The excellence of conciliation! | Anusasana-Parva-Section-124 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 124)
பதிவின் சுருக்கம் : இன்சொல்லின் சிறப்புக் குறித்து ஒரு ராட்சசனுக்கும் ஒரு பிராமணருக்கும் இடையில் நடந்த உரையாடல்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "இன்சொல் {சாமம்}, அல்லது கொடை {தானம்} ஆகியவற்றில் எது மேன்மையான திறனைக் கொண்டது? ஓ! பாரதக் குலத்தின் தலைவரே, இவை இரண்டில் மேன்மையான திறன் கொண்டது எது என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "சிலர் இன்சொல்லில் {சாமத்தில்} நிறைவடைகின்றனர், வேறு சிலர் கொடைகளால் நிறைவடைகிறார்கள். ஒவ்வொரு மனிதனும் தன் இயல்பின்படி இவை ஒன்றாலோ, அடுத்ததாலோ நிறைவடைகிறான்.(2) ஓ! மன்னா, ஓ! பாரதக் குலத்தின் தலைவா, மிகக் கொடூரமான உயிரினங்களும் தணிவை அடையும் இன்சொல்லின் {சாமத்தின்} பலன்களை உனக்கு விளக்கிச் சொல்கிறேன் கேட்பாயாக.(3) இது தொடர்பாகக் காட்டில் ஒரு ராட்சசனால் கைப்பற்றப்பட்ட ஒரு பிராமணன், (இன்சொல்லின் உதவியால்) விடுதலையடைந்த பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(4)
நாநயமும், புத்தியும் கொண்ட ஒரு குறிப்பிட்ட பிராமணன், தனியாகக் காட்டில் சென்ற போது, அவனை உண்ண நினைத்த ஒரு ராட்சசனால் பிடிக்கப்பட்டுத் துன்பத்தில் விழுந்தான்.(5) புத்தியும், கல்வியும் கொண்ட அந்தப் பிராமணன் கலக்கமடையாமல் இருந்தான். பயங்கரமான அந்த மனிதவூனுண்ணியைக் கண்டதும் கலங்காமல், இன்சொல்லைப் பயன்படுத்தி அதன் விளைவுகளை அந்த ராட்சசனிடம் காணத் தீர்மானித்தான்.(6)
அது வரை சொல்லப்பட்ட {இனிய}சொற்களுக்காக அந்தப் பிராமணனை மதிப்புடன் வணங்கிய அந்த ராட்சசன் இந்தக் கேள்வியை அவனிடம் கேட்டான்: "நீர் தப்பிக்கலாம், ஆனால் நான் ஏன் வெளுத்தும், இளைத்தும் இருக்கிறேன் என்பதற்கான காரணத்தை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(7) சிறிது நேரம் இது குறித்துச் சிந்தித்த அந்தப் பிராமணன், அந்த ராட்சசனின் கேள்வியை ஏற்று, நன்கு பேசப்பட்ட பின்வரும் சொற்களால் பதில் கூறினான்.(8)
அந்தப் பிராமணன் {ராட்சசனிடம்}, "உன் வசிப்பிடத்தில் இருந்து தொலைவான ஓரிடத்தில் வசித்து, உனக்குச் சொந்தமில்லாத பகுதியில் திரிந்து, உன் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களின் தோழமை இல்லாமல் நீ பெரும் செல்வத்தை அனுபவித்து வருகிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(9) ஓ! ராட்சசா, உண்மையில் உன் நண்பர்கள் உன்னால் நன்றாக நடத்தப்பட்டாலும், உன் தீய இயல்பின் விளைவால் உன்னிடம் நல்ல மனம் கொண்டவர்களாக இல்லை. இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(10) நீ பலனும் {புண்ணியமும்}, ஞானமும் நன்கு அமைக்கப்பட்ட ஆன்மாவும் கொண்டவனாக இருக்கிறாய். இருப்பினும், பலனும், ஞானமும் இல்லாதவர்கள் உன்னைவிட அதிக முன்னுரிமை பெற்று கௌரவிக்கப்படுவதை நீ பார்க்கிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(11) உன்னைவிட மிக அதிகமான செல்வமும் செல்வாக்கும் கொண்டிருந்தாலும், சாதனைகளில் உன்னைவிடத் தாழ்ந்தவர்களாக இருக்கும் மனிதர்களால் நீ அவமதிக்கப்பட்டிருக்கிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(12)
வாழ்வாதாரங்கள் இல்லாமல் துன்புற்றிருந்தாலும், உயர்ந்த நிலையில் இருக்கும் உன் ஆன்மாவால் வழிநடத்தப்பட்டு, உன் வாழ்வாதாரங்களை ஈர்ப்பதில் வெளிப்படையாகத் தெரியும் வழிமுறைகளை அலட்சியம் செய்கிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(13) அறத்தின் விளைவால் பிறருக்கு நன்மை செய்து உன்னை நீயே களங்கம் செய்திருக்கிறாய். ஓ! அறம் சார்ந்த ராட்சசா, இருப்பினும் மற்றவன் நீ அவனை வஞ்சித்துவிட்டதாகவும், அடக்கிவிட்டதாகவும் நினைக்கிறான். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(14) காமம் மற்றும் கோபத்தில் நிறைந்த ஆன்மாக்களைக் கொண்டோர் இவ்வுலகில் படும் துன்பத்திற்காக நீ வருந்துகிறாய் என நினைக்கிறேன். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(15) ஞானம் கொண்டவனாக இருந்தாலும், அது முற்றிலும் இல்லாதவனைப் போல நீ பிறரால் கேலிக்குள்ளாக்கப்பட்டிருக்க வேண்டும். உண்மையில் தீய ஒழுக்கம் கொண்ட மனிதர்கள் உன்னை நிந்திக்கிறார்கள். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(16)
நட்பின் நாவைக் கொண்ட உன் பகைவன் எவனோ ஒருவன், முதலில் அறம்சார்ந்த ஒருவனைப் போல உன்னிடம் நடந்து கொண்டு, பிறகு கபடன் போல உன்னை வசிந்துவிட்டுச் சென்றிருக்க வேண்டும். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(17) உலக நடைமுறைகளை நீ நன்கறிந்திருக்கிறாய். புதிர்கள் அனைத்திலும் நீ நல்ல திறம்பெற்றவனாக இருக்கிறாய். நீ தகுதியுடன் கூடியவனாக இருக்கிறாய். இத்தகையவனாக உன்னை அறிந்தவர்கள் உன்னை மதிப்பதும், புகழ்வதும் இல்லை. இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(18) ஏதோ காரியத்தில் ஈடுபட்டிருக்கும் தீய மனிதர்களுக்கு மத்தியில் உள்ள நீ அவர்களுடன் பேசி அவர்களுடைய ஐயங்களைக் களைந்திருப்பாய். இவை யாவும் செய்தாலும் அவர்கள் உன் மேன்மையான தகுதிகளை ஏற்றுக் கொள்ளதிருக்கிறார்கள். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(19) உண்மையில், செல்வமும், புத்தியும், வேத ஞானமும் இல்லாதிருந்தாலும் நீ உன் சக்தியால் மட்டுமே ஏதோ பெரிதான ஒன்றைச் சாதிக்க விரும்புகிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(20)
காட்டுச் சென்று கடுந்தவம் செய்யத் தீர்மானத்திருந்தாலும், உன் திட்டத்தை உற்றார் உறவினர் விரும்பவில்லை என்று தெரிகிறது. இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(21) பெருஞ்செல்வமும், இளமையும், அழகிய குணங்களும் கொண்ட உன் அண்டைவீட்டுக்காரன் உன் அன்புக்குரிய மனைவியின் மேலம் ஆசை கொண்டிருக்க வேண்டும். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(22) செல்வந்தர்களுக்கு முன் உன்னால் சொல்லப்பட்ட சொற்கள் சிறப்புடையவையாக இருப்பினும், ஞானமுள்ளவையாகவோ, சரியான நேரத்தில் சொல்லப்பட்டவையாகவோ கருதப்படவில்லை. இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(23) உன் அன்புக்குரிய உறவினனும், புத்தியற்றவனுமான ஒருவன், சாத்திரக் கல்வியை மீண்டும் மீண்டும் புகட்டினாலும், கோபக்காரனாகவே இருக்கிறான். நீ அவனைத் தணிப்பதில் வெல்லவில்லை. இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(24)
உண்மையில், ஏதோ ஒரு விரும்பத்தக்க காரியத்தில் உன்னை நிறுவிய ஒருவர் இப்போது அதன் கனியை உன்னிடம் இருந்து இப்போது பறிக்க முயலக்கூடும். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(25) சிறந்த சாதனைகளைக் கொண்டவனாகவும், அதன் காரணமாக அனைவராலும் வழிபடப்படுபவனாகவும் இருந்தாலும், உன் உறவினர்கள் உனக்காக அல்லாமல் தங்களுக்காகவே நீ வழிபடப்படுவதாகக் கருதுகிறார்கள். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(26) உண்மையில், தவிர்க்க முடியாத தாமதத்தால் உன் இதயத்தில் உள்ள ஏதோ ஒரு நோக்கத்தை நிறைவேற்ற முடியாததால் வெட்கத்தினால் நீ அதைக் கைவிட முடியாதவனாக இருக்கிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(27) உண்மையில், பல்வேறு வகைப் புத்தி மற்றும் விருப்பங்களுடன் உள்ள மனிதர்களை உன் புத்தியின் துணையுடன் உன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர நீ விரும்புகிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்[1].(28)
[1] "அத்தகைய நோக்கத்தை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது. எனவே நீ வெளுத்தும் இளைத்தும் இருக்கிறாய்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
கல்வியற்றவனும், துணிவில்லாதவனும், அதிகச் செல்வமில்லாதவனுமான நீ, அறிவு, ஆற்றல் மற்றும் கொடைகளால் வெல்லப்பட்ட புகழைப் பெற முனைகிறாய். உண்மையில், இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(29) உன் இதயத்தில் நீண்ட காலம் உள்ள ஏதோ ஒன்றை அடைய முடியாமல் இருக்கிறாய். அல்லது, நீ அடைய முனையும் ஒன்று வேறு எவராலோ தடுக்கப்படுகிறது. இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(30) உண்மையில், உன் தரப்பில் எந்தக் களங்கமும் இன்றி நீ வேறு எவராலோ சபிக்கப்பட்டிருக்கிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்[2].(31) செல்வமும், சாதனைகளும் இல்லாத நீ, உன் நண்பர்களின் துயரத்தையும், கவலையில் இருக்கும் மனிதர்களின் கவலையையும் விலக்க வீணாக முயல்கிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(32) அறவோர் இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தை} நோற்பதையும், அறமற்றோர் காட்டு வாழ்வுமுறைப்படி {வானப்ரஸ்தாஸ்ரமப்படி} வாழ்வதையும், துறவிகள் இல்லத்தாராகவும், நிலைத்த வசிப்பிடங்களில் வாழ்வதையும் கண்டதால் நீ வெளுத்தும், இளைத்துமிருக்கிறாய்.(33)
[2] "நீ முற்றிலும் அப்பாவியாக இருந்தாலும் சபிக்கப்பட்டிருக்கிறாய். அந்தக் கவலையே உன்னை இவ்வாறு ஆக்கியிருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அறம், பொருள் மற்றும் இன்பத்தோடு தொடர்புடைய உன் செயல்களும், சரியான நேரத்தில் சொல்லப்பட்ட சொற்களும் உனக்குக் கனி {பலன்} கொடுக்கவில்லை. இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(34)
ஞானம் கொண்டவனாக இருந்தாலும், வாழும் விருப்பத்தினால் உந்தப்பட்டு, தீய நடத்தை கொண்ட ஒருவனால் கொடுக்கப்பட்ட கொடையைப் பெற்றுக் கொண்டு செல்வத்துடன் வாழ்கிறான். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(35)
அனைத்துப்புறங்களிலும் மறம் {அறமற்ற நிலை} பெருகுவதையும், அறம் நலிவுறுவதையும் கண்டு நீ துன்பத்தில் நிறைந்திருக்கிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(36)
ஒருவரோடு ஒருவர் முரண்பட்டு அனைத்துப் புறங்களிலும் சச்சரவு செய்து கொண்டிருந்தாலும், நண்பர்கள் அனைவரையும் நிறைவடையச் செய்ய அவர்களால் தூண்டப்படுகிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(37) வேத ஞானம் கொண்டோர் முறையற்றச் செயல்களில் ஈடுபடுவதையும், கல்விமான்கள் தங்கள் புலன்களை அடக்காததையும் கண்டு நீ துயரத்தில் நிறைந்திருக்கிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்" என்றான்.(38)
ஞானம் கொண்டவனாக இருந்தாலும், வாழும் விருப்பத்தினால் உந்தப்பட்டு, தீய நடத்தை கொண்ட ஒருவனால் கொடுக்கப்பட்ட கொடையைப் பெற்றுக் கொண்டு செல்வத்துடன் வாழ்கிறான். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(35)
அனைத்துப்புறங்களிலும் மறம் {அறமற்ற நிலை} பெருகுவதையும், அறம் நலிவுறுவதையும் கண்டு நீ துன்பத்தில் நிறைந்திருக்கிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(36)
ஒருவரோடு ஒருவர் முரண்பட்டு அனைத்துப் புறங்களிலும் சச்சரவு செய்து கொண்டிருந்தாலும், நண்பர்கள் அனைவரையும் நிறைவடையச் செய்ய அவர்களால் தூண்டப்படுகிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்.(37) வேத ஞானம் கொண்டோர் முறையற்றச் செயல்களில் ஈடுபடுவதையும், கல்விமான்கள் தங்கள் புலன்களை அடக்காததையும் கண்டு நீ துயரத்தில் நிறைந்திருக்கிறாய். இதன் காரணமாகவே நீ வெளுத்தும் இளைத்துமிருக்கிறாய்" என்றான்.(38)
இவ்வாறு புகழப்பட்ட அந்த ராட்சசன், கல்விமனான அந்தப் பிராமணனைப் பதிலுக்கு வழிபட்டு, அவனைத் தன் நண்பனாக்கிக் கொண்டு, போதுமான செல்வத்தையும் அவனுக்குக் கொடையாகக் கொடுத்து (அவனை விழுங்காமல்) விடுவித்தான்" என்றார் {பீஷ்மர்}.(39)
அநுசாஸனபர்வம் பகுதி – 124ல் உள்ள சுலோகங்கள் : 39
ஆங்கிலத்தில் | In English |