The mystery revealed by Vayu! | Anusasana-Parva-Section-128 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 128)
பதிவின் சுருக்கம் : வாயுதேவன் வெளியிட்ட பரமரகசியம்; விதிமீறல்களைச் சமன் செய்யும் பரிகாரங்கள்...
வாயு, "நோற்றால் மனித குலத்தை மகிழ்ச்சியில் நிறைக்கும் சில கடமைகளை நான் சொல்லப் போகிறேன். சில ரகசிய காரணங்களைச் சார்ந்திருக்கும் குறிப்பிட்ட விதிமீறல்களைக் குவிந்த கவனத்துடன் கேட்பீராக.(1)
மழைக்காலத்தின் நான்கு மாதங்களில் (பித்ருக்களுக்கு) எள்ளையும் நீரையும், கடமைகளை அறிந்த பிராமணர்களுக்குத் தன் சக்திக்குத்தகுந்தபடி உணவையும் காணிக்கையளித்து,(2) புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றி, இனிப்பூட்டப்பட்ட பாலில் கொதிக்க வைக்கப்பட்ட அரிசியைக் காணிக்கையளித்து, பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் எள் மற்றும் நீருடன் சேர்த்து விளக்குகளையும் கொடையளிப்பவனும்,(3) உண்மையில் இவை அனைத்தையும் நம்பிக்கையுடனும், குவிந்த கவனத்துடனும் செய்பவனுமான மனிதன், தேவர்களுக்கு விலங்குகளைக் காணிக்கையளிக்கும் நூறு வேள்விகள் செய்வதால் உண்டாகும் பலன்கள் அனைத்தையும் அடைகிறான்.(4)
அனைவரும் அறியாத மற்றொரு உயர்ந்த புதிரைக் கேட்பீராக. தான் ஆகுதிகளை ஊற்றும் நெருப்பை ஒரு சூத்திரன் மூட்டும்போது அனைத்தும் சரி என்று நினைப்பவனும், சிராத்தங்களிலும், வேறு சடங்குகளிலும் துணை செய்யத் தகாத பெண்கள் அவற்றில் உதவி செய்ய அனுமதிக்கப்படும்போது எந்தக் குற்றத்தையும் காணாதவனுமான மனிதன் நிச்சயம் பாவத்தால் களங்கமடைகிறான்.(5) வேள்வி நெருப்புகள் மூன்றும் அத்தகைய மனிதனிடம் சினம் கொள்கின்றன. அவன் அடுத்தப் பிறவியில் ஒரு சூத்திரனாகப் பிறப்பான். அவனுடைய பித்ருக்களும் தேவர்களும் அவனிடம் ஒருபோதும் நிறைவடைய மாட்டார்கள்.(6)
அத்தகைய பாவங்களில் இருந்து தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ள ஒருவன் செய்ய வேண்டிய பாவக்கழிப்புகளை {பரிகாரங்களை} இப்போது சொல்லப் போகிறேன். நான் சொல்வதைக் கவனமாகக் கேட்பீராக. அந்தப் பரிகாரச் செயல்களைச் செய்வதன் மூலம் ஒருவன் பிணியில இருந்து விடுபட்டு, மகிழ்ச்சியை அடைகிறான்.(7) அவன் தொடர்ந்து மூன்று நாட்கள் உண்ணா நோன்பிருந்து குவிந்த கவனத்துடன் பசுவின் சிறுநீர், சாணம், பால், நெய் ஆகியவற்றைப் புனித நெருப்பில் ஆகுதிகளாக ஊற்ற வேண்டும்.(8)
ஒரு வருடம் முழுமையாகத் தீர்ந்ததும் அத்தகைய மனிதனின் காணிக்கைகளைத் தேவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். அவனுடைய பித்ருக்களும் சிராத்தம் செய்ய வேண்டிய நேரம் வரும்போது, அவனிடம் நிறைவை அடைகின்றனர்.(9)
சொர்க்கத்தை அடைய விரும்பும் மனிதர்களைப் பொறுத்தவரையில் எது அறம், எது மறம் {அறமற்றது} என்பனவற்றை அறியப்படாத விபரங்களுடன் நான் உரைத்திருகிறேன். உண்மையில் இந்த விதிமீறல்களைத் தவிர்ப்பவர்களும், அவற்றை இழைத்தாலும் குறிப்பிட்ட பரிகாரச் சடங்குகளைச் செய்பவர்களுமான மனிதர்கள், இவ்வுலகத்தைவிட்டு அகலும்போது சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்" என்றான் {வாயு}.(10)
அநுசாஸனபர்வம் பகுதி – 128ல் உள்ள சுலோகங்கள் :10
ஆங்கிலத்தில் | In English |