Tuesday, July 02, 2019

சாத்திர விதிகள்! - அநுசாஸனபர்வம் பகுதி – 125

The ordinances in scriptures! | Anusasana-Parva-Section-125 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 125)


பதிவின் சுருக்கம் : உயர்ந்த கதியை அடைவதற்குப் பின்பற்ற வேண்டிய ஒழுக்கம்; சிராத்தங்கள்; உயிர்க்கொலையில் உள்ள பாவம் ஆகியவற்றைக் குறித்து தேவதேதூதன், இந்திரன், முனிவர்கள், பித்ருக்கள் மற்றும் பிருஹஸ்பதி ஆகியோருக்கிடையில் நடைபெற்ற உரையாடல்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, தனக்கான நன்மையை அடைய விரும்பும் ஒரு வறிய மனிதன், அடைதற்கரிதான செயல்களின் உலகத்திற்குள் மனித நிலையை அடைந்து {கர்மங்கள் பலிக்கும் பூமியில், கிடைத்தற்கரிதான மானிட ஜன்மத்தை அடைந்து} எவ்வாறு தன்னைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக.(1) கொடைகள் அனைத்திலும் சிறந்தது எது? எந்தெந்தச் சூழ்நிலைகளில் எவையெவை கொடுக்கப்பட வேண்டும் என்பன குறித்தும் எனக்குச் சொல்வீராக. ஓ! கங்கையின் மகனே, கௌரவிப்பதற்கும், வழிபாட்டுக்கும் தகுந்தவர்கள் யார் என்பதை எனக்குச் சொல்வீராக. இந்தப் புதிர்கள் அனைத்தையும் எங்களுக்குச் சொல்வதே உமக்குத் தகும்" என்று கேட்டான்".(2)


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "புகழ்பெற்ற ஏகாதிபதியான அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} இவ்வாறு கேள்வி கேட்டதும், கடமை தொடர்புடைய இந்த உயர்ந்த புதிர்களைப் பீஷ்மர் (இந்தச் சொற்களில்) விளக்கிச் சொன்னார்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, ஓ! பாரதா, பழங்காலத்தில் புனிதமான வியாசர் சொன்னது போலவே கடமைகள் தொடர்பான இந்தப் புதிர்களை உனக்கு விளக்கிச் சொல்கிறேன் கேட்பாயாக.(4) ஓ! ஏகாதிபதி, இது தேவர்களுக்கும் புதிரானதாகும். களங்கமற்ற செயல்களைக் கொண்ட யமன், நன்கு நோற்கப்பட்ட நோன்புகள் மற்றும் தியான யோகத்தின் உதவியுடனும், தன் தவங்களின் உயர்ந்த கனிகளாகவும் இந்தப் புதிர்களின் ஞானத்தை அடைந்தான்.(5) எந்தெந்த தேவர்களுக்கு எவையெவை நிறைவைத் தரும், பித்ருக்கள், முனிவர்கள், (மஹாதேவனின் துணைவர்களான) பிரமாதர்கள், ஸ்ரீதேவி, (யமனின் உதவியாளரான) சித்திரகுப்தன், திசைகளின் முக்கியப்புள்ளிகளை ஆளும் வலிமைமிக்க யானைகள் ஆகியோருக்கு எது நிறைவைத் தரும்.(6) பல புதிர்களைக் கொண்டதும், பெருங்கொடைகள் என்றழைக்கப்படும் பலன்களான உயர்ந்த கனிகளை உண்டாக்கவல்லதும், வேள்விகள் அனைத்துக்குமான பலனைக் கொண்டதுமான முனிவர்களின் அறமாக எது அமைகிறது?(7) ஓ! பாவமற்றவனே, இவற்றை அறிந்தவனும், தன் அறிவின் படி செயல்களை அறிந்து கொண்டவனுமான ஒருவன், களங்கம் கொண்டவனாக இருந்தால் அக்களங்களில் இருந்து விடுபட்டுக் குறிப்பிடப்பட்ட பலன்களை அடைவான்.(8)

எண்ணை உற்பத்தியாளன் ஒருவன் பத்து கசாப்புக்காரர்களுக்கு இணையானவன். மது அருந்தும் ஒருவன் பத்து எண்ணைக்காரர்களுக்கு இணையானவன். ஒரு விலைமகள் பத்து குடிகாரர்களுக்கு இணையானவள். (ஆட்சி எல்லைக்குட்பட்ட) ஒரு தலைவன் பத்து விலைமகள்களுக்கு இணையானவன்[1].(9) ஒரு பெரும் மன்னன் இவர்களில் பாதி என்று சொல்லப்படுகிறான். மறுபுறம் ஒருவன், புனிதமானதும், அறத்தையே தன் குறியீடாகக் கொண்டதுமான (அறம், பொருள் மற்றும் இன்பம் அடங்கிய) முத்தொகை அறிவியலைக் கவனத்தில் கொள்ள {கவனிக்க} வேண்டும். இவற்றில் செல்வமும், இன்பமும் இயல்பான ஈர்ப்பைக் கொண்டவையாகும். அறப்புதிர்களைக் குறித்துக் கேட்பது பெருங்கனிகளை {பெரும்பலன்களைக்} கொண்டது என்பதால், ஒருவன் (குறிப்பாக) அறம் தொடர்பான புனிதமான விரிவுரைகளைக் குவிந்த கவனத்துடன் கேட்க வேண்டும். அவன் தேவர்களால் விதிக்கப்பட்ட அறம் தொடர்பான அனைத்தையும் கேட்க வேண்டும்.(10,11) அவற்றிலேயே பித்ருக்கள் தொடர்பான புதிர்கள் அடங்கிய சிராத்தச் சடங்கு அறவிக்கப்பட்டிருக்கிறது. தேவர்கள் அனைவர் தொடர்பான புதிர்களும் அவற்றில் விளக்கப்பட்டுள்ளன.(12) முனிவர்கள் தொடர்பான புதிர்களுடன் சேர்த்து, பெரும் பலன்களை உண்டாக்கவல்ல கடமைகள், நடைமுறைகள் ஆகியனவும் அவற்றிலேயே அறியப்படுகின்றன. பெரும் வேள்விகள் மற்றும் அனைத்து வகையான கொடைகள் தொடர்பான பலன்களையும் அவையே கொண்டிருக்கின்றன.(13)

[1] "கசாப்புக்காரன் அல்லது விலங்குகளைக் கொல்பவனிடம் இருந்து கொடைகள் பெறக்கூடாது. எண்ணைக்காரன் பத்து கசாப்புக்காரனுக்கு இணையானவன், எனவே, எண்ணைக்காரனிடம் கொடைபெறும் ஒருவன், கசாப்புக்காரனிடம் பெறுவதைக் காட்டிலும் பத்து மடங்கு பாவத்தை அடைகிறான். இவ்வழியிலேயே பாவத்தின் அளவு கொடுக்கப்பட்டுள்ள விகிதங்களின்படி அதிகரிக்கிறது. நிருப என்பவன் ஒரு சிறு தலைவன் என்று உரையாசிரியரால் விளக்கப்படுகிறது. ஒரு குறு மன்னன் பத்தாயிரம் கசாப்புக்காரனுக்கு இணையானவன். எனினும் ஒரு பெரும் மன்னன், இவர்களில் பாதி அளவு பாவம் கொண்டவன். அஃதாவது ஐயாயிரம் கசாப்புக்காரனுக்கு இணையானவன். வேறு சொற்களில் சொல்வதென்றால், ஒரு பெரும் மன்னனிடம் கொடை பெறுவதன் மூலம் ஒரு மனிதன் ஒரு கசாப்புக்காரனிடம் கொடைபெறுவதால் கிட்டும் பாவத்தில் ஐயாயிரம் மடங்கு பாவத்தை ஈட்டுகிறான் என்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

இவை குறித்த சாத்திரங்களை எப்போதும் படிப்பவர்களும், தங்கள் மனங்களில் அவற்றை முறையாகத் தாங்கிக் கொள்வோரும், அவற்றைக் கேட்ட பிறகு நடைமுறையில் பின்பற்றுபவர்களுமான மனிதர்கள் அனைவரும் பலமிக்க நாராயணனையே போன்ற புனிதமானவர்களாகவும், பாவமற்றவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.(14) பசுக்கொடை அளிப்பது, நீர்நிலைகளில் நீராடுவது, வேள்விகளைச் செய்வது ஆகியவற்றால் உண்டாகும் பலன்கள் அனைத்தையும், வீட்டுக்கு வரும் விருந்தினரை மதிப்புடன் நடத்தும் மனிதன் அடைகிறான்.(15) இந்தச் சாத்திரங்களைக் கேட்பவர்களும், நம்பிக்கையுடன் இருப்பவர்களும், தூய இதயம் படைத்தவர்களும் மகிழ்ச்சியான உலகங்களை வெல்வதாக நன்கு அறியப்பட்டிருக்கிறது. நம்பிக்கையுடன் கூடிய அறவோர்,(16) அனைத்துக் களங்கங்களிலிருந்து விடுபட்டு, பாவம் அண்டமுடியாதவர்களாக ஆகிறார்கள். அத்தகைய மனிதர்கள் எப்போதும் அறத்தைப் பெருக்கி, சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(17)

ஒரு காலத்தில் இந்திரனின் அவைக்கு வந்தும் புலப்படாமல் தொடர்ந்த தேவதூதன் ஒருவன் தேவர்களின் தலைவனிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்:(18) "மருத்துவர்கள் அனைவரிலும் முதன்மையானவர்களும், இனிய குணங்கள் அனைத்தையும் கொண்டவர்களுமான தேவர்கள் இருவரின் {அஸ்வினி இரட்டையரின்} ஆணையின் பேரில் இந்த இடத்திற்கு வந்த நான், இங்கே மனிதர்கள், பித்ருக்கள் மற்றும் தேவர்கள் கூடியிருப்பதைக் காண்கிறேன்.(19) உண்மையில், சிராத்தம் செய்தவன் மற்றும் (குறிப்பிட்ட நாளில்) சிராத்தத்தில் உண்டவன் ஆகியோருக்கு பாலினக் கலவி ஏன் தடைசெய்யப்பட்டிருக்கிறது? சிராத்தங்களில் ஏன் மூன்று அரிசிப்பிண்டங்கள் காணிக்கையளிக்கப்படுகின்றன?(20) அவற்றில் முதற்பிண்டத்தை யாருக்குக் கொடுக்க வேண்டும்? இரண்டாவதை யாருக்குக் கொடுக்க வேண்டும்? எஞ்சியிருக்கும் மூன்றாவதை யாருக்குக் கொடுக்க வேண்டும்? இவை யாவற்றையும் நான் அறிய விரும்புகிறேன்" {என்றான் தேவ தூதன்}.(21)

அறம் மற்றும் கடமை தொடர்புடைய இந்தச் சொற்களைத் தேவ தூதன் சொன்னதும், கிழக்கு நோக்கி அமர்ந்திருந்த தேவர்களும், பித்ருக்கும் அந்த வானுலாவியைப் பின்வருமாறு மெச்சத் தொடங்கினர்.(22)

பித்ருக்கள், "உனக்கு நல்வரவு, அருளப்பட்டிருப்பாயாக. ஓ! வானுலாவிகளில் சிறந்தவனே, கேட்பாயாக. நீ கேட்டது ஆழம் நிறந்த பொருளைக் கொண்ட உயர்ந்த கேள்வியாகும்.(23) தான் செய்யும் சிராத்த நாளன்று, அல்லது தான் உண்ட சிராத்த நாளன்று பாலியல்கலவியில் ஈடுபடும் மனிதனுடைய பித்ருக்கள், ஒரு மாதகாலம் முழுவதும் அவனது உயிர் வித்திலேயே கிடப்பார்கள்.(24) சிராத்தத்தில் காணிக்கையளிக்கப்படும் அரிசிப்பிண்டங்களைக் கொண்டு என்ன செய்யப்பட வேண்டும் என்பதை ஒன்றன்பின் ஒன்றாக நாங்கள் விளக்கிச் சொல்லப் போகிறோம். முதல் அரசிப்பிண்டம் நீரில் வீசப்பட வேண்டும்.(25) இரண்டாவது பிண்டம் ஒருவனுடைய மனைவியருக்கு உண்ணக் கொடுக்க வேண்டும். மூன்றாவது பிண்டம் சுடர்மிக்க நெருப்பில் வீசப்பட வேண்டும்.(26) சிராத்தத்தைப் பொறுத்தவரையில் அறிவிக்கப்பட்டிருக்கும் விதி இதுவே. அறச்சடங்குகளின் படி நடைமுறையில் பின்பற்றப்படும் விதியும் இதுவேதான். இந்த விதிப்படி செயல்படும் மனிதனின் பித்ருக்கள் நிறைவடைந்து, எப்போதும் உற்சாகமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.(27) அத்தகைய மனிதனின் சந்ததி பெரும், வற்றாத செல்வம் எப்போதும் அவனது ஆணையின் கீழ் எஞ்சியிருக்கும்" என்றர்.(28)

தேவ தூதன், "அரிசிப் பிண்டங்கள் பகுக்கப்படுவதையும், ஒன்றன் பின் ஒன்றாக அவை மூன்று நிலைகளுக்கு (நீர், மனைவி மற்றும் சுடர்மிக்க நெருப்பு ஆகிய நிலைகளுக்கு) அனுப்பப்படுவதையும் அதன் காரணங்களுடன் விளக்கினீர்கள்[2].(29) நீரில் அனுப்பப்படும் அரிசிப்பிண்டம் யாரை அடைகிறது? தேவர்களை நிறைவடையச் செய்ய எப்படி இவ்வாறு அனுப்பப்படுகிறது? அஃது எவ்வாறு பித்ருக்களைக் காக்கிறது?(30) இரண்டாம் பிண்டம் மனைவியால் உண்ணப்படுகிறது. அது விதியில் விதிக்கப்பட்டிருக்கிறது. (எவனுடைய மனைவி அந்தப் பிண்டத்தை உண்பாளோ) அந்த மனிதனின் பித்ருக்கள் எவ்வாறு அதை உண்டவர்களாகிறார்கள்?(31) இறுதிப் பிண்டம் சுடர்மிக்க நெருப்புக்குள் செல்கிறது. இந்தப் பிண்டம் உங்களிடம் வருவதற்கான வழியைக் கண்டடைவதில் எவ்வாறு வெல்கிறது? அல்லது யாரிடம் அது செல்கிறது?(32) சிராத்தங்களில் நீரில் விடப்பட்டும், மனைவிக்குக் கொடுக்கப்பட்டும், சுடர்மிக்க நெருப்பில் வீசப்பட்டும் காணிக்கையளிக்கப்படும் அரிசிப் பண்டங்கள் அடையும் கதியைக் குறித்து நான் கேட்க விரும்புகிறேன்" என்றான்.(33)

[2] "காரணங்கள் என்பன சாத்திரங்களில் அறிவிக்கப்பட்டுள்ளவையாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பித்ருக்கள் {தேவதூதனிடம்}, "நீ கேட்டிருக்கும் இந்தக் கேள்வி மிகப் பெரியதாகும். இது புதிரும், ஆச்சரியமும் நிறைந்ததாகும். ஓ! வானுலாவியே, நாங்கள் உன்னிடம் பெரும் நிறைவை அடைகிறோம்.(34) தேவர்களும், முனிவர்களும் பித்ருக்களுக்காகச் செய்யப்படும் செயல்களை மெச்சுகிறார்கள். பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் செயல்களுக்குண்டான விதிகளின் நிச்சயத் தீர்மானத்தை அவர்களே அறிய மாட்டார்கள்.(35) உயர் ஆன்மா கொண்டவரும், இறப்பற்றவரும், சிறந்தவரும், பெரும் புகழைக் கொண்ட கல்விமானும், பித்ருக்களிடம் எப்போதும் அர்ப்பணிப்புமிக்கவருமான மார்க்கண்டேயரைத் தவிரப் பித்ருக்களின் விதிகளில் அமைந்துள்ள புதிர்களை அறிந்தவர்கள் வேறு யாருமில்லை" என்றனர்.(36)

{பீஷ்மர் யுதிஷ்டிரனிடம் தொடர்ந்தார்}, "சிராத்தத்தில் காணிக்கையளிக்கப்படும் மூன்று அரிசிப்பிண்டங்களின் கதியைக் குறித்துப் புனிதரான வியாசரிடம் கேட்டதையும், தேவ தூதன் கேள்விக்கு மறுமொழியாகப் பித்ருக்கள் சொன்னதையும், நான் உனக்கு விளக்கிச் சொல்கிறேன். ஓ! ஏகாதிபதி, சிராத்தவிதிகளைப் பொறுத்தவரையில் குறிப்பிட்ட தீர்மானங்கள் என்ன என்பதைக் கேட்பாயாக.(37) ஓ! பாரதா, மூன்று அரிசிப்பிண்டங்களின் கதி என்ன என்பதை விளக்கிச் சொல்கிறேன், கவனமாகக் கேட்பாயாக. {பித்ருக்கள் தேவதூதனிடம் சொன்னார்கள்}, "நீருக்குள் செல்லும் அரிசிப்பிண்டம் சந்திர தேவனை நிறைவடையச் செய்வதாகக் கருதப்பட வேண்டும்.(38) ஓ! பெரும் நுண்ணறிவு கொண்டவனே, அந்தத் தேவன் நிறைவடைந்ததும், அவன் பிற தேவர்களையும், அவர்களோடு சேர்த்து பித்ருக்களையும் நிறைவடையச் செய்கிறான். இரண்டாவது அரிசிப்பிண்டம் (சிராத்தம் செய்யும் மனிதனின்) மனைவியால் உணப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது.(39) சந்ததியை எப்போதும் விரும்பும் பித்ருக்கள் அந்த வீட்டின் பெண்ணுக்கு பிள்ளைகளைக் கொடுப்பார்கள். சுடர்மிக்க நெருப்புக்குள் வீசப்படும் அரிசிப்பிண்டம் என்ன ஆகிறது என்பதைக் குறித்து இப்போது சொல்கிறேன் கேட்பாயாக.(40)

அந்தப் பிண்டத்தால் நிறைவடையும் பித்ருக்கள், அதன் விளைவாக அதைக் காணிக்கையளித்த மனிதனின் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அவனுக்கு அருள்வார்கள். இவ்வாறு சிராத்தத்தில் காணிக்கையளிக்கப்படும் மூன்று அரிசிப்பிண்டங்களின் கதியையும், அவை செல்லும் (நீர், மனைவி மற்றும் நெருப்பு என்ற) மூன்றையும் குறித்த அனைத்தையும் உனக்குச் சொல்லிவிட்டேன்.(41) சிராத்தத்தில் ரித்விக்காகும் பிராமணனே அந்தச் செயலின் மூலம் அந்தச் சிராத்தத்தைச் செய்பவனின் பித்ருவாக அமைகிறான். எனவே, அவன் தன் சொந்த மனைவியுடன் கூட அந்த நாளில் பாலியல் கலவியைத் தவிர்க்க வேண்டும்[3].(42) ஓ! வானுலாவிகள் அனைவரிலும் சிறந்தவனே, சிராத்தத்தில் உண்ணும் மனிதன் அந்த நாள் முழுவதும் தன்னைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வேறு வகையில் செயல்படுவதால் அவன் நிச்சயம் மேற்குறிப்பிட்ட களங்கங்களை இழைத்தவனாகிறான். இது வேறு வகையிலாகாது.(43) எனவே, காணிக்கைகளை உண்ண சிராத்தத்திற்கு அழைக்கப்பட்ட பிராமணன், நீராடல் மூலம் தன்னைத் தூய்மை செய்த பிறகு அதை உண்டு, அந்த நாள் முழுவதும் அனைத்து வாகை தீங்கு அல்லது தீமைகளையும் தவிர்த்து அறம் சார்ந்தவனாக இருக்க வேண்டும். அத்தகைய மனிதனின் சந்ததி பெருகுகிறது, அவனுக்கு உணவைக் கொடுப்பவனும் அதே வெகுமதியை அறுவடை செய்கிறான்" என்றனர் {பித்ருக்கள்}".(44)

[3] "ரித்விக்காகி சிராத்தத்தில் உண்ணும் பிராமணன், சிராத்தம் செய்பவனின் பித்ரு ஆகிறான். எனவே அவனது அடையாளம் மாறியிருப்பதால் அந்த நாளில் அவன் தன் மனைவியுடன் கூடக் கலவியைத் தவிர்க்க வேண்டும். அத்தகைய கலவியில் ஈடுபடுவதால் அவன் பிறன்மனைநயக்கும் பாவத்தை இழைத்தவனாகிறான் என உரையாசிரியார் விளக்கிச் சொல்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "பித்ருக்கள் இவ்வாறு சொன்ன பிறகு, கடுந்தவங்களைக் கொண்டவரும், சூரியனைப் போன்ற காந்தியுடன் ஒளிர்ந்தவருமான வித்யுத்பிரபர் என்ற முனிவர் பேசினார்.(45) பித்ருக்களால் விளக்கப்பட்ட அறப்புதிர்களைக் கேட்ட அவர் சக்ரனிடம், "மடமையில் {அறியாமையில்} மயங்கி மனிதர்கள் இடைநிலை வகையில் பிறந்த எண்ணற்ற உயிரினங்களைக் கொல்கின்றனர்.(46) அவை புழுக்கள், எறும்புகள், பாம்புகள், செம்மறியாடு, மான்கள் மற்றும் பறவைகள் போன்ற உயிரினங்களாகும். இச்செயல்களால் அவர்கள் அளவிலும், கனத்திலும் மிகப் பெரிய பாவத்தை இழைக்கின்றனர். எனினும் இதற்குத் தீர்வு என்ன?" என்று கேட்டார்.(47) இந்தக் கேள்வி கேட்கப்பட்ட போது, தேவர்கள், தவங்களையே செல்வமாகக் கொண்ட முனிவர்கள் மற்றும் உயர்ந்த அருளைக் கொண்ட பித்ருக்கள் ஆகியோர் அனைவரும் அந்தத் தவசியை மெச்சினார்கள்.(48)

சக்ரன் {இந்திரன்}, "குருக்ஷேத்திரம், கயை, கங்கை, பிராபாஸம், புஷ்கரத்தடாகங்கள் ஆகியவற்றை மனத்தில் நினைத்துக் கொண்டு வருவன் நீரில் தன் தலையை மூழ்கச் செய்ய வேண்டும்.(49) இவ்வாறு செய்வதால் ஒருவன் ராகுவிடம் இருந்து விடுபடும் சந்திரமாஸை {சந்திரனைப்} போலத் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். இவ்வாறு அடுத்தடுத்து மூன்று நாட்கள் நீராடும் ஒருவன், அதன் பிறகு ஒவ்வொரு நாளும் உண்ணா நோன்பிருக்க வேண்டும்.(50) அதையும் தவிர அவன் (நீராடிய பிறகு) பசுவின் குதத்தைத் தீண்டி, அவளது வாலுக்குத் தலைவணங்க வேண்டும்" என்றான்.

வித்யுத்பிரபர் மீண்டும் வாசவனிடம் {இந்திரனிடம்}, "நான் மிக நுட்பமான ஒரு சடங்கை அறிவிக்கப் போகிறேன். ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே, நான் சொல்வதைக் கேட்பாயாக.(51) ஆலமரத்தில் தொங்கும் விழுதுகளின் துவர்ப்பான பொடியால் {கஷாயத்தால்} உடம்பைத் தேய்த்து கடுகு எண்ணெயை தலையில் தேய்த்து நீராடிய பிறகு, சாஷ்டிக {அறுபதாம் குறுவை} நெல்லுடன் பாலைக் கலந்து உண்பவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுவான்[4].(52) பலர் அறியாததும், முனிவர்களால் தியானத்தின் உதவியுடன் கண்டடையப்பட்டதுமான மற்றொரு புதிரை இப்போது சொல்லப் போகிறேன் கேட்பாயாக. மஹாதேவனின் முன்னிலையில் பிருஹஸ்பதி சொல்லிக் கொண்டிருந்தபோது இதை நான் கேட்டேன்.(53) ஓ! தேவர்களின் தலைவா, ஓ! சச்சியின் தலைவா, நீயும் ருத்ரனின் துணையுடன் இதைக் கேட்பாயாக. ஒரு மனிதன் மலையில் ஏறி கரங்களை உயர்த்திக் கூப்பியபடி அங்கே ஒற்றைக் காலில் நின்று, உணவனைத்தையும் தவிர்த்து சுடர்மிக்க நெருப்பைக் கண்டால் அவன் கடுந்தவங்கள் செய்த பலன்களை அடைந்து, உண்ணா நோன்பு தொடர்பான வெகுமதிகளையும் அடைகிறான்.(54,55) சூரியனின் கதிர்களால் சுடப்படும் அவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். கோடைக் காலத்திலும், குளிர் காலத்திலும் இவ்வழியில் செயல்படும் ஒருவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான்.(56) அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடையும் ஒருவன், எப்போதும் காந்தி மிக்கத் தோல் நிறத்தை அடைவான். அத்தகைய மனிதன் சூரியனைப் போன்ற சக்தியுடன் சுடர்விடவோ, சந்திரனின் அழகுடன் ஒளிரவோ செய்கிறான்" என்றார் {வித்யுத்பிரபர்}.(57)

[4] "பதகஷாயம் என்பது அரச மரத்தின் தொங்கும் விழுதுகளை அரைத்துச் செய்யப்பட்ட ஒரு பொருள் என உரையாசிரியர் விளக்குகிறார். இங்கே குறிப்பிடப்படும் பிரியங்கு என்பது செம்புளி அல்ல ஆனால் கடுகுக்கீரையாகும். சாஷ்டிக நெல் என்பது அறுபது நாட்களில் விளையும் நெல்லாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஆலம்விழுதின் கஷாயத்தால் உடம்பைத் தேய்த்துத் தினைமாவைப் பூசி ஸ்நானம் செய்த பிறகு அறுபதாங்குறுவையன்னத்தைப் பாலுடன் புஜித்ததால் எல்லாப்பாவங்களாலும் விடப்படுவான்" என்றிருக்கிறது.

தேவர்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்தவனும், நூறு வேள்விகளைச் செய்த தேவர்களின் தலைவன், இதன் பிறகு பிருஹஸ்பதியிடம் இந்தச் சிறந்த சொற்களைச் சொல்லிப் பேசினான்:(58) "ஓ! புனிதமானவரே, மனிதர்களுக்கு நிறைந்த மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய அறப்புதிர்கள் குறித்தும், அவர்கள் செய்யும் குற்றங்களுடன் தொடர்புடைய புதிர்கள் குறித்தும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(59)

பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, "சூரியனைப் பார்த்து சிறுநீர் கழிப்பவர்கள், காற்றை {வாயுவை} மதிக்காதவர்கள், சுடர்மிக்க நெருப்பில் ஆகுதிகளை ஊற்றாதவர்கள்,(60) மிக இளவயது கன்றைக் கொண்ட பசுவிடம் இருந்து அதிக அளவு பாலை அடைவதற்காகக் கறப்பவர்கள் ஆகியோர் பல களங்கங்களை {பாவங்களை} இழைக்கின்றனர். ஓ! சச்சியின் தலைவா, அந்தக் குற்றங்கள் என்ன என்பதை நான் இப்போது அறிவிக்கப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பாயாக.(61) ஓ! வாசவா, ஓ! சக்ரா, சூரியன், காற்று, வேள்வி ஆகுதிகளைச் சுமப்பவன் {நெருப்பு / அக்னி}, அனைத்து உயிரினங்களின் தாய்மாரான பசுக்கள் ஆகியோர் உலகங்களைப் பாதுகாப்பதற்காகச் சுயம்புவால் படைக்கப்பட்டனர். இவர்களே மனிதர்களின் தேவர்களாவர். அறத் தீர்மானங்களை நீங்கள் அனைவரும் கேட்பிராக.(62,63) சூரியனைப் பார்த்துக் கொண்டு சிறுநீர் கழிக்கும் தீய ஆண்களும், தீய பெண்களும் எண்பத்தாறு ஆண்டுகள் பெரும் புகழ்க்கேட்டில் வாழ்வார்கள்.(64) ஓ! சக்ரா, காற்றிடம் எந்த மதிப்பையம் வளர்க்காதவன், தன் மனைவியின் கருப்பையிலிருந்து காலம் கனிவதற்கு முன்பே விழும் பிள்ளைகளைப் பெறுகிறான். சுடர்மிக்க நெருப்பில் ஆகுதிகளை ஊற்றாத மனிதர்கள், அத்தகைய சடங்குகளைச் செய்ய நெருப்பை மூட்டும்போது அது தங்கள் ஆகுதிகளை உண்ண மறுப்பதைக் காண்பார்கள்.(65) மிக இளவயது கன்றைக் கொண்ட பசுவின் பாலைக் குடிப்பவர்கள், தங்கள் குலத்தைத் தழைக்கச் செய்ய ஒருபோதும் பிள்ளைகளைப் பெற மாட்டார்கள்.(66) அத்தகைய மனிதர்கள் தங்கள் பிள்ளைகள் இறப்பதையும், தங்கள் குலம் சுருங்குவதையும் காண்பார்கள். மதிப்பிற்குரிய குலங்களில் உள்ள வயதில் முதிர்ந்த மறுபிறப்பாளர்களால் காணப்படும் குறிப்பிடப்பட்ட செயல்களின் விளைவுகள் இவையே.(67) எனவே, ஒருவன் செழிப்படைய விரும்பினால் அவன் தடைசெய்யப்பட்டதை எப்போதும் தவிர்த்து, அறிவுறுத்தப்பட்டதை மட்டுமே எப்போதும் செய்ய வேண்டும். நான் உனக்குச் சொன்ன இது பெரும் உண்மையாகும்" என்றார் {பிருஹஸ்பதி}.(68)

தேவ ஆசான் இவ்வாறு சொன்ன பிறகு உயர்ந்த அருளைக் கொண்ட தேவர்கள், மருத்துகள் மற்றும் உயர்ந்த அருளைக் கொண்ட முனிவர்கள் ஆகியோர் பித்ருக்களிடம் கேள்வி கேட்கும் வகையில்,(69) "பித்ருக்களே, பொதுவாகவே சிறுமதி கொண்ட மனிதர்கள் செய்யும் எந்தச் செயல்களால் நீங்கள் நிறைவடைகிறீர்கள்? அத்தகைய சடங்குகளில் அளிக்கப்படும் எந்தக் கொடைகளால், இவ்வுலகில் இறந்து போன மனிதர்களின் நிலையை உயர்த்தி, அவர்களை வற்றாத திறன் கொண்டவர்களாக்கும்?(70) எந்தச் செயல்களைச் செய்வதால் மனிதர்கள் பித்ருக்களுக்குத் தாங்கள் பட்ட கடனில் இருந்து விடுபடுவார்கள்? இதை நாங்கள் கேட்க விரும்புகிறோம். நாங்கள் உணரும் ஆவல் பெரிதாக இருக்கிறது" என்றனர்.(71)

பித்ருக்கள், "உயர்ந்த அருளைக் கொண்டவர்களே, உங்கள் மனங்களில் உள்ள ஐயங்கள் நன்கு விளக்கப்பட்டிருக்கின்றன. அறவோர் செய்யும் எந்தச் செயல்களால் நாங்கள் நிறைவடைகிறோம் என்பதை அறிவிக்கப் போகிறோம் கேட்பீராக.(72) நீல நிறத்துடன் {கரிய நிறத்துடன்} கூடிய காளைகள் விடுதலை செய்யப்பட வேண்டும். புது நிலவு {அமாவாசை} நாளில் எங்களுக்கு எள்ளையும், நீரையும் கொடையளிக்க வேண்டும். மழைக்காலங்களில் விளக்குகள் கொடையளிக்கப்பட வேண்டும். மனிதர்கள் செய்யும் இந்தச் செயல்களால் அவர்கள் பித்ருக்களுக்குத் தாங்கள் பட்ட கடனில் இருந்து விடுபடுகிறார்கள்.(73) அத்தகைய கொடைகள் ஒருபோதும் வீண்போவதில்லை. மறுபுறம், அவை வற்றாதவையாகி உயர்ந்த கனிகளை விளைவிக்கின்றன. அவற்றில் இருந்து நாங்கள் அடையும் நிறைவு வற்றாததாகக் கருதப்பட வேண்டும்.(74) நம்பிக்கையுடன் கூடிய மனிதர்கள் சந்ததியைப் பெற்று இறந்து போன தங்கள் மூதாதையரைத் துன்பகரமான நரகில் இருந்து மீட்கிறார்கள்" என்றனர் {பித்ருக்கள்}.(75)

பித்ருக்களின் இச்சொற்களைக் கேட்டவரும், தவச் செல்வத்தையும், உயர்ந்த சக்தியையும் கொண்ட விருத்தகார்க்கியர், உடலில் மயிர்ச்சிலிர்ப்புடன் ஆச்சரியத்தால் நிறைந்தார். அவர்களிடம் பேசிய அவர்,(76) "தவச் செல்வத்தைக் கொண்டவர்களே, நீல நிறக் காளைகளை விடுதலை செய்வதால் உண்டாகும் பலன்களை எங்களுக்குச் சொல்லுங்கள். மேலும், மழைக்காலங்களில் விளக்கு கொடையும், எள்ளுடன் சேர்ந்து நீரையும் கொடையளிப்பதால் உண்டாகும் பலன்கள் என்னென்ன?" என்று கேட்டார்.(77)

பித்ருக்கள், "நீல {கருப்பு} நிறம் கொண்ட ஒரு காளையை விடுதலை செய்யும்போது அதன் வாலைக் கொண்டு (சிறிதளவு) நீரை எடுத்து இறைத்தால், (காளையை விடுவித்த மனிதனின்) பித்ருக்கள் முழுமையாக அறுபதாயிரம் வருடங்கள் நிறைவடைந்திருக்கின்றனர்.(78) அத்தகைய காளை, (ஆறு, அல்லது தடாகக்) கரையில் இருந்து தன் கொம்புகளால் எழுப்பும் மணலானது, பித்ருக்களைச் சோமலோகத்திற்கு அனுப்புவதில் வெல்கிறது.(79) மழைக்காலங்களில் விளக்குகளைக் கொடையளிப்பதால் ஒருவன் சோமனைப் போலவே பிரகாசமாக ஒளிர்கிறான். விளக்குகளைக் கொடையளிக்கும் மனிதன் ஒருபோதும் இருள் குணத்திற்கு {தமோ குணத்திற்கு) ஆட்படுவதில்லை.(80) புது நிலவு {அமாவாசை} நாளில், தாமிரப் பாத்திரத்தைப் பயன்படுத்தித் தேனில் கலந்த எள்ளும் நீரும் கொடையளிக்கும் மனிதர்கள்,(81) ஓ! தவச் செல்வத்தைக் கொண்டவனே, புதிர்கள் அனைத்துடன் கூடிய சிராத்தத்தை முறையாகச் செய்ததாகக் கருதப்படுகிறார்கள். இந்த மனிதர்கள் நல்ல உடல்நலத்தையும், உற்சாகமிக்க மனங்களையும் பெறுகின்றனர்" {என்றனர் பித்ருக்கள்}.(82)

{பீஷ்மர் யுதிஷ்டிரனிடம் தொடர்ந்தார்}, (பித்ருக்களுக்கு) பிண்டம் கொடுப்பவன் அடையும் பலன், அவனது குலத்தின் வளர்ச்சி என்ற வடிவத்தை எடுக்கும். உண்மையில், இச்செயல்களை நம்பிக்கையுடன் செய்பவன், பித்ருக்களுக்குத் தான் பட்ட கடனிலிருந்தும் விடுபடுகிறான்.(83) இவ்வாறு சிராத்தம் செய்வதற்குரிய முறையான காலம், நோற்கப்பட வேண்டிய சடங்குகளின் விதிகள், சிராத்தத்தில் உணவூட்டபட வேண்டிய முறையான மனிதன், அவற்றோடு தொடர்புடைய பலன்கள் ஆகியன விதிக்கப்பட்டிருக்கின்றன. நான் அனைத்தையும் உரிய வரிசையில் உனக்குச் சொல்லியிருக்கிறேன்" {என்றார் பீஷ்மர்}".(84)

அநுசாஸனபர்வம் பகுதி – 125ல் உள்ள சுலோகங்கள் : 84

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்