Fruits of action! | Anusasana-Parva-Section-144 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 144)
பதிவின் சுருக்கம் : கர்மபலன்கள் வெளிப்படும் போக்கு மற்றும் மனிதர்கள் சொர்க்கத்தை அடைவதற்கான வழிகள் ஆகியவற்றைக் குறித்து உமைக்குச் சொன்ன சிவன்...
உமை {மஹேஸ்வரனிடம்}, "ஓ! புனிதமானவரே, ஓ! அனைத்துயிரினங்களின் தலைவா, ஓ! தேவர்கள் மற்றும் அசுரர்களாக இணையாக வழிபடப்படுபவரே, மனிதர்களின் கடமைகள் மற்றும் கடமை தவறுதல்களையும் எனக்குச் சொல்வீராக. உண்மையில், ஓ! பலமிக்கவரே என் ஐயங்களைத் தீர்ப்பீராக.(1) எண்ணம், சொல், செயல் ஆகிய இம்மூன்றாலேயே மனிதர்கள் பந்தங்களால் கட்டப்படுகின்றனர். இவை மூன்றினாலேயே அவர்கள் அக்கட்டுகளில் இருந்து விடுபெறவும் செய்கிறார்கள்.(2) ஓ! தேவா, எந்த ஒழுக்கத்தைப் பின்பற்றுவதன் மூலம், உண்மையில், எந்தச் செயல்களைச் செய்வதன் மூலம், எந்த நடத்தை, குணம் மற்றும் சொற்களின் மூலம் மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்" என்று கேட்டாள்?(3)
தேவர்களுக்குத் தேவன், "ஓ! தேவி, கடமைகளின் உண்மைகளை நீ நன்கறிந்தவளாவாய். நீ அறம் மற்றும் தற்கட்டுப்பாட்டில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவளாவாய். நீ என்னைக் கேட்டிருப்பது உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மை நிறைந்ததாகும். அது மனிதர்கள் அனைவரின் புத்தியையும் மேம்படுத்துகிறது. எனவே, அதற்குண்டான பதிலைக் கேட்பாயாக.(4) வாய்மை அறத்தில் அர்ப்பணிப்புள்ளவர்களும், அறவோராகவும், பல்வேறு வாழ்வுமுறைகளின் குறியீடுகள் ஏதுமற்றவர்களாகவும் உள்ளவர்களும், அறவழிமுறைகளில் ஈட்டப்பட்ட செல்வத்தை அனுபவிப்பவர்களும் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(5) அனைத்து ஐயங்களில் இருந்தும் விடுபட்டவர்களும், அனைத்தையும் அறிந்தவர்களும், அனைத்துப் பொருட்களையும் காணும் கண்களைக் கொண்டவர்களுமான மனிதர்கள் ஒருபோதும், புண்ணியம் அல்லது பாவம் ஆகியவற்றில் கட்டப்படுவதில்லை. பற்றுகள் அனைத்தில் இருந்து விடுபட்ட மனிதர்கள் ஒருபோதும் செயல் சங்கிலிகளால் கட்டப்படுவதில்லை.(6) எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் ஒருபோதும் எவருக்கும் தீங்கிழைக்காதவர்கள், எதனிடமும் ஒருபோதும் பற்று கொள்ளாதவர்கள் ஆகியோர் செயல்களால் ஒருபோதும் கட்டப்படுவதில்லை.(7)
எந்த உயிரினத்தின் உயிரையும் எடுப்பதைத் தவிர்ப்பவர்கள், அறவொழுக்கம் கொண்டவர்கள், கருணை கொண்டவர்கள், நண்பர்களையும், பகைவர்களையும் சரிநிகரான ஒளியில் காண்பவர்கள், தற்கட்டுப்பாடுடையவர்கள் ஆகியோர் ஒருபோதும் செயல்களால் கட்டப்பட மாட்டார்கள்.(8) அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்டவர்கள், அனைத்து உயிரினங்களின் நம்பிக்கையையும் பெறக்கூடியவர்கள் ஆகியோர் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெற்றியடைகிறார்கள்.(9) பிறருக்குச் சொந்தமானத்தை அபகரிக்க விருப்பமில்லாதவர்கள், பிறரின் மனைவிகளைவிட்டு ஒதுங்கியிருப்பவர்கள், அறவழிமுறைகளில் ஈடப்பட்ட செல்வத்தை மட்டுமே அனுபவிப்பவர்கள் ஆகியோர் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(10) பிறரின் மனைவிகளிடம் தங்கள் தாய்மார், சகோதரிமார், மகள்களிடம் பழகுவது போல நடந்து கொள்ளும் மனிதர்கள் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(11) பிறருக்குச் சொந்தமானவற்றை அபகரிப்பதைத் தவிர்ப்பவர்கள், தாங்கள் கொண்டுள்ளவற்றில் முற்றிலும் நிறைவுடன் இருப்பவர்கள், தங்கள் விதியைச் சார்ந்து மட்டுமே வாழ்பவர்கள் ஆகியோர் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(12)
அடுத்தவர் மனைவிகளை எப்போதும் பார்க்காமல் கண்களை மூடிக் கொள்பவர்கள், தங்கள் புலன்களை ஆள்பவர்கள், அற ஒழுக்கத்திற்கு அர்ப்பணிப்புடன் உள்ளவர்கள் ஆகியோர் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(13) அறவோர் பின்பற்றுவதற்காகத் தேவர்களால் உண்டாக்கப்பட்ட பாதை இதுவே ஆகும். விருப்பு வெறுப்பில் இருந்து விடுபட்ட இந்தப் பாதை அறவோர் பின்பற்றுவதற்குரியதாகும்.(14) தங்கள் மனைவிகளிடம் அர்ப்பணிப்புடன் இருப்பவர்களும், அவர்களுக்குரிய காலங்களில் மட்டுமே அவர்களை நாடுபவர்களும், பாலின இன்பத்தில் ஈடுபடுவதில் இருந்து விலகுபவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(15) பலன் பெறவோ, வாழ்வாதாரங்களை ஈட்டுவோ விரும்பும் ஞானிகள், ஈகை, தவங்கள், அறச்செயல்கள், உடல் மற்றும் இதயத் தூய்மை ஆகியவற்றால் குறிக்கப்பட்ட ஒழுக்கத்தைப் பின்பற்றப்பட வேண்டும்.(16) சொர்க்கத்திற்கு உயர விருப்பம் கொண்டோர் இப்பாதையைப் பின்பற்ற வேண்டுமேயன்றி வேறெதையும் அல்ல" என்றான் {சிவன்}.(17)
உமை {மஹேஸ்வரனிடம்}, "ஓ! சிறப்புமிக்கத் தேவா, ஓ! அனைத்துயிரினங்களின் பாவமற்ற தலைவா, எந்தச் சொற்களைச் சொல்வதன் மூலம் ஒருவன் கட்டப்படுகிறான். மேலும் எந்தச் சொற்களைப் பேசுவதன் மூலம் ஒருவன் தன் கட்டுகளில் இருந்து விடுபடுகிறான்" என்று கேட்டாள்.(18)
மஹேஸ்வரன் {உமையிடம்}, "தங்களுக்காகவோ, பிறருக்காகவோ, கேலிக்காகவோ, சிரிக்கத் தூண்டவோ ஒருபோதும் பொய் சொல்லாதவர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்வார்கள்.(19) தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டவோ, தகுதியை ஈட்டவோ, வெறும் கற்பனைக்காகவோ ஒருபோதும் பொய் சொல்லாதவர்க்ள சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(20) மென்மையான, இனிமையான, களங்கமற்ற சொற்களைச் சொல்பவர்கள், சந்திக்க நேர்பவர்கள் அனைவரையும் நேர்மையுடன் வரவேற்பவர்கள் ஆகியோர் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(21) கடுமையான, கசப்பான, கொடுமையான சொற்களை ஒருபோதும் சொல்லாதவர்கள், வஞ்சகம் மற்றும் அனைத்து வகைத் தீமைகளில் இருந்தும் விடுபட்டவர்கள் ஆகியோர் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(22) வஞ்சம் நிறைந்த அல்லது நண்பர்களுக்கிடையில் உள்ள புரிந்துணர்வை மீறச் செய்யும் சொற்களை ஒருபோதும் சொல்லாதவர்களும், உண்மையானதையே பேசி, நல்ல உணர்வுகளை வளர்ப்பவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(23) கடுமை நிறைந்த பேச்சுகளைத் தவிர்ப்பவர்களும், பிறரிடம் சச்சரவுகளைத் தவிர்ப்பவர்களும், அனைத்து உயிரினங்களிடமும் சரிநிகராக நடந்து கொள்பவர்களும், தங்கள் ஆன்மாவை அடக்கியவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(24) தீமையான பேச்சையோ, பாவம் நிறைந்த உரையாடலையோ தவிர்ப்பவர்கள், ஏற்பில்லாத இனிமையற்ற பேச்சுகளைத் தவிர்ப்பவர்கள், ஏற்புடைய மங்கல சொற்களை மட்டுமே பேசுபவர்கள் ஆகியோர் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(25) கோபவசப்பட்டுப் பிறரின் இதயங்களைக் கிழிக்கும் சொற்களைப் பேசாதவர்கள், கடும்கோபத்தில் இருக்கும்போதும் அமைதி நிறைந்த ஏற்புடைய சொற்களைப் பேசுபவர்கள் ஆகியோர் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(26) ஓ! தேவி, வாக்கு தொடர்புடைய இவ்வறமும் மனிதர்களால் எப்போதும் பின்பற்றப்பட வேண்டும். அது மங்கலம் நிறைந்தமும், வாய்மையின் பண்பைக் கொண்டதுமாகும். ஞானம் கொண்ட மனிதர்கள் எப்போதும் பொய்யைத் தவிர்க்க வேண்டும்" என்றான்.(27)
உமை {மஹேஸ்வரனிடம்}, "ஓ! தேவர்களுக்குத் தேவா, ஓ! பினாகைபாணியே, ஓ! உயர்வாக அருளப்பட்டவரே, ஒரு மனிதன் கட்டப்படும் நிலையை அடையும் மனச்செயல்கள் அல்லது எண்ணங்கள் என்னென்ன?" என்று கேட்டாள்.(28)
மஹேஸ்வரன் {உமையிடம்}, "ஓ! தேவி, மனச் செயல்களில் இருந்து எழும் புண்ணியத்துடன் கூடிய ஒருவன் சொர்க்கத்திற்கு உயர்கிறான். ஓ! மங்கலமானவளே, அச்செயல்களைச் சொல்லப் போகிறேன்.(29) ஓ! இனிய முகம் கொண்டவளே, தீய பண்புகளால் ஒழுங்கமைக்கப்பட்ட மனம் எவ்வாறு தவறாக வழிநடத்தப்பட்ட, அல்லது தீய எண்ணங்களால் கட்டப்படுகிறது என்பதைச் சொல்கிறேன் கேட்பாயாக.(30)
தனிமையான காட்டில் கிடக்கும் பிறருக்குச் சொந்தமான உடைமைகளைக்கூட அபகரிக்க வேண்டுமென மனத்தாலும் நினைக்காத மனிதர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(31) வீட்டிலோ, கிராமத்திலோ கைவிடப்பட்டுத் தனியாகக் கிடக்கும் பிறருடைய உடைமைகளை அபகரிக்க நினைக்காத மனிதர்கள், சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(32) பிறருடைய மனைவிகளை வெறிச்சோடிய இடங்களில் கண்டாலும் ஆசையின் ஆதிக்கத்தில் அவர்களுடன் தொடர்புகொள்ள மனத்தாலும் நினையாத மனிதர்கள், சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(33) நண்பர்களையோ, பகைவர்களையோ சந்தித்தாலும் அனைவரிடமும் ஒரே நட்பு வழியிலேயே பழகும் மனிதர்கள், சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(34) கல்வியும், கருணையும் கொண்டவர்களும், உடலிலும், மனத்திலும் தூய்மை கொண்டவர்களும், வாய்மையைப் பின்பற்றுவதில் உறுதி கொண்டவர்களும், தாங்கள் கொண்டுள்ளவற்றில் நிறைவுடன் இருப்பவர்களுமான மனிதர்கள், சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(35)
எந்த உயிரினத்திற்கும் கெடுதி நினைக்காதவர்களும், அனைத்து உயிரினங்களிடமும் இதயப்பூர்வமான நட்பைக் கொண்டவர்களும், அனைத்திடமும் கருணை கொண்டவர்களுமான மனிதர்கள், சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(36) நம்பிக்கை கொண்டவர்களும், புனிதமானவர்களும், புனிமான மனிதர்களின் துணையை நாடுபவர்களும், சரி தவறு ஆகியவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளை அறிதவர்களுமான மனிதர்கள், சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(37) ஓ! தேவி, நல்ல மற்றும் தீய செயல்களின் விளைவுகளை அறிந்த மனிதர்கள், சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(38) செய்யும் காரியங்கள் அனைத்திலும் நீதியுடன் செயல்படுபவர்களும், விரும்பத்தக்க சாதனைகள் அனைத்தையும் கொண்டவர்களும், தேவர்களுக்கும், பிராமணர்களுக்கும் அர்ப்பணிப்புடன் இருப்பவர்களும், அனைத்து நற்செயல்களிலும் விடாமுயற்சியுடன் இருப்பவர்களுமான மனிதர்கள், சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(39) ஓ! தேவி, இந்த மனிதர்கள் அனைவரும் தாங்கள் செய்யும் செயல்களின் பலன்மிக்க விளைவுகளால் சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள். நீ வேறு என்ன கேட்க விரும்புகிறாய்?" என்றான்.(40)
உமை {மஹேஸ்வரனிடம்}, "ஓ! மஹேஸ்வரரே, மனிதர்கள் தொடர்புடைய ஒரு காரியத்தில் எனக்குப் பெரும் ஐயம் இருக்கிறது. அதைக் கவனமாக எனக்கு விளக்குவதே உமக்குத் தகும்.(41) ஓ! பலமிக்கத் தேவா, எந்தச் செயல்களைச் செய்வதன் மூலம் ஒரு மனிதன் நீண்ட வாழ்நாளை அடைகிறான்? எந்தத் தவங்களைச் செய்வதன் மூலம் அவன் நீண்ட வாழ்நாளை அடைகிறான்?(42) எந்தச் செயல்களைச் செய்வதன் மூலம் அவன் பூமியில் குறைந்த காலமே வாழ்கிறான்? ஓ! முற்றிலும் களங்கமற்றவரே, (செயல்படுபவனுக்கு நீண்ட மற்றும் குறுகிய வாழ்நாளை அளிப்பதில்) செயல்கள் உண்டாக்கும் விளைவுகளைக் குறித்து எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்.(43) சிலர் நற்பேற்றைப் பெறுவதும், சிலர் கெடுபேற்றைப் பெறுவதும் காணப்படுகிறது. சிலர் உன்னதப் பிறப்பைக் கொண்டவர்களாகவும், சிலர் உன்னதமற்ற பிறப்பைக் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.(44) சிலர் மரக்கட்டைகளால் ஆனவர்களைப் போல வெறுப்பூட்டும் குணம் கொண்டவர்களாகவும், அதே வேளையில் வேறு சிலர் முதல் பார்வையிலேயே இனிமையான குணங்களைக் கொண்டவர்களாகவும் தெரிகிறார்கள்.(45) சிலர் ஞானமற்றவர்களாகவும், சிலர் ஞானமுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். மேலும் சிலர் உயர்ந்த புத்தியையும் ஞானத்தையும் கொண்டனவர்களாக, அறிவு மற்றும் அறிவியலால் தெளிவடைந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.(46) சிலர் சிறு துன்பத்தை அனுபவிக்கிறார்கள், வேறு சிலர் மிகக் கனமான துன்பங்களை அனுபவிக்கிறார்கள். இத்தகைய பல்வேறு காட்சிகள் மனிதர்களுக்கு மத்தியில் காணப்படுகின்றன. ஓ! சிறப்புமிக்கவரே, இவை யாவற்றுக்கும் காரணம் என்ன என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டாள்.(47)
தேவர்களின் தேவன் {மஹேஸ்வரன்}, "ஓ! தேவி, செயல்களின் கனிகள் வெளிப்பாட்டைக் குறித்து நான் உனக்குச் சொல்லப் போகிறேன். அந்த வெளிப்பாட்டு விதிகளின்படியே மனிதர்கள் இவ்வுலகில் தங்கள் செயல்களின் விளைவால் இன்புறவும் துன்புறவும் செய்கிறார்கள்.(48) ஓ! தேவி, பிற உயிரினங்களின் உயிர்களை எடுக்கும் நோக்கில் கடும் தன்மையை ஏற்பவனும், பிற உயிரினங்களுக்குத் தீங்கிழைக்கத் தடிகளைக் கைகளில் ஏந்துபவனும், ஆயுதங்களை உயர்த்துபவனும், உயிரினங்களைக் கொல்பவனும்,(49) கருணையற்றவனும், உயிரினங்களுக்கு எப்போதும் கலக்கத்தை ஏற்படுத்துபவனும், எறும்பு மற்றும் புழுக்களுக்கும் பாதுகாப்பை வழங்க மறுப்பவனும், கொடூரம் நிறைந்தவனுமான ஒருவன்,(50) நரகில் மூழ்குகிறான். ஓ! தேவி, இதற்கு எதிர் மனநிலையில் இருந்து அறச்செயல்கள் செய்யும் ஒருவன் ஓர் அழகான மனிதனாகப் பிறக்கிறான்.(51) கொடூரமிக்க மனிதன் நரகத்திற்குச் செல்லும் அதே வேளையில் கருணை கொண்ட மனிதன் சொர்க்கத்திற்கு உயர்கிறான். நரகத்திற்குச் செல்லும் மனிதன் கடும் துன்பங்களை அனுபவிக்கிறான்.(52) நரகத்தில் மூழ்கும் ஒருவன், அதில் இருந்து எழுந்து குறைந்த வாழ்நாளைக் கொண்ட மனிதனாகப் பிறப்பெடுக்கிறான்.(53) ஓ! தேவி, தீங்கிழைக்கும், கொலை செய்யும் காரியங்களில் அடிமையாக இருக்கும் மனிதன் தன் பாவம் நிறைந்த செயல்களால் அழியத்தகுந்தவனாகிறான். அத்தகைய மனிதன் அனைத்து உயிரினங்களுக்கும் ஏற்பிலாதவனாகி, குறைந்த வாழ்நாளைப் பெறுகிறான்.(54)
வெள்ளை என்றழைக்கப்படும் வகைக்குரியவனும், உயிரினங்களைக் கொல்வதைத் தவிர்ப்பவனும், ஆயுதங்கள் அனைத்தையும் கைவிட்டவனும், ஒருவரையும் ஒருபோதும் தண்டிக்காதவனும், எவ்வுயிருக்கும் தீங்கிழைக்காதவனும்,(55) தனக்காக எவரையும் உயிரினங்களைக் கொல்லச் செய்யாதவனும், தானே தாக்கப்படும்போதும், தன்னைக் கொல்ல முயற்சி நடக்கும்போதும்கூட ஒருபோதும் தாக்காமல் அல்லது கொல்லாமல் இருப்பவனும், கொலைச்செயலை ஒருபோதும் அங்கீகரிக்காதவனும், அல்லது அனுமதிக்காதவனும், அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்டவனும், தன்னைப் போலவே பிறரிடமும் நடந்து கொள்பவனுமான(56) மேன்மையான மனிதன், ஓ! தேவி, தேவர்களின் நிலையை அடைவதில் வெல்கிறான். அத்தகைய மனிதன் மகிழ்ச்சி நிறைந்தவனாகப் பல்வேறு வகை ஆடம்பரப் பொருட்களை அனுபவிப்பவனாகிறான்.(57) அத்தகையவன், மனிதர்களின் உலகில் பிறக்க நேர்ந்தால் அவன் நெரும் வாழ்நாளை அடைந்து, பெரும் மகிழ்ச்சியை அனுபவிக்கிறான்.(58) உயிரினங்களைக் கொல்வதைத் தவிர்க்கும் பண்பைக் குறியீடாகக் கொண்ட இந்த வழியை அறவொழுக்கம் ஒழுகுபவர்களுக்கும், நெடும் வாழ்நாளால் அருளப்பட்டவர்களுக்கும் உரிய வழியாகச் சுயம்புவான பிரம்மனே குறிப்பிட்டிருக்கிறான்" என்றான் {சிவன்}.(59)
அநுசாஸனபர்வம் பகுதி – 144ல் உள்ள சுலோகங்கள் : 59
ஆங்கிலத்தில் | In English |