Mysteries in religion! | Anusasana-Parva-Section-134 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 134)
பதிவின் சுருக்கம் : ஸ்கந்தன்; அறங்கள் அனைத்தையும் புகழ்ந்த விஷ்ணு...
ஸ்கந்தன், "என்னால்அங்கீகரிக்கப்பட்ட கடமையை இப்போது அறிவிக்கப் போகிறேன். குவிந்த கவனத்துடன் கேட்பீராக. நீல {கறுப்பு} நிறக் காளையின் கொம்புகளில் இருந்து சிறிதளவு மண்ணை எடுத்து தன் மேனியில் மூன்று நாட்கள் பூசிக்கொண்டு அதன் பிறகு நீராடும் ஒருவன் பெரும் பலன்களை அடைகிறான். அந்தப் பலன்கள் எவை என்பதைக் கேட்பீராக. அத்தகைய செயலின் மூலம் ஒருவன் ஒவ்வொரு களங்கத்தையும், தீமையையும் கழுவிக் கொண்டு, மறுமையில் அரசுரிமையை அடைந்து ஆள்கிறான்.(2) எத்தனை முறை அவன் இவ்வுலகில் பிறக்கிறானோ, அவ்வளவு முறை அவன் தனது வீரத்திற்காகக் கொண்டாடப்படுகிறான். யாரும் அறியாத மற்றொரு புதிரை இப்போது கேட்பீராக.(3)
ஒரு தாமிரப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு, சமைக்கப்பட்ட உணவை தேன் கலந்து அதிலிட்டு, நிலவு முழுமையாக இருக்கும் {அமாவாசை} நாளின் மாலை வேளையில், உதிக்கும் சந்திரனுக்கு அதைப் பலியாகக் கொடுக்க வேண்டும்.(4) இவ்வழியில் செயல்படும் மனிதன் அடையும் பலன்களை நம்பிக்கையுடன் அறிவீராக. சாத்தியர்கள், ருத்திரர்கள், ஆதித்யர்கள், விஷ்வேதேவர்கள், அசுவின இரட்டையர்கள்,(5) மருத்துகள், வசுக்கள் ஆகியோர் அனைவரும் அந்தக் காணிக்கையை ஏற்கின்றனர். அத்தகைய காணிக்கையின் மூலம் சோமமும், நீர்க்கொள்ளிடமான பெருங்கடலும் வளர்கின்றன. என்னால் அறிவிக்கப்பட்டதும், பெரும்பாலும் யாராலும் அறியப்படாததுமான இக்கடமையானது செய்யப்பட்டால் நிச்சயம் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது" என்றான் {ஸ்கந்தன்{.(6)
விஷ்ணு, "உயர் ஆன்ம தேவர்களாலும், முனிவர்களாலும் பாதுகாக்கப்படும் அறம் மற்றும் கடமை சார்ந்த புதிர்களைக் குவிந்த கவனத்துடனும், வன்மத்தில் இருந்து விடுபட்டு நம்பிக்கையுடனும் ஒவ்வொரு நாளும் கேட்கும் மனிதன், ஒரு போதும் தீமைக்கு அடிபணியவேண்டியதில்லை. அத்தகைய மனிதன் அச்சங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான்.(7,8) புலன்களை முழுமையாக அடக்கி, (முன்பு பேசிய அனைவராலும்) அறிவிக்கப்பட்ட மங்கலமான பலன்மிக்கக் கடமைகள் அடங்கிய இந்தப் பகுதிகளை அவற்றின் புதிர்களுடன் சேர்த்துப் படிப்பவன், அவர்களுடைய செல்பாட்டுக்குரிய அனைத்துப் பலன்களையும் அடைகிறான்.(9) பாவத்தால் ஒருபோதும் அவனை வெல்லமுடியாது. உண்மையில் அத்தகைய மனிதன் எவ்வகைக் களங்கங்களாலும் கறைபடமாட்டான். உண்மையில், அவன் இந்தப் புதிர்களைப் படிப்பதன் மூலமோ, பிறருக்கு அறிவிப்பதன் மூலமோ, அவற்றைக் கேட்பதன் மூலமோ (அறிவிக்கப்பட்டிருக்கும்) பலன்களை அபரிமிதமாக வெல்கிறான்.(10)
அத்தகைய உயிரினத்தால் அளிக்கப்படும் ஹவ்யகவ்யங்களைத் தேவர்களும், பித்ருக்களும் எப்போதும் உண்கின்றனர். காணிக்கை அளிப்பவனின் ஒழுக்கத்தின் விளைவால் இவை இரண்டும் வற்றாதனவாகின்றன. முழு நிலவு நாளிலோ, புது நிலவு நாளிலோ முதன்மையான பிராமணர்களுக்கு இந்தப் புதிர்களைக் குவிந்த கவனத்துடன் உரைப்பவனும் இத்தகைய பலன்களையே அடைகிறான்.(11) இத்தகைய மனிதன், அத்தகைய செயலின் விளைவால், அனைத்துக் கடமைகளையும் உறுதியாக நோற்பவனாகிறான். அதையுந்தவிர, அவன் முனிவர்கள், தேவர்கள் மற்றும் பித்ருக்களுக்கு எப்போதும் பிடித்தமானவன் ஆகிறான்.(12) கொடூரமானவையாக வகைப்படுத்தப்படும் பயங்கரப் பாவங்களைச் செய்த மனிதனும், அறம் மற்றும் கடமை குறித்த இந்தப் புதிர்கள் சொல்லப்படும்போது கேட்பதால் மட்டுமே அவை அனைத்திலும் இருந்து தூய்மையடைந்துவிடுகிறான்" என்றான்".(13)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! மனிதர்களின் மன்னா, தேவர்களின் நெஞ்சகங்களில் அறம் மற்றும் கடமை குறித்த இந்தப் புதிர்களே வசிக்கின்றன. தேவர்கள் அனைவராலும் உயர்வாக மதிக்கப்பட்டவையும், வியாசரால் அறிவிக்கப்பட்டவையுமான அவற்றை உன்நன்மைக்காக நான் இப்போது அறிவித்திருக்கிறேன். அறம் மற்றும் கடமையை அறிந்த ஒருவன், மொத்த பூமியில் நிறைந்திருக்கும் வளங்கள் மற்றும் செல்வங்களை விட இந்தச் சிறந்த ஞானம் (மதிப்பின் அளவில்) மேன்மையானது என்று நினைக்கிறான்.(14,15) நம்பிக்கையற்ற ஒருவனுக்கோ, நாத்திகனுக்கோ, தன் வகைக்கான கடமைகளில் இருந்து வீழ்த்துவிட்டவனுக்கோ, கருணையற்றவனுக்கோ, வெற்று சச்சரவுகளைக் கொண்ட அறிவியலில் அர்ப்பணிப்புள்ளவனுக்கோ, தன் ஆசானிடம் பகைமை கொண்டிருப்பவனுக்கோ, அனைத்து உயிரினங்களும் தன்னில் இருந்து வேறுபட்டவை என்று கருதுபவனுக்கோ இந்த ஞானத்தை ஒருபோதும் போதிக்கக்கூடாது" {என்றார் பீஷ்மர்}.(16)
அநுசாஸனபர்வம் பகுதி – 134ல் உள்ள சுலோகங்கள் : 16
ஆங்கிலத்தில் | In English |