The mysteries revealed by Lomasa! | Anusasana-Parva-Section-129 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 129)
பதிவின் சுருக்கம் : லோமசர் வெளியிட்ட சொன்ன பரமரகசியங்கள்...
லோமசர், "தனக்காக மனைவிகளைத் திருமணம் செய்து கொள்ளாமல், அடுத்தவர் மனைவிகளை வசப்படுத்தும் மனிதர்களின் பித்ருக்கள் சிராத்தத்திற்கான நேரம் வரும் போது ஏமாற்றம் அடைகின்றனர்.(1) அடுத்தவர் மனைவிகளை வசப்படுத்துபவன், மலட்டுப் பெண்ணிடம் பாலியல் கலவியில் ஈடுபடுபவன், ஒரு பிராமணனுக்குச் சொந்தமானவற்றை அபகரிப்பவன் ஆகியோர் இணையான பாவம் நிறைந்தவர்களே.(2)
அத்தகையோரின் பித்ருக்கள் அவர்களுடன் தொடர்பு கொள்ள விரும்பாமல் அவர்களிடம் இருந்து தங்களை அறுத்துக் கொள்கின்றனர். அவர்கள் அளிக்கும் காணிக்கைகள் தேவர்களையும், பித்ருக்களையும் நிறைவடையச் செய்வதில் தவறுகின்றன.(3) எனவே, பிறர் மணந்து கொண்ட பெண்களுடனும், மலட்டுப் பெண்களுடனும் ஒருவன் எப்போதும் பாலியல் கலவியைத் தவிர்க்க வேண்டும். தன் நன்மையை விரும்பும் மனிதன் ஒரு பிராமணனுக்குச் சொந்தமானவற்றை அபகரிக்க மாட்டான்.(4)
அறத்தைப் பொறுத்தவரையில் அனைவராலும் அறியப்படாத மற்றொரு புதிரை இப்போது சொல்கிறேன் கேட்பீராக. நம்பிக்கையுடன் கூடிய ஒருவன் எப்போதும் தனது ஆசான் மற்றும் வேறு பெரியோர்களின் ஆணைகளைச் செய்ய வேண்டும்.(5) ஒவ்வொரு மாதமும், பனிரெண்டாம் சந்திர நாளிலும் {துவாதசியிலும்}, முழு நிலவு {அமாவாசை} நாளிலும் ஒருவன் நெய்யையும், அக்ஷதையால் அமைந்த காணிக்கைகளையும் பிராமணர்களுக்குக் கொடையாக அளிக்க வேண்டும். அத்தகைய மனிதன் அடையும் பலனின் அளவை உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக.(6)
அத்தகைய செயலால் ஒருவன் சோமத்தையும், பெருங்கடலையும் பெருகச் செய்வதாகச் சொல்லப்படுகிறது. தேவர்களின் தலைவனான வாசவன் {இந்திரன்}, அவனுக்குக் குதிரை வேள்வி செய்த பலன்களில் நான்கில் ஒரு பகுதியை அளிக்கிறான்.(7) அத்தகைய கொடைகளைக் கொடுப்பதன் மூலம் ஒரு மனிதன் பெரும் சக்தியையும், ஆற்றலையும் அடைகிறான். தெய்வீகமான சோமன் அவனிடம் நன்கு நிறைவடைந்து, அவனுடைய விருப்பங்கள் கனியும் நிலையை அருள்கிறான்.(8)
பெரும் பலனை உண்டாக்கவல்லதும், கடமை நிலைத்திருக்கும் அடித்தளமுமான மற்றுமொரு கடமை குறித்து இப்போது சொல்கிறேன் கேட்பாயாக. கலியுகத்தில் அந்தக் கடமை செய்யப்பட்டால் மனிதர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொண்டு வரும்.(9) விடிவதற்கு முன்பு எழுந்து, நீராடல் மூலம் தன்னைத் தூய்மை செய்து கொண்டு, வெள்ளுடைகளை உடுத்திக் கொண்டு, குவிந்த கவனத்துடன் பாத்திரங்கள் நிறைந்த எள்ளைப் பிராமணர்களுக்குக் கொடையளிப்பவனும்,(10) பித்ருக்களுக்கு எள்ளும் தேனும், நீரும் கொடுப்பவனும், கிருச்ரம் என்றழைக்கப்படும் உணவையும், விளக்குகளையும் கொடுப்பவனுமான மனிதன், அடுத்தடுத்து நல்ல பலன்களையே அடைகிறான். அந்தப் பலன்கள் யாவை எனச் சொல்கிறேன் கேட்பீராக(11)
தெய்வீக தண்டனை அளிப்பவனான பாகன் {இந்திரன், தாமிரப் பாத்திரங்களையும், எள் நிறைந்த வெண்கலப் பாத்திரங்களையும் கொடையளிப்பதன் பலன்களைக் குறிப்பிட்டிருக்கிறான். பசுக்கொடை, நித்திய பலனை விளைவிக்கவல்ல நிலக்கொடை ஆகியவற்றை அளிப்பவன்,(12) தக்ஷிணையின் வடிவில் பிராமணர்களுக்கு அபரிமிதமான கொடைகளை அளிக்கும் அக்னிஷ்டோம வேள்வியைச் செய்தவன் ஆகியோர் அனைவரும் எள் நிறைந்த பாத்திரங்களைக் கொடையளிப்பதன் மூலம் அடைவதற்கு இணையான பலன்களை அடைந்தவனாகத் தேவர்கள் அனைவராலும் கருதப்படுகிறான்.(13)
நீருடன் சேர்த்து எள் காணிக்கையளிக்கப்படும் கொடைகள் நித்தியமான நிறைவை அளிப்பவையாகப் பித்ருக்களால் கருதப்படுகின்றன. விளக்குக் கொடை மற்றும் கிருசரக் கொடைகளில் பாட்டன்கள் {மூதாதையர்} அனைவரும் உயர்ந்த நிறைவை அடைகிறார்கள்.(14) இவ்வாறு பித்ருக்கள் மற்றும் தேவர்களால் தங்கள் தங்களுக்குரிய உலகங்களில் உயர்வாக மெச்சப்பட்டதும், முனிவர்களால் விதிக்கப்பட்டதுமான பழைமையான விதியைச் சொன்னேன்" என்றார் {லோமசர்}".(15)
அநுசாஸனபர்வம் பகுதி – 129ல் உள்ள சுலோகங்கள் : 15
ஆங்கிலத்தில் | In English |