Great Mysteries! | Anusasana-Parva-Section-126 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 126)
பதிவின் சுருக்கம் : ஸ்ரீ ஹரியை நிறைவடையச் செய்யும் செயல்கள்; ஏழைகளும் வேள்வி செய்த பலன்களை அடைய செய்ய வேண்டிய செயல்கள்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பித்ருக்கள் பேசுவதை நிறுத்தியதும், தேவர்களின் தலைவனான இந்திரன், பலமிக்க ஹரியிடம், "ஓ! தலைவா, எந்தச் செயல்களின் மூலம் நீ நிறைவடைகிறாய். உண்மையில், மனிதர்கள் உன்னை நிறைவடையச் செய்வதில் எவ்வாறு வெல்கிறார்கள்" என்று கேட்டான்.(1)
விஷ்ணு {இந்திரனிடம்}, "பிராமணர்களை இழிவு செய்வது, நான் பெரிதும் வெறுக்கும் ஒன்றாகும். பிராமணர்களை வழிபட்டால் என்னை வழிபட்டதாகவே நான் கருதுகிறேன். இதில் ஐயமில்லை.(2) மேன்மையான பிராமணர்கள் அனைவருக்கும் விருந்தோம்பலுடன் உணவு அளித்த பிறகு, அவர்கள் மதிப்புடன் எப்போதும் வணங்கப்பட வேண்டும். ஒருவன் (மாலை வேளையில்) தன் {என்} பாதத்தை வணங்க வேண்டும். இவ்வழியில் செயல்படுபவர்கள், (பசுவில் இருந்து முதலில் விழும்) பசுஞ்சாணத்தில் தெரியும் சுழியை {என்னுடைய சக்கராயுதத்தை} வணங்கி அவற்றுக்குக் காணிக்கை அளிப்பவர்கள் ஆகிய மனிதர்களிடம் நான் நிறைவடைகிறேன்[1].(3) குள்ள வடிவில் இருக்கும் ஒரு பிராமணனைக் காண்பவர்கள், அல்லது கரையில் இருந்து சிறிதளவு மண்ணைத் தலையில் சுமந்து நீரில் இருந்து எழும் பன்றியைக் காண்பவர்கள் ஒருபோதும் எந்தத் தீமையையும் சந்திக்கமாட்டார்கள். அவர்கள் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுவார்கள். ஒவ்வொரு நாளும், அஸ்வதம் {அரசமரம்}, கோரோசனை என்றழைக்கப்படும் பண்டம், பசு ஆகியவற்றை வழிபடும் மனிதன்,(5) தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களுடன் கூடிய மொத்த அண்டத்தையும் வழிபடுபவனாகக் கருதப்படுகிறான். இவற்றுக்குள் இருந்து, இவற்றுக்கு அளிக்கப்படும் வழிபாட்டை என் சொந்த வடிவில் நான் ஏற்றுக் கொள்கிறேன்.(6) இவற்றுக்கு அளிக்கப்படும் வழிபாடு எனக்கே அழிக்கப்பட்ட வழிபாடாகும். இஃது உலகம் தொடங்கிய காலம் முதல் இருக்கிறது. வேறு வகை வழிபாட்டை நான் ஏற்பதில்லை என்பதால் அற்ப புத்தி கொண்ட மனிதர்கள் வீணாகவே அவ்வழியில் என்னை வழிபடுகிறார்கள். உண்மையில், வேறு வகையில் என்னை வழிபடுவது என்னை நிறைவடையச் செய்வதில்லை" என்றான் {விஷ்ணு}.(7)
[1] "மாலை வேளையில் ஒருவன் தன் பாதத்தையே வணங்க வேண்டும். இவ்வழக்கம் நிச்சயம் வங்கத்தில் இப்போது நடைபெறுவதில்லை. பசுவில் இருந்து முதலில் விழும் சாணத்தில் நிச்சயம் சுழிகள் காணப்படும்; ஆனால் அவற்றுக்குக் காணிக்கையளிக்கும் நடைமுறை சுத்தமாக நடைபெறுவதில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில் முற்றிலும் வேறு வகையில், "தினந்தோறும் போஜனத்திற்குப் பிறகு பிராம்மணஸ்ரேஷ்டர்களையும், என்னுடைய பாதங்களையும் வந்தனம் செய்து என் சக்ராயுதத்திற்குப் பூஜை செய்பவரான மனிதர் விஷயத்தில் நான் அனுக்கிரகம் வைக்கிறேன்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "அத்மந: என்பது மூலம். தன் காலை என்பது பழையவுரை. ஸந்தியாகாலத்தில், தன் காலையே வணங்குதல் சிஷ்டாசாரமாயிருந்தது என்றும் அதனால் விளங்குகிறது" என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் உள்ளதே சரியான உரை என்பதைப் பின்வரப் போகும் 10-ம் ஸ்லோகம் எடுத்துரைக்கிறது.
இந்திரன் {விஷ்ணுவிடம்}, "பசுஞ்சாணத்தில் உள்ள சுழிகளையும், பாதத்தையும், பன்றியையும், குள்ள பிராமணனையும், நிலத்தில் இருந்து உயர்த்தப்பட்ட மண்ணையும் நீ ஏன் மெச்சுகிறாய்?(8) நீயே அனைத்து உயிரினங்களையும் படைத்தாய், நீயே அவற்றை அழிக்கவும் செய்கிறாய். அழியக்கூடிய அல்லது நிலையற்ற பொருட்கள் அனைத்தின் நித்திய இயற்கையாக நீயே இருக்கிறாய்" என்றான்".(9)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இந்திரனின் இச்சொற்களைக் கேட்ட விஷ்ணு, சற்றே புன்னகைத்து, "என்னுடைய சக்கரத்தின் மூலம் தான் தைத்தியர்கள் கொல்லப்பட்டனர். என் பாதங்கள் இரண்டினால் இவ்வுலகம் மறைக்கப்பட்டது.(10) பன்றியின் வடிவத்தை ஏற்றே நான் ஹிரண்யாக்ஷனைக் கொன்றேன். குள்ளனின் வடிவை ஏற்றே நான் (அசுர) மன்னன் பலியை வென்றேன்.(11) இவற்றை வழிபடும் உயர் ஆன்ம மனிதர்கள் என்னை நிறைவடையச் செய்கின்றனர். உண்மையில், என்னை இவ்வடிவங்களில் வழிபடுபவர்கள் ஒருபோதும் ஏமாற்றம் அடைவதில்லை.(12) ஒருவன் பிரம்மச்சரிய வாழ்வு முறையை நோற்கும் ஒரு பிராமணர் தன் வீட்டுக்கு வருவதைக் கண்டு, பிராமணனுக்கு உரிமையுள்ள தன் உணவின் முதல் பகுதியை அவனுக்குக் கொடுத்து, அதன் பிறகு எஞ்சியிருப்பதை உண்பவர் அமுதத்தை உண்டதாகக் கருதப்படுகிறான்.(13) காலை சந்தி வேளையைத் துதித்து, சூரியனை நோக்கிய முகத்துடன் நின்று கொண்டிருப்பவன், தீர்த்தங்கள் அனைத்திலும் நீராடிய பலனை அறுவடை செய்து அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைகிறான்.(14) தவங்களையே செல்வமாகக் கொண்ட முனிவர்களே, ஒரு பெரும்புதிரை நான் உங்களுக்கு விளக்கியிருக்கிறேன். நான் உங்களுக்கு வேறென்ன சொல்ல வேண்டும்? உங்கள் ஐயங்களை எனக்குச் சொல்வீராக" என்றான் {விஷ்ணு}.(15)
பலதேவன், "மனிதர்களை மகிழ்ச்சியில் நிறைக்கும் மற்றொரு பெரும்புதிரைக் கேட்பாயாக. இதை அறியாத அறிவற்ற மக்களே பிற உயிரினங்களின் கரங்களில் பெருந்துன்பத்தைச் சந்திக்கிறார்கள்.(16) விடிவதற்கு முன்பு எழுந்து, பசு, நெய், தயிர், கடுகு, தினை ஆகியவற்றைத் தீண்டும் மனிதன், தான் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(17) தவங்களையே செல்வமாகக் கொண்ட முனிவர்கள், சிராத்தம் செய்யும்போது, முன்பும் பின்பும் அனைத்து உயிரினங்களையும், தூய்மையற்ற அனைத்தையும் எப்போதும் தவிர்க்கிறார்கள்" என்றான்[2].(18)
[2] "இரண்டாம் வரி புரிந்து கொள்ளக்கூடியதாக இல்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "தவத்தைத் தனமாகவுடையவர்கள் அசுத்தத்தையும், அவற்றின் வழியாக வரும் முன்னும் பின்னுமுள்ள எல்லாப் பூதங்களையும் விலக்கி விடுகின்றனர்" என்றிருக்கிறது.
தேவர்கள், "ஒரு தாமிரப் பாத்திரத்தை எடுத்து, அதை நீரால் நிறைத்து, கிழக்கு நோக்கி உண்ணா நோன்பையோ, ஒரு குறிப்பிட்ட நோன்பையோ நோற்கும் மனிதனிடம்,(19) தேவர்கள் அனைவரும் நிறைவடைந்து, அவனுடைய விருப்பங்கள் அனைத்தையும் வெற்றியால் மகுடம் சூட்ட வைக்கின்றனர். வேறு வழியில் உண்ணா நோன்பையோ, வேறு எந்த நோன்பையோ நோற்கும் அற்ப புத்தி கொண்ட மனிதர்கள் எதையும் ஈட்டுவதில்லை[3].(20) உண்ணா நோன்புகள் நோற்பது குறித்தும், தேவர்களுக்குக் காணிக்கை அளிப்பதும் குறித்தும் தீர்மானங்களைச் சொல்லும்போது தாமிரப்பாத்திரமே பயன்படுத்த உகந்ததாகும். தேவர்களுக்குக் காணிக்கை அளிக்கும் காரியத்தில், பிச்சை (இடும் அல்லது ஏற்கும்) காரியத்தில், அர்க்கியத்திற்குத் தேவையான உட்பொருட்களை அளிப்பதில், பித்ருக்களுக்கு எள்ளுடன் கலந்த நீரைக் காணிக்கையளிக்கும் காரியத்தில்,(21) தாமிரப்பாத்திரங்களே பயன்படுத்தப்பட வேண்டும்[4]. வேறு வகையில் இச்செயல்களைச் செய்வதன் மூலம் சிறிதளவே பலன் கிட்டும். தேவர்கள் எவ்வாறு நிறைவடைகிறார்கள் என்பது தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள புதிர்கள் இவையே" என்றனர் {தேவர்கள்}.(22)
[3] கும்பகோணம் பதிப்பில், "ஜலம் நிரம்பின அத்திமரப் பாத்திரத்தையெடுத்துக் கொண்டு வடக்கு முகமாகவிருந்து ஸங்கல்பத்துடன் எந்த உபவாஸம் ஆரம்பித்தாலும் அவனிடத்தில் தேவதைகள் திருப்தியடைவார்; நினைத்த பலன் கைகூடும். அலப் புத்தியுள்ள மனிதர்கள் தான் வேறு கர்மங்களை வீணாகச் செய்கின்றனர்" என்றிருக்கிறது.[4] கும்பகோணம் பதிப்பில், "உபவாஸத்திற்கும், பலி கொடுப்பதற்கும் தாம்ரபாத்திரம் சிறந்தது. பலியையும், பிக்ஷையையும், அர்க்கியத்தையும், பித்ருக்களுக்கு எள்ளையுந் தண்ணீரையும் தாம்ர பாத்திரத்தினால் கொடுக்க வேண்டும்" என்றிருக்கிறது.
தர்மன், "மன்னனிடம் பணி செய்பவனாகவோ, {காலத்தைத் தெரிவிக்கும்} மணி அடிப்பவனாகவோ, வழிபாடுகள், அல்லது சிராத்தங்களில் உடனுதவி கடமைகளைக் கவனிப்பவனாகவோ {பரிசாரகனாகவோ}, பசு வளர்ப்பவனாகவோ {ஆ மேய்ப்பவனாகவோ}, வணிகம் செய்பவனாகவோ {வர்த்தகனாகவோ}, ஏதோ ஒரு கலையைத் தொழிலாகச் செய்பவனாகவோ, நடிகனாகவோ, நண்பர்களுடன் சச்சரவு செய்பவனாகவோ, வேத கல்வி இல்லாதவனாகவோ, ஒரு சூத்திரப் பெண்ணை மணந்து கொண்டவனாகவோ இருக்கும் பிராமணனுக்குத் தேவர்களைக் கௌரவிக்கும் வகையிலோ, பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையிலோ செய்யப்படும் சடங்குகள் அனைத்திலும் அளிக்கப்படும் காணிக்கைகளை ஒரு போதும் கொடுக்கக்கூடாது.(23,24) சிராத்தம் செய்பவன் அத்தகைய காணிக்கைகளை இத்தகைய பிராமணனுக்கு அளித்தால் அவன் தன் குலத்தைப் பெருகச் செய்யாமல் செழிப்பில் இருந்து வீழ்ச்சியடைகிறான். மேலும் அவன் செய்யும் அத்தகைய செயலால் பித்ருக்களை நிறைவடையச் செய்வதிலும் தவறுகிறான்.(25) எந்த வீட்டில் இருந்து ஒரு விருந்தினன் நிறைவடையாமல் திரும்புகிறானோ, அந்த வீட்டில் இருந்து பித்ருக்கள், தேவர்கள், புனித நெருப்புகள் ஆகியோர் அனைவரும் ஒரு விருந்தினர் இவ்வாறு நடத்தப்பட்டதன் விளைவால் ஏமாற்றம் அடைந்து வெளியேறுகின்றனர்.(26) தன் வசிப்பிடத்திற்கு வந்த விருந்தினரிடம் விருந்தோம்பல் கடமைகளை வெளிப்படுத்தாத மனிதன், பெண்களையும், பசுக்களையும் கொன்றவர்கள், நன்மை செய்தவர்களிடம் நன்றி மறந்தவர்கள், பிராமணக் கொலை செய்தவர்கள், தங்கள் ஆசான்களின் படுக்கைகளைக் களங்கப்படுத்தியவர்கள் ஆகியோருக்கு இணையான பாவம் நிறைந்தவனாகக் கருதப்படுகிறான்" என்றான்.(27)
அக்னி, "குவிந்த கவனத்துடன் கேளுங்கள். பசுவையோ, உயர்ந்த அருளைக் கொண்ட பிராமணனையோ, சுடர்மிக்க நெருப்பையோ மிதிப்பதற்காகக் காலை உயர்த்தும் தீய புத்தி கொண்ட மனிதன் அடையும் கெடுபலன்களைச் சொல்லப் போகிறேன். அத்தகைய மனிதனின் புகழ்க்கேடு உலகம் முழுவதும் பரவி, சொர்க்கத்தின் எல்லைகளையே தொடுகிறது. அவனுடைய பித்ருக்கள் அச்சத்தால் நிறைகிறார்கள். அவன் காரியத்தில் தேவர்களும் பெரிதும் நிறைவற்றவர்களாகிறார்கள். பெரும் சக்தியுடன் கூடிய நெருப்பு, அவனால் ஊற்றப்படும் ஆகுதிகளை ஏற்க மறுக்கும்.(28-30) நூறு பிறவிகள் அவன் நரகில் கிடந்து அழுகுவான். அவன் ஒருபோதும் எக்காலத்திலும் மீட்கப்படுவதில்லை.(31) எனவே, தன் நன்மையை விரும்பி நம்பிக்கையோடு இருக்கும் ஒருவன், ஒரு பசுவையோ, உயர்ந்த சக்தியுடன் கூடிய பிராமணனையோ, சுடர்மிக்க நெருப்பையோ தன் காலால் ஒருபோதும் தீண்டக்கூடாது. இவையே இவை மூன்றுக்கு எதிராகக் கால்களை உயர்த்துபவன் அடையும் கெடுபலன்களென நான் அறிவிக்கிறேன்" என்றான்.(32,33)
விஷ்வாமித்திரர், "அறம் தொடர்பாகப் பொதுவாக மனிதர்களுக்கு மத்தியில் அறியப்படாத உயர்ந்த புதிரைக் கேட்பீராக. இனிப்பூட்டப்பட்ட பாலில் கொதிக்க வைக்கப்பட்ட அரிசியை {பாயஸான்னத்தைப்} பித்ருக்களுக்குக் கொடுப்பதற்கு,(34) பாத்ரபத {புரட்டாசி} மாத {கிருஷ்ண பக்ஷ / தேய்பிறை} மக நட்சத்திரத்தின், நடுப்பகலில் தெற்குத் திசை நோக்கி ஒரு யானையினால் உடலால் உண்டான நிழலில் {கஜசாயையில்} அமர்ந்து காணிக்கையளிப்பவன்,(35) பெரும் பலன்கள் அடைகிறான். அந்தப் பலன்கள் என்னென்ன என்பதைக் கேட்பீராக[5]. இத்தகைய சூழ்நிலைகளில் பித்ருக்களுக்கு இத்தகைய காணிக்கையளிக்கும் மனிதன், அடுத்தடுத்து பதிமூன்று வருடங்களில் ஒவ்வொரு வருடமும் பெரும் சிராத்தத்தைச் செய்தவனாகக் கருதப்படுவான்" என்றார்.(36)
[5] "யானையின் உடலால உண்டான நிழல் என்பது, சிராத்தத்திற்கான மிகச் சிறந்த நேரத்தைக் குறிப்பதாகும். அத்தகைய சிராத்தத்தைச் செய்யும் மனிதன் பதிமூன்று வருடங்கள் சிராத்தம் செய்த பலன்களை அடைகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில் கஜ சாயை என்பதன் அடிக்குறிப்பில், "மஹளய பக்ஷத்தில் மகநக்ஷத்ரத்துடன் கூடிய த்ரயோதசியும், அதே பக்ஷத்தில் ஹஸ்த நக்ஷத்திரம் சேர்ந்த அமாவாஸையும், சந்திரசூர்யக்ரஹண புண்ய காலமும், அமாவாஸை அபரான்ன காலத்தில் நிழல் கிழக்கே திரும்பியிருக்கும் காலமும், அமாவாஸையில் தன்னிழல் இரண்டு மடங்கு கிழக்கே திரும்பியிருக்கும் காலமும் கஜசாயை என்பர்" என்றிருக்கிறது.
பசுக்கள், "எந்த மனிதன், "ஓ! வாகுலையே {அனைத்தும் நிறைந்தவளே}, ஓ! சமங்கையே {பருத்த அங்கங்களைக் கொண்டவளே}, ஓ! எங்கும் அச்சமற்றவளே, ஓ! எப்போதும் பொறுமையாகவும், மங்கலம் நிரம்பியும் இருப்பவளே {நலமாயிருப்பவளே}, ஓ! நட்பே, ஓ! எண் போல் பெருகுபவளே, பழங்காலத்தில் பிரம்ம லோகத்தில் வஜ்ரதாரியான இந்திரனின் வேள்வியில் கன்றுடன் இருந்தவள் நீயே. ஆகாயத்திலும், அக்னியின் பாதையிலும் உன் நிலையைக் கொண்டவள் நீயே. தேவர்கள் தங்களுக்கு மத்தியில் உள்ள நாரதருடன் சேர்ந்து சர்வம்ஸஹை {ஸர்வஸஹை / அனைத்தையும் பொறுப்பவள்} என்று உன்னை அழைத்துத் துதிக்கின்றனர்" என்ற இந்த மந்திரங்களைச் சொல்லி ஒரு பசுவைத் துதிப்பானோ, அவன் தான் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். அத்தகைய மனிதன், புரந்தரனின் உலகை அடைகிறான். அதையும் தவிர அவன், பசுக்கள் மற்றும் சந்திரமாஸுடன் {சந்திரனுடன்} தொடர்புடைய பலன்களையும் அடைகிறான்.(37-39) அத்தகைய மனிதன், தான் செய்த ஒவ்வொரு பாவத்தில் இருந்தும், தான் கொண்ட ஒவ்வொரு அச்சத்தில் இருந்தும், ஒவ்வொரு துன்பத்தில் இருந்தும் விடுபடுகிறான். இறுதியாக அவன் ஆயிரங்கண் இந்திரனின் மகிழ்ச்சி மிக்க உலகத்தில் வசிப்பிடத்தை அடைகிறான்" என்றன".(40)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இதன்பிறகு உயர்ந்த அருளைக் கொண்டவர்களும், கொண்டாடப்பட்டவர்களுமான ஏழு முனிவர்கள், வசிஷ்டரைத் தங்கள் தலைமையில் கொண்டு எழுந்து தாமரையில் பிறந்த பிரம்மனை வலம்வந்து, மதிப்புடன் கரங்களைக் கூப்பி அவனைச் சூழ்ந்து நின்றனர்.(41) பிரம்மத்தை அறிந்த மனிதர்களில் முதன்மையான வசிஷ்டர் அவர்களுடைய பேச்சாளராகி, ஒவ்வொரு உயிரினத்திற்கும் நன்மையைத் தருவதும், குறிப்பாகப் பிராமணர்களுக்கும், க்ஷத்திரியர்களுக்கும் நன்மையைத் தருவதுமான இந்தக் கேள்வியைக் கேட்டனர்.(42)
{வசிஷ்டரின் தலைமையிலான சப்தரிஷிகள்}, "அறவொழுக்கம் கொண்டவர்களாக இருந்தாலும், இவ்வுலக நன்மைகள் இல்லாதவர்களான மனிதர்கள் எந்தச் செயல்களைச் செய்வதன் மூலம் வேள்விகள் தொடர்பான பலன்களை அடைவதில் வெல்கிறார்கள்?" என்று கேட்டனர்.(43) அவர்களது இந்தக் கேள்வியைக் கேட்ட பெரும்பாட்டன் பிரம்மன் பின்வருமாறு சொல்லத் தொடங்கினான்.(44)
பிரம்மன், "உயர்வாக அருளப்பட்டவர்களே, இது சிறப்பான கேள்வியாகும். இது மங்கலமானதும், உயர்ந்ததும், புதிர் நிறைந்ததுமாகும். நீங்கள் முன்வைக்கும் கேள்வியானது நுட்பமானதும், மனித குலத்திற்குப் பெரும் நன்மை நிறைந்ததும் ஆகும்.(45) தவங்களையே செல்வமாகக் கொண்ட முனிவர்களே, நான் அனைத்தையும் விரிவாக உங்களுக்குச் சொல்கிறேன். (வறுமையின் மூலம் வேள்விகளைச் செய்ய இயலாதவர்களாக இருப்பினும்) வேள்விகளுக்கான பலன்களை மனிதர்கள் எவ்வாறு அடைகிறார்கள் என்பதைச் சொல்கிறேன் கவனமாகக் கேட்பீராக.(46) பௌச {தை} மாதத்தின் வளர்பிறை ரோகிணி நட்சத்திரத்தில் நீராடி தன்னைத் தூய்மை செய்து கொண்டு, வானத்தையே கூரையாகக் கொண்டு {மேலே மூடாத இடத்தில்}, ஒற்றையாடை உடுத்தி,(47) நம்பிக்கையுடனும், குவிந்த கவனத்துடனும், நிலவின் கதிர்களைப் பருகும் {நிலவின் ஒளியில் படுத்து உறங்கும்} ஒருவன், பெரும் வேள்விகள் செய்த பலன்களை அடைகிறான்.(48) மறுபிறப்பாளர்களில் முதன்மையாவர்களே, அனைத்துக் காரியங்களின் நுட்பமான உண்மைகளில் உட்பார்வை கொண்டவர்களே, உங்கள் கேள்விக்கான பதிலாக நான் பெரும்புதிரை {பெரும் ரகசியத்தை} அறிவித்திருக்கிறேன்" என்றான் {பிரம்மன்}.(49)
அநுசாஸனபர்வம் பகுதி – 126ல் உள்ள சுலோகங்கள் : 49
ஆங்கிலத்தில் | In English |