The path of Righeous! | Anusasana-Parva-Section-145 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 145)
பதிவின் சுருக்கம் : சொர்க்கத்தை வெல்லும் மனோநிலை, ஒழுக்கம், செயல்கள் மற்றும் கொடைகள்; ஞானத்தை அடையச் செய்யும் செயல்கள்; நன்மைக்கு வழிவகுக்கும் செயல்கள்; பல்வேறு இயல்புகளை உண்டாக்கும் செயல்கள் ஆகியவை குறித்த உமையின் கேள்விகளுக்குப் பதிலளித்த சிவன்...
உமை {மஹேஸ்வரனிடம்}, "ஒரு மனிதன், எந்த இயல்பு {மனோநிலை}, ஒழுக்கம், செயல்கள், கொடைகள் ஆகியவற்றால் சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறான்?" என்று கேட்டாள்.(1)
மஹேஸ்வரன் {உமையிடம்}, "தாராள மனநிலை கொண்டவனும், பிராமணர்களை மதிப்பவனும், அவர்களை விருந்தோம்பலுடன் நடத்துபவனும், இல்லாதவர்கள், குருடர்கள் மற்றும் துன்புறுவோருக்கு உணவு, பானம், ஆடைகள் மற்றும் வேறு இன்பநுகர் பொருட்களைக் கொடையளிப்பவனும்,(2) வீடுகளைக் கொடையளிப்பவனும், (பொதுப் பயன்பாட்டுக்காக) மண்டபங்கள் கட்டுபவனும், கிணறுகளைத் தோண்டுபவனும், (வெப்பமான மாதங்களின் பயணிகளின் தாகம் தணிக்க) உறைவிடங்களைக் கட்டி, குளிர்ந்த தூய நீரை விநியோகிப்பவனும், குளங்களை வெட்டுபவனும், ஒவ்வொருநாளும் இலவசக் கொடைகள் அளிக்க ஏற்பாடு செய்பவனும், வந்து வேண்டுவோர் அனைவருக்கும் கொடையளிப்பவனும்,(3) இருக்கைகள், படுக்கைகள், வாகனங்கள், செல்வம், ரத்தினங்கள், வீடுகள், அனைத்து வகைத் தானியங்கள், பசுக்கள், வயல்கள் மற்றும் பெண்களை உற்சாகமிக்க இதயத்துடன் கொடையளிப்பவனுமான ஒருவன், ஓ! தேவி, சொர்க்கவாசியாகிறான்.(4,5)
அவன் அங்கே {சொர்க்கத்தில்} நீண்ட காலம் வசித்திருந்து பல்வேறு வகை மேன்மையான பொருட்களை அனுபவிப்பான். தன் காலத்தை அப்சரஸ்கள் துணையுடன் இன்பமாகக் கழிக்கும் அவன், நந்தவனத்திலும், இன்னும் பிற இனிமையான பகுதிகளிலும் விளையாடித் திளைத்திருப்பான்.(6) ஓ! தேவி, அவன் தன் பலன்கள் தீர்ந்ததும் சொர்க்கத்தில் இருந்து விழுந்து, இன்பத்திற்குரிய பொருட்கள் நிறைந்த, பெரும் அதிகராம் மிக்க, அபரிமிதமான செல்வம் கொண்ட மனிதனாகப் பிறக்கிறான்.(7) அப்பிறவியில் அவன் பசியிலும், உணவிலும் நிறைவடையும் பொருட்கள் அனைத்துடன் கூடியவனாகிறான். உண்மையில் அத்தகைய பொருட்களுடன் அருளப்படும் அவன் செல்வாக்கு நிறைந்தவனாகவும், கருவூலம் நிறைந்தவனாகவும் இருப்பான்.(8) ஓ! தேவி, சுயம்புவான பிரம்மன், இத்தகைய மனிதர்கள், தாராள மனத்தையும் இனிமையான குணங்களையும், உயர்வான அருளையும் பெறுவர் எனப் பழங்காலத்தில் சொல்லியிருக்கிறான்.(9) ஓ! தேவி, கொடைகள் அளிக்க இயலாத வேறு சிலரும் இருக்கிறார்கள். அற்ப புத்தி கொண்டவர்களான சிலர், அபரிமிதமான சொல்வத்தைக் கொண்டிருந்தாலும், பிராமணர்களால் கேட்கப்படும்போதுகூடக் கொடையளிக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள்.(10)
இல்லாதவர்கள், குருடர்கள், துன்பத்திலிருப்போர், துறவிகள், தங்கள் வசிப்பிடத்திற்கு வந்த விருந்தினர்கள் ஆகியோரைக் கண்டும், அவர்களால் வலிய கேட்கப்பட்டும்கூடச் சுவைப்புலனை {நாவை} நிறைவடையச் செய்யும் விருப்பத்தால் எப்போதும் நிறைந்த அம்மனிதர்கள் திரும்பிக் கொள்வார்கள்.(11) அவர்கள் செல்வக்கொடையோ, ஆடைகள், உணவுகள், பொன், பசுக்கள் மற்றும் எவ்வகை உணவுக் கொடையோ ஒருபோதும் கொடுப்பதில்லை.(12) ஓ! தேவி, துன்பத்தில் உள்ளோரை விடுவிக்க மனமில்லாதவர்களும், பேராசை நிறைந்தவர்களும், சாத்திரங்களில் நம்பிக்கையற்றவர்களும், கொடையளிக்காதவர்களுமான இந்த அற்ப மனிதர்கள் நரகத்தில் மூழ்குவார்கள்.(13) நரகத்தில் துன்பத்தை அனுபவிக்க வேண்டிய காலம் முடிந்ததும் அவர்கள் முற்றிலும் செல்வமற்ற குடும்பங்களில் மனிதனாகப் பிறப்பார்கள்.(14) எப்போதும் பசியாலும், தாகத்தாலும் பீடிக்கப்பட்டு, பண்பட்ட சமூகத்திலிருந்து விலக்கபட்டு, நல்ல பொருட்கள் எதையும் அனுபவிக்கும் நம்பிக்கையற்று, மிக இழிந்த வகை வாழ்வையே அவர்கள் வாழ்வார்கள்.(15)
அனுபவிக்கத்தகுந்த பொருட்கள் ஏதும் இல்லாத குடும்பங்களில் பிறக்கும் இந்த மனிதர்கள், பூமியில் உள்ள நல்ல பொருட்கள் எதையும் அனுபவிப்பதில் வெல்ல மாட்டார்கள். உண்மையில், ஓ! தேவி, அந்த மனிதர்கள் தங்கள் செயல்களின் மூலமே இழிந்த, வறிய நிலையை அடைவார்கள்.(16) செல்வ வளங்களால் உண்டான ஆணவமும், செருக்கும் நிறைந்த வேறு சிலரும் இருக்கிறார்கள். உணர்வற்ற அந்த இழிந்தவர்கள், தகுந்தோருக்கும் ஒருபோதும் இருக்கை அளிக்க மாட்டார்கள்.(17) அற்ப புத்தியைக் கொண்ட அவர்கள் அவ்வாறு மதிக்கத் தகுந்தோருக்கும் வழிகொடுக்க மாட்டார்கள். கொடுக்கப்பட வேண்டியவர்களுக்கும் கால்களைக் கழுவிக்கொள்ள நீரும் கொடுக்க மாட்டார்கள்.(18) உண்மையில், விதிக்கேற்புடைய வகையில், அர்க்கிய கொடைகளுடன் கௌரவிக்கத்தகுந்த மனிதர்களை அவர்கள் கௌரவிப்பதில்லை, அவர்கள் மதிக்கத்தகுந்தவர்களுக்கும் வாய் கழுவ நீர் கொடுப்பதில்லை.(19)
தங்கள் ஆசான்கள் தங்கள் வீடுகளுக்கு வரும்போது, அவர்கள் ஆசான்களை நடத்தும் வகையில் அவர்களை நடத்துவதில்லை. பேராசை மற்றும் ஆணவத்துடன் வாழும் அவர்கள் பெரியோரையும், வயது முதிர்ந்தோரையும், அன்புடனும், பாசத்துடனும் நடத்த மறுக்கின்றனர். மதிக்கத் தகுந்தோரையும் அவமதித்து, மதிப்பையோ, பணிவையோ வெளிப்படுத்தாமல் தங்கள் மேன்மையை உறுதி செய்கின்றனர். ஓ! தேவி, அத்தகைய மனிதர்கள் நரகில் மூழ்குவார்கள்.(20,21) நீண்ட காலத்திற்குப் பிறகு அவர்கள் தங்கள் துன்பகாலம் முடிவடைந்து நரகத்தில் இருந்து எழுந்து, மனித வகையில் இழிந்த குடும்பங்களில் பிறக்கின்றனர்.(22) உண்மையில், தங்கள் ஆசான்களையும், பெரியோர்களையும் அவமதிப்பவர்கள், மிக இழிந்தவர்களும், புத்தியற்றவர்களுமான ஸ்வபாகர்கள் மற்றும் புல்கஸர்களின் சாதிகளில் பிறவி எடுக்கின்றனர்.(23)
ஆணவமற்றவன், அல்லது செருக்கற்றவன், தேவர்கள் மற்றும் பிராமணர்களை வழிபடுபவன், உலகத்தால் மதிக்கப்படுபவன், தனது மதிப்புக்குரிய அனைவரையும் வணங்குபவன், மென்மையான, இனிமையான சொற்களைப் பேசுபவன்,(24) அனைத்து வகை {வர்ண} மனிதர்களுக்கு நன்மையைச் செய்பவன், அனைத்து உயிரினங்களின் நன்மையிலும் அர்ப்பணிப்பு கொண்டவன், எவரிடமும் வெறுப்புணர்வு கொள்ளாதவன், இனிய நாவைப் படைத்தவன், இனிய குளுமையான சொற்களைச் சொல்பவன்,(25) வழிவிடத்தகுந்தோருக்கு வழிவிடுபவன், ஆசான்கள் துதிக்கப்படத்தகுந்த வகையிலேயே தன் ஆசான்களைத் துதிப்பவன், எந்த உயிரினத்திடமும் குறை காணாதவன், பெரியோரையும், விருந்தினரையும் தகுந்த முறையில் வழிபடுபவன்,(26) இயன்ற அளவுக்கு விருந்தினர்களைப் பெற விரும்புபவன், தன் வீட்டுக்கு வந்து மதிப்பவர்கள் அனைவரையும் வழிபடுபவனுமான ஒருவன்,(27) ஓ! தேவி, சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறான். அவன் தன் புண்ணியம் தீர்ந்ததும் மனித வகையில் உயர்ந்த மதிக்கத்தகுந்த குடும்பத்தில் பிறக்கிறான்.(28) அந்த வாழ்விலும் அவன் மகிழ்ச்சிக்குரிய அனைத்து வகைப் பொருட்களையும், ரத்தினங்கள் மற்றும் அனைத்து வகைச் செல்வத்தையும் அபரிமிதமாகப் பெற்றவனாக இருப்பான். அவன் தகுந்த மனிதர்களுக்கு அவர்களுக்குத் தகுந்தவற்றைக் கொடுக்கிறான். அவன் அனைத்து வகைக் கடமைகளையும், அறச்செயல்கள் அனைத்தையும் நோற்பதில் அர்ப்பணிப்புடன் இருக்கிறான்.(29) அனைத்து உயிரினங்களாலும் கௌரவிக்கப்பட்டு, அவற்றின் மதிப்பைப் பெற்று தன் செயல்களுக்கான கனிகளை அவன் அடைகிறான். அத்தகைய மனிதன் இவ்வுலகில் உயர்ந்த குலத்தில் பிறக்கிறான். நான் உனக்குச் சொன்ன இவற்றைப் பழங்காலத்தில் விதி சமைத்தவனே (பிரம்மனே) சொல்லியிருக்கிறான்.(31)
நடத்தையில் கடுமையாக இருப்பவனும், அனைத்து உயிரினங்களையும் அச்சத்தில் பீடிப்பவனும், கைகள், கால்கள், கயிறுகள், தடிகள், கல்துண்டுகள், மண்ணாங்கட்டிகள் ஆகியவற்றைக் கொண்டு பிற உயிரினங்களுக்குக் காயமேற்படுத்தித் துன்புறுத்துபவன், உயிரினங்களைக் கொல்வதற்காகப் பல்வேறு வகை வஞ்சங்களைப் பயில்பவன், விலங்குகளை விரட்டி அவற்றை அச்சுறுத்துபவன் என இவ்வழியில் தன்னை நடத்திக் கொள்ளும் ஒரு மனிதன் நிச்சயம் நரகத்தில் மூழ்குவான்.(32-34) காலப்போக்கில் அவன் மனித குலத்தில் பிறந்தால், அனைத்து வகைத் தடைகளாலும் அனைத்துப் புறங்களிலும் பீடிக்கப்படும் இழிந்த குலம், அல்லது குடும்பத்தில் பிறப்பை அடைவான்.(35) அவன் உலகமெங்கும் வெறுப்புக்குகந்த ஒரு பொருளாகிறான். மனிதர்களில் இழிந்தவனான அவன் தான் செய்யும் செயல்களின் விளைவாலேயே அவ்வாறு ஆகிறான்.(36)
கருணை கொண்ட மற்றொருவன், தன் கண்களை அனைத்து உயிரினங்களிலும் செலுத்துகிறான். நட்புப் பார்வையுடன் கொண்ட அவன், அனைத்து உயிரினங்களிடமும் அவற்றின் தந்தையைப் போல நடந்து கொண்டு, எந்த வகைப் பகை உணர்வும் இல்லாமல், தன் விருப்பங்களை முழுக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் அவன்,(37) எந்த உயிரினத்திற்கும் வெறுப்பூட்டாமல், எப்போதும் கட்டுக்குள் உள்ள தன் கரங்கள் மற்றும் கால்கள் மூலமாக அவற்றை ஒருபோதும் அச்சுறுத்தாமல் இருக்கிறான். அவன் அனைத்து உயிரினங்களின் நம்பிக்கையை ஈர்க்கிறான்.(38) அவன் கயிறுகள், தடிகள், கற்கள், மண்ணாங்கட்டிகள் அல்லது எவ்வகை ஆயுதத்தாலும் ஒருபோதும் எந்த உயிரினத்தையும் பீடிப்பதில்லை. அவனுடைய செயல்கள் ஒருபோதும் கடுமையாகவோ, கொடூரமாகவோ இருப்பத்தில்லை, அவன் அன்பு நிறைந்தவனாவான்.(39) இத்தகைய நடைமுறைகளையும், ஒழுக்கத்தையும் கொண்ட ஒருவன் நிச்சயம் சொர்க்கத்திற்கு உயர்கிறான். அங்கே அவன் அனைத்து வசதிகளும் நிறைந்த தெய்வீக மாளிகையில் ஒரு தேவனைப் போல வாழ்கிறான்.(40) அவன் செய்த புண்ணியங்கள் தீர்ந்து போனால், அவன் எவ்வகைச் சிரமங்களுடனும் போராடாத, எவ்வக அச்சத்தையும் சந்திக்காத ஒரு மனிதனாகப் பிறப்பை அடைகிறான். உண்மையில், அவன் பெரும் மகிழ்ச்சியை அனுபவிக்கிறான்.(41) இன்பத்துடன் கூடிய அவன், தன் வாழ்வாதாரத்திற்காகத் துன்பமிக்க உழைப்பைச் செலுத்தவேண்டிய கடப்பாடு இல்லாமல், அனைத்து வகைக் கவலைகளில் இருந்தும் விடுபட்டவனாக வாழ்கறான். ஓ! தேவி, இதுவே அறவோரின் பாதையாகும். இதில் எந்தத் தடைகளோ, துன்பங்களோ கிடையாது" என்றான் {சிவன்}.(42)
உமை {மஹேஸ்வரனிடம்}, "இவ்வுலகில் சில மனிதர்கள், அவற்றுக்கு {அறப்பாதைக்கு} வழிவகுக்கும் உய்த்துணர்வு மற்றும் முதற்கோள்களை நன்கறிந்தவர்களாக இருக்கிறார்கள். உண்மையில் அறிவியலையும், அறிவையும் கொண்ட அவர்கள் கல்வி மற்றும் ஞானம் கொண்ட பெரும் சந்ததியைப் பெற்றிருக்கிறார்கள்.(43) ஓ! தேவா, ஞானம், அறிவியல், அறிவு ஆகியவை அற்ற வேறு சிலர் மடமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். எந்தக்குறிப்பிட்ட செயலைச் செய்வதன் மூலம் ஒரு மனிதன் ஞானத்தை அடையலாம்? எந்தச் செயல்களைச் செய்வதன் மூலம் சிறு ஞானத்தையும், தெளிவற்ற பார்வையையும் ஒருவன் அடைகிறான்? ஓ! கடமைகளை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையானவரே என்னுடைய இந்த ஐயத்தை நீர் விலக்குவீராக.(45) ஓ! தேவா, பிறந்ததிலிருந்தே குருடாக இருக்கும் வேறு சிலரும் இருக்கிறார்கள். மேலும், நோய்வாய்ப்பட்டவர்கள், பீடிக்கப்பட்டவர்கள், ஆண்மையற்றவர்கள் எனவேறு சிலரும் இருக்கிறார்கள். ஓ! தேவா, இதற்கான காரணத்தை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டாள்.(46)
மஹேஸ்வரன் {உமையிடம்}, "தங்கள் நன்மைக்கானது எது, தங்கள் கேட்டுக்கானது எது என வேதங்கற்ற பிராமணர்களிடம் எப்போதும் விசாரிக்கும் மனிதர்கள் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டு, அனைத்துக் கடமைகளையும் அறிந்து,(47) அனைத்து வகைத் தீச்செயல்களையும் தவிர்த்து, நற்செயல்களை மட்டுமே செய்து, இங்குள்ள வரை பெரும் மகிழ்ச்சியில் திளைத்து, இவ்வுலகில் இருந்து செல்லும்போது, சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறார்கள்.(48) உண்மையில், அவர்கள் தங்கள் புண்ணியங்கள் தீர்ந்துவிடும்போது, மானிட லோகத்தில் பெரும் நுண்ணறிவுமிக்க மனிதனாகப் பிறக்கிறார்கள். அவர்களுடன் பிறந்த புத்தியின் விளைவால் அனைத்து வகை இன்பங்களும், மங்கலங்களும், அவர்களுடையதாகிறது.(49) பிற மனிதர்கள் மணந்து கொண்ட மனைவிகள் மீது தனது தீய கண்களைச் செலுத்துபவன், அந்தப் பாவச் செயலின் விளைவால் பிறவிக் குருடாகச் சபிக்கப்படுகிறான்.(50) தங்கள் இதயத்தில் உள்ள விருப்பத்தால் தூண்டப்பட்டு, நிர்வாணப் பெண்கள் மீது தங்கள் கண்களைச் செலுத்துபவர்களும், தீச்செயல் செய்பவர்களுமான மனிதர்கள் இவ்வுலகில் பிறந்து, தொடர்நோயில் அவதிப்பட்டு, தங்கள் மொத்த வாழ்வையும் கடத்துகிறார்கள்.(51) மூடர்களும், தீச்செயல்களைச் செய்பவர்களும், தங்கள் வகையில் இருந்து வேறுபட்ட வகையைச் சார்ந்த பெண்களுடன் பாலியல் கலவியில் ஈடுபடுபவர்களுமான அற்ப ஞானம் கொண்ட மனிதர்கள், தங்கள் அடுத்தப் பிறவியில் ஆண்மையற்றவர்களாகப் பிறக்கிறார்கள்.(52) விலங்குகளைக் கொல்லச் செய்தவர்கள், தங்கள் ஆசான்களின் படுக்கையைக் களங்கம் செய்தவர்கள், கண்டபடி பாலியல் கலவிகளில் ஈடுபடுபவர்கள் ஆகியோர் தாங்கள் பிறக்கபோகும் அடுத்தப் பிறவியில் ஆண்மையற்ற மனிதர்களாகப் பிறப்பார்கள்" என்றான் {சிவன்}.(53)
உமை {மஹேஸ்வரனிடம்}, "ஓ! தேவர்களில் முதன்மையானவரே, எந்தச் செயல்கள் களங்கமுள்ளவை, எந்தச் செயல்கள் களங்கமற்றவை? உண்மையில், எந்தச் செயல்களைச் செய்வதன் மூலம் மனிதன் தனக்கான உயர்ந்த நன்மையை அடைவதில் வெல்கிறான்?" என்று கேட்டாள்.(54)
மஹேஸ்வரன் {உமையிடம்}, "எது அறமென உறுதிசெய்ய விரும்புபவன், முக்கிய அறங்கள் மற்றும் சாதனைகளை அடைய விரும்புபவன், தனக்கான உயர்ந்த நன்மைக்கு வழிவகுக்கும் பாதையைக் கண்டடையும் நோக்கில் பிராமணர்களிடம் எப்போதும் கேள்வி கேட்பவனுமான மனிதன், சொர்க்கத்திற்கு உயர்வதில் வெல்கிறான்.(55) (தன் பலன் தீர்ந்ததும்) அவன் மானிடப் பிறவியாய் பிறந்தால் அவன் புத்தியும், நினைவும், பெரும் ஞானமும் கொண்டவனாக இருப்பான்.(56) ஓ! தேவி, இதுவே அறவோர் பின்பற்ற வேண்டிய பெரும் நன்மை நிறைந்த ஒழுக்கக்கோடாகும். நான் மனிதர்களின் நன்மைக்கானதை உனக்குச் சொன்னேன்" என்றான்.(57)
உமை {மஹேஸ்வரனிடம்}, "அறத்தை வெறுப்பவர்களும், அற்ப புத்தி கொண்டவர்களுமான மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வேதங்களை அறிந்த பிராமணர்கள் ஒருபோதும் அணுக விரும்புவதில்லை.(58) சிராத்தம் செய்யும் கடமையில் அர்ப்பணிப்புள்ளவர்களும், நோன்புகளை நோற்பவர்களுமான வேறு சிலர் இருக்கின்றனர். மேலும், நோன்புகள் ஏதும் அற்றவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் நோன்புகளைக் குறித்து மனத்தில் கொள்ளாதவர்களாகவும், ஒழுக்கத்தில் ராட்சசர்களைப் போலவும் இருக்கிறார்கள்.(59) வேள்வி செய்வதில் அர்ப்பணிப்புள்ளவர்களும், ஹோமம் செய்வதில் மனம் கொள்ளாதவர்களாகவும் சிலர் இருக்கிறார்கள். எந்தச் செயல்களைச் செய்வதன் மூலம் மனிதர்கள் இவ்வாறு பல்வேறு வகை இயல்புகளைக் கொண்டவர்களாகிறார்கள்?" என்று கேட்டாள்.(60)
மஹேஸ்வரன் {உமையிடம்}, "வேதங்களின் மூலம் மனிதர்களுக்கான அனைத்து செயல்களுக்கும் எல்லைகள் வரையறைசெய்யப்பட்டுள்ளன. வேத அதிகாரத்தின்படி தங்களை ஒழுங்கமைத்துக் கொள்ளும் மனிதர்கள் (தங்கள் மறுபிறவிகளில்) நோன்புகள் நோற்பதில் அர்ப்பணிப்பு கொண்டவர்களாகக் காணப்படுகிறார்கள்.(61) எனினும், மடமையின் ஆதிக்கத்திற்கு ஆட்படும் மனிதர்கள் அதற்கு முரணான மறத்தை {அறமற்ற தன்மையை} ஏற்றுக் கொண்டு, நோன்புகளற்றவர்களாகவும், கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறுபவர்களாகவும், இறுதியில் பிரம்மராட்சசர்களாகவும் கருதப்பட நேர்கிறார்கள். உண்மையில், இந்த மனிதர்களே ஹோமத்தை மனத்தில் கொள்ளாமல் ஒருபோதும் வஷத்தையும், வேறு புனித மந்திரங்களையும் சொல்லாமல், மனிதர்களில் இழிந்தவராகக் கருதப்படுகிறார்கள்.(62,63) ஓ! தேவி, உன் ஐயங்களை விலக்குவதற்காக, மனிதர்கள் தொடர்புடைய கடமைப் பெருங்கடலில் உள்ள பாவங்கள் எதையும தவிர்க்காமல் மொத்தமாக உனக்கு விளக்கியிருக்கிறேன்" என்றான் {சிவன்}"[1].(64)
[1] கங்குலியில் 140ம் அத்தியாயம் முதல், 146ம் அத்தியாயம் வரை 7 அத்தியாயங்களில் சுருங்கச்சொல்லப்பட்டுள்ள இந்த உமாமஹேஸ்வர உரையாடல் கும்பகோணம் பதிப்பில் அத்தியாயம் 204 முதல் 250 வரை 47 அத்தியாயங்களில் விரிவாக உரைக்கப்படுகிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும் கங்குலியில் உள்ள அத்தியாயங்கள் மட்டுமே இருக்கின்றன.
அநுசாஸனபர்வம் பகுதி – 145ல் உள்ள சுலோகங்கள் : 64
ஆங்கிலத்தில் | In English |