Vali offerings with flowers, incense and lights! | Anusasana-Parva-Section-98 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 98)
பதிவின் சுருக்கம் : மலர், நறுமணப்புகைப்பொருள், விளக்கு ஆகியவற்றைக் கொடையளித்து, பலிக்காணிக்கைகளை அளிப்பது குறித்து மன்னன் பலிக்குச் சுக்ரன் சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதக் குலத்தின் தலைவரே, விளக்குக்கொடை எந்த வகையைச் சார்ந்தது? இக்கொடை எவ்வாறு தோன்றியது? அதைச் செய்வதனால் கிட்டும் பலன்கள் என்னென்ன? இவையனைத்தையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிர்னிடம்}, "ஓ! பாரதா, இது தொடர்பாக அனைத்து உயிரினங்களின் தலைவனான மனுவுக்கும், சுவர்ணருக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொல்லும் பழங்கதை சொல்லப்படுகிறது.(2) ஓ! பாரதா, பழங்காலத்தில், சுவர்ணர் என்ற பெயரில் ஒரு தவசி இருந்தார். அவரது நிறம் தங்கம் போன்றிருந்ததால் அவர் சுவர்ணர் (தங்க நிறம் கொண்டவர்) என்றழைக்கப்பட்டார்.(3) தூய குலம், நன்னடத்தை மற்றும் சிறந்த திறன்களைக் கொண்டவராகவும் இருந்த அவர் வேதங்கள் அனைத்திலும் ஆளுமைபெற்றவராக இருந்தார். உண்மையில், அவர் கொண்டிருந்த சிறப்புத் திறனகளால் அவர் உயர்ந்த குலத்தில் பிறந்த பலரைக் கடந்திருப்பவராக இருந்தார்.(4) ஒரு நாள், கல்விமானான அந்தப் பிராமணர், உயிரினங்கள் அனைத்தின் தலைவரான மனுவைக் கண்டு அவரை அணுகினார். ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்ட அவர்கள், வழக்கமாக மரியாதை நிமித்தமான விசாரிப்புகளைச் செய்தனர்.(5) அவர்கள் இருவரும் வாய்மை நோற்பதில் உறுதியுள்ளவர்களாக இருந்தனர். ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்ட அவர்கள், தங்க மலையான அந்த மேருவின் இனிமை நிறைந்த சாரலில் அமர்ந்தனர்.(6) அங்கே அமர்ந்த அவர்கள், பழங்காலத்தின் உயர் ஆன்மத் தேவர்கள், மறுபிறப்பாள முனிவர்கள் மற்றும் தைத்தியர்கள் தொடர்புடைய பல்வேறு காரியங்களை ஒருவருக்கொருவர் சொல்லி விவாதிக்கத் தொடங்கினர்.(7)
பீஷ்மர் {யுதிஷ்டிர்னிடம்}, "ஓ! பாரதா, இது தொடர்பாக அனைத்து உயிரினங்களின் தலைவனான மனுவுக்கும், சுவர்ணருக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொல்லும் பழங்கதை சொல்லப்படுகிறது.(2) ஓ! பாரதா, பழங்காலத்தில், சுவர்ணர் என்ற பெயரில் ஒரு தவசி இருந்தார். அவரது நிறம் தங்கம் போன்றிருந்ததால் அவர் சுவர்ணர் (தங்க நிறம் கொண்டவர்) என்றழைக்கப்பட்டார்.(3) தூய குலம், நன்னடத்தை மற்றும் சிறந்த திறன்களைக் கொண்டவராகவும் இருந்த அவர் வேதங்கள் அனைத்திலும் ஆளுமைபெற்றவராக இருந்தார். உண்மையில், அவர் கொண்டிருந்த சிறப்புத் திறனகளால் அவர் உயர்ந்த குலத்தில் பிறந்த பலரைக் கடந்திருப்பவராக இருந்தார்.(4) ஒரு நாள், கல்விமானான அந்தப் பிராமணர், உயிரினங்கள் அனைத்தின் தலைவரான மனுவைக் கண்டு அவரை அணுகினார். ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்ட அவர்கள், வழக்கமாக மரியாதை நிமித்தமான விசாரிப்புகளைச் செய்தனர்.(5) அவர்கள் இருவரும் வாய்மை நோற்பதில் உறுதியுள்ளவர்களாக இருந்தனர். ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்ட அவர்கள், தங்க மலையான அந்த மேருவின் இனிமை நிறைந்த சாரலில் அமர்ந்தனர்.(6) அங்கே அமர்ந்த அவர்கள், பழங்காலத்தின் உயர் ஆன்மத் தேவர்கள், மறுபிறப்பாள முனிவர்கள் மற்றும் தைத்தியர்கள் தொடர்புடைய பல்வேறு காரியங்களை ஒருவருக்கொருவர் சொல்லி விவாதிக்கத் தொடங்கினர்.(7)
அப்போது சுவர்ணர், சுயம்புவான மனுவிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார்: "அனைத்து உயிரினங்களின் நன்மைக்காக நான் கேட்கப் போகும் ஒரு கேள்விக்குப் பதிலளிப்பதே உமக்குத் தகும்.(8) ஓ! உயிரினங்கள் அனைத்தின் தலைவரே, மலர்கள் மற்றும் வேறு நல்ல நறுமணங்களைக் கொண்டு தேவர்கள் வழிபடப்படுவது காணப்படுகிறது. இஃது என்ன? இந்த நடைமுறை எவ்வாறு தோன்றியது? அதனுடன் தொடர்புடைய பலன்கள் என்னென்ன? இக்காரியம் குறித்து எனக்குச் சொல்வீராக" என்று கேட்டார்.(9)
மனு {சுவர்ணரிடம்}, "இது தொடர்பாகச் சுக்கிரனுக்கும், உயர் ஆன்ம (தைத்தியனான) பலிக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழைய வரலாறு சொல்லப்படுகிறது.(10) ஒரு காலத்தில், பிருகு குலத்தின் சுக்கிரர், விரோசனனின் மகனான பலி மூவுலகங்களையும் ஆண்டுக் கொண்டிருந்தபோது, அவனை அணுகினார்.(11) வேள்விக் கொடைகளை அபரிமிதமாக அளிக்கும் அந்த அசுரர்கள் தலைவன் {பலி}, அர்க்கியத்துடன் அந்தப் பிருகுவின் வழித்தோன்றலை வழிபட்டு (அவருக்கு ஓர் இருக்கையை அளித்து) தன் விருந்தினர் அமர்ந்த பிறகு அவனும் அமர்ந்தான்.(12) அச்சந்தர்ப்பத்தில் மலர்கள், நறுமணப்புகைப்பொருள், விளக்குகளுடன் பிணைந்த பலன்கள் தொடர்பாக நீர் தொடங்கிய அதே காரியம் முன் வைக்கப்பட்டது. உண்மையில், தைத்தியர்களின் தலைவன் {பலி}, தவசிகள் அனைவரிலும் பெருங்கல்வியைக் கொண்ட சுக்ரரிடம் இந்த உயர்ந்த கேள்வியை வைத்தான்.(13)
பலி {சுக்கிரரிடம்}, "ஓ! பிரம்மத்தை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, உண்மையில் மலர்கள், நறுமணப்புகைப்பொருள், விளக்குகள் ஆகியவற்றைக் கொடையளிப்பதால் உண்டாகும் பலன் என்ன? ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, இது குறித்து நீர் என்னிடம் உரையாடுவது உமக்குத் தகும்" என்றான்.(14)
சுக்கிரர் {பலியிடம்}, "முதலில் தவம் உயிர்பெற்றது. அதன் பிறகு தர்மம் (அல்லது கருணை மற்றும் பிற ஒழுக்கங்கள்) வந்தது. அதன் இடைவெளியில் செடிகொடிகள் உயிர்பெற்றன[1].(15) அவை எண்ணற்ற இனங்களாக இருந்தன. அவை அனைத்தும் (தேவன்) சோமனையே {சந்திரனையே} தங்கள் தலைவனாகக் கொண்டிருக்கின்றன. இந்தச் செடிகொடிகளில் சில அமுதமாகவும், சில நஞ்சாகவும் கருதப்படுகின்றன. இதுவுமல்லாமல் அதுவுமல்லாமல் சில சேர்ந்து ஒருவகையாகின.(16) மனத்திற்கு நிறைவையும் இன்பத்தையும் அளிப்பது அமுதமாகும். தன் மணத்தின் மூலம் மனத்தை அதிகம் வாட்டுவது நஞ்சாகும்.(17) அமுதமானது உயர்வானது, மங்கலமானதெனவும், நஞ்சானது மங்கலமற்றது எனவும் அறிவாயாக. இலையுதிர் மூலிகைகள் {தாவரங்கள்} அனைத்தும் அமுதமாகும். நஞ்சானது நெருப்பின் சக்தியால் பிறக்கிறது.(18) மலர்கள் மனத்திற்கு மகிழ்வூட்டி செழிப்பை அளிக்கின்றன. எனவே அறச் செயல்களைச் செய்யும் மனிதர்க்ள அவற்றுக்குச் சுமனஸுகள் என்ற பெயரை அளித்தனர்.(19) தூயநிலையில் இருக்கும் மனிதன், தேவர்களுக்கு மலர்களைக் காணிக்கையளித்து அந்தந்த ஏவர்கள் நிறைவடைவதன் விளைவால் அவர்களுக்குச் செழிப்பை அளிக்கின்றனர்.(20)
[1] "இங்கே தவம் என்பது நான்கு வகை வாழ்வுமுறைகளின் கடமைகளைக் குறிப்பதாக உரையாசிரியர்கள் கொள்கிறார். தர்மம் கருணை மற்றும் பிற நல்லொழுக்கங்களைக் குறிப்பதாகவும் கொள்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "எல்லாவற்றிற்கும் ஆத்மாவும், ஈஷ்வரருமான விஷ்ணு அக்நியையும், சந்திரனையும் முதலில் படைத்த போது முதலில் தவம் உண்டாயிற்று. அதன்பிறகு தர்மம் உண்டாயிற்று" என்றிருக்கிறது.
ஓ! தைத்தியர்களின் ஆட்சியாளா {பலியே}, ஓ! தலைவா, வழிபாட்டாளர்கள் தேவர்களின் பெயர்களைச் சொல்லி மலர்களைக் காணிக்கையளிக்கும்போது, காணிக்கையளிப்பவர்களுடைய பக்தியின் விளைவாகத் தேவர்கள் நிறைவடைகின்றனர்.(21) (இலையுதிர்) மூலிகைகள் பல்வேறு வகைகளைச் சேர்ந்தவையாகவும், பல்வேறு வகைச் சக்திகளைக் கொண்டவையுகாவும் இருக்கின்றன.(22) வேள்வி காரியங்களுக்குப் பயன்படும் மரங்கள் எவை, பயன்படாதவை எவை என்பதை உனக்குச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக. அசுரர்களுக்கு ஏற்புடைய மலர்மாலைகள் எவை, தேவர்களுக்குக் காணிக்கையளிக்கப்படும்போது பலன்தருபவை எவை என்பதையும் கேட்பாயாக.(23) ராட்சசர்கள், உரகர்கள், யக்ஷர்கள், மனிதர்கள், பித்ருக்கள் ஆகியோருக்கு முறையே ஏற்புடைய மலர்மாலைகள் எவை என்பதையும் முறையான வரிசையில் சொல்லப் போகிறேன்.(24) பல்வேறு வகைகளைச் சேர்ந்த மலர்களில் சில காட்டு மலர்களாகவும், சில மனித வசிப்பிடங்களுக்கு மத்தியில் வளர்பவையாகவும், சில நன்கு உழப்பட்ட நிலத்தில் நட்டாலன்றி ஒருபோதும் வளராத மரங்களுக்கு உரியவையாகவும்; சில மலைகளில் வளரும் மரங்களில் உள்ளவையாகவும்; சில முள்மரங்களில் உள்ளவையாகவும் இருக்கின்றன. நறுமணம், அழகிய வடிவம், சுவை ஆகியவற்றிலும் வகைப்பாடுகள் உண்டு.(25)
மலர்கள் ஏற்புடையவை, ஏற்பில்லாதவை என்ற இரு வகை மணங்களைத் தருகின்றன. ஏற்புடைய மணம் கொண்ட மலர்களே தேவர்களுக்குக் காணிக்கயளிக்கப்பட வேண்டும்.(26) முள்ளில்லா மரங்களின் மலர்கள் பொதுவாக வெண்ணிறத்தில் இருக்கின்றன. ஓ! தலைவா, அத்தகைய மலர்கள் எப்போதும் தேவர்களுக்கு ஏற்புடையனவாகும்.(27) ஞானம் கொண்ட ஒருவன், தாமரை போன்ற நீர் மலர்களாலான மாலைகளைக் கந்தர்வர்கள், நாகர்கள் மற்றும் யக்ஷர்களுக்குக் காணிக்கையளிக்க வேண்டும்.(28) காரமணமிக்கச் சிவப்பு நிற மலர்களை உண்டாக்கும் செடிகொடிகள் எதிரிகளுக்குத் தீங்கிழைக்கும் மந்திரங்களுடன் கூடிய செயல்களுக்குத் தகுந்தவையென அதர்வணங்களில் விதிக்கப்பட்டிருக்கின்றன.(29) கொடுஞ்சக்தியைக் கொண்டவையும், தீண்டினால் துன்பத்தைத் தருபவையும், முள் மரங்கள் மற்றும் செடிகளில் வளர்பவையும், குருதிச்சிவப்பு அல்லது கரு நிறமுள்ளவையுமான மலர்கள், பூமி சாராத (தீய) பிசாசுகளுக்கு {பூதங்களுக்குக்} கொடுக்கப்பட வேண்டும்.(30)
ஓ! தலைவா, மனத்திற்கும், இதயத்திற்கும் மகிழ்ச்சியூட்டுபவையும், கசக்கும்போது ஏற்புடையவையும் {இனிய மணத்தைத் தருபவையும்}, அழகிய வடிவம் கொண்டவையுமான மலர்கள், மனிதர்களுக்குக் கொடுக்கத்தகுந்தவை எனச் சொல்லப்படுகின்றன.(31) மயானங்கள் மற்றும் சுடலைகள், அல்லது தேவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இடங்களில் வளரும் மலர்கள், வளர்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றைத் தங்கள் நோக்கங்களாகக் கொண்ட சடங்குகள் மற்றும் திருமணம் ஆகியவற்றிலோ, காமத்திளைப்பு மற்றும் கமுக்கமான இன்பச் செயல்களிலோ கொண்டுவரப்பட்டுப் பயன்படுத்தப்படக்கூடாது.(32) மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளில் பிறந்தவையும், ஏற்புடைய மணம் மற்றும் தன்மைகளைக் கொண்டவையுமான மலர்கள், தேவர்களுக்குக் காணிக்கையளிக்கப்பட வேண்டும். அத்தகைய மலர்களில் சந்தனம் தெளித்து, சாத்திர விதிகளின்படி முறையாகக் காணிக்கயளிக்கப்பட வேண்டும்.(33) தேவர்கள் மலர்களின் மணத்திலும், யக்ஷர்கள், ராட்சசர்கள் ஆகியோர் அவற்றின் தோற்றத்திலும், நாகர்கள் அவற்றின் தீண்டலிலும், மனிதர்கள் மணம், பார்வை மற்றும் தீண்டல் ஆகிய மூன்றிலும் நிறைவடைகிறார்கள்.(34) மலர்கள் தேவர்களுக்குக் காணிக்கையளிக்கப்படும்போது, அவர்களை உடனே நிறைவடையச் செய்கின்றன. வெறுமே நிறைவேற்ற விரும்புவதன் மூலமே ஒவ்வொரு நோக்கத்தையும் அவர்கள் {தேவர்கள்} நிறைவேற்றவல்லவர்களாக இருக்கிறார்கள். மலர்களைக் காணிக்கையளிக்கும் பக்தர்களிடம் நிறைவடையும்போது தங்கள் வழிபாட்டாளர்களால் பேணி வளர்க்கப்படும் நோக்கங்கள் அனைத்தையும் அவர்கள் உடனே நிறைவடையச் செய்கிறார்கள்.(35) நிறைவை அடையும் அவர்கள் தங்களை வழிபடுபவர்களையும் நிறைவடைச் செய்கிறார்கள். கௌரவிக்கப்படும் அவர்கள் தங்களை வழிபடுபவர்களையும் அனைத்துக் கௌரவங்களிலும் இன்புறச் செய்கிறார்கள். அலட்சியமும் அவமதிப்பும் செய்யப்படும்போது அவர்கள் அந்தத் தீய மனிதர்களை எரித்து நிர்மூலமாக்குகிறார்கள்.(36)
நறுமணப்புகைப்பொருட்கள் கொடையளிப்பது {தூபங்கொடுத்தல்} குறித்த விதிகளின் படி உண்டாகும் பலன்களை இனி உனக்குச் சொல்லப் போகிறேன். ஓ! அசுரர்களின் இளவரசே, நறுமணப்புகைப்பொருட்கள் பலவகைப்படும் என்பதை அறிவாயாக. அவற்றில் சில மங்கலமானவையாகவும், சில மங்கலமற்றவையாகவும் உள்ளன.(37) சில நறுமணப்புகை பொருட்கள் {பிசின் போன்ற} வடிநீர் கொண்டவையாகும். சில நெருப்பில் நிறுவப்படும் நறுமண மரத்தால் ஆனவையாக இருக்கின்றன. வேறு சில, பல்வேறு பொருட்கள் கலந்து செயற்கையாகக் கரங்களால் செய்யப்பட்டவையாக இருக்கின்றன. அவற்றின் மணம் ஏற்புடையவை, ஏற்பில்லாதவையென இருவகைப்படும். இது குறித்து விரிவாகச் சொல்கிறேன் கேட்பாயாக[2].(38) ஸல்லகி மரத்தைத்[3] தவிர மற்ற மரவடிநீர்கள் {பிசின்கள்} தேவர்களுக்கு ஏற்புடையவையே. எனினும், வடிநீர்கள் {பிசின்கள்} அனைத்திலும் குங்கிலியம்[4] நிச்சயம் சிறந்ததாகும்.(39) சாரி வகைத் தூபங்கள் அனைத்திலும் அகில்[5] சிறந்ததாகும். யக்ஷர்கள், ராட்சசர்கள், நாகர்கள் ஆகியோருக்கு அது மிகவும் ஏற்புடையதாகும். ஸல்லகி மரத்தின் பிசினும், அதே வகையைச் சார்ந்த பிறவும் தைத்தியர்களால் மிகவும் விரும்பப்படுகின்றன.(40) கடும் நெடிகள் கொண்ட வேறு நீர்மங்களுடன் கலந்து, சால மரம் மற்றும், தேவதாரு மரங்களின் பிசினில் செய்யப்பட்ட தூபங்கள் மனிதர்களுக்காக விதிக்கப்பட்டிருக்கின்றன.(41) இத்தகைய தூபங்கள் தேவர்கள், தானவர்கள் மற்றும் பூதங்களை உடனே நிறைவடையச் செய்வதாகச் சொல்லப்படுகிறது[6]. இவற்றையும் தவிர அன்பு நோக்கங்களுக்காக மனிதர்களால் பயன்படுத்தப்படும் பல வகைத் தூபங்களும் இருக்கின்றன.(42) மலர்க்காணிக்கையில் உண்டாவதாகச் சொல்லப்படும் அனைத்துப் பலன்களும் நிறைவை விளைவிக்கும் இத்தகைய தூபங்களைக் கொடையளிப்பதாலும் கிட்டும் என்று அறியப்பட வேண்டும்.(43)
[2] "தூபங்கள் என்பன தேவர்களுக்குக் காணிக்கையளிக்கப்படும் நறுமணப்புகைப்பொருட்களாகும். தீப்பிடிக்கக்கூடிய பொருட்களான அவை மெல்ல எரியச்செய்யப்படுகின்றன, அல்லது உள்ளூர எரிபவையாகச் செய்யப்படுகின்றன. இவை தேவர்களுக்கான வழிபாட்டுப் பொருட்களில் பிரிக்கப்பட முடியாதவையாக இருக்கின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] கங்குலியில் Boswellia serrata என்றிருக்கிறது. குமஞ்சம் / மரத்துவெள்ளை / பறங்கிச்சாம்பிராணி / வெள்ளிக்கீரை ஆகியவை இவ்வகையைச் சார்ந்தவையே. கும்பகோணம் பதிப்பில் ஸல்லகி மரப்பிசின் என்று குறிப்பிடப்படுகிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் சாம்பிராணி என்றிருக்கிறது.[4] கங்குலியில் Balsamodendron Mukul என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் குங்கிலியம் என்றிருக்கிறது.[5] கங்குலியில் Aquilaria Agallocha என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் அகில் என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் இவ்வரி, "வைரமுள்ள கட்டைகளில் அகில் சிறந்தது" என்றிருக்கிறது.[6] கங்குலியில் exudation of the Shorea robusta and Pinus deodara என்றிருக்கிறது. அவை சால மரம் மற்றும் தேவதாரு மரத்தின் பிசின் ஆகும். கும்பகோணம் பதிப்பில், "ஸர்ஜ மரத்தின் சாறு முதலியவற்றின் வாஸனையினாலும், பூமியிலுள்ள கட்டைகளின் வாஸனைகளினாலும் கற்கண்டினாலும், சாராயத்தினாலும் மனிதர்களுக்குத் திருப்தியுண்டாகிறது. அவை தேவர்களுக்கும், தானவர்களுக்கும், பூதங்களுக்கும் உடனே திருப்தியுண்டாக்குவனாவாகச் சொல்லப்படுகின்றன" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "சர்ஜத்தின் நறுமணங்களும், அதே வகை மரத்தின் சாறும், நொதிக்கவைக்கப்பட்ட கரும்பின் சாற்றில் கலந்து கொடுப்பது மனிதர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. தேவர்கள், தானவர்கள் மற்றும் பூதங்கள் இதனால் உடனே நிறைவடைகின்றன. மனிதர்கள் இதை இன்பத்திற்குப் பயன்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது" என்றிருக்கிறது.
விளக்குகள் கொடையளிப்பதால் உண்டாகும் பலன்கள்; அவற்றை யார் எந்த நேரத்தில், எவ்வகையில் கொடுக்க வேண்டும்; என்ன வகை விளக்குகள் கொடுக்கப்பட வேண்டும் என்பவற்றைக் குறித்து இனி சொல்லப்போகிறேன்.(44) ஒளியானது சக்தி என்றும் புகழ் என்றும், மேல்நோக்கிய போக்குக் கொண்டது என்றும் சொல்லப்படுகிறது. எனவே, சக்தியாக இருக்கும் ஒளியைக் கொடையளிப்பது மனிதர்களின் சக்தியை அதிகரிக்கிறது[7].(45) அந்ததமஸ் என்ற பெயரிலான ஒரு நரகம் இருக்கிறது. சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் {தக்ஷிணாயன} காலமும் இருளானதாகக் கருதப்படுகிறது. அந்த நரகத்திலும், அந்தக் காலத்தின் இருளிலும் இருந்து தப்புவதற்கு ஒருவன் சூரியன் வடக்கு நோக்கிப் பயணிக்கும் {உத்தராயனத்தில்} காலத்தில் விளக்குகளைக் கொடையளிக்க வேண்டும். இத்தகைய செயல் நல்லோரால் மெச்சப்படுகிறது[8].(46) மேலும், ஒளியானது மேல்நோக்கிய போக்கைக் கொண்டிருப்பதாலும், இருளுக்கான தீர்வாகக் கருதப்படுவதாலும் ஒருவன் ஒளிக்கொடையாளியாக இருக்க வேண்டும். இதுவே சாத்திரங்களின் தீர்மானமாகும்.(47) விளக்குகளைக் கொடையளித்ததன் மூலமே தேவர்கள், அழகையும், சக்தியையும், பிரகாசத்தையும் கொண்டவர்களானார்கள். அத்தகைய செயல்களைச் செய்யாமல் இருந்ததால், ராட்சசர்கள் அதற்கு எதிரான குணங்களுடன் கூடியவர்களானார்கள். எனவே ஒருவன் எப்போதும் விளக்குகளைக் கொடையளிக்க வேண்டும்.(48)
[7] "தேஜஸ் என்பது அழகு என்றும், பிராகாசம் என்பது கீர்த்தி என்றும் உரையாசிரியரால் விளக்கப்படுகிறது. சக்தி என்ற தேஜின் உண்மைப் பொருளை இங்கே மறுக்க வேண்டிய அவசியமில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஜ்வாலையானது சக்தியும், வெளிச்சமுமுள்ளதாக மேல்நோக்கி வியாபிக்கிறது. ஆதலால், தீபதானமானது மனிதர்களுக்கும் சக்தியையும் உற்சாகத்தையும் ஓங்கச் செய்கிறது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "சக்தியின் வெளிப்பாடான ஒளி மேல்நோக்கி நகர்வதாகச் சொல்லப்படுகிறது. எனவே, கொடையளிக்கப்படும்போது அது மனிதர்களின் சக்தியை அதிகரிக்கிறது"என்றிருக்கிறது.[8] "ஒரு மனிதன் சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் காலத்தில் இறந்தால் அவர் அடர்த்தியான இருளுக்குள் இழுத்துச் செல்லப்படுகிறான். அந்த இருளில் இருந்து தப்பிப்பதற்காக அவன் குறிப்பிட்ட காலத்தில் விளக்குகளைக் கொடையளிக்க வேண்டும் என்று சொல்லப்படுவதாகத் தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
விளக்குகளைக் கொடையளிப்பதன் மூலம் ஒரு மனிதன் கூரிய பார்வையையும் பிரகாசத்தையும் பெறுகிறான். விளக்குகளைக் கொடையளிப்பவன் வேறு எவரின் பொறாமைக்கான பொருளாக இருக்கக்கூடாது. மேலும், வேறு யாரும் கொடுக்கப்படும் விளக்குகளைக் களவாடுதலும், அணைப்பதும் கூடாது.(49) விளக்கைத் திருடுபவன் குருடனாகிறான். அத்தகைய மனிதன் (மறுமையில்) இருளில் திரிந்து ஒளியற்றவனாகிறான். விளக்குகளைக் கொடையளிப்பவன் தேவலோகத்தில் ஒளிரும் ஒளி வரிசையைப் போல அழகுடன் ஒளிர்கிறான்.(50) விளக்குகளிலும், நெய்யால் எரிபவை சிறந்தவையாகும். அந்த வரிசையில் அடுத்ததாக இலையுதிர்மூலிகைச் சாறுகளால் (எண்ணெய்யால்) எரிபவை வருகின்றன. வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் விரும்புபவன், விலங்குகளின் எலும்புகளில் இருந்து பாயும், சாறு, அல்லது மஜ்ஜை அல்லது கொழுப்பில் ஒருபோதும் (விளக்கை) எரிக்கக்கூடாது[9].(51) தன் முன்னேற்றத்தையும் செழிப்பையும் விரும்பும் மனிதன், மலையிறக்கங்களிலும், காடுகளில் உள்ள சாலைகளிலும், அடைதற்கரிய பகுதிகளிலும், மனித வசிப்பிடங்களுக்கு மத்தியில் உள்ள புனித மங்களுக்குக் கீழும், சாலைகளின் சந்திப்புகளிலும் எப்போதும் விளக்குகளைக் கொடுக்க வேண்டும்.(52) விளக்குகளைக் கொடையளிக்கும் மனிதன் எப்போதும் தன் குலத்திற்கு ஒளியூட்டி, ஆன்மத் தூய்மையையும், வடிவத்தில் பிரகாசத்தையும் அடைகிறான். உண்மையில் அத்தகைய மனிதன் மரணத்திற்குப் பிறகு, ஆகாயத்தில் உள்ள ஒளியுடல்களின் {நட்சத்திரங்களின்} தோழமையை அடைகிறான்.(53)
[9] "இங்கே மூலிகைச் சாறு என்பது கடுகு, எள், ஆமணக்கு முதலியவையின் எண்ணை எனக் கொள்ளப்பட வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "நெய்யினால் விளக்கேற்றுவது முதல் பக்ஷம்; ஔஷதிகளின் ஸாரமாகிய எண்ணெய் முதலியவற்றால் ஏற்றுவது இரண்டாவது பக்ஷம். நன்மையை விரும்புகிறவன் தேகத்தின் கொழுப்பு, நரம்பு, எலும்புகளின் எண்ணெய்களால் தீபத்தை வைக்கலாகாது. தனக்கு மேன்மையை விரும்புகிறவன் கோயிலிலும், ஸபாமண்டபத்திலும், மலையிலும், உயர்ந்த மரத்திலும், நாற்சந்தியிலும் தீபங்களை நித்தியமாக வைக்க வேண்டும்" என்றிருக்கிறது.
தேவர்கள், யக்ஷர்கள், உரகர்கள், மனிதர்கள், பூதங்கள் மற்றும் ராட்சசர்களுக்குப் பலிக்காணிக்கைகளை அளிப்பதன் மூலம் கிட்டும் கனிகள் தொடர்பான பலன்களைக் குறித்து நான் இப்போது சொல்லப் போகிறேன்.(54) பிராமணர்கள், தேவர்கள், விருந்தினர்கள், பிள்ளைகள் ஆகியோருக்கு முதலில் படைக்காமல் உண்ணும் இரக்கமற்ற தீய மனிதர்கள் ராட்சசர்களாக அறியப்பட வேண்டும்.(55) எனவே, ஒருவன் தான் தயாராக வைத்திருக்கும் உணவை முதலில் தேவர்களுக்குப் படைத்து, புலனடக்கத்துடனும், குவிந்த கவனத்துடனும் முறையாக அவர்களை வணங்க வேண்டும். அவன் மதிப்புடன் தலைவணங்கி தேவர்களுக்குப் பலியை காணிக்கையளிக்க வேண்டும்.(56) இல்லறத்தோர் அளிக்கும் உணவாலேயே தேவர்கள் எப்போதும் ஆதரிக்கப்படுகின்றனர். உண்மையில், அவர்களுக்குக் காணிக்கையளிக்கும் வீடுகளுக்கு அவர்கள் அருள்புரிகின்றனர். யக்ஷர்கள், ராட்சசர்கள், பன்னகர்கள், விருந்தினர்கள், வீடற்ற மனிதர்கள் அனைவரும் இல்லற வாழ்வு முறையை நோற்கும் மனிதர்கள் அளிக்கப்படும் உணவாலேயே ஆதரிக்கப்படுகின்றனர்.(57) உண்மையில் தேவர்களும், பித்ருக்களும் தங்கள் வாழ்வாதாரங்களை இத்தகைய காணிக்கைகளின் மூலமே அடைகின்றனர். இத்தகைய காணிக்கைகளால் நிறைவடையும் அவர்கள், பதில் உதவியாகக் காணிக்கையளிப்பவனுக்கு நீண்ட வாழ்நாள், புகழ் மற்றும் செல்வத்தைக் கொடுத்து நிறைடையச் செய்கின்றனர்.(58)
ஏற்புடைய மணமும், தோற்றமும் கொண்ட தூய உணவில் பால் மற்றும் தயிரைக் கலந்து, மலர்களுடன் சேர்த்துத் அவற்றைத் தேவர்களுக்குக் காணிக்கையளிக்க வேண்டும்.(59) யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களுக்குக் காணிக்கையளிக்கப்படும் பலிகள், சாராயத்தின் துணையுடனும் கூடியவையாகவும், நெற்பொரி மற்றும் அவல்களால் அலங்கரிக்கப்பட்டவையாகவும், குருதி மற்றும் இறைச்சி நிறைந்தவையாக இருக்க வேண்டும்[10].(60) தாமரைக்ள மற்றும் உத்பலங்களுடன் {நெய்தல்களுடன்} கூடிய பலிகள் நாகர்களுக்கு ஏற்புடையவையாகும். வெல்லத்தில் வேகவைக்கப்பட்ட எள்ளானது, பூமி சாராத பூதங்களுக்குக் காணிக்கையளிக்கப்பட வேண்டும்.(61) பிராமணர்கள், தேவர்கள், விருந்தினர்களுக்கு முதலில் படைக்காமல் எந்த உணவையும் உண்ணாதவன், உணவின் முதல் பங்குகளுக்கான உரிமையை அடைகிறான். அத்தகைய மனிதன் பலமும், சக்தியும் பெறுகிறான். எனவே உணவின் ஒரு பகுதியை தேவர்களுக்குப் படைத்து மதிப்புடன் அவர்களை வழிபடாமல் ஒருவன் எந்த உணவையும் உட்கொள்ளக்கூடாது.(62) இல்லத்தில் தேவர்கள் வாழ்வதன் விளைவால் ஒருவனுடைய வீடு அழகில் சுடர்விடுகிறது. எனவே, தனக்கான முன்னேற்றத்தையும், செழிப்பையும் விரும்பும் ஒருவன், அனைத்து உணவுகளின் முதல் பகுதியையும் வீட்டில் வசிக்கும் தேவர்களுக்குப் படைத்து அவர்களை வழிபட வேண்டும்" என்றார் {சுக்ரர்}.(63)
[10] கும்பகோணம் பதிப்பில், "மாம்ஸமும் ரக்தமும் நிரம்பினவையும், கள் சாராயங்களோடு கூடினவையும், நெற்பொரிகளாலும் அவல்களாலும் அலங்கரிக்கப்பட்டவையுமான பலிகளை யக்ஷர்களுக்கும், ராக்ஷஸர்களுக்கும் கொடுக்க வேண்டும்" என்றிருக்கிறது.
இவ்வாறே, பிருகு குலத்தவரும், கல்விமானானுமான கவி {சுக்கிரர்} அசுரர்களின் தலைவனான பலியிடம் சொன்னார். அடுத்ததாக முனிவர் சுவர்ணருக்கு அந்த உரையாடலே மனுவால் சொல்லப்பட்டது. சுவர்ணரும் தம் பங்குக்கு அதை நாரதருக்கு உரைத்தார்.(64) தெய்வீக முனிவரான நாரதர் குறிப்பிடப்பட்ட பல்வேறு செயல்களுக்கான பலன்களை எனக்கு உரைத்தார். ஓ! மகனே, அந்தப் பலன்களை அறிந்து கொண்ட நீ குறிப்பிடப்பட்ட பல்வேறு செயல்களைச் செய்வாயாக" என்றார் {பீஷ்மர்}.(65)
அநுசாஸனபர்வம் பகுதி – 98ல் உள்ள சுலோகங்கள் : 65
ஆங்கிலத்தில் | In English |