Pramathas! | Anusasana-Parva-Section-131 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 131)
பதிவின் சுருக்கம் : பிரமதர்கள் யாரைப் பீடிப்பார்கள் என்று தேவர்களிடம் சொன்னது...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அப்போது உயர்வாக அருளப்பட்டவர்களான தேவர்கள், பித்ருக்கள் மற்றும் முனிவர்கள் அனைவரும் பிரமதர்களிடம்[1],(1) "நீங்கள் அனைவரும் உயர்வாக அருளப்பட்டவர்கள். நீங்கள் இரவில் புலப்படா வகையில் திரிபவர்கள். இழிந்தவர்களும், தூய்மையற்றவர்களும், களங்கமுள்ளவர்களுமான மனிதர்களை நீங்கள் ஏன் பீடிக்கிறீர்கள்?(2) உங்கள் அதிகாரத்திற்குத் தடையாக எச்செயல்கள் கருதப்படுகின்றன? உண்மையில் எந்தச் செயல்களைச் செய்வதன் விளைவால் நீங்கள் மனிதர்களைப் பீடிக்க முடியாதவர்கள் ஆகிறீர்கள்? ராட்சசர்களை அழித்து, மனிதர்களின் வசிப்பிடங்களில் உங்கள் அதிகாரத்தை உறுதிபடுத்துவைத் தடுக்கும் செயல்கள் எவை? இரவுலாவிகளே, இவை அனைத்தையும் நாங்கள் உங்களிடம் இருந்து கேட்க விரும்புகிறோம்" என்றனர்.(4)
[1] "மஹாதேவனின் தொண்டர்களான இவர்கள் பிசாசு வகையைச் சேர்ந்தவர்கள் ஆவர். ’பிரமதர்’ என்ற பெயருக்கான பொருள் ’அடிப்பவர்’ என்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பிரமதர்கள், "பாலியல் கலவிச் செயல்களால் மனிதர்கள் தூய்மையற்றவர்களாகக் கொள்ளப்படுகிறார்கள். அத்தகைய செயல்களுக்குப் பின்பு தங்களைத் தூய்மை படுத்திக் கொள்ளாதவர்கள், பெரியோர்களை அவமதிப்பவர்கள், அறியாமையால் பல்வேறு வகை இறைச்சிகளை உண்பவர்கள், மரத்தினடியில் உறங்கும் மனிதன்,(5) உறங்கப் சென்று தன் படுக்கையின் தலையணைக்கடியில் இறைச்சியை வைத்திருப்பவன், கால் வைக்க வேண்டிய இடத்தில் தலையையோ, தலை வைக்க வேண்டிய இடத்தில் காலையோ வைத்து படுப்பவன் ஆகியோர் தூய்மையற்ற மனிதர்களாகக் கருதப்படுகிறார்கள். உண்மையில் இம்மனிதர்கள் {நாங்கள் நுழையத்தக்க} பல துளைகளைகளைக் கொண்டிருக்கின்றனர்.(6)
நீருக்குள் சளி மற்றும் தூய்மையற்ற {சிறுநீர், மலம் போன்ற} கழிவுகளை வீசுபவர்களும் அதே வகையில் எண்ணப்படுகின்றனர். இந்த மனிதர்கள் எங்களால் கொல்லப்படவும், உண்ணப்படவும் தகுந்தவர்களாவர் என்பதில் ஐயமில்லை.(7) உண்மையில், இத்தகைய ஒழுக்கம் கொண்ட மனிதர்களையே நாங்கள் பீடிக்கிறோம். மாற்று மருந்தாகக் கருதப்படுபவையும், மனிதர்களுக்கு எத்தீங்கையும் விளைவிப்பதில் எங்களைத் தவறச் செய்பவையுமான செயல்களை இப்போது கேட்பீராக.(8)
கோரோசனையை மேனியில் பூசிக்கொண்டவர்களையோ, கரங்களில் வசம்பை வைத்திருப்பவர்களையோ, அக்ஷதை என்ற பெயரில் உள்ள உட்பொருட்களுடன் நெய்யைக் கொடையளிப்பவர்களையோ, நெய்யையும், அக்ஷதையையும் தங்கள் தலைகளில் வைத்துக் கொள்பவர்களையோ,(9) இறைச்சியைத் தவிர்ப்பவர்களையோ எங்களால் பீடிக்க இயலாது. எந்த மனிதனின் வீட்டில் அணையாமல் பகலும் இரவும் புனித நெருப்பு எரிகின்றதோ,(10) எவன் தன் வசிப்பிடத்தில் ஓநாயின் தோலையோ, பற்களையோ, மலை ஆமையையோ வைத்துக் கொள்வானோ, எவனுடைய வீட்டில் இருந்து வேள்விப்புகை மேல்நோக்கிச் சுழன்று செல்கிறது, பழுப்பு, அல்லது எவன் கருப்பு வண்ணத்திலான பூனை அல்லது ஆட்டை வளர்ப்பானோ அவன் எங்கள் அதிகாரத்தில் இருந்து விடுபட்டவன் ஆவான்[2].(11)
[2] கும்பகோணம் பதிப்பில், "கோரோசனையை உடம்பில் பூசிக் கொண்டவரும், வசம்பைக் கையில் வைத்திருப்பவரும், நெய்யோடு சேர்ந்த அக்ஷதையை ஸ்ரத்தையுடன் தலையில் வைத்திருப்பவரும், மாம்ஸம்தின்னாதவருமான மனிதர்களைத் துன்பஞ்செய்ய எங்களால் முடியாது. எவன் வீட்டில் எந்நாளும் இரவும் பகலும் அக்நி ஜ்வலிக்கிறதோ, புலியின் தோலும், பற்களும், மலையாமையும், நெய்ப்புகையும், பூனையும், கறுப்பு அல்லது சிவப்பு ஆடும் எவர் வீடுகளில் இருக்கின்றவோ அந்த வீடுகளை எல்லாலோகங்களிலும் இஷ்டப்படி ஸஞ்சரிக்கும் எம்போன்ற மிகக் கொடிய பூதங்களும் ஆக்கிரமிக்க முடியாது.
உண்மையில், இவற்றைத் தங்கள் வீடுகளில் வைத்துக் கொள்ளும் இல்லறத்தார் அழுகிய பிணங்களை உண்டு வாழும் கடும் பூதங்களாலும் ஊடுருவ இயலாதவையாக அவை {தங்கள் வீடுகள்} இருப்பதைக் காண்பார்கள்.(12) இன்பங்களைத் தேடி பல்வேறு உலகங்களில் திரியும் எங்களைப் போன்றவையாலும் {பூதங்களாலும்} இத்தகைய வீடுகளுக்கு எந்தத் தீங்கையும் செய்ய முடியாது. எனவே, தேவர்களே, ராட்சசர்களுக்கு (ராட்சசர்களுக்கும் வேறு வகையைச் சார்ந்த பிசாசுகளுக்கும்) அழிவைத் தரும் இத்தகைய பொருட்கள் மனிதர்கள் தங்கள் வீடுகளில் வைத்துக் கொள்ள வேண்டும். தேவர்களான நீங்கள் கொண்டிருந்த பெரும் ஐயங்கள் குறித்த அனைத்தையும் நாங்கள் சொல்லிவிட்டோம்" என்றனர் {பிரமதர்கள்}.(13)
அநுசாஸனபர்வம் பகுதி – 131ல் உள்ள சுலோகங்கள் : 13
ஆங்கிலத்தில் | In English |