Theft and Shastra! | Anusasana-Parva-Section-94 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 94)
பதிவின் சுருக்கம் : இந்திரனுடன் தீர்த்தயாத்திரை சென்ற ரிஷிகள்; தாமரை மலர் களவு போனதால் அனைவரும் சபதம் செய்தது; களவு செய்த இந்திரன் ரிஷிகளின் சொற்களை சாத்திரம் என்றது ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "புனித நீர்நிலைகளை நோக்கிப் பயணம் செய்யும்போது (ஒருவர் பின் ஒருவராகப் பல முனிவர்கள்) ஏற்ற உறுதிமொழிகளைச் சொல்லும் பழைய வரலாறு இது தொடர்பாகக் குறிப்பிடப்படுகிறது.(1) ஓ! பாரதர்களில் சிறந்தவனே, அந்தக் களவுச் செயல் இந்திரனால் செய்யப்பட்டது, அரச முனிகள் மற்றும் மறுபிறப்பாள முனிவர்கள் பலரால் உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன.(2)
ஒரு காலத்தில் மேற்குப் பிரபாஸத்தை நோக்கி முனிவர்கள் கூட்டமாகச் சேர்ந்து சென்றனர். அங்கே அவர்கள் செய்த ஆலோசனையின் விளைவாக, பூமியின் புனித நீர் நிலைகளை அனைத்துக்கும் அவர்கள் பயணம் செய்வதெனத் தீர்மானித்தார்கள்.(3) ஓ! மன்னா, சக்ரன், அங்கிரஸ், பெருங்கல்வியுடையவரான கவி, அகஸ்தியர், நாரதர், பர்வதர், பிருகு, வசிஷ்டர், கசியபர், கௌதமர், விஷ்வாமித்திரர் மற்றும் ஜமதக்னி ஆகியோர் அங்கிருந்தனர்.(4) காலவர், அஷ்டகர், பரத்வாஜர், அருந்ததி, வாலகில்யர்கள், சிபி, திலீபன், நஹுஷன், அம்பரீஷன், அரசன் யயாதி, துந்துமாரன், பூரு ஆகியோரும் அங்கிருந்தனர்.(5) இந்த முதன்மையான மனிதர்கள், விருத்திரனைக் கொன்றவனான உயரான்ம சதக்ரதுவை தங்கள் தலைமையில் நிறுத்திக் கொண்டு, ஒன்றன்பின் ஒன்றாகப் புனித நீர்நிலைகள் அனைத்திற்குச் சென்று, இறுதியாக மாக {மாசி} மாதத்தின் முழு நிலவு {பௌர்ணமி} நாளில் உயர்ந்ததும், புனிதமானதுமான கௌசிகியை அடைந்தனர்.(6) புனித நீர்நிலைகள் அனைத்திலும் நீராடியதன் மூலம் தங்கள் பாவங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையடைந்த அவர்கள் இறுதியாக மிகப் புனிதமான பிரம்மசரஸுக்குச் சென்றனர். நெருப்பைப் போன்ற பெருஞ்சக்தி கொண்ட அம்முனிவர்கள், அத்தடாகத்தில் நீராடி, தாமரைத் தண்டுகளைத் திரட்டவும், உண்ணவும் தொடங்கினர்.(7) அந்தப் பிராமணர்களில் சிலர், தாமரையின் தண்டுகளையும், வேறு சிலர் கருங்குவளையின் {கருநெய்தல்/நீலோத்பல) தண்டுகளையும் பிரித்தெடுத்தனர். விரைவில் அவர்கள் அகஸ்தியரால் பிரித்தெடுக்கப்பட்ட (கரையில் வைக்கப்பட்டிருந்த) தண்டுகள் எவராலோ எடுக்கப்பட்டுவிட்டதைக் கண்டனர்.(8)
முனிவர்களில் முதன்மையான அகஸ்தியர், அவர்கள் அனைவரிடமும், "என்னால் பிரித்தெடுக்கப்பட்டு இங்கே வைக்கப்பட்டிருந்த நல்ல தண்டுகளை எடுத்தவர் யார்? உங்களில் எவரோ ஒருவர்தான் இச்செயலைச் செய்திருக்க வேண்டுமென நான் ஐயுறுகிறேன். அவற்றை எடுத்துக் கொண்டவன் என்னிடம் திருப்பித் தரட்டும். இவ்வாறு என் தண்டுகளைக் கையாடல் செய்வது உங்களுக்குத் தகாது.(9) அற சக்தியைக் காலங்கெடுக்கும் எனக் கேள்விப்படுகிறோம். எனவே, அறம் பீடிக்கப்படுகிறது. மறம் உலகைக் கெடுத்து, முழுமையாக இங்கே தன்னை நிறுவிக்கொள்ளும் முன்னர், நான் சொர்க்கம் செல்வது நல்லது[1].(10) காலம் வரும்போது, கிராமப் புறங்கள் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பிராமணர்கள் சூத்திரர்கள் கேட்கும் வகையில் வேதங்களை உரக்கச் சொல்லும் காலம் வருவதற்கு முன்னர், கொள்கை நோக்கங்களின் மூலம் மன்னர்கள் அறவிதிகளுக்கு எதிராகச் செயல்படும் காலம் வருவதற்கு முன்னர் நான் சொர்க்கம் செல்வது நல்லது.(11) உயர்ந்த, நடுத்தர, தாழ்ந்த வகைகளுக்கிடையில் உள்ள வேறுபாடுகளை மக்கள் கருதாமல் விடும் காலம் வருவதற்கு முன்னர் நான் சொர்க்கம் செல்வது நல்லது. உலகை அறியாமை பீடித்து, அனைத்துப் பொருட்களும் இருளில் மூழ்குவதற்கு முன்னார் நான் சொர்க்கம் செல்வது நல்லது[2].(12) பலமிக்கவர்கள் பலவீனர்களுக்குத் தலைமை தாங்கி அவர்களை அடிமைகளாக நடத்தும் காலம் வருவதற்கு முன்னர் நான் சொர்க்கம் செல்வது நல்லது. உண்மையில், இவற்றைப் பூமியில் காணும்வரை இருப்பதற்கு நான் துணியேன்" என்றார் {அகஸ்தியர்}.(13)
[1] "காலம் செல்ல செல்ல அறத்தின் பலம் குன்றும் எனச் சாத்திரங்கள் அறிவிக்கின்றன. கிருத யுகத்தில் அது முழுமையாக இருந்தது. திரேதா யுகத்தில் அது கால் பகுதியை இழந்தது. துவாபர யுகத்தில் மற்றொரு கால் பகுதியை இழந்தது. கலியுகத்தில் முக்கால் பகுதியை இழந்து, கால் பகுதி மட்டுமே எஞ்சியிருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] "சமூகத்தின் உயர்ந்த, நடுத்தர மற்றும் தாழ்ந்த வகைகளுக்கிடையிலான வேறுபாடுகள் நித்தியமானவை, இந்த வேறுபாடுகளைக் களைவதைவிடப் பேரிடர் வேறேதும் இல்லை என முனிவர்கள் கருதுகின்றனர். அவர்களது பார்வையில் மனிதர்களுக்குள் சமத்துவம் என்பது மட்டுப்படுத்தமுடியாத தீமையாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அவர் சொன்னதில் மிகுந்த கவலையடைந்த முனிவர்கள் அந்தப் பெருந்தவசியிடம், "நாங்கள் உமது தண்டுகளைக் களவு செய்யவில்லை. நீங்கள் எங்களிடம் ஐயங்கொள்வது தகாது. ஓ! பெரும் முனிவரே, நாங்கள் மிகப் பயங்கர உறுதிமொழிகளை ஏற்கப் போகிறோம்" என்றனர்.(14) தங்கள் குற்றமற்ற தன்மையை உணர்ந்து, அற விளைவைத் தாங்க விரும்பி இச்சொற்களைச் சொன்ன முனிவர்களும், அரச வழித்தோன்றல்களான தவசிகளும், ஒருவர் பின் ஒருவராகப் பின்வரும் உறுதிமொழிகளை {சபதங்களை} ஏற்கத் தொடங்கினர்.(15)
பிருகு, "உமது தண்டுகளைக் களவு செய்தவன், வையப்படும்போது வைபவனும், தாக்கப்படும்போது தாக்குபவனும், (வேள்விகளில் கொல்லப்படும்) விலங்குகளின் முதுகெலும்புடன் இணைந்த இறைச்சியை உண்பவனுமாகட்டும்" என்றார்[3].(16)
[3] "மன்னிப்பதே {பொறுமையாக இருப்பதே} பிராமணனின் கடமையாகும். மன்னிக்கும் தன்மையில் இருந்து வீழ்வது கடமையில் இருந்து வீழ்வதாகும். வையப்படும்போது வைவதும், தாக்கப்படும்போது தாக்குவதும் பிராமணனின் வழக்கில் வரம்புமீறிய பயங்கரச் செயல்களாகும். பிராமணன் அண்டத்தின் நண்பன் என்பதால், எதிர்த்தாக்குதல் என்ற கருத்தே பிராமணனின் இதயத்துக்குள் நுழையக்கூடாது. நண்பனிடமும், பகைவனிடமும் அவன் சமமாகவே நடந்து கொள்ள வேண்டும். கொல்லப்பட்ட விலங்கின் முதுகெலும்புடன் இணைந்த இறைச்சியை உண்பது மிகப் பயங்கர வரம்புமீறலாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
வசிஷ்டர், "உமது தண்டுகளைக் களவு செய்தவன், வேத கல்வியைப் புறக்கணித்து, நாயை இழுத்துக் கொண்டு ஒரு நகரத்திலோ, ஊரிலோ துறவியாக வாழட்டும்" என்றார்[4].(17)
[4] "அறத்துறவி ஒருவர், எங்கே இரவைச் சந்திக்கிறாரோ அங்கே உறங்கி உலகம் முழுவதும் திரிந்து கொண்டிருக்க வேண்டும். அத்தகைய மனிதன் ஒரு நகரத்திலோ, ஊரிலோ வசிப்பது பாவம் நிறைந்த செயலாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
கசியபர், "உமது தண்டுகளைக் களவு செய்தவன், அனைத்துப் பொருட்களையும் அனைத்து இடங்களிலும் விற்பனைசெய்து, அடைக்கலப் பொருட்களைக் கையாடல் செய்து, பொய் சாட்சி சொல்பனாகட்டும்" என்றார்.(18)
கௌதமர், "உமது தண்டுகளைக் களவு செய்தவன், அனைத்து உயிரினங்களையும் சமபார்வையில் பார்க்காத புத்தியுடன், அனைத்திலும் செருக்கை வெளிப்படுத்திக் கொண்டு, எப்போதும் கோபம் மற்றும் ஆசையின் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டவனாகட்டும். அவன் நிலத்தை உழுபவனாகவும், வன்மத்தால் ஈர்க்கப்பட்டவனாகவும் ஆகட்டும்" என்றார்[5].(19)
[5] "நிலத்தை உழுவதும் ஒரு பிராமணனுக்கு வரம்புமீறிய செயலாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அங்கிரஸ், "உமது தண்டுகளைக் களவு செய்தவன், எப்போதும் தூய்மையற்றவனாகட்டும். அவன் (தன் தீச்செயல்களுக்காக) நிந்திக்கத் தகுந்தவனாகட்டும். அவன் நாய்களை இழுத்துச் செல்லட்டும். அவன் பிராமணக் கொலை {பிரம்மஹத்தி பாவம்} செய்த குற்றவாளியாகட்டும். வரம்புமீறல்களைச் செய்த பிறகு பாவக்கழிப்புகளில் அவன் வெறுப்பு கொண்டவனாகட்டும்" என்றார்.(20)
துந்துமாரன், "உமது தண்டுகளைக் களவு செய்தவன், தன் நண்பர்களிடம் நன்றிமறந்தவனாகட்டும். அவன் ஒரு சூத்திரப் பெண்ணிடம் பிறக்கட்டும். அவன் (வீட்டுக்கு வரும்) எந்த நல்ல உணவையும் (பிறருக்குப் பங்களிக்காமல்) தனியாக உண்பவனாகட்டும்" என்றார்[6].(21)
[6] "நல்ல உணவை ஒருபோதும் தனியாக உண்ணக்கூடாது. அது பிள்ளைகளுக்கும், பணியாட்களுக்கும் எப்போதும் பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
திலீபன், "உமது தண்டுகளைக் களவு செய்தவன், ஒரே ஒரு கிணறு உள்ள கிராமத்தில் வசிப்பவனும், ஒரு சூத்திரப் பெண்ணுடன் பாலினக் கலவி கொண்டவனுமான ஒரு பிராமணனுக்காக ஒதுக்கப்படும் புகழ்க்கேடு கொண்ட துன்பகரமான உலகங்களை அடையட்டும்" என்றான்[7].(22)
[7] "ஒரே கிணற்றைக் கொண்ட கிராமத்தை ஒரு பிராமணன் கைவிட வேண்டும். ஏனெனில், மக்கள் தொகையின் அனைத்து வகையினரும் அந்தக் கிணற்றில் இருந்தே நீர் இறைப்பார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பூரு, "உமது தண்டுகளைக் களவு செய்தவன் மருத்துவத் தொழிலைப் பின்பற்றட்டும். அவன் தன் மனைவியுடைய ஊதியத்தின் மூலம் ஆதரிக்கப்படட்டும். அவன் தன் மாமனாரிடம் இருந்து வாழ்வாதாரத்தை ஈட்டட்டும்" என்றான்.(23)
சுக்கிரன், "உமது தண்டுகளைக் களவு செய்தவன், வேள்விகளில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சியை உண்ணடும். அவன் பகற்பொழுதில் பாலினக் கலவி கொள்ளட்டும். அவன் மன்னனின் பணியாளாகட்டும்" என்றார்.(24)
ஜமதக்னி, "உமது தண்டுகளைக் களவு செய்தவன், தடைசெய்யப்பட்ட நாட்களில் அல்லது சந்தர்ப்பங்களில் வேதங்களைப் படிக்கட்டும். தன்னால் செய்யப்படும் சிராத்தங்களில் அவன் நண்பர்களுக்கு உணவூட்டட்டும். அவன் ஒரு சூத்திரனின் சிராத்தத்தில் உண்ணட்டும்" என்றார்.(25)
சிபி, "உமது தண்டுகளைக் களவு செய்தவன், (நாள்தோறும் செய்யும் வழிபாட்டுக்கென) நெருப்பை நிறுவாமலேயே இறந்து போகட்டும். பிறர் செய்யும் வேள்விகளைத் தடை செய்த குற்றவாளியாகட்டும். தவம் நோற்பவர்களிடம் அவன் சச்சரவு செய்யட்டும்" என்றான்.(26)
யயாதி, "உமது தண்டுகளைக் களவு செய்தவன், தன் மனைவி பருவகாலத்தில் இல்லாத போதும் அவனே தன் தலையில் சடாமுடி தரித்து நோன்பு நோற்றுக் கொண்டிருக்கும்போதும் அவளிடம் பாலினக் கலவியில் ஈடுபட்ட குற்றவாளியாகட்டும். அவன் வேதங்களையும் அலட்சியம் செய்பவனாகட்டும்" என்றான்.(27)
நஹுஷன் {நகுஷன்}, "உமது தண்டுகளைக் களவு செய்தவன், துறவு நோன்பை ஏற்ற பிறகு இல்லற வாழ்வுமுறையில் வாழட்டும். ஒரு தனிப்பட்ட நோன்பு அல்லது ஒரு வேள்விக்கான தொடக்கச் சடங்குகளைச் செய்த பிறகு, அவன் (எவ்வகைக் கட்டுப்பாடுகளுமின்றி) விரும்பியவாறு செயல்படுபவனாகட்டும். (எவ்வகை அறிவுத்துறையிலும் கற்க வரும்) சீடர்களுக்கான உரைக்காகப் பணம் சார்ந்த நிறைவை ஏற்பவனாகட்டும்" என்றான்.(28)
அம்பரீஷன், "உமது தண்டுகளைக் களவு செய்தவன், பெண்கள், உறவினர்கள் மற்றும் பசுக்களிடம் நீதியற்ற கொடூர நடத்தை கொண்டவனாகட்டும். அவன் பிராமணக் கொலை {பிரம்மஹத்தி பாவம்} செய்த குற்றவாளியாகட்டும்" என்றான்.(29)
நாரதர், "உமது தண்டுகளைக் களவு செய்தவன், உடலோடு ஆன்மாவை அடையாளம் {உடலும், ஆன்மாவும் ஒன்றெனக்)காண்பவனாகட்டும். பழிக்கத்தக்க ஆசானிடம் அவன் சாத்திரங்களைப் பயிலட்டும். ஒவ்வொரு படிநிலையிலும் உச்சரிப்பு விதிகளுக்கு எதிரான குற்றம் செய்தபடியே அவன் வேதங்களை ஓதட்டும். அவன் பெரியோர் அனைவரையும் அவமதிக்கட்டும்" என்றார்.(30)
நாபாகன், "உமது தண்டுகளைக் களவு செய்தவன், எப்போதும் பொய் பேசுபவனாகவும், அறவோரிடம் சச்சரவு செய்பவனாகவும் ஆகட்டும். அவன் தன் மருமகனால் அளிக்கப்படும் பணத்தில் நிறைவடைந்து அதை ஏற்றுத் தன் மகளை அவனுக்குத் திருமணம் செய்து கொடுக்கட்டும்" என்றான்.(31)
கவி, "உமது தண்டுகளைக் களவு செய்தவன், ஒரு பசுவதைத் தன் காலால் தாக்கிய குற்றவாளியாக்கட்டும். அவன் சூரியனைப் பார்த்து சிறுநீர் கழிக்கட்டும். தன்னிடம் உறைவிடம் நாடும் மனிதனை அவன் கைவிடட்டும்" என்றார்.(32)
விஷ்வாமித்திரர், "உமது தண்டுகளைக் களவு செய்தவன், தன் தலைவனிடம் வஞ்சகமாக நடந்து கொள்ளும் பணியாளாகட்டும். அவன் மன்னனின் புரோகிதனாகட்டும். வேள்விகளில் துணை செய்யத்தகாதவனுக்கு அவன் ரித்விக்காகட்டும்" என்றார்.(33)
பர்வதர், "உமது தண்டுகளைக் களவு செய்தவன், ஒரு கிராமத்தின் தலைவனாகட்டும். அவன் கழுதைகளில் பயணங்கள் போகட்டும். அவன் தன் வாழ்வுக்காக நாய்களை இழுத்துச் செல்லட்டும்" என்றார்.(34)
பரத்வாஜர், "உமது தண்டுகளைக் களவு செய்தவன், கொடூர நடத்தையும், வாய்மையற்ற பேச்சும் கொண்ட ஒருவனுடைய பாவங்கள் அனைத்தையும் செய்த குற்றவாளியாகட்டும்" என்றார்.(35)
அஷ்டகர், "உமது தண்டுகளைக் களவு செய்தவன், ஞானமற்றவனும், வினோத மனப்போக்கனும், பாவம் நிறைந்த நடத்தை கொண்டவனும், நீதியற்ற முறையில் பூமியை ஆளும் மனநிலை கொண்ட ஒரு மன்னனாகட்டும்" என்றார்.(36)
காலவர், "உமது தண்டுகளைக் களவு செய்தவன், ஒரு பாவம் நிறைந்த மனிதனைவிடப் புகழ்க்கேட்டை அடையட்டும். அவன் தன் உற்றார் உறவினரிடம் பாவச்செயல் புரிபவனாகட்டும். அவன் பிறருக்கு அளித்த கொடைகளை அறிவிப்பவனாகட்டும்" என்றார்.(37)
அருந்ததி, "உமது தண்டுகளைக் களவு செய்தவள், தனது மாமியாரைக் குறித்துக் குறைபேசுபவளாகட்டும். அவள் தன் தலைவனிடம் அருவருப்பு கொள்பவளாகட்டும். அவள் தன் வீட்டிற்கு வரும் எந்த நல்ல உணவையும் தனியாக உண்பவளாகட்டும்" என்றாள்.(38)
வாலகில்யர்கள், "உமது தண்டுகளைக் களவு செய்தவன், (தன் வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்காக) ஒரு கிராமத்தின் நுழைவாயிலில் ஒற்றைக்காலில் நின்று கொண்டிருக்கட்டும். அவன் தன் கடமைகளை அனைத்தையும் அறிந்தவனாக இருந்தாலும், அனைத்து அத்துமீறல்களையும் செய்த குற்றவாளியாகட்டும்" என்றனர்[8].(39)
[8] "ஒற்றைக்காலில் நின்று தவம் செய்வது மற்ற தவங்களைப் போலவே காடுகளில் செய்யப்படுவதாகும். மக்கள் அளிக்கும் கொடையால் தூண்டப்பட்டு ஒரு கிராமத்திற்குச் செல்லும் பாதையில் தவம் பயில்வது பயங்கரமான வரம்புமீறலாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சுனஸ்ஸகன், "உமது தண்டுகளைக் களவு செய்தவன், நாள்தோறும் செய்ய வேண்டிய ஹோமத்தை அலட்சியம் செய்து மகிழ்ச்சியாக உறங்கும் பிராமணனாகட்டும். அவன் அறத் துறவியாகி, எக்கட்டுப்பாடையும் நோற்காமல் விரும்பியபடி நடந்து கொள்பவனாகட்டும்" என்றான்.(40)
{பசுஸகனோகு கூடிய} சுரபி, "உமது தண்டுகளைக் களவு செய்தவளுடைய பால், மனித மயிராலான கயிற்றால் கட்டப்பட்ட (பின்னங்) கால்களுடனும், தன்னுடையதல்லாத கன்றுடனும், வெண்கலப் பாத்திரத்தில் கறக்கப்படட்டும்" என்றாள்[9]".(41)
[9] "சில தீய பசுக்கள் தங்கள் பின்னங்கால்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் கறக்கப்படும். அந்தக் கயிறு மனித மயிராலானதாக இருந்தால் அஃது அனுபவிக்கு வலி அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. மற்றொரு பசுவுடைய கன்றின் உதவி நாடப்படுவதும் பாவம் நிறைந்ததாகக் கருதப்படுகிறது. அந்தப் பசுவுக்கும் {அந்தக் கன்று} பால் குடிப்பது ஏற்புடையதாக இருக்காது. வெண்கலப்பாத்திரத்தில் கறக்கப்படும் பால் தேவர்களுக்கும், விருந்தினர்களுக்கும் தகுந்ததல்ல" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பீஷமர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! குரு மன்னா, முனிவர்களும், அரச தவசிகளும் இவ்வாறு பல்வேறு உறுதிமொழிகளை ஏற்றதும், ஆயிரங்கண் கொண்ட தேவர்களின் தலைவன், கோபம் நிறைந்தவராக இருக்கும் முனிவர் அகஸ்தியரின் மீது தன் கண்களைச் செலுத்தி மகிழ்ச்சியால் நிறைந்தவனானான்.(42) தாமரைத் தண்டுகள் மறைந்து போனதால் மிகுந்த கோபத்தில் இருந்த அந்த முனிவரிடம் பேசிய மகவத் {மகவான்}, தன் மனத்தில் ஓடியதை இவ்வாறு அறிவித்தான். ஓ! மன்னா, மறுபிறப்பாளர்களும், தெய்வீகமானவர்களும், அரசர்களாகவும் இருந்த அந்தத் தவசிகளுக்கு மத்தியில் இந்திரன் சொன்னதைக் கேட்பாயாக.(43)
சக்ரன் {இந்திரன்}, "உமது தண்டுகளைக் களவு செய்தவன், பிரம்மச்சரிய நோன்புகளை முறையாக நோற்றவராகவோ, சாமங்கள் மற்றும் யஜுஸ்களை முறையாகப் படித்தவராகவோ உள்ள ஒரு பிராமணருக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்கட்டும். அதர்வ வேதங்கற்று நிறைவடைந்ததும் இறுதி நீராடலைச் செய்த பலன் அவனை அடையட்டும்.(44) உமது தண்டுகளைக் களவு செய்தவன் வேதங்கள் அனைத்தையும் கற்ற பலன்களை அடையட்டும். அவன் அனைத்துக் கடமைகளை நோற்பவனாகவும், அறவொழுக்கம் கொண்டவனாகவும் ஆகட்டும். உண்மையில், அவன் பிரம்மலோகத்தை அடையட்டும்" என்றான்.(45)
அகஸ்தியர், "ஓ! பலனைக் கொன்றவனே, சபிப்பதற்குப் பதிலாக நீ வாழ்த்துகிறாய். (என் தண்டுகளை நீயே எடுத்திருக்கிறாய் என்பது தெளிவாகத் தெரிகிறது). அவற்றை என்னிடம் கொடுப்பாயாக. அதுவே நித்திய கடமையாகும்" என்றார்.(46)
இந்திரன், "ஓ! புனிதமானவரே, பேராசையால் வழிநடத்தப்பட்டு நான் உமது தண்டுகளை அகற்றவில்லை. உண்மையில், நாம் நோற்க வேண்டிய கடமைகளை {தர்மங்களை} இக்கூட்டத்தில் கேட்கும் விருப்பத்தாலேயே நான் அவற்றை அகற்றினேன்.(47) ஸ்ருதிகளில் முதன்மையானவை கடமைகளாகும். கடமைகளே (உலகக் கடலைக் கடப்பதற்கான) நித்திய பாதையாகின்றன. (கடமைகளைப் பொறுத்த வகையில்) நித்தியமானவையும், மாற்றமில்லாதவையும், மாற்றங்கள் அனைத்தையும் கடந்தவையுமான முனிவர்களின் உரையாடல்களை {ரிஷிவாக்கியத்தை} நான் கேட்டேன்[10].(48) ஓ! கல்விமானான பிராமணர்களில் முதன்மையானவரே, உமது தண்டுகளான இவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்வீராக. ஓ! புனிதமானவரே, ஓ! அனைத்துக் களங்கங்களில் இருந்தும் விடுபட்டவரே, என்னுடைய இந்த வரம்புமீறலை மன்னிப்பதே {பொறுப்பதே} உமக்குத் தகும்" என்றான்".(49)
[10] "அந்த உரையாடல்களின் தன்மையினால் அவை நித்தியமானவையாகவும், மாற்றமில்லாதவையாகவும் அழைக்கப்படுகின்றன. கடமைகளே நித்திய உண்மைகளாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "தேவர்களின் தலைவனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், மிகுந்த கோபத்தில் இருந்த தவசி அகஸ்தியர் தன் தண்டுகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்த முனிவர் பெரும் உற்சாகத்தை அடைந்தார்.(50) அதன் பிறகு அந்தக் காட்டுவாசிகள் பல்வேறு புனித நீர்நிலைகளுக்குச் சென்றனர். உண்மையில், அந்தப் புனித நீர்நிலைகளுக்குச் சென்ற அவர்கள், எங்கும் தங்கள் தூய்மைச் சடங்குகளைச் செய்தனர்.(51) ஒவ்வொரு பர்வ நாளிலும் இந்தக் கதையை மிகுந்த கவனத்துடன் படிக்கும் மனிதன், அறியாமை கொண்ட தீய மகன் ஒருவனை ஒருபோதும் பெறமாட்டான். அவன் ஒருபோதும் கல்வியை இழக்கமாட்டான்.(52) எந்தப் பேரிடரும் அவனைத் தீண்டாது. அதுவும் தவிர, அனைத்து வகைக் கவலைகளில் இருந்து அவன் விடுபடுவான். முதுமையும், தளர்வும் ஒருபோதும் அவனுடையவையாகாது. அனைத்து வகைக் களங்கங்கள் மற்றும் தீமைகளில் இருந்து விடுபட்டு, பலன் கிட்டுபவனான அவன் சொர்க்கத்தை அடைவான்.(53) ஓ! மனிதர்களின் இளவரசே, முனிவர்களால் நோற்கப்படும் இந்தச் சாத்திரத்தைப் படிப்பவன், இன்பம் நிறைந்ததும், நித்தியமானதுமான பிரம்மலோகத்தை நிச்சயம் அடைவான்" {என்றார் பீஷ்மர்}.(54)
அநுசாஸனபர்வம் பகுதி – 94ல் உள்ள சுலோகங்கள் : 54
ஆங்கிலத்தில் | In English |