Food receiving and avoiding! | Anusasana-Parva-Section-135 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 135)
பதிவின் சுருக்கம் : உணவை எவரிடம் இருந்து ஏற்கலாம், எவரிடம் இருந்து ஏற்கக்கூடாது என்பன உள்ளிட்டவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதா, இவ்வுலகில் ஒரு பிராமணன் தான் உண்ணும் உணவை யாரிடம் இருந்து ஏற்கலாம்? க்ஷத்திரியன், வைசியன் மற்றும் சூத்திரன் ஆகியோரும் முறையே யாரிடம் இருந்து தங்கள் உணவை ஏற்கலாம்?" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஒரு பிராமணன், மற்றொரு பிராமணனிடமிருந்தோ, க்ஷத்திரியன் அல்லது வைசியனிடமிருந்தோ தன் உணவை ஏற்கலாமேயன்றி ஒருபோதும் ஒரு சூத்திரனிடமிருந்து உணவை ஏற்கக்கூடாது.(2)
ஒரு க்ஷத்திரியன் தன் உணவை, பிராமணன், க்ஷத்திரியன் மற்றும் வைசியரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். எனினும், அவன் தீய வழிகளுக்கு அடிமையாக இருப்பவர்களும், எந்த ஐயமுமின்றி அனைத்துவகை உணவுகளை உண்பவர்களுமான சூத்திரர்களால் கொடுக்கப்படும் உணவைத் தவிர்க்க வேண்டும்.(3)
ஒவ்வொரு நாளும் தங்கள் புனித நெருப்பை மூட்டுபவர்களும், குணத்தில் களங்கமில்லாதவர்களும், சாதுர்மாஸ்ய நோன்பைச் செய்பவர்களுமான வைசியர்களால் கொடுக்கப்படும் உணவைப் பிராமணர்களும், க்ஷத்திரியர்களும் உண்ணலாம்.(4) ஆனால், ஒரு சூத்திரனிடம் இருந்து உணவை உண்ணும் மனிதன், பூமியின் மலத்தை உண்கிறான், மனித உடலின் கழிவுகளைப் பருகுகிறான், உலகம் அனைத்தின் மாசுகளை உண்கிறான்.(5)
ஒரு சூத்திரனிடம் இருந்து பெற்ற உணவை உண்பவன் பூமியின் மாசுகளையே உண்கிறான். உண்மையில், சூத்திரனிடம் இருந்து தங்கள் உணவைப் பெறும் பிராமணர்கள் பூமியின்அழுக்கையே உண்கிறார்கள்.(6)
ஒருவன் சூத்திரனுக்குத் தொண்டு செய்பவனாக இருப்பானேயானால், தன் வகைக்கான அனைத்துச் சடங்குகளையும் முறையாகச் செய்பவனாக இருந்தாலும், அவன் நரகத்தில் விழுவான். பிராமணனோ, க்ஷத்திரியனோ, வைசியனோ இவ்வாறு ஈடுபட்டால் அவர்கள் அறச் சடங்களுகளை முறையாகச் செய்பவர்களாக இருந்தாலும் இழிவடைவார்கள்.(7)
வேதங்களைக் கற்பது, மனித குலத்தின் நன்மையை நாடுவது ஆகியன பிராமணனின் கடமை; மனிதர்களைப் பாதுகாப்பது க்ஷத்திரியனின் கடமை; தங்கள் பொருள் செழிப்பை ஊக்கப்படுத்துவதாகும் எனச் சொல்லப்படுகிறது.(8) ஒரு வைசியன், தன் செயல்கள் மற்றும் உழவின் கனிகளைப் பகிர்ந்து கொடுப்பதன் மூலம் வாழ்கிறான். பசுக்களை வளர்த்தல் மற்றும் வணிகமும் நிந்தனையில்லாமல் ஒரு வைசியன் செய்யக்கூடிய நியாயமான பணிகளாகும்.(9)
தனக்குரிய தொழிலைக் கைவிட்டு, சூத்திரனின் தொழிலை எடுத்துக் கொள்ளும் மனிதன், சூத்திரனாகவே கருதப்பட்டு, அவனிடம் இருந்து ஒருபோதும் உணவை ஏற்கக்கூடாது.(10) மருத்துவன், கூலிப்படையினர், வீட்டைப் பாதுகாப்பவனாகச் செயல்படும் புரோகிதன், முழுமையாக ஒரு வருடம் வேதம் ஓதியும் பயன்படாதவன் ஆகியோர் அனைவரும் சூத்திரர்களாகக் கருதப்பட வேண்டும்.(11) சூத்திரனின் வீட்டில் நடைபெறும் விழாக்களில் அளிக்கப்படும் உணவை ஆணவமாக உண்பவன் பயங்கரத் துன்பத்தால் பீடிக்கப்படுவான். தடைசெய்யப்பட்ட உணவை உண்பதன் விளைவால் அவன் தன் குடும்பத்தையும், பலத்தையும், சக்தியையும் இழந்து, இழிந்த விலங்குகளின் நிலையை அடைந்து, அறந்தவறி, அற நோன்புகள் அனைத்தும் அற்றவனாக நாயின் நிலைக்கு இழிந்தவனாகிறான்.(12,13)
ஒரு மருத்துவனிடம் உண்ணும் உணவு மலத்தைப் போன்றதாகும்; விலைமகளிடம் உண்ணும் உணவு சிறுநீரைப் போன்றதாகும்; திறம்பெற்ற இயந்திரக் கைவினைஞரின் {சிற்பிகளின்} உணவு குருதியைப் போன்றதாகும்.(14)
நல்லோரால் அங்கீகரிக்கப்பட்ட பிராமணன் ஒருவன், கல்வியின் மூலம் வாழும் ஒருவனிடம் உணவு உண்டால் அவன் சூத்திரனிடம் இருந்து உணவைப் பெற்றவனாகக் கருதப்படுகிறான். நல்லோர் அனைவரும் அத்தகைய உணவைத் தவிர்க்க வேண்டும்.(15) அனைவராலும் நிந்திக்கப்படும் மனிதனின் உணவானது, குருதிக்குளத்தில் இருந்து பெறப்பட்ட உணவாகச் சொல்லப்படுகிறது. தீய மனிதனிடம் இருந்து உணவை ஏற்பவன், பிராமணனைக் கொன்றவனைப் போல நிந்திக்கத்தகுந்தவனாகக் கருதப்படுகிறான்.(16)
ஒருவன் கொடையாளியால் முறையாக வரவேற்கப்படாமல் ஆதரிக்கப்படாமல் இருந்தால் அவனுடைய உணவை ஏற்கக்கூடாது. இவ்வாறு செய்யும் பிராமணன் நோயால் பீடிக்கப்படுகிறான், அவனது குலம் அழிகிறது.(17) நகரக் காவலாளியிடம் இருந்து உணவை ஏற்பதன் மூலம் ஒருவன் தள்ளிவைக்கப்பட்ட இழிந்தி நிலைக்குத் தாழ்கிறான்.(18)
பசு அல்லது பிராமணனைக் கொன்ற குற்றம் புரிந்தவன், ஆசானின் மனைவியுடன் கூடாவுறவு கொண்டவன், குடிகாரன் ஆகியோரிடம் இருந்து உணவை ஏற்கும் பிராமணன், ராட்சசர்களின் குலத்தை ஊக்குவிக்கிறான்.(19) ஓர் அலியிடம் இருந்தும், நன்றிமறந்த மனிதனிடமிருந்தும், தன்னிடம்கொடுக்கப்பட்ட செல்வத்தை அபகரித்தவனிடம் இருந்தும் உணவை ஏற்பவன், நடு நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் அமைந்திருக்கும் சவரர்களின் நாட்டில் பிறப்பான்.(20) எவரிடம் இருந்து உணவை ஏற்கலாம், எவரிடம் இருந்து ஏற்கக்கூடாது என்பதை நான் முறையாகச் சொல்லிவிட்டேன். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, இன்று இன்னமும் நீ கேட்க விரும்புவதென்ன?" என்று கேட்டார் {பீஷ்மர்}.(21)
அநுசாஸனபர்வம் பகுதி – 135ல் உள்ள சுலோகங்கள் : 21
ஆங்கிலத்தில் | In English |