Duties of a Lady - Sumana and Chandili! | Anusasana-Parva-Section-123 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 123)
பதிவின் சுருக்கம் : கற்புடைய நல்ல பெண்களின் நடத்தை மற்றும் பெண்கள் பின்பற்ற வேண்டிய அறம் குறித்து ஸுமனை மற்றும் சாண்டிலிக்கிடையில் நடைபெற்ற உரையாடல்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! கடமைகள் அனைத்தையும் அறிந்தவரே, கற்புடைய நல்ல பெண்களுக்குரிய சிறந்த நடத்தை எது என்பதை நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன். ஓ! பாட்டா, இது குறித்து நீர் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஒரு காலத்தில், தேவலோகத்தில் கேகய குலத்தைச் சாரந்தவளும், சுமனை {ஸுமனை} என்ற பெயரைக் கொண்டவளுமான ஒரு பெண், பெரும் சக்தி கொண்டளும், அனைத்தையும், அனைத்தின் உண்மைகளையும் அறிந்தவளுமான சாண்டிலியிடம்,(2) "ஓ!மங்கலமான பெண்ணே, எந்த ஒழுக்கத்தின் மூலம், என்ன வகையான செயல்முறையின் மூலம் அனைத்துப் பாவங்களையும் அழித்துச் சொர்க்கம் அடைவதில் நீ வென்றாய்?(3) நீ நெருப்பின் தழலைப் போலத் தன்சக்தியில் சுடர்விடுகிறாய். தன்பிரகாசத்துடன் சொர்க்கத்திற்கு வந்திருக்கும் நட்சத்திரங்களின் தலைவனுடைய {சந்திரனுடைய} மகளைப் போலத் தெரிகிறாய்.(4) தூய வெள்ளுடை உடுத்தியிருக்கும் நீ உற்சாகம் நிறைந்தவளாகவும், சுகமாகவும் இருக்கிறாய். ஓ! மங்கலச் சீமாட்டியே, தெய்வீகத் தேரில் அமர்ந்திருக்கும் நீ பல்லாயிரம் மடங்கு சக்தியுடன் ஒளிர்ந்து கொண்டிருக்கிறாய்.(5) சிறிய அளவிலான தவங்கள், கொடைகள் மற்றும் நோன்புகளின் மூலம் நீ இந்த இன்பலோகத்தை அடைந்திருப்பதாக நான் கருதவில்லை. நீ உண்மையைச் சொல்வாயாக" என்று கேட்டாள்.(6)
இவ்வாறு சுமனையால் இனிமையாகக் கேட்கப்பட்டவளும், இனிய புன்னகையைக் கொண்டவளுமான சாண்டிலி, தன்னிடம் கேள்வி கேட்ட அழகியிடம், பிறரும் கேட்கும் வகையில்,(7) "நான் மஞ்சள் ஆடை {காஷாயம்} உடுத்தவில்லை; மரவுரியும் தரிக்கவில்லை. என் தலையை மழிக்கவில்லை; தலையில் சடாமுடியுந்தரிக்கவில்லை. இந்தச் செயல்களின் விளைவால் நான் தெய்வீக நிலையை அடையவில்லை.(8) நான் ஒருபோதும் விழிப்புணர்வின்றி ஏற்பில்லாத, தீய பேச்சு எதையும் என் கணவரிடம் பேசியதில்லை.(9) நான் எப்போதும் தேவர்கள், பித்ருக்கள் மற்றும் பிராமணர்களின் வழிபாட்டில் அர்ப்பணிப்புடன் இருந்தேன். எப்போதும் விழிப்புடன் நான் என் மாமியார் மற்றும் மாமனாருக்குத் தொண்டாற்றினேன்.(10) வஞ்சகமாக ஒருபோதும் நடக்கக்கூடாது என்பது என் தீர்மானமாக இருந்தது. நான் ஒருபோதும் வீட்டைவிட்டு வெளியே தங்கியதோ, வேறு எவருடனும் நீண்ட நேரம் பேசியதோ கிடையாது {நிற்கத்தகாத இடங்களில் நிற்பதுமில்லை. வெகுநேரம் பேசுவதுமில்லை}.(11) நான் ஒருபோதும் தீச்செயலேதும் செய்ததில்லை; நான் ஒருபோதும் உரக்கச் சிரித்ததில்லை; நான் ஒருபோதும் தீங்கேதும் செய்ததில்லை. நான் ரகசியம் எதையும் ஒருபோதும் வெளியிட்டதில்லை. இவ்வாறே நான் என்னைத் தாங்கிக் கொண்டேன்.(12)
எந்தக் காரியத்திற்காகவும் கணவர் வீட்டை விட்டு வெளியே சென்று திரும்பும்போது, நான் எப்போதும் அவருக்கு இருக்கையளித்துத் தொண்டாற்றி மதிப்புடன் வழிபட்டேன்.(13) என் கணவர் அறியாத, என் கணவருக்குப் பிடிக்காத எவ்வகை உணவையும் நான் ஒருபோதும் உண்டதில்லை.(14) விடியும் முன்பு எழுந்து, உற்றார் உறவினர்களுக்காகச் செய்ய வேண்டியதை, செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதை நிறைவேற்றினேன்.(15) என் கணவர் ஏதோ ஒரு காரியத்திற்காக வீட்டைவிட்டுத் தொலைவான இடத்திற்குச் சென்றால், நான் வீட்டில் இருந்து அவரது காரியம் நிறைவேற பல்வேறு மங்கலச் செயல்களைச் செய்வதில் ஈடுபடுவேன்.(16) உண்மையில் என் கணவர் இல்லாத போது நான் மையையோ, ஆபரணங்களையோ பயன்படுத்துவதில்லை; நான் என்னை முறையாகக் கழுவிக் கொள்வதில்லை; மாலைகளையும், நறுமணப்பொருட்களையும் பயன்படுத்துவதில்லை; என்பாதத்தை அரக்கு சாயத்தாலோ, என் மேனியை ஆபரணங்களாலோ அலங்கரித்துக் கொள்வதில்லை.(17)
என் கணவர் அமைதியாக உறங்கும்போது, முக்கியமான காரியத்தில் அவரது கவனம் தேவைப்பட்டாலும் நான் ஒருபோதும் அவரை எழுப்பியதில்லை. உறங்கிக் கிடக்கும் அவருக்கு அருகில் அமர்ந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைந்தேன்.(18) என் கணவர் தன் குடும்பத்தையும் உறவினர்களையும் தாங்கிக் கொள்வதற்காக இன்னும் அதிகச் சக்தியோடு செல்வம் ஈட்ட வேண்டும் என்று ஒருபோதும் நான் அவரைத் தூண்டியதில்லை. நான் எப்போதும் ரகசியங்களைப் பிறருக்கு வெளியிடாமல் இருந்தேன். நான் எங்கள் வளாகத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருந்தேன்.(19) கடமையின் இந்தப் பாதையைக் குவிந்த கவனத்துடன் பின்பற்றும் ஒரு பெண்மணி, சொர்க்கத்தில் போதுமான கௌரவங்களைப் பெற்று இரண்டாவது அருந்ததியாகிறாள்" என்றாள் {சாண்டிலி}".(20)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "சிறப்புமிக்கவளும், உயர்ந்த அருளைக் கொண்டவளும் அறவொழுக்கம் ஒழுகுபவளுமான சாண்டிலி, தன் கணவனுக்குப் பெண்கள் செய்ய வேண்டிய கடமைகள் குறித்துச் சுமனையிடம் இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு, அங்கேயே அப்போதே மறைந்து போனாள்.(21) ஓ! பாண்டுவின் மகனே, ஒவ்வொரு முழு நிலவு {பௌர்ணமி} மற்றும் புது நிலவுகள் {அமாவாசைகள்} அன்றும் இதைப் படிக்கும் மனிதன், சொர்க்கத்தை அடைவதில் வென்று நந்தனக் காடுகளில் பேரின்பத்தை அனுபவிப்பான்" {என்றார் பீஷ்மர்}.(22)
அநுசாஸனபர்வம் பகுதி – 123ல் உள்ள சுலோகங்கள் : 22
ஆங்கிலத்தில் | In English |