Five kinds of gift! | Anusasana-Parva-Section-138 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 138)
பதிவின் சுருக்கம் : ஐந்து வகை தானங்கள் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! ஐயா, ஓ! கொடையறத்தைப் பின்பற்றி வாய்மை நோன்பை நோற்பதில் பெரும் சக்தி கொண்டவரே, சொர்க்கத்திற்கு உயர்ந்த மன்னர்களின் பெயர்களை நான் உம்மிடம் இருந்து கேட்டேன்.(1) கொடைக்களிக்கப்பட வேண்டிய கொடைகளில் எத்தனை வகை உள்ளன? பல்வேறு வகையான அந்தக் கொடைகளின் கனிகள் முறையே என்னென்ன?(2) என்ன காரணங்களுக்காக, எந்த மனிதர்களுக்குக் கொடுக்கப்படும், என்ன வகைக் கொடைகள் பலன்களை உண்டாக்குகின்றன? என்ன காரணங்களுக்காக எத்தனை வகைக் கொடைகள் அளிக்கப்படுகின்றன? இவை யாவற்றையும் நான் கேட்க விரும்புகிறேன்" என்றான்.(3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! குந்தியின் மகனே, ஓ! பாவமற்றவனே, கொடைகள் குறித்துச் சொல்கிறேன் விரிவாகக் கேட்பாயாக. உண்மையில், ஓ! பாரதா, அனைத்து வகை மனிதர்களுக்கும் கொடைகள் எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்பதை உனக்குச் சொல்லப் போகிறேன்.(4) ஓ! பாரதா, பலன் {அறம்} விரும்பியும், லாபம் {பொருள்} விரும்பியும், அச்சத்தின் மூலமும், சுதந்திரத் தேர்வு {ஆசை} மூலமும், கருணை மூலமும் கொடைகள் அளிக்கப்படுகின்றன. எனவே, கொடைகள் ஐவகையானவை என்று அறியப்பட வேண்டும். கொடைகள் இவ்வாறு ஐந்து வகைகளாகப் பிரிக்கப்படுவதற்கான காரணங்களை இப்போது கேட்பாயாக.(5)
ஒருவன் பிராமணர்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் இம்மையில் புகழையும், மறுமையிலும் பேரின்பத்தையும் அடைவான் என்பதால் வன்மத்தில் இருந்து விடுபட்ட மனத்துடன் அவன் அவர்களுக்குக் கொடையளிக்க வேண்டும். (அத்தகைய கொடைகள் பலன் விரும்பி அளிக்கப்படுபவையாகக் கருதப்படுகின்றன).(6)
அவன் கொடையளிப்பதை ஒரு பழக்கமாகக் கொண்டிருக்கிறான்; அல்லது அவன் கொடையளிப்பான்; அல்லது அவன் ஏற்கனவே எனக்குக் கொடையளித்திருக்கிறான். வேண்டுபவர்களின் இத்தகைய வார்த்தைகளைக் கேட்டு, வேண்டுவோரில் குறிப்பிட்டவனுக்கு ஒருவன் அனைத்து வகைச் செல்வங்களையும் கொடுக்கிறான். (இத்தகைய கொடைகள் லாபம் விரும்பி அளிக்கப்பட்டவையாகக் கருதப்படுகின்றன).(7)
நான் அவனுடையவனல்ல; அதேபோல அவனும் என்னுடையவனல்ல. அலட்சியப்படுத்தப்பட்டால் அவன் எனக்குத் தீங்கிழைக்கக்கூடும். இத்தகைய அச்ச நோக்கங்களில் கல்வியும், ஞானமும் கொண்ட ஒரு மனிதன் கூட, ஓர் இழிந்த மூடனுக்குக் கொடைகளை அளிக்கக்கூடும். (இத்தகைய கொடைகள் அச்சத்தால் கொடுக்கப்படுபவை எனக் கருதப்படுகின்றன).(8)
இவன் எனது அன்புக்குரியவன். நானும் அவனது அன்புக்குரியவன். இத்தகைய கருத்துகளின் ஆதிக்கத்தில் புத்தியுள்ள ஒருவன், சுதந்திரமாகவும், சுறுசுறுப்புடனும் ஒரு நண்பனுக்குக் கொடையளிக்கிறான். (இத்தகைய கொடைகள் சுதந்திரத் தேர்வின் மூலம் கொடுக்கப்படுபவையாகக் கருதப்படுகின்றன).(9)
என்னை வேண்டிக் கேட்பவன் ஓர் ஏழை. மேலும் அவன் சிறிதளவிலேயே நிறைவடைகிறான். இத்தகைய கருத்துகளின் மூலம் ஒருவன் எப்போதும் கருணையால் உந்தப்பட்டு ஓர் ஏழைக்குக் கொடைகளை அளிக்க வேண்டும். (இத்தகைய கருத்துகளின் மூலம் கொடுக்கப்படும் கொடைகள் கருணையால் கொடுக்கப்படுபவையாகக் கருதப்படுகின்றன).(10)
இவையே ஐவகைக் கொடைகளாகும். இவை கொடையாளின் பலனையும், புகழையும் பெருக்குகின்றன. அனைத்து உயிரினங்களின் தலைவனை (பிரம்மனே), ஒருவன் தன் சக்திக்கேற்றபடி எப்போதும் கொடைகளையளிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறான்" என்றார் {பீஷ்மர்}.(11)
அநுசாஸனபர்வம் பகுதி – 138ல் உள்ள சுலோகங்கள் : 11
ஆங்கிலத்தில் | In English |