Abstinence from cupidity! | Anusasana-Parva-Section-93c | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 93)
பதிவின் சுருக்கம் : சப்தரிஷிகளுக்கும், யாதுதானிக்கும் இடையில் நடந்த உரையாடல்; சப்தரிஷிகள் தங்கள் ஆசையை ஒழித்து சொர்க்கம் சென்றது ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்....
{பீஷ்மர், யுதிஷ்டிரனிடம் தொடர்ந்தார்}, "உண்மையில், ஓ! மன்னா, அத்ரியைத் தங்களுக்கு மத்தியில் கொண்ட அம்முனிவர்கள் கிழங்குகளையும், கனிகளையும் உண்டு அந்தக் காட்டில் திரிந்து கொண்டிருந்தனர்.(62) அப்படி அவர்கள் திரிந்து வரும்போது, அகன்ற தோள்களையும், பருத்த கரங்கள் மற்றும் கால்களையும், ஊட்டமிக்க முகம் மற்றும் வயிற்றைக் கொண்ட ஒரு துறவியை {சுனஸ்ஸகனைக்} கண்டனர். கொழுப்புநிறைந்த அங்கங்களைக் கொண்ட அவர் ஒரு நாயுடன் திரிந்து கொண்டிருந்தார்.(63)
நன்கு வளர்ந்து அழகாக இருந்த அங்கங்களுடன் கூடிய அந்தத் துறவியைக் கண்ட அருந்ததி, முனிவர்களிடம், "உங்களில் எவராலும் இத்தகைய நன்கு பருத்த தன்மையை ஒரு போதும் வெளிக்காட்ட இயலாது[8]" என்றாள்.(64)
[8] கும்பகோணம் பதிப்பில், "நீங்கள் இப்படியாவதில்லையே" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நீங்கள் அவரைப் போல இல்லை. ஒருபோதும் அவ்வாறு ஆகவும் இயலாது" என்றாள்.
வசிஷ்டர், "இந்த மனிதரின் புனித நெருப்பு நம்மைப் போன்றதல்ல, ஏனெனில், காலையிலும் மாலையிலும் அவரால் அதில் ஆகுதிகளை ஊற்ற இயலும், நம்மில் எவரும் அதைச் செய்ய இயலாது. இதன் காரணமாகவே அவரும், அவரது நாயும் நன்கு பருக்கிறார்கள்" என்றார்[9].(65)
[9] "வேறு சொற்களில் சொல்வதாக இருந்தால், வசிஷ்டர் தம்முடைய மற்றும் தமது துணைவர்களுடைய மெலிந்த தன்மையையும், நாள்தோறும் அவர்கள் அறச்சடங்குகளைச் செய்வதில் தவறுவதற்குக் காரணமாகச் சொல்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், அப்படியே வேறுவிதமான, "நமக்கிருப்பது போல இவனுக்கு அக்நிஹோத்ரம் ஹோமம் செய்யப்படாமலிருக்கவில்லை? காலையிலும், மாலையிலும் ஹோமம் செய்ய வேண்டாமே? ஆதலால் சுனஸ்ஸகன் பருத்திருக்கிறான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அவனுடைய அக்னி ஹோத்ர நெருப்பு நம்மைப் போன்றதல்ல. காலையிலும், மாலையிலும் அவன் அதற்குள் ஆகுதிகளை ஊற்றுகிறான், அதே வேளையில் அது நம்மால் முடியாது. இதன் காரணமாகவே சுனஸ்ஸகன் பருத்திருக்கிறான்" என்றிருக்கிறது.
அத்ரி, "இந்த மனிதன் நம்மைப் போலப் பசிக்கொடுமையை அனுபவிக்கவில்லை. இவனது சக்திக்கு நம்மைப் போல எந்தக் குறைவும் ஏற்படவில்லை. பெரும் சிரமத்துடன் அடையப்பட்ட அவனுடைய வேதங்கள் நம்முடையதைப் போலத் தொலைந்து போகவில்லை. எனவே, அவனும் அவனது நாயும் நன்கு பருத்திருக்கிறார்கள்" என்றார்.(66)
விஷ்வாமித்திரர், "இந்த மனிதன் நம்மைப் போலச் சாத்திரங்களில் உள்ள நித்திய கடமைகளை நோற்க இயலாதவனாக இல்லை. நான் சோம்பலானவனாக இருக்கிறேன். நான் பசிக்கொடைமையை அனுபவிக்கிறேன். நான் அடைந்த ஞானத்தைத் தொலைத்துவிட்டேன். இவ்வகையில் இந்த மனிதன் நம்மைப் போன்றவனில்லை. எனவே இவனும், இவனது நாயும் பருத்திருப்பதாக நான் காண்கிறேன்" என்றார்[10].(67)
[10] கும்பகோணம் பதிப்பில், "நம்மைப் போல இவனுக்கு எப்போதும் சாஸ்திரப்பயிற்சியினாலுண்டான கொதிப்பில்லை. இவன் சோம்பேறி; மூர்க்கன்; பசிதீர்ப்பதே முக்கிமாயிருப்பவன். அதனால் சுஸ்ஸகன் பருத்திருக்கிறான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நாம் சிதைவை அனுபவிக்கிறோம். நம்மைப் போலில்லாமல் அவன் நித்தியமான புனித உரைகளைத் தக்க வைத்துக் கொள்ள இயன்றவனாயிருக்கிறான். பசி மற்றும் மடமையில் மூழ்கி நாம் சோம்பலடைந்துவிட்டோம். சுனஸ்ஸகன் பருத்திருப்பதன் காரணம் இதுதான்" என்றிருக்கிறது.
ஜமதக்னி, "நம்மைப் போல, ஆண்டுக்குத் தேவையான தானியங்களையும், விறகுகளையும் சேமிக்க வேண்டிய எண்ணம் இந்த மனிதனுக்கு இல்லை. எனவே, இவனும், இவனது நாயும் நன்கு பருத்திருப்பதாக நான் காண்கிறேன்" என்றார்.(68)
கசியபர், "நம்மைப் போல, வீட்டுக்கு வீடு சென்று "கொடுப்பீராக, கொடுப்பீராக" என்று சொல்லி பிச்சையெடுப்பவர்களும், குருதியுடன் கூடியவர்களுமான நான்கு சகோதரர்கள் இம்மனிதனுக்கு இல்லை. எனவே இவனும், இவனது நாயும் நன்கு பருத்திருப்பதாகக் காண்கிறேன்" என்றார்.(69)
பரத்வாஜர், "நம்மைப் போல இந்த மனிதன் தன் மனைவியை நிந்தித்துச் சபித்தற்காக வருந்த வேண்டியதில்லை. அவன் இவ்வளவு தீமையாகவும், உணர்வற்றவனாகவும் செய்படவில்லை. எனவே இவனும், இவனது நாயும் நன்கு பருத்திருப்பதாகக் காண்கிறேன்" என்றார்[11].(70)
[11] கும்போகணம் பதிப்பில், "அறிவில்லாத இந்த ஈனப் பிராமணனுக்கு நமக்கிருப்பது போலப் பார்யையை உலகம் தூஷிப்பதனால் உண்டான துயரமில்லை. அதனால், சுஸ்ஸகன் பருத்திருக்கிறான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நம்மைப்போலில்லாமல் இவன் அர்ப்பணிப்புமிக்கப் பிராமணனாக இருக்கிறான். மனைவியின் எதிர் குற்றச்சாட்டுகளால் இவனது புத்தியானது துயரத்தால் மறைக்கப்படவில்லை. இதுவே சுனஸ்ஸகன் பருத்திருப்பதற்கான காரணமாகும்" என்றிருக்கிறது.
கோதமர் {கௌதமர்}, "இந்த மனிதன் நம்மைப் போலக் குசப் புற்களாலான மூன்றே துண்டுகளாலான மறைப்பையும், மூன்று வருடம் பழைமையான ஒரே ஒரு ரங்கு தோலையும் {உடுத்திக்} கொண்டிருக்கவில்லை. எனவே இவனும், இவனது நாயும் நன்கு பருத்திருப்பதாக நான் காண்கிறேன்" என்றார்"[12].(71)
[12] கும்பகோணம் பதிப்பில், "நமக்குப் போல இவனுக்கு ஒவ்வொன்றும் மூன்று வருஷத்திற்கு வைத்துக் கொள்ள வேண்டிய மூன்றிடத்தில் தைத்திருக்கும் மூன்றே மான்தோலுடைகள் இல்லை. அனால், சுனஸ்ஸகன் பருத்திருக்கிறான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நம்மைப்போலில்லாமல் இவன் மூன்று துண்டு குசப்புற்களையும், ஒரு துண்டு ரங்குத் தோலையும் உடுத்தவில்லை. மேலும் இவை மூன்று வருடங்கள் பழைமையானவையும் ஆகும். சுனஸ்ஸகன் பருத்திருப்பதற்கான காரணம் இதுதான்" என்றிருக்கிறது.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "திரிந்து கொண்டிருந்தவரான அத்துறவி, இந்தப் பெரும் முனிவர்களைக் கண்டு, அவர்களை அணுகி, வழக்கப்படியே அவர்கள் அனைவரின் கரங்களையும் தொட்டு வணங்கினார்.(72) அப்போது அந்தக் காட்டில் வாழ்வாதாரங்களை அடைவதற்கான சிரமத்தையும், அதன் விளைவாகத் தாங்கிக் கொள்ள வேண்டிய பசிக் கொடுமையையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிவிட்டு அனைவரும் அந்த இடத்தைவிட்டு அகன்றனர்.(73) உண்மையில், வாழ்வாதாரத்திற்குத் தேவையான கனிகளைப் பறித்தல் மற்றும் கிழங்குகளைத் தோண்டி எடுத்தல் போன்ற ஒரு பொதுக் காரியத்துக்காகவே அவர்கள் காட்டில் திரிந்து கொண்டிருந்தனர்.(74) ஒருநாள், அவர்கள் திரிந்து கொண்டிருந்தபோது, தாமரைகள் நிறைந்த ஓர் அழகிய தடாகத்தைக் கண்டனர். அதன் கரைகள் ஒன்றுக்கொன்று அருகில் அடர்த்தியாக நின்ற மரங்களால் மறைக்கப்பட்டிருந்தன. அத்தடாகத்தின் நீர் தூய்மையானதாகவும், தெளிவானதாகவும் இருந்தது.(75) உண்மையில், அத்தடாகத்தை அலங்கரித்திருந்த தாமரைகள் அனைத்தும் காலைச் சூரியனின் நிறத்தைக் கொண்டிருந்தன. நீரில் மிதந்த இலைகள் வைடூரிய நிறத்தில் இருந்தன.(76) பல்வேறு வகை நீர்க்கோழிகள் அதன் பரப்பில் விளையாடிக் கொண்டிருந்தன. அதனிடம் செல்ல ஒரே ஒரு பாதை மட்டுமே இருந்தது. கரைகள் சேறாக இல்லை, நீரை அடைவதும் எளிதாக இருந்தது.(77)
பயங்கர முகத்தோற்றம் கொண்டவளும், மந்திரங்களில் இருந்து உண்டானவளும், விருஷாதர்ப்பியால் தூண்டப்பட்டவளுமான ராட்சசி யாதுதானி அத்தடாகத்தைக் காவல் காத்துக் கொண்டிருந்தாள்.(78) பசுஸகனின் துணையுடன் கூடிய அந்த முதன்மையான முனிவர்கள், சில தாமரைத் தண்டுகளை {தாமரைக் கிழங்குகளைத்} திரட்டும் நோக்கத்தில், யாதுதானியால் காக்கப்பட்ட அத்தடாகத்தை நோக்கிச் சென்றனர்[13].(79)
[13] "இந்தியாவில் தாமரைத்தண்டுகள் உண்ணப்படுகின்றன. கனரக உணவாகச் சரகரால் இது குறிப்பிடப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
தடாகத்தின் கரையில் நிற்கும் பயங்கரத் தன்மை கொண்ட யாதுதானியைக் கண்ட அந்தப் பெரும் முனிவர்கள், அவளிடம்,(80) "இந்தத் தனிமையான காட்டில் தனியாக நிற்கும் நீ யார்? யாருக்காக நீ இங்கே காத்திருக்கிறாய்? உண்மையில் உன் நோக்கம் என்ன? தாமரைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் இத்தடாகத்தின் கரையில் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டனர்.(81)
யாதுதானி, "நான் யார் என்பது ஒரு பொருட்டில்லை. (என் பெயர், குலம் மற்றும் நோக்கம் குறித்து) நான் கேட்கத்தகாதவளாவேன். தவத்தையே செல்வமாகக் கொண்டவர்களே, இத்தடாகத்தைக் கண்காணிக்க நிறுவப்பட்டிருக்கும் காவலாளி நான் என்பதை அறிவீராக" என்றாள்[14].(82)
[14] கும்பகோணம் பதிப்பில், "தபோதனர்களே, நான் யாராயிருந்தாலென்ன? என்னை எவ்விதமாகவும் கேள்வி கேட்க வேண்டாம். நீங்களெல்லாரும் என்னை இந்தக் குளத்திற்குக் காவற்காரியென்று அறியுங்கள்" என்றிருக்கிறது.
முனிவர்கள், "நாங்கள் அனைவரும் பசித்திருக்கிறோம். எங்களிடம் உண்பதற்கு வேறேதும் இல்லை. உன் அனுமதியுடன் நாங்கள் சில தாமரைத் தண்டுகளைத் திரட்டிக் கொள்கிறோம்" என்று கேட்டனர்.(83)
யாதுதானி, "ஓர் ஒப்பந்தத்திற்கு உடன்பட்டு நீங்கள் விரும்பிய அளவுக்குத் தாமரைத் தண்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவர் பின் ஒருவராக நீங்கள் உங்கள் பெயர்களை என்னிடம் சொல்ல வேண்டும். பிறகு, தாமதமில்லாமல் நீங்கள் தண்டுகளை எடுத்துக் கொள்ளலாம்" என்றாள்".(84)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அவளுடைய பெயர் யாதுதானி என்பதையும், (அவர்களுடைய பெயர்களின் பொருள்களையும், தங்கள் சக்தியின் எல்லையையும் அறிந்த பிறகு) தங்களைக் கொல்லவே அவள் அங்கே நின்று கொண்டிருக்கிறாள் என்பதை உறுதி செய்து கொண்டவரும், பசியால் துடித்துக் கொண்டிருந்தவருமான அத்ரி, அவளிடம் இந்தச் சொற்களைச் சொன்னார்.(85)
அத்ரி, "நான் உலகத்தைப் பாவத்தில் இருந்து தூய்மையடையச் செய்கிறேன் என்பதால் நான் அத்ரி என்று அழைக்கப்படுகிறேன். மேலும், நாள்தோறும் வேதங்களை மும்முறை படிப்பதால் நான் என் இரவுகளைப் பகலாக்கியிருக்கிறேன். மேலும், நான் வேதங்கல்லாத இரவேதும் இல்லை. ஓ! அழகிய பெண்ணே, இந்தக் காரணங்களுக்காகவும் நான் அத்ரி என்று அழைக்கப்படுகிறேன்" என்றார்[15].(86)
[15] கும்பகோணம் பதிப்பில், "சிறந்தவளே, நான் அத்ரி. நான் மூன்று விசை அத்யயனம் செய்யாத ராத்ரியில்லையென்பதனால் (அராத்ரி என்னும்) பெயர் எனக்கு அத்ரி என்றாயிற்று. இப்போது என்பேரை அறி" என்றிருக்கிறது. அராத்ரி என்பதன் அடிக்குறிப்பில், "த்ரி= மூன்று முறை (அத்யயனமில்லாத), ரா=ராத்ரி, அ=இல்லை என்று பகுக்க வேண்டும்" என்றிருக்கிறது.
யாதுதானி, "ஓ! பெரும்பிரகாசம் கொண்டவரே, உமது பெயருக்கு நீர் கொடுத்த விளக்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே, சென்று தாமரைகள் நிறைந்த இந்தக் குளத்திற்குள் மூழ்குவீராக" என்றாள்.(87)
வசிஷ்டர், "நான் (பலம் முதலியவற்றின் யோக குணங்களைக் கொண்ட) செல்வத்தை உடையவன். மேலும், இல்லற வாழ்வுமுறையை நோற்கும் நான் அத்தகைய வாழ்வு முறையை நோற்கும் மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனாகக் கருதப்படுகிறேன். (இத்தகைய) செல்வத்துடன் கூடியவனாகவும், இல்லறத்தானாக வாழ்வதனாலும், இல்லறத்தார் அனைவரிலும் முதன்மையானவனாகக் கருதப்படுவதாலும் நான் வசிஷ்டன் என்றழைக்கப்படுகிறேன்" என்றார்[16].(88)
[16] கும்பகோணம் பதிப்பில், "நான் வரிஷ்டன் (எல்லாரிலும் சிறந்தவன்); சிறந்த கிருகத்தில் வஸிப்பவன். மிகச் சிறந்தவனாயிருப்பதாலும், ஸப்தரிஷிமண்டலத்தில் வஸிப்பதனாலும் எனக்கு வஸிஷ்டன் என்கிற பெயரென்றறி" என்றிருக்கிறது. கிருகத்தில் என்பதன் அடிக்குறிப்பில் "சப்தரிஷிமண்டலத்தில்" என்றிருக்கிறது.
யாதுதானி, "உமது பெயருக்கான உச்சரிப்பு விளக்கம் என்னால் முற்றிலும் புரிந்துகொள்ளத்தக்கதாக இல்லை. அசல் வேர்கள் அடைந்த சொல்வடிவ மாற்றத்தைப் பொறுத்தவரையில் இது புரிந்து கொள்ளத்தக்கதாக இல்லை. சென்று தாமரைத் தடாகத்தில் மூழ்குவீராக" என்றாள்[17].(89)
[17] கும்பகோணம் பதிப்பில், "உம்முடைய பெயரை நீர் பகுத்துச் சொன்னீர். இந்த எழுத்துகள் கஷ்டப்பட்டு உச்சரிக்கப்படுகின்றன. இதை நினைவில் வைக்க முடியாது. போம். குளத்திலிறங்கும்" என்றிருக்கிறது.
கசியபர், "நான் எப்போதும் என் உடலைப் பாதுகாக்கிறேன், என் தவங்களின் விளைவாகப் பிரகாசத்துடன் இருக்கிறேன். இவ்வாறு என் உடலைப் பாதுகாப்பதினாலும், என் தவங்களின் மூலம் உண்டான பிரகாசத்தினாலும் நான் கசியபன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்" என்றார்[18].(90)
[18] கும்பகோணம் பதிப்பில், "நான் குந்தோறுமிருப்பவன்; பூமியில் மழைபொழிவதனால் குவமன்; காசம் என்னும் நாணற்பூவைப் போல வெளுத்திருப்பதனால் காஸ்யன். இதனால், கச்யபன் என்று பெயர் பெற்றவன். இந்தப் பெயரை நினைவில் வைத்துக் கொள்" என்றிருக்கிறது. குலந்தோறும் என்பதன் அடிக்குறிப்பில், "அக்நிரூபி" என்றும், குவமன் என்ற அடிக்குறிப்பில், "ஆதித்யரூபி; கு = பூமியில், வமன் = மழையைப் பொழிகிறவன்" என்றுமிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நானே என் குலத்தைப் பிணைப்பவனாக இருக்கிறேன். மேலும் நான் பிரகாசத்தில் சூரியனைப் போல இருக்கிறேன். நான் காசியில் இருந்து வருவதால், கசியபன் என்ற பெயரைத் தாங்கும் ஒரு பிராமணனாக அறியப்படுகிறேன்" என்றிருக்கிறது. சூரியன் என்பதன் அடிக்குறிப்பில் "குவம் என்பது ஒரு படகு அல்லது கப்பலைப் பிணைக்குக் கொடிமரமாகும். குவபம் என்பது சூரியனாகும்" என்றிருக்கிறது.
யாதுதானி, "ஓ! பெரும்பிரகாசம் கொண்டவரே, உமது பெயருக்கான உச்சரிப்பு விளக்கம் என்னால் புரிந்துகொள்ளத்தக்கதாக இல்லை. சென்று தாமரைகள் நிறைந்த இத்தடாகத்தில் மூழ்குவீராக" என்றாள்.(91)
பரத்வாஜர், "என் மகன்கள், சீடர்கள், தேவர்கள், பிராமணர்கள் மற்றும் என் மனைவி ஆகியோரை நான் எப்போதும் ஆதரிக்கிறேன். இவர்கள் அனைவரையும் சுகமாக ஆதரிப்பதன் விளைவால் நான் பரத்வாஜன் என்று அழைக்கப்படுகிறேன்" என்றார்[19].(92)
[19] கும்பகோணம் பதிப்பில், "ஒரு வியாஜம் பற்றி இவர்களையெல்லாம் பரித்ததால் {போஷித்ததால்} பரத்வாஜனானேன்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "பரம் என்பது பராமரிப்பது, அல்லது ஆதரிப்பதாகும். அவியாஜம் என்பது வஞ்சனையில்லாமல் சுகமாக என்ற பொருளைத் தருவதாகும்" என்றிருக்கிறது.
யாதுதானி, "வேர்ச்சொல்லானது சொல்வடிவத்தில் பல மாற்றங்களுக்கு உள்ளாகியிருப்பதன் விளைவால் உமது பெயருக்கான உச்சரிப்பு விளக்கம் என்னால் முற்றிலும் புரிந்துகொள்ளத்தக்கதாக இல்லை. சென்று தாமரைகள் நிறைந்த இத்தடாகத்தில் மூழ்குவீராக" என்றாள்.(93)
கோதமர் {கௌதமர்}, "தற்கட்டுப்பாட்டின் உதவியால் நான் சொர்க்கத்தையும், பூமியையும் வென்றேன். அனைத்து உயிரினங்கள் மற்றும் பொருட்களைச் சம பார்வையுடன் பார்ப்பதன் விளைவால் நான் புகையற்ற நெருப்பைப் போன்றவனாக இருக்கிறேன். எனவே, நான் உன்னால் அடக்கப்பட முடியாதவனாவேன். மேலும், நான் பிறந்த போது, என் உடற்பிரகாசம் சுற்றிலும் இருந்து இருளை விலக்கியது. இந்தக் காரணங்களினால் நான் கோதமன் என்றழைக்கப்படுகிறேன்" என்றார்[20].(94)
[20] கும்பகோணம் பதிப்பில், "யாதுதானியென்னும் பிசாசியே, நான் கோவென்று சொல்லப்பட்ட வாக்கையடக்கினதனாலும் எல்லாவற்றையும் ஸமமாகப் பார்க்கும்படி கோவென்று சொல்லப்பட்ட நேத்திரத்தையடக்கினதனாலும் தமம் (இருள்) என்னும் புகை இல்லாமலையாலும் என்னை அடக்குகிறாவர்கள் யாரும் இல்லாததனாலும் என்னைக் கோதமன் என்று அறி" என்றிருக்கிறது.
யாதுதானி, "ஓ! பெருந்தவசியே, உமது பெயருக்கு நீர் என்னிடம் சொன்ன விளக்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சென்று தாமரைகள் நிறைந்த இத்தடாகத்தில் மூழ்குவீராக" என்றாள்.(95)
விஷ்வாமித்திரர், "அண்டத்தின் தேவர்கள் என் நண்பர்களாவர். நான் அண்டத்தின் நண்பனுமாவேன். எனவே, ஓ! யாதுதானியே நான் விஷ்வாமித்திரன் என்றறியப்படுகிறேன்" என்றார்[21].(96)
[21] கும்பகோணம் பதிப்பில், "யாதுதானியே, எல்லாத் தேவர்களும் எனக்கு மித்திரர்கள், கோக்களெல்லாவற்றிற்கும் நான் மித்ரன். இதனால், விச்வாமித்ரன் என்று எனக்குக் கியாதி வந்திருக்கிதென்றறி" என்றிருக்கிறது. கோக்கள் என்பதன் அடிக்குறிப்பில், "பசுஷம்ரக்ஷணம் செய்பவன்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பில், "அண்டத்தின் தேவர்கள் என்னுடைய நண்பர்களாவர். கால்நடைகளும் என் நண்பர்களாவர். ஓ யாதுதானியே, நான் சொல்வதைக் கேட்பாயாக. நான் விஷ்வாமித்திரன் என்று அறியப்படுகிறேன்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "விஷ்வம் என்றால் அண்டம், மித்திரன் என்றால் நண்பன்" என்றிருக்கிறது.
யாதுதானி, "வேர்ச்சொல்லானது சொல்வடிவத்தில் பல மாற்றங்களுக்கு உள்ளாகியிருப்பதன் விளைவால் உமது பெயருக்கான நீர் சொல்லும் விளக்கம் என்னால் புரிந்துகொள்ளத்தக்கதாக இல்லை. சென்று தாமரைகள் நிறைந்த இத்தடாகத்தில் மூழ்குவீராக" என்றாள்.(97)
ஜமதக்னி, "நான் தேவர்களின் வேள்வி நெருப்பில் இருந்து உண்டானவன். எனவே, ஓ! அழகிய பண்புகளைக் கொண்டவளே, நான் ஜமதக்னி என்றழைக்கப்படுகிறேன்" என்றார்[22].(98)
[22] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஜ = ஜனிப்பது; ஜமத் = பக்ஷிப்பது; இவ்விரண்டும் அக்நியைச் சேருவன. யஜ = யாகஞ்செய்வது; ஜாநே = அறிவது; ஜிஜிஹி = இந்திரியங்களை ஜயிப்பது; ஜிஜாயிஷி = சிஷ்யர்களின் ஞானத்தையுண்டாக்குவது. அக்நி போல என்பது உவமையினால் ஏற்பட்ட பொருள். "(ஜாஜமத்=) தேவர்களும், (யஜ=) அக்நியும் ஆவிர்ப்பவிக்கும் இவ்வுலகத்தில் உண்டாயிருக்கிறேன்; அதனால் ஜமதக்நி என்று ப்ரஸித்தி பெற்றிருக்கிறேன் என்று என்னை அறி" என்றிருக்கிறது.
யாதுதானி, "ஓ! பெருந்தவசியே, (வேர்ச்சொல்லின் பல்வேறு சொல்வடிவ மாற்றங்களின் விளைவால்) நீர் சொன்ன உமது பெயருக்கான உச்சரிப்பு விளக்கம் என்னால் புரிந்துகொள்ளத்தக்கதாக இல்லை. சென்று தாமரைகள் நிறைந்த இத்தடாகத்தில் மூழ்குவீராக" என்றாள்.(99)
அருந்ததி, "நான் எப்போதும் என் கணவரின் அருகில் நின்று, அவரோடு சேர்ந்து பூமியைத் தாங்குகிறேன். நான் எப்போதும் என் கணவரின் இதயத்தை என்னை நோக்கித் திருப்புகிறேன். இக்காரணங்களுக்காக நான் அருந்ததி என்றழைக்கப்படுகிறேன்" என்றார்[23].(100)
[23] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், "’அநுருந்ததி (அநுஸரிப்பவள்) என்பதன் நுகரங்கெட்டு அருந்ததியென்றாயிற்று’ என்பது பழையவுரை. அருந்ததி = பர்த்தாவின் விருப்பத்தைத் தடாதவள் என்பதனால் அநுஸரிப்பவள் என்றுமாம்" என்றிருக்கிறது.
யாதுதானி, "வேர்ச்சொற்களில் உண்டாகியிருக்கும் சொல்வடிவ மாற்றங்களின் விளைவால் உமது பெயருக்கு நீ கொடுத்த விளக்கத்தை என்னால் முற்றிலும் புரிந்து கொள்ள முடியவில்லை. சென்று, இந்தத் தாமரைத் தடாகத்தில் மூழ்குவாயாக" என்றாள்.(101)
கண்டை, "கண்ட என்றால், கன்னத்தின் ஒரு பகுதி என்பது பொருளாகும். ஓ! சைப்யனின் வேள்வி நெருப்பில் உதித்தவளே, என்னிடம் அந்தப் பகுதி பிறரைவிட உயர்ந்திருப்பதால் நான் கண்டை என்ற பெயரில் அழைக்கப்படுகிறேன்" என்றாள்.(102)
யாதுதானி, "வேர்ச்சொல்லில் ஏற்பட்டிருக்கும் சொல்வடிவ மாற்றங்களின் விளைவால் உன் பெயருக்கு நீ சொன்ன விளக்கம் முற்றிலும் என்னால் புரிந்து கொள்ளத்தக்கதாக இல்லை. சென்று, இந்தத் தாமரைத் தடாகத்தில் மூழ்குவாயாக" என்றாள்.(103)
பசுஸகன், "நான் காணும் விலங்குகள் அனைத்தையும் நான் பாதுகாத்து வளர்க்கிறேன். மேலும் நான் விலங்குகள் அனைத்திற்கும் நண்பனாக இருக்கிறேன். எனவே, ஓ! நெருப்பில் பிறந்தவளே (மன்னன் விருஷாதர்ப்பி உண்டாக்கிய வேள்வி நெருப்பில் பிறந்தவளே), நான் பசுஸகன் என்றழைக்கப்படுகிறேன்" என்றான்[24].(104)
[24] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், "பசுவுக்குத் துணையானவன்; அதாவது, வாய்க்குக் கிடைத்ததை மட்டும் புசிப்பவன்" என்றிருக்கிறது. இங்கே பசு என்பது விலங்கு என்று புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
யாதுதானி, "வேர்ச்சொல்லில் ஏற்பட்டிருக்கும் சொல்வடிவ மாற்றங்களின் விளைவால் உன் பெயருக்கு நீ சொன்ன விளக்கம் முற்றிலும் என்னால் புரிந்து கொள்ளத்தக்கதாக இல்லை. சென்று, இந்தத் தாமரைத் தடாகத்தில் மூழ்குவாயாக" என்றாள்.(105)
சுனஸ்ஸகன், "இத்தவசிகள் சொன்ன வகையில் என் பெயருக்கான உச்சரிப்பு விளக்கத்தை நான் சொல்ல இயலாதவனாக இருக்கிறேன். ஆனால், ஓ! யாதுதானி, சுனஸ்ஸகஸகாயன் என்ற பெயரால் நான் அழைக்கப்படுகிறேன் என்பதை அறிவாயாக" என்றான்.(106)
யாதுதானி, "நீர் உன் பெயரை ஒரே ஒரு முறை மட்டும் சொன்னீர். நீர் சொன்ன விளக்கம் பிடிபடுவதாக இல்லை. எனவே, ஓ! மறுபிறப்பாளரே, மீண்டும் சொல்வீராக" என்றாள்[25].(107)
[25] கும்பகோணம் பதிப்பில், "சுனஸ்ஸகன், "யாதுதானியே, இவர்கள் சொன்னது போல நான் என் பேரைப் பகுத்துச் சொல்ல முடியாது. நான் எப்போதும் நாய்களுக்குத் துணையானவர்களுக்குத் துணையாயிருப்பவனென்றறி" என்று சொன்னான். யாதுதானி, "ப்ராம்மணா, உன்னுடைய உச்சரிப்புத் தெளிவாக இல்லாமையினால் உன் பேச்சில் நீ சொன்ன பெயர் நன்றாகத் தெரியவில்லை. ஆதலால், இப்போது உன்பேரை ஒரு தரம் சொல் என்றிருக்கிறது" அதன் அடிக்குறிப்பில், நாய்களுக்குத் துணையானவர்களுக்குத் துணையானவன் என்பது, "சுனஸ்ஸகஸகாயம்" என்பது மூலம்; நர்மத்துக்குத் துணைவர்களான ரிஷிகளுக்குத் தோழன் என்பது பழையவுரையுமாகும் என்றிருக்கிறது.
சுனஸ்ஸகன், "நான் ஒரே ஒரு முறை சொன்னதன் விளைவால் என் பெயர் உனக்குப் பிடிபடவில்லை என்பதால், நான் என் திரிதண்டத்தால் உன்னைத் தாக்கப் போகிறேன். அதனால் தாக்கப்பட்ட நீ தாமதமில்லாமல் சாம்பலாக எரிந்து போவாயாக" என்றான்".(108)
பீஷ்மர் தொடர்ந்தார், "ஒரு பிராமணனால் தரப்படும் தண்டைக்கு ஒப்பான அந்தச் சந்நியாசியின் திரிதண்டத்தால் தலையில் தாக்கப்பட்டவளும், மன்னன் விருஷாதர்ப்பின் மந்திரங்களினால் உண்டானவளுமான அந்த ராட்சசி, பூமியில் விழுந்து சாம்பலாகக் குறைந்து போனாள்.(109)
இவ்வாறு அந்த வலிமைமிக்க ராட்சசியை அழித்த சுனஸ்ஸகன் தன் தண்டத்தைப் பூமியில் ஊன்றி, புல் தரையில் அமர்ந்தான்.(110) அப்போது அந்த முனிவர்கள் தாங்கள் விரும்பிய அளவுக்குத் தாமரைகளைப் பறித்து, தாமரைத் தண்டுகளையும் எடுத்துக் கொண்டு தடாகத்துக்கு மேலே வந்து மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(111) பெரும் முயற்சி செய்து தாங்கள் சேகரித்த தாமரைக் குவியைத் தரையில் வைத்த அவர்கள், பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கை செலுத்துவதற்காக மீண்டும் அதற்குள் மூழ்கினர்.(112) மேலே வந்த அவர்கள், தாங்கள் தாமரைத் தண்டுகளைச் சேகரித்து வைத்திருந்த கரையின் பகுதிக்குச் சென்றனர். அந்த இடத்திற்கு வந்த அந்த முதன்மையான மனிதர்கள் அந்தத் தண்டுகள் எங்கும் காணப்படவில்லை என்பதைக் கண்டனர்.(113)
முனிவர்கள், "பசித்திருந்த எங்களால் உண்ணும் விருப்பத்தில் திரட்டப்பட்ட தாமரைத்தண்டுகளை எந்தப் பாவம் நிறைந்த, கடின இதயம் படைத்த மனிதன் களவாடினான்?" என்றனர்".(114)
பீஷ்மர் தொடர்ந்தார், "ஓ! பகைவர்களை நொறுக்குபவனே, அந்த மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்கள், தங்களுக்குள் ஒருவருக்கொருவர் ஐயமுற்று, "நாம் ஒவ்வொருவரும் குற்றமற்றவர் என்பது குறித்து உறுதிமொழியேற்போம்" என்றனர்.(115) அப்போது பசியாலும், களைப்பினாலும் பீடிக்கப்பட்டிருந்த அந்தத் தவசிகள் அனைவரும் இந்த முன்மொழிவுக்கு உடன்பட்டு, இந்த உறுதிமொழிகளை {சபதங்களை} ஏற்றனர்.(116)
அத்ரி, "தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவன், பசுவைக் காலால் உதைத்தவனும், சூரியனைப் பார்த்து சிறுநீர் கழித்தவனும், ஓதல் விலக்கப்பட்ட நாட்களில் வேதம் ஓதுபவனும் ஆகட்டும்" என்றார்.(117)
வசிஷ்டர், "தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவன், வேதங்கற்பதைத் தவிர்ப்பவனாகவோ, நாய்களை இழுத்துச் செல்பவனாகவோ, துறவு வாழ்வுமுறைக்கு விதிக்கப்பட்ட விதிகளுக்குக் கட்டுப்படாத துறவியாகத் திரிபவனாகவோ, தன் பாதுகாப்பை நாடி வந்தவனைக் கொல்பவனாகவோ, தன் மகளை விற்று வாழ்பவனாகவோ, கஞ்சனிடமும், இழிந்தோரிடமும் செல்வம் வேண்டுபவனாகவோ ஆகட்டும்" என்றார்.(118,19)
கசியபர், "தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவன், அனைத்து இடங்களிலும் அனைத்து வகைச் சொற்களையும் பேசுபவனாகவும், நீதிமன்றத்தில் பொய் சாட்சி கொடுப்பவனாகவும், வேள்விகளில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சியை உண்பவனாகவும், தகாத மனிதர்களுக்குக் கொடையளிப்பவனாகவும், தகுந்த மனிதர்களுக்குத் தகாத காலங்களில் கொடையளிப்பவனாகவும், பகல்வேளையில் பெண்களுடன் பாலினக் கலவியில் ஈடுபடுபவனாகவும் ஆகட்டும்"(120,121)
பரத்வாஜர், "தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவன், பெண்கள், உறவினர்கள் மற்றும் பசுக்களிடம் நீதியற்ற கொடும் நடத்தை கொண்டவனாகட்டும். அவன் தன் மேன்மையான அறிவையும், திறனையும் வெளிப்படுத்துவதன் மூலம் சச்சரவுகளில் பிராமணர்களை அவமதிக்கட்டும். ஆசானை அவமதித்து ரிக்குகளையும், யஜுஸ்களையும் படிக்கட்டும். வைக்கோல் அல்லது செத்தையில் உண்டாக்கப்பட்ட நெருப்பில் அவன் ஆகுதிகளை ஊற்றட்டும்" என்றார்.(122,123)
ஜமதக்னி, "தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவன், நீரில் மலத்தையும் புழுதியையும் வீசிய குற்றம் புரிந்தவனாகட்டும். அவன் பசுக்களிடம் பகை பாராட்டட்டும். அவன் பருவகாலம் அல்லாமல் பெண்களிடம் பாலினக்கலவிசெய்த குற்றம்புரிந்தவனாகட்டும். அவன் அனைத்து மனிதர்களின் வெறுப்பையும் ஈர்க்கட்டும். அவன் தன் மனைவியின் ஊதியத்தில் இருந்து தன்னைப் பராமரித்துக் கொள்ளட்டும். அவன் நண்பர்கள் எவரையும் கொள்ளாதிருக்கட்டும், அவன் பல பகைவர்களைக் கொண்டிருக்கட்டும். அவன் மற்றொருவனுக்குச் செய்த விருந்தோம்பலுக்குப் பதிலாக அந்த மற்றொருவரின் விருந்தினராகட்டும்" என்றார்[26].(124,125)
[26] "மனைவியின் மூலம் வாழ்வாதாரத்தை அடைவது இந்நாட்டில் அருவருப்புணர்வுடனே பார்க்கப்பட்டது. எனவே, பழங்காலத்தில் மருமகன்களைத் தங்கள் வீட்டில் வைத்துக்கொள்ளும் வழக்கம் அறியப்படவில்லை {அவ்வழக்கம் அன்றில்லை} என்று தெரிகிறது. தான் கொடுத்த விருந்திற்குப் பதிலாக விருந்தினராகச் சொல்வது அற்பத்தனமாக மட்டுமல்லாமல் பலனை {புண்ணியத்தை} இழக்கச் செய்வதாகவும் கருதப்பட்டது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
கோதமர், "தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவன், தான் கற்ற வேதங்களை விட்ட குற்றம் புரிந்தவனாகட்டும். அவன் மூன்று புனித நெருப்புகளைக் கைவிட்டவனாகட்டும். அவன் சோமத்தை (சோமலதையை / சோமச்சாற்றை) விற்பனை செய்பவனாகட்டும். அனைத்து வகை {வர்ண} மக்களாலும் நீர் இறைக்கப்படும் ஒரேயொரு கிணற்றை மட்டுமே கொண்ட கிராமத்தில் வசிப்பவனும், ஒரு சூத்திரப் பெண்ணை மணம் செய்து கொண்டவனுமான ஒரு பிராமணனுடன் அவன் வாழட்டும்" என்றார்[27].(126,127)
[27] கும்பகோணம் பதிப்பில், "ஒரு கிணற்று ஜலத்தை நம்பின கிராமத்திலிருந்து சூத்திரப் பெண்ணை வைத்திருக்கும் பிராம்மணனுக்கு எந்த லோகமோ அந்த லோகத்தை அடைவான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அவன் ஒரே பொதுக் கிணறுடைய கிராமத்தில் வசிக்கட்டும். ஒரு விருஷலையைத் தன் மனைவியாகக் கொண்ட ஒரு பிராமணனுடன் வாழட்டும்" என்றிருக்கிறது. அனைத்து வர்ணத்தையும் சார்ந்தவர்கள் என்ற சொல் கும்பகோணம் பதிப்பிலும், பிபேக்திப்ராய் பதிப்பிலும் இல்லை. மூலத்தில் adhītya vedāṃs tyajatu trīn agnīn apavidhyatu vikrīṇātu tathā somaṃ bisa stainyaṃ karoti yaḥ upa pānaplave grāme brāhmaṇo vṛṣalī patiḥ tasya sālokyatāṃ yātu bisa stainyaṃ karoti yaḥ - http://sacred-texts.com/hin/mbs/mbs13095.htm என்றிருக்கிறது. மூலத்திலும் வர்ண என்ற சொல் தென்படவில்லை. பிபேக்திப்ராயின் பதிப்பு மூலத்தின் பொருளுக்கு நெருகியிருப்பதாகத் தெரிகிறது.
விஷ்வாமித்திரர், "தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவன், தன் வாழ்நாளிலேயே தன் ஆசான்களையும், பெரியோர்களையும், பணியாட்களையும் பிறர் பராமரிக்கும் நிலையைக் காணும் விதியை அடையட்டும். அவன் நற்கதி அடையாதிருக்கட்டும். அவன் பல பிள்ளைகளின் தந்தையாகட்டும்.(128) அவன் எப்போதும் தூய்மையற்றவனாகவும், பிராமணர்களில் இழிந்தவனாகவும் இருக்கட்டும். அவன் தன் உடைமைகளில் செருக்குடையவனாக இருக்கட்டும். அவன் நிலத்தை உழுபவனாக இருக்கட்டும், அவன் வன்மம் நிறைந்தவனாக இருக்கட்டும்.(129) அவன் மழைக்காலங்களில் திரிபவனாக இருக்கட்டும். அவன் ஊதியம் கொள்ளும் பணியாளாகட்டும். அவன் மன்னனின் புரோகிதனாகட்டும். வேள்விக்குத் துணை புரியத் தகாத தூய்மையற்ற மனிதர்களின் வேள்விகளுக்கு அவன் துணை புரியட்டும்" என்றார்.(130)
அருந்ததி, "தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவள், தன் மாமியாரால் எப்போதும் அவமதிக்கப்படட்டும். அவள் எப்போதும் தன் கணவரிடம் எரிச்சலடையட்டும். அவள் தன் வீட்டிற்கு வரும் எந்த நல்ல பொருளையும் பிறருக்குப் பங்கிட்டுக் கொடுக்காமல் உண்ணட்டும்.(131) அவன் தன் தலைவனின் உறவினர்களை அவமதித்து, தன் கணவனின் வீட்டில் ஒவ்வொரு மாலை வேளையிலும் வறுத்த வாற்கோதுமை மாவை உண்டு வாழட்டும். அவள் (அவளைக் களங்கப்படுத்தும் கறைகளின் விளைவாக) அனுபவிக்கத்தகுந்தவளாகக் கருதப்படட்டும். அவள் ஒரு வீர மகனின் தாயாகட்டும்" என்றாள்[28].(132)
[28] "ஒரு பிராமணிப் பெண் வீரச் செயல்களைப் புரியும் மகனைப் பெறுவது நிந்தனைக்குரியதாகக் கருதப்பட்டது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
கண்டை, "தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவள், எப்போதும் பொய் பேசுபவளாக இருக்கட்டும். அவள் எப்போதும் தன் உறவினர்களுடன் சண்டையிடுபவளாகட்டும். அவள் பணத்தையே கருத்தில் கொண்டு தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்கட்டும்.(133) தான் சமைத்த உணவை யாருக்குப் பங்கிட்டுக் கொடுக்காமல் தனியாகவே அவள் உண்ணட்டும். அவள் தனது மொத்த வாழ்வையும் அடிமைத்தனத்தில் கழிக்கட்டும். உண்மையில், தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவள் குற்றச் சூழ்நிலைகளில் பாலினக்கலவி புரிந்த விளைவால் கருவுற்றவளாகட்டும்[29]" என்றாள்.(134)
[29] கும்பகோணம் பதிப்பில், "தானே சமைத்துச் சாப்பிடுகிறவளும், அடிமைத்தனத்திலேயே வாழ்நாளைக் கழிப்பவளும், தகாத செய்கையினால் இறப்பவளும் ஆவாள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அவள் தான் சமைத்து உணவைத்தானே தனியாக உண்ணட்டும். அவள் தன் வாழ்நாளைப் பணிப்பெண்ணாகவே கழிக்கட்டும். அவளுடைய பிறழ்செய்கைகளினால் அவள் அழிவடையட்டும்" என்றிருக்கிறது. கருவடையட்டும் என்று வேறு எந்தப் பதிப்பிலும் இல்லை.
பசுஸகன், "தாமரைத் தண்டுகளைக் களவு செய்தவன், அடிமைத் தாய்க்குப் பிறக்கட்டும். அவன் பயனற்ற பிள்ளைகள் பலரைப் பெறட்டும். அவன் ஒருபோதும் தேவர்களை வணங்காதிருக்கட்டும்" என்றான்.(135)
சுனஸ்ஸகன், "தாமரைத் தண்டுகளை அகற்றியவன், சாமங்கள் மற்றும் யஜுஸ்கள் அனைத்தையும் படித்தவனும், கவனமாகப் பிரம்மச்சரிய நோன்பை நோற்றவனுமான ஒரு பிராமணனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்கும் பலனை அடையட்டும். அவன் அதர்வணங்கள் அனைத்தையும் படித்த பிறகு இறுதி நீராடலைச் செய்யட்டும்" என்றான்.(136)
முனிவர்கள் அனைவரும், "நீ சொன்ன செயல்கள் அனைத்தும் பிராமணர்களால் விரும்பப்படுவது என்பதால் நீ ஏற்றது உறுதிமொழியே {சபதமே} அல்ல. ஓ! சுனஸ்ஸகா, எங்கள் தாமரைத் தண்டுகளை அபகரித்தவன் நீயே என்பது தெளிவாகத் தெரிகிறது" என்றனர்.(137)
சுனஸ்ஸகன், "தாமரைத்தண்டுகள் உங்களால் வைக்கப்பட்டதைக் காணாமல், நானே அவற்றை உண்மையில் களவு செய்தேன் என்பதால் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே.(138) நீங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்தத் தண்டுகளை நான் மறைந்துபோகச் செய்தேன். பாவமற்றவர்களே, உங்களைச் சோதிக்கும் விருப்பத்திலேயே அச்செயல் என்னால் செய்யப்பட்டது.(139) நான் உங்களைக் காக்கவே இங்கே வந்தேன். கொல்லப்பட்டுக் கிடக்கும் அந்தப் பெண் யாதுதானி என்றழைக்கப்பட்டவள் ஆவாள். அவள் கடும் இயல்பைக் கொண்டவளாவாள். மன்னன் விருஷாதர்ப்பியின் மந்திரங்களில் உண்டான அவள் உங்கள் அனைவரையும் கொல்லும் விருப்பத்திலேயே இங்கே வந்தாள்.(140) தவங்களையே செல்வமாகக் கொண்ட தவசிகளே, அந்த மன்னனால் அனுப்பப்பட்டு இங்கு வந்த அவள் என்னால் கொல்லப்பட்டாள். இல்லையென்றால், வேள்வித்தீயில் உண்டானவளும், தீயவளுமான அந்தப் பாவம் நிறைந்த உயிரினம் உங்கள் உயிர்களை வாங்கியிருப்பாள்.(141) கல்விமான்களான பிராமணர்களே அவளைக் கொல்லவும், உங்களைக் காக்கவுமே நான் இங்கே வந்தேன். நான் வாசவன் என்பதை அறிவீராக. நீங்கள் பேராசையின் ஆதிக்கத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டுவிட்டீர்கள். இதன் விளைவாக நீங்கள் இதயத்தில் எழுந்தவுடனேயே விருப்பம் கனியும் நிலையைத் தரும் நித்திய உலகங்கள் பலவற்றை வென்றீர்கள். மறுபிறப்பாளர்களே, தாமதமில்லாமல் இந்த இடத்தில் இருந்து எழுந்து, உங்களுக்காக ஒதுக்கபட்ட அந்த அருள் உலகங்களுக்குச் செல்வீராக" என்றான்".(142)
பீஷ்மர் தொடர்ந்தார், "புரந்தரனின் மறுமொழியால் உயர்ந்த நிறைவை அடைந்த அந்தப் பெரும் முனிவர்கள் "அப்படியே ஆகட்டும்" என்றனர். பிறகு அவர்கள் இந்திரனின் துணையுடன் சொர்க்கத்திற்கு உயர்ந்தனர்.(143) இவ்வாறே உயர் ஆன்மா கொண்ட அம்மனிதர்கள், பசிக்கொடுமையால் பீடிக்கப்பட்டாலும், அனுபவிக்கத்தகுந்த பல்வேறு பொருட்களைக் கொடுப்பதாக அத்தகைய நேரத்தில் ஆசை காட்டப்பட்டாலும், அந்த ஆசைக்கு வசப்படுவதைத் தவிர்த்தனர். அத்தகை தன் மறுப்பின் விளைவாலேயே அவர்கள் சொர்க்கத்தை அடைந்தனர். எனவே ஒருவன் எந்தச் சந்தர்ப்பத்திலும் தன்னிடத்திலிருந்து பேராசையைக் கைவிட வேண்டும் என்பது தெரிகிறது.(144,145) ஓ! மன்னா, இதுவே உயர்ந்த கடமையாகும். பேராசை கைவிடப்பட வேண்டும். (நீதிமிக்க முனிவர்களின் செயல்களைச் சொல்லும்) இக்கதையை மானுட சபைகளில் உரைக்கும் மனிதன்.(146) செல்வத்தை அடைவதில் வெல்கிறான். அத்தகைய மனிதன் ஒருபோதும் துன்பகரமான கதியை அடைய வேண்டியதில்லை. பித்ருக்கள், முனிவர்கள் மற்றும் தேவர்கள் ஆகிய அனைவரும் அவனிடம் நிறைவடைகின்றனர். மேலும் மறுமையில் அவன் புகழ், அறத்தகுதி மற்றும் செல்வத்தைக் கொண்டவனாகிறான்" {என்றார் பீஷ்மர்}.(147)
அநுசாஸனபர்வம் பகுதி – 93cல் உள்ள சுலோகங்கள் : 62-147/147
ஆங்கிலத்தில் | In English |