Showers of rain in my cloud! | Anusasana-Parva-Section-95 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 95)
பதிவின் சுருக்கம் : சூரியனுக்கும் ஜமதக்நி முனிவருக்கும் இடையில் நடந்த உரையாடல்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதக் குலத்தின் தலைவரே, ஈமச் சடங்குகளில் குடைகள் மற்றும் காலணிகள் கொடையளிக்கும் வழக்கம் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது? எதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது? எந்த நோக்கத்திற்காக அக்கொடைகள் கொடுக்கப்பட்டன? ஈமச் சடங்குகளில் மட்டுமல்லாமல் அவை வேறு அறச்சடங்குகளிலும் கொடுக்கப்படுகின்றன. அறத்தகுதியை அடையும் நோக்கில் அவை பல இடங்களில் கொடுக்கப்படுகின்றன. ஓ! மறுபிறப்பாளரே, நான் இவ்வழக்கத்தின் உண்மையான பொருளை விரிவாக அறிய விரும்புகிறேன்" என்றான்.(1-3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! இளவரசே, அறச்சடங்குகளில் குடைகளும், காலணிகளும் கொடுக்கும் வழக்கம் எவ்வாறு யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை விரிவாகச் சொல்லப் போகிறேன் கவனமாகக் கேட்பாயாக.(4) ஓ! இளவரசே, இது நிரந்தரமாக நோற்கப்படும் சக்தியை எவாறு அடைந்தது, பலன்தரக்கூடிய {புண்ணியச்} செயலாக எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதைக் குறித்து உனக்கு முழுமையாகச் சொல்லப் போகிறேன்.(5)
இது தொடர்பாகக் குறிப்பிடப்படும் ஜமதக்னிக்கும், உயர் ஆன்ம சூரியனுக்கும் இடையில் நடந்த உரையாடலை உனக்குச் சொல்லப் போகிறேன். ஓ! பலமிக்க மன்னா, பழங்காலத்தில் பிருகு குலத்தைச் சேர்ந்த சிறப்புமிக்க ஜமதக்னி, விற்பயிற்சி செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.(6) அவர் இலக்கு பாரத்துக் கொண்டே கணைக்குப் பின் கணையாக ஏவி கொண்டிருந்தார். அவரது மனைவியான ரேணுகை, அவ்வாறு ஏவப்படும் கணைகளை எடுத்துக் கொண்டு சுடர்மிக்க சக்தியுடன் கூடிய அந்தப் பிருகுக் குலக் கொழுந்திடம் அவற்றைத் திருப்பிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
தமது கணைகளில் விஸ் ஒலிகளாலும், தமது வில்லின் நாணொலியாலும் நிறைவடைந்த அவர், ரேணுகை தம்மிடம் திரும்பத் தரும் கணைகளை மீண்டும் மீண்டும் மீண்டும் ஏவி தமக்குத் தாமே மகிழ்ச்சியடைந்து வந்தார். ஓ! ஏகாதிபதி, ஜேஷ்ட மூலத்தில் சூரியன் இருந்த மாதத்தில் ஒருநாள் நடுப்பகல் மதிய வேளையில்,(7-9) அந்தப் பிராமணர், தமது அம்புகள் அனைத்தையும் ஏவிவிட்டு, ரேணுகையிடம், "ஓ! அகன்ற விழிகளைக் கொண்ட பெண்ணே, என் வில்லில் இருந்து நான் ஏவிய கணைகளை எடுத்துக் கொண்டு வருவாயாக.(10) ஓ! அழகிய புருவங்களைக் கொண்டவளே, அவற்றை மீண்டும் என் வில்லில் இருந்து தொடுக்கப் போகிறேன்" என்றார்.
அந்தப் பெண்மணி அவ்வாறு சென்ற போது, சூரியனின் வெப்பத்தால் தலையும் பாதமும் சுட்டதன் விளைவால் மரநிழலில் அமர்ந்தாள். அருள் நிறைந்தவளும், கருங்கண்களைக் கொண்டவளுமான ரேணுகை, தன் கணவரின் சாபத்திற்கு அஞ்சியதால் ஒரு கணம் மட்டுமே ஓய்வெடுத்து, கணைகளைத் திரட்டிதிரும்பக் கடுக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். அருள் நிறைந்த குணங்கைக கொண்ட அந்தக் கொண்டாடப்பட்ட பெண்மணி, பாதங்களின் வலியோடும், மனக்கசப்போடும் அவற்றை எடுத்துத் திரும்பி வந்தாள். அச்சத்தால் நடுங்கியவாறே அவள் தன் கணவரை அணுகினாள்.(11-14)
போபத்தால் நிறைந்திருந்த அம்முனிவர், அழகிய முகம் படைத்த தம் மனைவியிடம், "ஓ! ரேணுகையே, நீ திரும்பி வருவதில் இவ்வளவு தாமதமேன்?" என்று மீண்டும் மீண்டும் கேட்டார்.(15)
ரேணுகை, "ஓ! தவங்களைச் செல்வமாகக் கொண்டவரே, சூரியனின் கதிர்களால் என் தலையும் பாதங்களும் சுடப்பட்டன. வெப்பத்தால் ஒடுக்கப்பட்ட நான் ஒரு மர நிழலில் ஒதுங்கினேன்.(16) என் தாமதத்திற்கு இதுவே காரணமாகும். ஓ! தலைவா, காரணத்தைச் சொல்லிவிட்டேன் நீர் என்னிடம் சினம் தவிர்ப்பீராக" என்றாள்.(17)
ஜமதக்னி, "ஓ! ரேணுகையே, சுடர்மிக்கக் கதிர்களைக் கொண்டவனும், இவ்வழியில் உன்னைப் பீடித்தவனுமான பகல் நட்சத்திரத்தை {சூரியனை} நான் இன்றே கடுஞ்சக்தி கொண்ட என் ஆயுதங்களால் அழிக்கப்போகிறேன்" என்றார்".(18)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஜமதக்னி, பல கணைகளை எடுத்துக் கொண்டு, தமது தெய்வீக வில்லை இழுத்து, சூரியனை நோக்கித் தமது முகத்தைத் திருப்பி, அவனது (நாள்முறை) போக்கில் அவனைக் கண்காணித்துக் கொண்டிருந்தார்.(19) ஓ! குந்தியின் மகனே, போரிடத் தயாராக இருக்கும் அவரைக் கண்ட சூரியன், ஒரு பிராமணனின் வேடத்தில் அணுகி, அவரிடம், "நீர் வெறுப்படையும் அளவுக்குச் சூரியன் செய்ததென்ன?(20) ஆகாயத்தில் நகர்ந்து, பூமியின் ஈரப்பத்தத்தை மேலே ஈர்த்து மீண்டும் அதனை அவளிடமே மழையாகப் பொழிகிறான்.(21) ஓ! மறுபிறப்பாளரே, இதன் மூலமே மனிதர்களுக்கு ஏற்புடைய உணவு உண்டாகிறது. உணவே உயிர் மூச்சுகளாகிறது என்று வேதங்கள் சொல்கின்றன.(22) ஓ! பிராமணரே, மேகங்களில் மறைந்து தன் கதிர்களால் சூழும் சூரியன் ஏழு தீவுகளையும் மழைப்பொழிவால் நனைக்கிறான்.(23) ஓ! பலமிக்கவmரே, இவ்வாறு பொழியப்படும் ஈரப்பதமானது, இலைகள், கனிகள், காய்கறிகள், மூலிகை ஆகியவற்றுள் பரவி உணவாக மாறுகிறது.(24)
ஓ! பிருகுவின் மகனே, பிறப்புச் சார்ந்த சடங்குகள் {ஜாதகர்மம்}, அனைத்து வகை அற சோன்புகள் {சௌளம்}, புனித நூலைத் தரித்தல் {உபநயனம்}, பசுக்கொடைகள், திருமணங்கள், வேள்வியை நோக்கமாகக் கொண்ட பொருட்கள் அனைத்தும், மனிதர்கள் ஆட்சி செய்வதற்கான விதிமுறைகள் {தர்மங்கள்}, கொடைகள் {தானங்கள்}, (மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலான) அனைத்து வகை உறவுமுறைகள் {திரவியத்தினால் உண்டாகும் ஜனச்சேர்க்கைகள்}, செல்வமீட்டல் ஆகியவை உணவிலேயே தங்கள் பிறப்பிடத்தைக் கொண்டிருக்கின்றன. இதை நன்கறிவீராக.(25,26) அண்டத்தில் உள்ள ஏற்புடைய நல்ல பொருட்கள் யாவும், உயிரினங்களால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் யாவும் உணவில் இருந்தே உண்டாகின்றன. நீர் நன்கறிந்தவற்றையே நான் முறையாக உமக்குச் சொல்கிறேன். உண்மையில், நான் சொன்ன யாவற்றையும் நீர் அறிவீர்.(27) எனவே, ஓ! மறுபிறப்பாள முனிவரே, உமது கோபத்தைத் தணித்துக் கொள்வீராக. சூரியனை அழிப்பதன் மூலம் உமக்கு லாபமென்ன?" என்று கேட்டான் {சூரியன்}.(28)
அநுசாஸனபர்வம் பகுதி – 95ல் உள்ள சுலோகங்கள் : 28
ஆங்கிலத்தில் | In English |