Ignorable Five! | Anusasana-Parva-Section-130 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 130)
பதிவின் சுருக்கம் : அருந்ததி, சூரியன் மற்றும் யமன் ஆகியோர் சொன்ன பரமரகசியங்கள்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அப்போது, அங்கே கூடியிருந்த பல்வேறு முனிவர்களும், பித்ருக்களும், தேவர்களும், பெரும் தவத்தகுதியைக் கொண்டிருந்த (வசிஷ்டரின் மனைவியான) அருந்ததியிடம் குவிந்த கவனத்தோடு கேள்வி கேட்டனர்.(1) தவச் செல்வத்தை அபரிமிதமாகக் கொண்டவளும், நோன்புகள் மற்றும் ஒழுக்கத்தில் தன் கணவரும், உயர் ஆன்ம கொண்டவருமான வசிஷ்டருக்கு இணையானவளாதலால் சக்தியிலும் அவள் அவருக்கு இணையானவளாக இருந்தாள்.(2) அவர்கள் அவளிடம், "அறம் மற்றும் கடமை குறித்த புதிர்களை நாங்கள் உன்னிடம் கேட்க விரும்புகிறோம். ஓ! இனிமை நிறைந்த பெண்மணியே, உயர்ந்த புதிராக {ரகசியமாக} நீ எதைக் கருதுகிறாய் என்பதை எங்களுக்குச் சொல்வாயாக" என்று கேட்டனர்.(3)
அருந்ததி, "ஏழையான என்னை இவ்வாறு நீங்கள் கருத்துடன் நினைவுகூர்வதாலேயே என்னால் தவங்களில் பெரும் முன்னேற்றத்தை அடைய முடிந்தது. அருள் நிறைந்த உங்கள் அனுமதியுடன் நான் இப்போது நித்தியமான கடமைகள் மற்றும் உயர்ந்த புதிர்களைக் குறித்துச் சொல்லப் போகிறேன். அவை சார்ந்திருக்கும் காரணங்களுடன் சேர்த்து நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன். விரிவாகச் சொல்கிறேன் கேட்பீராக. நம்பிக்கையும், தூய இதயத்தையும் கொண்டவருக்கு மட்டுமே இந்த ஞானம் சொல்லப்பட வேண்டும்.(4,5) நம்பிக்கையற்றவன், செருக்கு நிறைந்தவன், பிராமணக்கொலை செய்த {பிரம்மஹத்தி தோஷம் கொண்ட} குற்றவாளி, ஆசானின் படுக்கைக்குக் களங்கம் விளைவித்தவன் ஆகியோருடன் ஒருபோதும் இது குறித்துப் பேசக் கூடாது. அவர்களுக்கு ஒருபோதும் அறமும், கடமையும் சொல்லப்படக்கூடாது.(6) பனிரெண்டு வருட காலம் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒரு கபிலைப் பசுவைக் கொடையளிக்கும் மனிதன், அல்லது, ஒவ்வொரு மாதமும் ஒரு வேள்வியில் தேவர்களைத் துதிப்பவன், அல்லது பெரும் புஷ்கரையில், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பசுக்களைக் கொடையளிப்பவன் ஆகியோர் அடையும் பலன்கள் விருந்தினரை நிறைவடையச் செய்வதன் மூலம் கிட்டும் பலன்களுக்கு ஒருபோதும் ஈடாகாது.(7,8)
மனித குலத்தை மகிழ்ச்சியால் நிறைக்கும் மற்றொரு கடமையைச் சொல்லப் போகிறேன் கேட்பீராக. அது நம்பிக்கையுடன் கூடிய மனிதனால் ரகசிய சடங்காகச் செய்யப்பட வேண்டும். அதன் பலன்கள் நிச்சயம் உயர்ந்தவையாகும். அவை என்னென்ன என்பதைக் கேட்பீராக. விடிவதற்கு முன் எழுந்து, குறிப்பிட்ட அளவு நீரையும், சில குசப் புற்களையும் {தர்ப்பைகளையும்} எடுத்துக் கொண்டு மாட்டுக் கொட்டகைக்குச் சென்று, கொண்டு சென்ற நீரைக் குசப்புற்களைக் கொண்டு தெளிப்பதன் மூலம் மாடுகளின் கொம்புகளைக் கழுவியபிறகு தன் தலையில் நீரை வடியச் செய்பவன், அத்தகைய நீராடலின் விளைவால் சித்தர்களும், சாரணர்களும் அடிக்கடி செல்பவையும், மதிப்புமிக்கவையும், மூவுலகங்களிலும் உள்ளவையுமான அனைத்து நீர்நிலைகளிலும் நீராடியவனாகக் கருதப்படுகிறான்" என்று சொன்னாள்.(10-12) அருந்ததி இந்தச் சொற்களைச் சொன்னதும் தேவர்கள் மற்றும் பித்ருக்கள் அனைவரும் "நன்று, நன்று" என்று சொல்லி அவர்களை மெச்சினார்கள். உண்மையில், அங்கே இருந்த உயிரினங்கள் அனைத்தும் உயர்வான நிறைவை அடைந்து அருந்ததியை வழிபட்டன.(13)
பிரம்மன், "ஓ! உயர்வாக அருளப்பட்டவளே, ரகசிய சடங்குடன் சேர்த்து நீ சொன்ன கடமை சிறப்பானதாகும். புகழ் உனதாகட்டும். உன் தவங்கள் தொடர்ந்து பெருகும் வரத்தை நான் உனக்கு அளிக்கிறேன்" என்றான்.(14)
யமன், "நான் உங்களிடம் இருந்து இனிமையான, சிறப்பான உரையைக் கேட்டேன். எனக்கு ஏற்புடைய வகையில் சித்திரகுப்தன் சொன்னதை இப்போது கேட்பீராக.(15) அச்சொற்கள் ரகசிய சடங்குடன் கூடிய கடமை தொடர்பானதாகவும், பெரும் முனிவர்களாலும், நம்பிக்கையுடன் கூடியவர்களாலும், தன் நன்மையை விரும்புபவர்களாலும் கேட்கத்தகுந்ததாகவும் இருக்கின்றன.(16) உயிரினங்களால் இழைக்கப்படும் அறமோ, பாவமோ ஏதும் அழிவதில்லை. முழு நிலவு {பௌர்ணமி} மற்றும் புது நிலவு {அமாவாசை} நாட்களில் அச்செயல்கள் அவை சார்ந்திருக்கும் சூரியனிடம் அறிவிக்கப்படுகின்றன.(17) ஒரு மனிதன் இறந்தோரின் உலகத்திற்குள் செல்லும்போது, சூரிய தேவன் அவனுடைய செயல்கள் அனைத்துக்குமான சாட்சியாக இருக்கிறான். அறவோனாகிருப்பவன் அங்கே தன் அறத்திற்கான கனிகளை அடைகிறான்.(18) சித்திரகுப்தனால் அங்கீகரிக்கப்பட்ட சில மங்கலக் கடமைகளை இப்போது உங்களுக்குச் சொல்லப் போகிறேன். குடிப்பதற்கான நீர், இருளை அகற்றும் விளக்குகள் ஆகியவை எப்போதும் கொடையளிக்கப்பட வேண்டும்.(19) காலணிகள், கொடைகள், கபிலைப்பசுக்கள் ஆகியவையும் உரிய சடங்குகளுடன் கொடையளிக்கப்பட வேண்டும். புஷ்கரையில் குறிப்பாக ஒருவன் வேதமறிந்த ஒரு பிராமணனுக்கு ஒரு கபிலைப் பசுவைக் கொடையாக அளிக்க வேண்டும்.(20)
அவன் எப்போதும் தன் அக்னிஹோத்ரத்தைப் பெருங்கவனத்துடன் பராமரிக்க வேண்டும். இங்கே சித்திரகுப்தனால் மற்றொரு கடமையும் அறிவிக்கப்படுகிறது.(21) உயிரினங்களில் சிறந்தவை, அந்தக் கடமையின் பலன்களைத் தனித்தனியாகக் கேட்பது தகுந்தது. காலப்போக்கில் ஒவ்வொரு உயிரினமும் அழிவடையவே விதிக்கப்பட்டிருக்கிறது.(22) அற்ப புத்தி கொண்டோர், பசி மற்றும் தாகத்தால் பீடிக்கப்பட்டு இறந்தோரின் உலகில் பெரும் துன்பத்தைச் சந்திக்கின்றனர். அத்தகைய துன்பத்தில் இருந்து அவர்கள் ஒருபோதும் தப்ப முடியாது.(23) அவர்கள் காரிருளுக்குள் நுழைய வேண்டும். அத்தகைய துன்பத்தைக் கடப்பதில் வெல்ல ஒருவன் செய்ய வேண்டிய கடமைகளை இப்போது சொல்லப் போகிறேன்.(24) அந்தக் கடமைகளைச் செய்வதற்கு ஆகும் செலவு குறைவே ஆனால் அவை பெரும் பலன் நிறைந்தவையா இருக்கின்றன. உண்மையில் அத்தகைய செயல்பாடு மறுமையில் பெரும் மகிழ்ச்சியை அளிக்கும். குடிப்பதற்கான நீரைக் கொடையாக அளிப்பதில் உண்டாகும் பலன்கள் சிறந்தவையாகும். குறிப்பாக மறுமையில் உயர்ந்த பலன்களை அளிக்கும்.(25)
குடிப்பதற்கான நீரைக் கொடையளிப்பவர்களுக்காக மறுமையில் சிறந்த நீர் நிறைந்த ஒரு பேராறு விதிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் அந்த ஆற்றில் உள்ள நீர் வற்றாததாகவும், குளுமையானதாகவும், அமுதம் போன்ற இனிமை கொண்டதாகவும் இருக்கிறது.(26) இவ்வுலகில் நீர்க்கொடை அளிப்பவன் இவ்வுலகில் இருந்து சென்ற பிறகு, மறுமையில் அந்த ஆற்றில் இருந்தே நீரைக் குடிக்கிறான். விளக்குகளை {தீபங்களைக்} கொடையளிப்பதால் கிட்டும் அபரிமிதமான பலன்களை இப்போது கேட்பீராக.(27) இவ்வுலகில் விளக்குகளைக் கொடையளிக்கும் மனிதன் ஒருபோதும் (நரகத்தின்) காரிருளைக் காண வேண்டியதில்லை. அவன் வேறு உலகத்திற்குச் செல்லும்போது, சோமன், சூரியன், நெருப்பு தேவன் ஆகியோர் தங்கள் ஒளியை அவனுக்கு அளிக்கின்றனர்.(28) அத்தகைய மனிதனின் அனைத்துப் பக்கங்களிலும் சுடர்மிக்க ஒளி இருக்கத் தேவர்கள் விதிக்கின்றனர். உண்மையில், விளக்குகளை {தீபங்களைக்} கொடையளிப்பவன் இறந்தோரின் உலகத்திற்குச் செல்லும்போது அவன் இரண்டாவது சூரியனைப் போலத் தூயப் பிரகாசத்துடன் சுடர்விடுகிறான்.(29) எனவே ஒருவன் இம்மையில் குறிப்பாக விளக்குகளையும், குறிப்பாக நீர்க்கொடையையும் அளிக்க வேண்டும். வேதங்களை அறிந்த ஒரு பிராமணனுக்குக் கபிலைப் பசுவைக் கொடையளிப்பதன் மூலம், குறிப்பாகப் புஷ்கரையில் அக்கொடை அளிக்கப்படும்போது ஒருவன் அடையும் பலன்களைச் சொல்லப்போகிறேன் கேட்பாயாக.(30)
அத்தகைய மனிதன் நித்திய பலனை உண்டாக்கவல்ல கொடையான காளையுடன் சேர்த்து நூறு பசுக்களைக் கொடையளித்தவனாகக் கருதப்படுகிறான்.(31) ஒரேயொரு கபிலைப் பசுவைக் கொடையளிப்பது நூறு பசுக்களைக் கொடையளித்த பலனைக் கொடுக்கவல்லதாகக் கருதப்படுவதால் கொடையாளி எந்தப் பாவத்தைச் செய்த குற்றவாளியாக இருந்தாலும், அதிலும் பாவங்களில் பெரிய பிராமணக் கொலை செய்த குற்றவாளியாக இருந்தாலும் {பிரம்மஹத்தி தோஷம் கொண்டவனாக இருந்தாலும்} அவன் கொடையளிக்கும் ஒரேயொரு கபிலைப்பசு அவற்றைத் தூய்மைப்படுத்தவல்லதாகும்.(32) எனவே, ஒருவன் கார்த்திகை மாத முழு நிலவு {பௌர்ணமி} நாளில் (புஷ்கரை என்ற பெயரில் அறியப்பட்ட இரு தீர்த்தங்களில்) பெரியதாகக் கருதப்படும் புஷ்கரையில் ஒரு கபிலைப் பசுவைக் கொடையளிக்க வேண்டும். அத்தகைய கொடையை அளிப்பதில் வெல்லும் மனிதர்கள் எவ்வகைத் துன்பத்தையும், கவலையையும், வலிதரும் முட்களையும் சந்திக்க வேண்டியதில்லை.(33) கொடைக்குத் தகுந்த ஒரு மேன்மையான பிராமணனுக்கு ஒரு ஜோடிக் காலணிகளைக் கொடையளிக்கும் மனிதன் அதே போன்ற பலன்களை அடைகிறான். ஒரு குடையைக் கொடையளிப்பதன் மூலம் அம்மனிதன் மறுமையில் வசதியான நிழலை அடைகிறான் (அவன் சூரியனுக்கு வெளிப்பட்டிருக்க மாட்டான்).(34) தகுந்தவர்களுக்கு அளிக்கப்படும் கொடை ஒருபோதும் வீணாவதில்லை. அது நிச்சயம் கொடையாளிக்கு ஏற்புடைய விளைவுகளை உண்டாக்கும்" என்று {சித்திரகுப்தன் சொன்னதாக யமன்} சொன்னான். சித்திரகுப்தனின் இந்தக் கருத்துகளைக் கேட்ட சூரியனுக்கு மயிர்ச்சிலிர்ப்பு உண்டானது.(35)
பெருங்காந்தியுடன் கூடிய அவன் {சூரியன்}, "உயர் ஆன்ம சித்திரகுப்தனால் எடுத்துரைக்கப்பட்ட கடமை தொடர்பான புதிர்களைக் கேட்டீர்கள்.(36) நம்பிக்கையுடன் கூடிய மனிதர்கள் உயர் ஆன்ம பிராமணர்களுக்கு இக்கொடைகளை அளிப்பதன் மூலம் அனைத்து வகை அச்சங்களில் இருந்தும் விடுபடுகின்றனர்.(37) தீச்செயல்களால் களங்கமடைந்த இந்த ஐவகை மனிதர்களால் ஒருபோதும் தப்பிக்க முடியாது. உண்மையில் பாவம் நிறைந்த நடத்தை கொண்டவர்களும், மனிதர்களில் இழிந்தவர்களாகக் கருதப்படுபவர்களுமான அவர்களிடம் ஒருபோதும் பேசக்கூடாது. உண்மையில் அவர்கள் எப்போதும் தவிர்க்கப்பட வேண்டும்.(38) பிராமணனைக் கொன்றவன் {பிரம்மஹத்தி செய்தவன்}, பசுவைக் கொன்றவன் {கோஹத்தி செய்தவன்}, பிறர் மனைவிகளுடன் சேரும் பாலியல் கலவிக்கு அடிமையானவன், (வேதங்களில்) நம்பிக்கையில்லாதவன், மனைவியைக் கொண்டு பிழைப்பவன் ஆகியோரே அந்த ஐவராவர்.(39) பாவம் நிறைந்த நடத்தை கொண்ட இந்த மனிதர்கள், இறந்தோரின் உலகத்திற்குச் செல்லும்போது, சீழ் மற்றும் குருதியில் வாழும் புழுக்களைப் போல நரகத்தில் அழுகுகின்றனர்.(40) பித்ருக்கள், தேவர்கள், ஸ்நாதகப் பிராமணர்கள் மற்றும் தவப்பயிற்சிகளுக்குத் தங்களை அர்ப்பணித்த வேறு மறுபிறப்பாளர்கள் ஆகியோரால் இந்த ஐவரும் புறக்கணிக்கப்படுகின்றனர்" என்றான் {சூரியன்}".(41)
அநுசாஸனபர்வம் பகுதி – 130ல் உள்ள சுலோகங்கள் : 41
ஆங்கிலத்தில் | In English |