The excellent merits of kine! | Anusasana-Parva-Section-133 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 133)
பதிவின் சுருக்கம் : பசுக்களுக்கு உணவளிப்பதன் சிறப்பைச் சொன்ன மஹேஸ்வரன்...
மஹேஸ்வரன், "உங்கள் நினைவுகளைத் தேடி நீங்கள் அனைவரும் சொன்ன கடமைகள் யாவும் சிறப்பானவையாகும். அறம் மற்றும் கடமை தொடர்பான சில புதிர்களை நான் அறிவிக்கப் போகிறேன். நான் சொல்வதை நீங்கள் அனைவரும் கேட்பீராக.(1) அறத்தில் நிறுவப்பட்ட புத்தியைக் கொண்டவர்களும், நம்பிக்கையுடன் கூடியவர்களுமான மனிதர்களுக்கு மட்டுமே உயர்ந்த பலன்கள் நிறைந்த அறம் மற்றும் கடமைப் புதிர்கள் போதிக்கப்பட வேண்டும்.(2)
கவலையில் இருந்து விடுதலை அடைந்த இதயத்துடன் ஒரு மாத காலம் ஒவ்வொரு நாளும் பசுக்களுக்கு உணவைக் கொடுத்து, அத்தகைய காலம் முழுவதும் ஒரே ஒரு வேளை உணவை மட்டுமே உண்பவன் அடையும் பலன்களைக் கேட்பீராக.(3) பசுக்கள் உயர்வாக அருளப்பட்டவையாகும். புனிதங்கள் அனைத்திலும் மிகப் புனிதமானவையாக அவை கருதப்படுகின்றன. உண்மையில், அவையே தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களுடன் கூடிய மூவுலங்கங்களையும் தாங்கிப் பிடிப்பவையாகும்.(4)
அவற்றுக்கு அளிக்கப்படும் மதிப்புமிக்கத் தொண்டுகள் உயர்ந்த பலன்கள் மற்றும் முக்கிய விளைவுகள் நிறைந்தவையாகும். ஒவ்வொரு நாளும் பசுக்களுக்கு உணவை அளிக்கும் மனிதன் ஒவ்வொரு நாளும் அறத்தகுதியில் முன்னேறுகிறான்.(5) முற்காலத்தில், கிருத யுகத்தில் இந்த விலங்குகளிடம் என் அங்கீகாரத்தை வெளிப்படுத்தினேன். அதன் பிறகே, ஆதி தாமரையில் பிறந்த பிரம்மன் (பசுக்களிடம் கருணை காட்டுமாறு) என்னிடம் வேண்டினான்[1].(6)
[1] "அனுஜ்நாதம் என்பது அனுமதிக்கப்பட்டது, அங்கீகரிக்கப்பட்டது என்ற பொருளைத் தரும். அந்த உயிரினங்களான பசுக்கள் என்னால் அனுமதிக்கப்பட்டன என்றால் அவை எனக்குப் பிடித்தமானவை ஆகின என்றும் கொள்ளலாம். பிரம்மன், பசுக்கொடையை ஏற்குமாறு மஹேஸ்வரனை வேண்டியதாகச் சொல்லப்படுகிறது. அவனும் அவற்றில் சிலவற்றை ஏற்றுக் கொண்டு, தன் கொடியில் காளைச் சின்னத்தை அந்தக் காலத்தில் இருந்து பின்பற்றினான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
இந்தக் காரணத்தினாலேயே ஒரு காளையானது இந்த நாள் வரை என் தலைக்கு மேலே என் கொடிக்கம்பத்தில் சின்னமாக அமைந்து நிற்கிறது. நான் எப்போதும் பசுக்களுடன் விளையாடுகிறேன். எனவே அனைவராலும் பசுக்கள் வழிபடப்பட வேண்டும்.(7) பசுக்கள் பெரும் சக்தியைக் கொண்டவையாகும். அவை வரங்களையும் அளிக்கவல்லவையாகும். வழிபடப்பட்டால் அவை வரங்களை அளிக்கும். பசுக்களுக்கு ஒரேயொரு நாள் உணவைக் கொடுத்தாலும், அம்மனிதன், வாழ்வில் தன் நற்செயல்கள் அனைத்திற்கும் கிட்டும் பலன்களில் நான்கில் ஒரு பகுதியை அந்த நல்ல உயிரினங்களிடம் இருந்து பெறுகிறான்" என்றான் {மஹேஸ்வரன்}.(8)
அநுசாஸனபர்வம் பகுதி – 133ல் உள்ள சுலோகங்கள் : 8
ஆங்கிலத்தில் | In English |