பஞ்சம் தோன்றியது. உலகம் முழுவதும் உள்ள உயிரினங்கள் பசியால் பீடிக்கப்பட்டு மிகவும் பலவீனமடைந்தன.(24) முன்பொரு காலத்தில் {அந்தப் பஞ்ச காலத்தில்} சிபியின் மகனால் {விருஷாதர்ப்பியால்} செய்யப்பட்ட வேள்வி ஒன்றில், அவன் தன் மகனையே {அநிலனை} வேள்விக் கொடையாக ரித்விக்குகளுக்கு அளித்தான்.(25) நீண்ட வாழ்நாளைப் பெறாத அவன் அக்காலத்தில் பசியால் இறந்தான். ஏற்கனவே சொல்லப்பட்டவர்களும், பசியால் பீடிக்கப்பட்டவர்களுமான அம்முனிவர்கள், இறந்து போன அந்த இளவரசனை {அநிலனை} அணுகி, அவனைச் சுற்றிலும் அமர்ந்து கொண்டனர்.(26) பசிக்கொடுமையால் தூண்டப்பட்ட அவர்கள், எவனுடைய வேள்வியைச் செய்து கொடுத்தார்களோ அவனுடைய மகனின் உடலையே ஒரு பாத்திரத்தில் இட்டுச் சமைக்கத் தொடங்கினர்.(27) மானுடலோகத்தில் {மனிதர்களின் உலகத்தில்} இருந்த உணவனைத்து மறைந்து போகவே, தங்கள் உயிர்களைக் காத்துக் கொள்ள விரும்பிய அந்தத் தவசிகள், தங்களைத் தாங்கிக் கொள்வதற்காக அத்தகைய துன்பகரமான மாற்றத்தை அடைந்தனர்.(28) அவர்கள் இவ்வாறு ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திரிந்து கொண்டிருந்த விருஷாதர்ப்பனின் மகனான மன்னன் சைப்யன், அந்த முனிவர்களிடம் வந்தான். உண்மையில் அவன், பசிக் கொடுமையால் தூண்டப்பட்டுச் சடலத்தைச் சமைப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவர்களைத் தன் வழியில் சந்தித்தான்.(29)
விருஷாதர்ப்பனின் மகன் {சைப்யன்}, "(என்னிடமிருந்து) நீங்கள் பெறும் கொடை உங்கள் அனைவரையும் உடனே விடுவிக்கும். எனவே, உங்கள் உடல்களைத் தாங்கிக் கொண்ட ஒரு கொடையே ஏற்பீராக. தவங்களையே செல்வமாகக் கொண்ட தவசிகளே, என்னிடம் உள்ள செல்வத்தைச் சொல்கிறேன் கேட்பீராக.(30) எந்தப் பிராமணர் என்னிடம் (கொடைகளை) வேண்டுகிறாரோ அவரே எப்போதும் எனது அன்புக்குரியவர். உண்மையில், நான் உங்களுக்கு ஆயிரம் கோவேறு கழுதைகளைக் கொடுக்கிறேன். வெள்ளை மயிர் கொண்டவையும், வேகத்தில் முதன்மையானவையும், ஒவ்வொரு காளையைத் தன்னுடன் கொண்டவையும், நல்ல முறையில் கன்றீன்றவையும், பால் தருபவையுமான ஆயிரம் பசுக்களையும் உங்கள் ஒவ்வொருவருக்கும் கொடுக்கிறேன்.(31) வெண்ணிறம் கொண்டவையும், சிறந்த இனத்தில் பிறந்தவையும், கனமான சுமைகளை இழுக்க வல்லவையுமான ஆயிரம் காளைகளையும் உங்களுக்குத் தருகிறேன். நல்ல இயல்பைக் கொண்டவையும், தங்கள் வகையில் முதன்மையானவையும், கொழுத்தவையும், ஒவ்வொன்றும் முதல் கன்றை ஈன்றவையும், வயிற்றில் இரண்டாம் கன்றைக் கொண்டவையுமான பெரும் எண்ணிக்கையிலான பசுக்களையும் {தலையீற்றுப் பசுக்களையும்} கொடுக்கிறேன்[4].(32) முதன்மையான கிராமங்கள், தானியங்கள், பண்டங்கள், மிக அரிதானவையும், விலைமதிப்புமிக்கவையுமான ரத்தினங்கள் ஆகியவற்றில் இருந்து உங்களுக்கு வேறு என்ன கொடுக்க வேண்டும் என்பதை எனக்குச் சொல்லுங்கள். உண்ணத்தகாத இவ்வுணவை உண்ண முயலாதீர். உங்கள் உடல்களைத் தாங்கிக் கொள்ள உங்களுக்கு என்ன தர வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(33)
[4] "பிரஷ்தௌஹி என்பது இரண்டாம் கன்றைக் கருவில் கொண்டிருக்கும் பசுவைக் குறிக்கிறது. கிரிஷ்டி என்பது முதல் கன்றை மட்டுமே ஈன்ற பசுவைக் குறிக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். kulaṃ bharān anaḍuhaḥ śataṃ śatān; dhuryāñ śubhān sarvaśo 'haṃ dadāni | pṛthvī vāhān pīvarāṃś caiva tāvad; agryā gṛṣṭyo dhenavaḥ suvratāś ca என்ற மூலத்தில் கிரிஷ்டியோ என்ற சொல் காணக்கிடைக்கிறது. பிரஷ்தௌஹி என்ற சொல் காணக்கிடைக்கவில்லை. கும்பகோணம் பதிப்பில், "நல்ல விருஷபங்களைச் சேர்ந்தவையும், பருத்தவையும், அடக்கமுள்ளவையுமான தலையீற்றுப் பசுக்களையும், சிறந்த கிராமங்களையும், நெல், யவம் முதலிய அறுசுவை பண்டங்களையும் இரத்தனங்களையும் கொடுப்பேன்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நல்ல ஒழுக்கம் கொண்டவையும், ஒரே ஒரு கன்றை மட்டுமே கொண்டவையுமான பசுக்களை உங்களுக்குக் கொடுப்பேன்" என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பிலோ, பிபேக்திப்ராயின் பதிப்பிலோ "இரண்டாம் கன்றைக் கருவில் கொண்ட" என்ற பொருள் படும் சொற்கள் இல்லை.
முனிவர்கள், "ஓ! மன்னா, ஓர் ஏகாதிபதியிடம் இருந்து கொடையேற்பது முதலில் இனிமையாகத் தான் தெரியும், ஆனால் முடிவில் அது நஞ்சாக இருக்கும். ஓ! மன்னா, இதை நன்கறிந்தும், நீ ஏன் இந்தக் காணிக்கைகளால் எங்களுக்கு ஆசை காட்டுகிறாய்?[5](34) ஒரு பிராமணனின் உடலானது தேவர்களின் களமாகும் {வயலாகும்}. தவத்தின் மூலம் அது தூய்மையடைகிறது. மேலும் பிராமணனை நிறைவடையச் செய்வதன் மூலம் ஒருவன் தேவர்களையே நிறைவடையச் செய்கிறான்.(35) ஒரு மன்னன் தனக்குக் கொடுக்கும் கொடைகளை ஒரு பிராமணன் ஏற்றுக் கொண்டால் அத்தகை ஏற்பின் மூலம் அவன் அந்த நாளின் தவத்தால் அவன் அடைய வேண்டிய பலனை இழக்கிறான். உண்மையில், இவ்வாறு ஏற்றுக் கொள்வது ஒரு காட்டையே எரிக்கும் சுடர்மிக்கக் காட்டுத்தீயைப் போலவே பலன்களை எரித்துவிடுகிறது.(36) ஓ! மன்னா, உன்னிடம் வேண்டுவோருக்குக் கொடையளிப்பதன் விளைவால் கிட்டும் மகிழ்ச்சி உனதாகட்டும்" என்ற சொற்களைச் சொல்லிவிட்டு அவர்கள் அந்த இடத்தைவிட்டு வேறு வழியில் சென்றுவிட்டனர்.(37)
[5] இதற்குப் பிறகு கும்பகோணம் பதிப்பில் இன்னும் அதிகம் இருக்கிறது. அது பின்வருமாறு: "அதைஅறிந்தும் நீ ஏன் எங்களுக்கு ஆசை காட்டுகிறாய்? ஒரு செக்கான் {செக்காட்டுபவன்} பத்துக் கசாப்புக்காரர்களுக்குச் சமானமானவன். ஒரு கள்ளுக்கடைக்காரன் பத்துச் செக்காரர்களுக்குச் சமானன். ஒரு வேசி பத்துக் கள்ளுக்கடைக்காரருக்குச் சமானம். ஓர் அரசன் பத்து வேசிகளுக்குச் சமானம். பதினாயிரம் கசாப்புக்கடைகளை நடத்தும் கசாப்புக்காரனும் அரசனும் சரி. அரசனிடத்தில் வாங்குவது கொடிது. க்ஷத்திரியர்கள் ப்ராம்மணர்களைத் தேவதையைப் போல ஆசிரியித்திருக்கின்றனர்" என்றிருக்கிறது. அதன் பிறகு கங்குலியில் உள்ளவாறு தொடர்கிறது. இந்த அதிக வரிகள் கங்குலியிலும் இல்லை, பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இல்லை.
அந்த உயர் ஆன்மாக்கள் சமைக்க நினைத்த இறைச்சி சமைக்கப்படாமலேயே எஞ்சியது. உண்மையில் அந்த இறைச்சியைக் {இளவரசன் அநிலனைக்} கைவிட்டுச் சென்ற அவர்கள், உணவு தேடி காடுகளுக்குள் நுழைந்தனர்.(38) அதன் பிறகு, மன்னனின் அமைச்சர்கள், தங்கள் தலைவனால் தூண்டப்பட்டுக் காடுகளுக்குள் நுழைந்து அத்திக்கனிகளைப் பறித்து அவற்றை அந்த முனிவர்களுக்குக் கொடுக்க முயற்சித்தனர்.(39) மன்னனின் அதிகாரிகள் அவற்றில் சில அத்திகளைத் தங்கத்தால் நிரப்பி, அவற்றைப் பிறவற்றோடு கலந்து அந்தத் தவசிகளை ஈர்த்து, அவர்களை ஏற்கச்செய்ய முயன்றனர்.(40)
அந்த அத்திக்கனிகளில் சிலவற்றை எடுத்த அத்ரி, அவை கனமாக இருப்பதைக் கண்டு அவற்றை ஏற்க மறுத்தான். அவர் {அத்ரி}, "நாங்கள் அறிவற்றவர்கள் அல்ல. நாங்கள் மூடர்களும் அல்ல.(41) இந்த அத்திகளுக்குள் பொன்னிருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். எங்களுக்குப் புலன்களிருக்கின்றன. உண்மையில் நாங்கள் உறங்காமல் விழித்திருக்கிறோம். இவ்வுலகில் ஏற்கப்பட்டால் அவை மறுமையில் கசப்பான விளைவுகளை உண்டாக்கும். இம்மையிலும், மறுமையிலும் மகிழ்ச்சியை நாடும் எவனும் ஒருபோதும் இவற்றை ஏற்கக்கூடாது" என்றார்.(42)
வசிஷ்டர், "ஒரு பொன் நாணயத்தை நாங்கள் ஏற்றாலும்கூட, அது (அதனோடு தொடர்புடைய பாவம்) நூறாகவோ, ஆயிரமாகவோ கணக்கிடப்படும். எனவே, நாங்கள் பல நாணயங்களை ஏற்றால் நிச்சயம் மறுமையில் நாங்கள் மகிழ்ச்சியற்ற நிலையையே உறுதியாக அடைவோம்" என்றார்.(43)
கசியபர், "பூமியில் உள்ள நெல் மற்றும் யவம் யாவும், உலகில் தோன்றும் பொன், விலங்குகள் மற்றும் பெண்கள் யாவும், ஒரு தனி மனிதனின் ஆசையை நிறைவடையச் செய்ய இயலாதவையாகும். எனவே, ஞானம் கொண்ட ஒருவன் பேராசையைக் கைவிட்டு அமைதியைப் பின்பற்ற {ஒழிவடைய} வேண்டும்" என்றார்.(44)
பரத்வாஜர், "ருருவின் கொம்புகள் முதலில் தோன்றிய பிறகு, அந்த விலங்கோடு சேர்ந்து தானும் வளர்கிறது. மனிதனின் பேராசையும் அதுபோன்றதுதான். அதற்கு ஓர் அளவில்லை" என்றார்.(45)
கோதமர் {கௌதமர்}, "உலகிலுள்ள பொருட்கள் யாவும் ஒரு மனிதனை நிறைவடையச் செய்யவல்லவையல்ல. மனிதன் (ஆறுகளின் நீர் அனைத்தினாலும் நிறைவடையாத கடலைப் போலவே) நிறைவடையாதவன் என்பதால் அவன் பெருங்கடைப் போன்றவனாவான்" என்றார்.(46)
விஷ்வாமித்திரர், "ஒருவன் பேணிவளர்த்த ஆசை நிறைவடையும்போது, உடனே மற்றொன்று {மற்றொரு ஆசை} முளைத்து நிறைவைத் தேடி அவனைக் கணையாகத் துளைக்கிறது" என்றார்.(47)
ஜமதக்னி, "கொடையேற்காமையே அடித்தளமாக இருந்து தவங்களைத் தாங்குகிறது. எனினும், ஏற்பது செல்வத்தை (தவத்தின் பலன்களை) அழிக்கிறது" என்றார்.(48)
அருந்ததி, "உலகின் பொருட்கள் (வேள்விகள் மற்றும் கொடைகளின் மூலம்) அறமீட்டச் செலவு செய்யும் நோக்கில் சேமிக்கப்படுவதாகச் சிலர் கருதுகிறார்கள். எனினும், உலகச் செல்வத்தைக் காட்டிலும் அறமீட்டுவதே சிறந்ததென நான் கருதுகிறேன்" என்றாள்.(49)
கண்டை, "பெருஞ்சக்தி கொண்ட என் தலைவர்களே பெரும்பயங்கரமாகத் தெரியும் இதற்கு இவ்வளவு அஞ்சுகிறார்கள் என்றால் பலவீனமான நான் இன்னும் அதிகம் அஞ்சுகிறேன்" என்றாள்.(50)
பசுஸகன், "அறச்செல்வமே மிக மேன்மையானதாகும். அதைவிட மேன்மையானது வேறேதும் இல்லை. அந்தச் செல்வத்தையே பிராமணர்கள் அறிகிறார்கள். அச்செல்வத்தின் மதிப்பைக் கற்பதற்காக மட்டுமே நான் இவர்களிடம் பணியாளாகப் பணிபுரிகிறேன்" என்றான்.(50)
முனிவர்கள் (அனைவரும் ஒன்றாக), "இந்நிலத்து மக்களின் மன்னன் அளிக்கும் கொடையால் மகிழ்ச்சி அவனுடையதாகட்டும். பொன்னை உட்பொதிந்து இக்கனிகளை எங்களுக்கு அனுப்பியவனின் கொடை வெற்றியடையட்டும்" என்றனர்"[6].(52)
[6] கும்பகோணம் பதிப்பில், "இந்த மனிதர்கள் யாரைச் சேர்ந்தவர்களோ, இந்த மோசமான கனிகளை எவன் நமக்குக் கொடுக்கிறானோ அந்த அரசனுக்கும் அவன் தானத்திற்கும் ஸுகமுண்டாகட்டும்" என்று இருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "அவன் {விருஷாதர்ப்பி} தான் அளிக்கும் கொடைகளின் மூலம் தன் குடிமக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கட்டும். நிரப்பப்பட்டிருக்கும் இக்கனிகளை அவன் நமக்கல்லாமல் அவர்களுக்குக் கொடுக்கட்டும்" என்றிருக்கிறது.
பீஷ்மர் தொடர்ந்தார், "உறுதிமிக்க நோன்புகளைக் கொண்ட அம்முனிவர்கள் இச்சொற்களைச் சொல்லிவிட்டு பொன்னுள்ள அத்திகளைக் கைவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்று தாங்கள் விரும்பிய இடத்திற்குச் சென்றனர்.(53)
அமைச்சர்கள், "ஓ! மன்னா, அம்முனிவர்கள், அத்திகளுக்குள் பொன் இருப்பதை அறிந்து கொண்டு சென்று விட்டனர். இதை நீ அறிவாயாக" என்றனர்".(54)
பீஷ்மர் தொடர்ந்தார், "அமைச்சர்களால் இவ்வாறு சொல்லப்பட்ட விருஷாதர்ப்பி, அந்த முனிவர்கள் அனைவரின் மீதும் கோபத்தால் நிறைந்தான். உண்மையில் அந்த ஏகாதிபதி அவர்களைப் பழிவாங்க விரும்பி தன் வீட்டிற்குள் சென்றான்.(55) கடுந்தவங்களை நோற்ற அவன், மந்திரங்களைச் சொல்லி ஒவ்வொரு முறையும் நெய்யாலான ஆகுதிகளைப் புனித நெருப்பில் {ஆகவனீயமெனும் அக்கினியில்} ஊற்றினான்.(56) அந்த ஓதலின் விளைவால் அனைவரையும் அச்சுறுத்தவல்ல வடிவம் ஒன்று {பேயொன்று} அந்நெருப்பில் இருந்து எழுந்தது. விருஷாதர்ப்பி அவளுக்கு யாதுதானி என்ற பெயரைச் சூட்டினான்.(57) மன்னனின் மந்திர ஓதலில் இருந்து வந்ததும், இறுதி இரவை {காளராத்திரியைப்} போன்று பயங்கரமானதுமான அந்த வடிவம் {அந்தப் பேய்}, அந்த ஏகாதிபதியின் முன்பு கூப்பிய கரங்களுடன் தோன்றியது. மன்னன் விருஷாதர்ப்பியிடம் அவள், "நான் நிறைவேற்ற வேண்டியதென்ன?" என்று கேட்டாள்.(58)
விருஷாதர்ப்பி, "செல், முனியெழுவரையும், அருந்ததியையும், பெண்பணியாளின் கணவனையும், பெண்பணியாளையும் தொடர்ந்து சென்று அவர்களுடைய பெயர்களின் பொருளைப் புரிந்து கொள்வாயாக.(59) அவர்களின் பெயர்களை உறுதி செய்து கொண்ட பிறகு, அவர்கள் அனைவரையும் கொல்வாயாக[7]. அவர்களைக் கொன்ற பிறகு, நீ விரும்பிய இடத்திற்குச் செல்வாயாக" என்றான்".(60)
[7] "தவறானவர்கள் கொல்லப்பட்டுவிடக் கூடாது என்பதாலும், அந்தப் பெயர்கள் அவர்கள் கொண்டிருக்கும் சக்தியைக் குறிக்கும் என்பதாலும் சொல்லப்பட்டிருக்கலாம்" என்று பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில் இருக்கிறது.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "தனக்குரிய வடிவத்தில், யாதுதானி என்று பெயரிடப்பட்ட அந்த ராட்சசி "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, அந்தப் பெரும் முனிவர்கள் உணவு தேடி திரிந்து கொண்டிருந்த காட்டை நோக்கிச் சென்றாள்".(61)
அநுசாஸனபர்வம் பகுதி – 93ஆ வில் உள்ள சுலோகங்கள் : 18-61/147
ஆங்கிலத்தில் | In English |