Gift of Umbrellas and Footwear! | Anusasana-Parva-Section-96 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 96)
பதிவின் சுருக்கம் : குடை மற்றும் காலணிகளைக் கொடையளிப்பதன் மூலம் உண்டாகும் பலன்களைக் குறித்துச் சூரியனுக்கும் ஜமதக்நி முனிவருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "நாள் சமைப்பவனால் {சூரியனால்} இவ்வாறு வேண்டப்பட்டபோது, தவசிகளில் முதன்மையானவரும், பெருஞ்சக்தி கொண்டவருமான ஜமதக்னி என்ன செய்தார்?" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! குரு குல வழித்தோன்றலே, நெருப்பின் பிரகாசத்துடன் கூடியவரான ஜமதக்னி, சூரியனின் முறையீடுகள் அனைத்துக்குப் பிறகும், தமது கோபத்தை வளர்ப்பதையே தொடர்ந்தார்.(2)
ஓ! மன்னா, அப்போது பிராமண வேடத்தில் இருந்து சூரியன், கூப்பிய கரங்களுடன் அவரிடம் தலைவணங்கி இனிமையான சொற்களைச் சொல்லி,(3) "ஓ! மறுபிறப்பாள முனிவரே, சூரியன் எப்போதும் நகர்ந்து கொண்டே இருக்கிறான். தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கும் பகலின் தேவனை நீர் எவ்வாறு துளைப்பீர்?" என்று கேட்டான்.(4)
ஜமதக்னி {சூரியனிடம்}, "நீ அசைபவனாகவும், அசைவற்றவனுமாக இருக்கிறாய் என்பதை நான் என் அறிவுவிழியால் {ஞானக்கண்ணால்} அறிவேன். இந்நாளில் நான் உனக்கு நிச்சயம் ஒரு பாடத்தைப் படித்துக் காட்டுவேன் {கற்பிப்பேன்}.(5) நடுப்பகலில் ஒரு கணம் சொர்க்கங்களில் நிற்பவனாக நீ தெரிகிறாய். ஓ! சூரியா, அப்போது நான் என் கணைகளால் உன்னைத் துளைப்பேன். என்னுடைய இந்தத் தீர்மானத்தில் எந்த மாற்றமும் கிடையாது" என்றார்.(6)
சூரியன், "ஓ! மறுபிறப்பாளர முனிவரே, ஓ! வில்லாளிகளில் சிறந்தவரே, நீர் என்னை அறிவீர் என்பதில் ஐயமில்லை. ஆனால், ஓ! புனிதமானவரே, நான் குற்றமிழைத்திருந்தாலும், உமது பாதுகாப்புக்காக நான் பணிந்திருப்பதைக் காண்பீராக" என்றான்".(7)
பீஷ்மர் தொடர்ந்தார், "இதைக் கேட்டதும் துதிக்கத்தகுந்த ஜமதக்னி நாள் சமைப்பவனிடம் புன்னகையுடனே, "ஓ! சூரியா, என் பாதுகாப்பை நீ நாடும்போது எனக்கு அச்சமேதும் கிடையாது.(8) பிராமணர்களில் உள்ள எளிமை {மனநேர்மை}, பூமியின் உறுதி {அசையாமை}, சந்திரனின் மென்மை {குளிர்ச்சி}, வருணனின் ஈர்ப்பு {கடலின் ஆழம்}, அக்னியின் பிரகாசம், மேருவின் ஒளி, சூரியனின் வெப்பம் {குபேரனின் செல்வம்} ஆகியவற்றைக் கடப்பவனே, பாதுகாப்பு நாடி வந்தவனைக் கொல்வான்.(9,10) வேண்டி வந்தவனைக் கொல்ல இயன்றவன், ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்தவும், பிராமணனைக் கொல்லவும், மதுபானம் பருகவும் இயன்றவனாவான்.(11) எனவே, உன் கதிர்களால் சுடப்படும்போது, அதிலிருந்து மக்கள் விடுபடும் வகையில் இத்தீமைக்கு ஏதாவதொரு தீர்வை நீ சிந்திப்பாயாக" என்றார்.(12)
சூரியன், "ஓ! பெரும் முனிவரே, என் கதிர்களைத் தடுத்துத் தலையைக் காத்துக்கொள்வதற்குரிய இந்தக் குடையைப் பெற்றுக் கொள்வீராக. தோலாலான இந்தக் காலணிகள் இரண்டும் பாதங்களைப் பாதுகாக்கும்.(14) இந்த நாள் முதல் அறச்சடங்குகள் அனைத்திலும் இப்பொருட்களைக் கொடையளிப்பது உறுதியான பயன்பாடாக நிறுவப்படட்டும்" என்றான்".(15)
பீஷ்மர் தொடர்ந்தார், "குடைகளையும், காலணிகளையும் கொடையளிக்கும் இவ்வழக்கம் சூரியனாலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. ஓ! பரதனின் வழித்தோன்றலே, இக்கொடைகள் மூவுலகங்களிலும் பலன்கொடுக்க வல்லவையாகக் கருதப்படுகின்றன.(16) எனவே நீயும் பிராமணர்களுக்குக் குடைகளையும், காலணிகளையும் கொடையளிப்பாயாக. இந்தச் செயலின் மூலம் நீ பெரும் அறத்தகுதியை ஈட்டுவாய் என்பதில் எனக்கு ஐயமேதுமில்லை.(17) ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே, நூறு விலாக்களை {கம்பிகளைக்) கொண்ட ஒரு வெண்குடையை ஒரு பிராமணனுக்குக் கொடையளிப்பவன், இறந்த பிறகு இன்ப நிலையை அடைந்து, பிராமணர்கள், அப்சரஸ்கள் மற்றும் தேவர்களால் மதிக்கப்படும் இந்திரலோகத்தில் வசிப்பான்.(18,19)
ஓ! பலமிக்கவனே, சூரியனின் வெப்பத்தால் பாதம் சுடும் ஸ்நாதகப் பிராமணர்களுக்கும், அறச் சடங்குகளைப் பயிலும் பிராமணர்களுக்கும் காலணிகளை வழங்குபவன், தேவர்களாலேயே விரும்பப்படும் உலகங்களை அடைவான்.(20) ஓ! பாரதா, அத்தகைய மனிதன், தன் மரணத்திற்குப் பிறகு உயர்ந்த சொர்க்கத்தில் மகிழ்ச்சியுடன் வசிப்பான்.(21) ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே, அறச்சடங்குகளில் குடைகளையும், காலணிகளையும் கொடையளிப்பதால் உண்டாகும் பலன்களை நான் உனக்கு முழுமையாகச் சொல்லிவிட்டேன்" {என்றார் பீஷ்மர்}.(22)
அநுசாஸனபர்வம் பகுதி – 96ல் உள்ள சுலோகங்கள் : 22
ஆங்கிலத்தில் | In English |