Expiations! | Anusasana-Parva-Section-136 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 136)
பதிவின் சுருக்கம் : கொடை பெறுவதாலும், உணவை உண்பதாலும் அடையும் பாவத்தைக் கழிப்பதற்குரிய பரிகாரணங்களை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "யாரிடம் உணவை ஏற்கலாம், யாரிடம் கூடாது என்பதை எனக்கு நீர் முழுமையாகச் சொன்னீர்.(1) ஆனால் எனக்கு ஒன்றில் பெரும் ஐயம் நிலவுகிறது. ஓ! ஐயா, ஒரு பிராமணன் பல்வேறு வகை உணவுகளை, அதிலும் குறிப்பாகத் தேவர்களைக் கௌரவிக்கும் வகையில் படைக்கப்படும்போதும், இறந்து போன மூதாதையருக்குப் பலியுணவு படைக்கப்படும்போதும் ஏற்றுக் கொள்ளும்போது, (அவன் ஈட்டும் பாவத்திற்கு) என்ன பரிகாரத்தைச் செய்ய வேண்டும் என்பதை எனக்குச் சொல்லி தெளிவுபடுத்துவீராக" என்றான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! இளவரசே, உயர் ஆன்ம பிராமணர்கள், பிறரிடம் இருந்து உணவை ஏற்பதால் இழைக்கப்படும் பாவத்தை எவ்வாறு கழிப்பது என்பதை உனக்குச் சொல்வேன்.(3) தெளிந்த நெய்யை ஏற்கும்போது, சாவித்திரி மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுவது பரிகாரமாகிறது. ஓ! யுதிஷ்டிரா, எள்ளை ஏற்கும்போதும் அதே பரிகாரம் செய்யப்பட வேண்டும்.(4) இறைச்சியையோ, தேனையோ, உப்பையோ ஏற்றுக் கொள்ளும் பிராமணன், சூரியன் எழும்வரை நின்று கொண்டிருப்பதன் மூலம் தூய்மையடைகிறான்.(5) ஒரு பிராமணன் எவரிடம் இருந்தாவது தங்கத்தை ஏற்றுக் கொண்டால், பொதுமக்கள் முன்னிலையில் தன் கரத்தில் இரும்புத் துண்டை {இரும்புப் பாத்திரத்தைப்} பிடித்துக் கொண்டு வேத (காயத்ரி) துதியை அமைதியாகச் சொல்வதன் மூலம் அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைகிறான். பணம், துணிமணிகள், பெண்கள் அல்லது தங்கத்தை ஏற்கும்போது முன்சொன்னது போலவே செய்து தூய்மையடைய வேண்டும்.(6,7)
உணவு, அல்லது பால் மற்றும் சர்க்கரையுடன் கொதிக்க வைக்கப்பட்ட அரிசி {பாயஸம்}, {வெல்லம், சர்க்கரை}, கரும்பு, எண்ணெய், வேறு புனித பொருட்களை ஏற்கும் ஒருவன், காலை, நடுப்பகல் மற்றும் மாலை ஆகிய மூன்று வேளைகளில் நீராடுவதன் மூலம் தூய்மையடைகிறான்.(8) நெல், மலர்கள், கனிகள், நீர், மாப்பண்டம், பால், தயிர், அல்லது வேறு உணவையோ, மாவுகளையோ ஏற்றக் கொண்டால், நூறு முறை காயத்ரி துதியைச் சொல்வதே பரிகாரமாகும்.(9) ஈமச்சடங்குகளில் கொடுக்கப்படும் காலணிகள் மற்றும் உடைகளை ஏற்றால், அதே {காயத்திரி} மந்திரத்தை பக்தியுடன் நூறு முறை சொல்வது பாவத்தை அழிக்கும்.(10) கிரகணக் காலத்திலோ, தூய்மையற்ற காலத்திலோ நிலக்கொடை பெற்றால், அடுத்தடுத்து மூன்று நாட்கள் தொடர்ந்து உண்ணா நோன்பிருத்தல் பரிகாரமாகும்.(11) இறந்து போன மூதாதையருக்குக் காணிக்கையளிக்கப்படும் பலியுணவுகளை உண்ணும் பிராமணன், தேய்பிறை காலம் முழுவதும் பகலும், இரவும் முழுமையாக உண்ணா நோன்பு இருப்பதன் மூலம் தூய்மையடைகிறான்.(12)
ஒரு பிராமணன், தூய்மைச் சடங்குகளைச் செய்யாமல் மாலை வேளை துதிகளைச் சொல்லவோ, அறம் சார்ந்த தியானத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவோ, இரண்டாம் முறை உணவை உண்ணவோ கூடாது. அவ்வாறு செயல்படுவதால் அவன் தூய்மையடைகிறான்.(13) இந்தக் காரணத்திற்காகவே, சிராத்தமானது பிற்பகல்வேளையில் விதிக்கப்படுகிறது, இதன் காரணமாகவே சிராத்தத்திற்கு அழைக்கப்படும் பிராமணனும் முன் கூட்டியே உணவருந்தச் செய்யப்படுகிறான்.(14) மரணம் நேர்ந்ததற்கு மூன்றாம் நாளில் இறந்த மனிதனின் வீட்டில் உணவை உண்ணும் பிராமணன், பனிரெண்டு நாட்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மூன்று முறை நீராடுவதால் தூய்மையடைகிறான்.(15) பனிரெண்டு நாட்கள் முடிவடைந்ததும், முறையான தூய்மைச் சடங்குகளைச் செய்து கொண்டு, பிராமணர்களுக்குத் தெளிந்த நெய்யைக் கொடுப்பதன் மூலம் அந்தப் பாவம் அழிவை அடைகிறது.(16)
ஒரு மனிதன் இறந்து பத்து நாட்களுக்குப் பிறகு அவனது வீட்டில் எந்த உணவையும் உண்டால், அவன் முன்பு சொல்லப்பட்டுள்ள அனைத்துப் பரிகாரங்களையும் செய்து, சாவித்திரி மந்திரத்தைச் சொல்லி பாவத்தை அழிக்கும் இஷ்டி மற்றும் கஷ்மாண்ட தவங்களைச் செய்ய வேண்டும்[1].(17) இறந்தவனின் வீட்டில் மூன்று இரவுகள் உணவை உண்ணும் பிராமணன், ஏழு நாட்கள் ஒவ்வொரு நாளும் மும்மூன்று முறை தூய்மைச் சடங்குகளைச் செய்து தூய்மையடைந்து, அதன் மூலம் தன் விருப்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் அடைந்து, ஒரு போதும் ஆபத்துகளில் சிக்காதவனாக இருப்பான்.(18,19) சூத்திரர்களின் துணையுடன் தன் உணவை உண்ணும் பிராமணன், முறையாகத் தூய்மைச் சடங்குகளை நோற்பதன் மூலம் மாசுகள் அனைத்தையும் அழிக்கிறான்.(20) வைசியர்களின் துணையுடன் தன் உணவை உண்ணும் பிராமணன், அடுத்தடுத்து மூன்று இரவுகள் பிச்சையெடுத்து வாழ்வதன் மூலம் தன் பாவத்தைக் கழிக்கிறான்.(21) க்ஷத்திரியர்களுடன் சேர்ந்து தன் உணவை உண்ணும் பிராமணன், தான் உடுத்திய உடையுடனே நீராடுவதன் மூலம் பரிகாரத்தைச் செய்தவனாவான்.(22)
[1] கும்பகோணம் பதிப்பில், "பத்து நாளைச் சாவு தீட்டில் பத்து நாள் சென்ற பிறகு பிராயச்சித்தங்களுக்காகத் தானங்கள் செய்விக்க வேண்டும். ஸாவித்ரம், ரைவதன் என்னும் இஷ்டிகளையும், கஸ்மாண்ட ஹோமத்தையும், அகமர்ஷண ஜபத்தையும் செய்ய வேண்டும்" என்றிருக்கிறது.
{தகாதவனான} ஒரு சூத்திரனுடன் ஒரே தட்டில் உண்பதன் மூலம் ஒரு சூத்திரன் தன் குடும்ப மதிப்பை இழக்கிறான்; {தகாதவனான} ஒரு வைசியனுடன் ஒரே தட்டில் உண்பதன் மூலம் ஒரு வைசியன் தன் கால்நடைகளையும் {பசுக்களையும்}, நண்பர்களையும் இழக்கிறான். ஒரு க்ஷத்திரியன் தன் செழிப்பையும், ஒரு பிராமணன் தன் காந்தி மற்றும் சக்தியையும் {பிரம்மதேஜஸை} இழக்கின்றனர்.(23) இத்தகைய வழக்குகளில், பரிகாரங்களும் தணிவடையச் செய்யும் சடங்குகளும் செய்யப்பட்டு, தேவர்களுக்குப் பலியுணவுகள் காணிக்கையளிக்கப்பட வேண்டும். பாவத்தை அழிக்கும் நோக்கில் சாவித்திரி மந்திரம் உரைக்கப்பட வேண்டும், ரேவதி சடங்குகளும், கஷ்மாண்ட தவங்களும் செய்யப்பட வேண்டும்.(24) மேற்கண்ட நான்கு வகையினரில் எவரும், வேறு வகை மனிதனால் உண்ணப்பட்ட உணவை உண்டால், நிச்சயம் கோரோசனை, அறுகம்புல், மஞ்சள், சந்தனம் முதலிய மங்கலப் பொருட்களை உடல் முழுவதும் பூசிக் கொள்வதே பரிகாரம்" என்றார் {பீஷ்மர்}.(25)
அநுசாஸனபர்வம் பகுதி – 136ல் உள்ள சுலோகங்கள் : 25
ஆங்கிலத்தில் | In English |