Eternal duties of women! | Anusasana-Parva-Section-146 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 146)
பதிவின் சுருக்கம் : உமையிடம் பெண்களின் அறம் குறித்துக் கேட்ட சிவன்; ஆறுகளிடம் ஆலோசனை கேட்ட உமை; உமையை உரைக்கும்படி கங்கை கோரியது; பெண்களின் அறம் குறித்து சிவனுக்குச் சொன்ன உமை...
நாரதர், "இந்தச் சொற்களைச் சொன்ன பலமிக்க மஹாதேவன், (தானே பேசிக்கொண்டிருப்பதற்குப் பதிலாகக்) கேட்க விரும்பி, தன் அருகில் அமர்ந்திருந்தவளும், தன் விருப்பத்தையே செய்ய விருப்பம் கொண்டவளுமான அன்புக்குரிய தன் மனைவியிடம் {உமையிடம்} கேள்வி கேட்டான்.(1)
மஹாதேவன் {உமையிடம்}, "ஓ! தேவி, எது பரம், எது அல்ல {பரமல்ல} என்பதை அறிந்தவள் நீ. ஓ! தவசிகளின் ஆசிரமங்களில் வசிக்க விரும்புபவளே, கடமைகள் அனைத்தையும் அறிந்தவள் நீ. ஓ! மலைகளின் மன்னனான இமவான் மகளே, நற்குணமனைத்தையும், அழகிய புருவங்களையும், அழகான சுருள் நுனி மயிரைக் கொண்டவள் நீ.(2) அனைத்துக் காரியத்திலும் திறம்பெற்றவள் நீ. தற்கட்டுப்பாட்டையும், அனைத்து உயிரினங்களிடமும் சரிநிகரான பார்வையும் கொண்டவள் நீ. மமதை அற்று அனைத்துக் கடமைகளையும் செய்பவள் நீ.(3)
பிரம்மனின் பத்தினி {கற்புடை மனைவி} சாவித்திரி ஆவாள்.
இந்திரனின் பத்தினி சச்சி ஆவாள்.
மார்க்கண்டேயரின் மனைவி தூமோர்ணை ஆவாள்.
(மன்னன்) வைஸ்ரவணனின் {குபேரனின்} மனைவி ருத்தி ஆவாள்.(4)
வருணனின் மனைவி கௌரி ஆவாள்.
சூரியனின் மனைவி ஸுவர்ச்சலை ஆவாள்.
சசியின் {சந்திரனின்} மனைவி ரோஹிணி ஆவாள்.
விபாவசுவின் {அக்னியின்} மனைவி ஸ்வாஹாதேவி ஆவாள்.(5)
கசியபரின் மனைவி அதிதி ஆவாள்.
இவர்கள் அனைவரும் தங்கள் தங்கள் கணவர்களையே தங்கள் தேவர்களாகக் கருதுகிறார்கள். ஓ! தேவி, நீ நாள்தோறும் அவர்களோடு பேசிக் கொண்டிருக்கிறாய்.(6)
பிரம்மனின் பத்தினி {கற்புடை மனைவி} சாவித்திரி ஆவாள்.
இந்திரனின் பத்தினி சச்சி ஆவாள்.
மார்க்கண்டேயரின் மனைவி தூமோர்ணை ஆவாள்.
(மன்னன்) வைஸ்ரவணனின் {குபேரனின்} மனைவி ருத்தி ஆவாள்.(4)
வருணனின் மனைவி கௌரி ஆவாள்.
சூரியனின் மனைவி ஸுவர்ச்சலை ஆவாள்.
சசியின் {சந்திரனின்} மனைவி ரோஹிணி ஆவாள்.
விபாவசுவின் {அக்னியின்} மனைவி ஸ்வாஹாதேவி ஆவாள்.(5)
கசியபரின் மனைவி அதிதி ஆவாள்.
இவர்கள் அனைவரும் தங்கள் தங்கள் கணவர்களையே தங்கள் தேவர்களாகக் கருதுகிறார்கள். ஓ! தேவி, நீ நாள்தோறும் அவர்களோடு பேசிக் கொண்டிருக்கிறாய்.(6)
ஓ! அனைத்துக் கடமைகளையும் அறிந்தவளே, ஓ! எப்போதும் அறத்திற்கிணக்கமான சொற்களைச் சொல்பவளே, இந்தக் காரணத்திற்காகவே நான் பெண்களின் கடமைகள் குறித்து உன்னிடம் கேட்க விரும்புகிறேன். இக்காரியம் குறித்து நீ தொடக்கத்தில் இருந்தே உரையாடுவதைக் கேட்க விரும்புகிறேன்.(7) நீ என்னோடு சேர்ந்து அனைத்துக் கடமைகளையும் செய்கிறாய். உன் ஒழுக்கம் சரியாக என்னுடையதைப் போன்றது, நான் நோற்கும் நோன்புகளையே நீயும் நோற்கிறாய். உன் பலமும், சக்தியும் எனக்கிணையானவை, நீ கடுந்தவங்களைச் செய்திருக்கிறாய். உன்னால் பேசப்படும் காரியம் பெரும் பலன் மிக்கதாகும். உண்மையில், அந்த உரை உலகில் அதிகாரமிக்கதாகும்.(9) பெண்களே, பெண்களின் உயர்ந்த புகலிடமாவர் {பெண்களுக்குப் பெண்களே கதி}. ஓ! அழகிய இடையைக் கொண்டவளே, மனிதர்களுக்கு மத்தியில் நீ விதிக்கும் ஒழுக்க நடைமுறைகள் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்படும்.(10) என்னுடைய பாதி உடல் உன்னுடைய பாதி உடலாலானதாகும். நீ எப்போதும் தேவர்களின் காரியங்களைச் செய்வதில் ஈடுபடுகிறாய். பூமியில் மக்கள் பெருகுவதற்குக் காரணமாகவும் இருக்கிறாய்.(11) ஓ! மங்கல மங்கையே, பெண்களின் நித்திய கடமைகள் அனைத்தையும் நீ நன்கு அறிவாய். எனவே, உன் பாலினத்திற்கான {பெண்ணினத்திற்கான} கடமைகளை எனக்கு விரிவாகச் சொல்வாயாக" என்று கேட்டான்.(12)
உமை {மஹேஸ்வரனிடம்}, "ஓ! புனிதமானவரே, ஓ! படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் தலைவா, கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய அனைத்திற்கும் மூலமானவரே, உமது அருளின் மூலம் என் மனத்தில் எழும் சொற்களைப் பேசப் போகிறேன்.(13) ஓ! தேவர்களின் தேவா, (என் பாலினத்தைச் சேர்ந்தவையும்) தீர்த்தங்கள் அனைத்தின் நீரையும் கொண்ட இந்த ஆறுகள் அனைத்தும், அவற்றில் உமது தூய்மைச்சடங்குகளை நீ செய்து கொள்வதற்கேதுவாக உம்மை அணுகுகின்றன[1].(14) அவற்றிடம் ஆலோசித்துவிட்டு நீர் சொன்ன காரியத்தை முறையாகச் சொல்கிறேன். தகுதிவாய்ந்தவனாக இருப்பினும், தற்பெருமை பேசுவதில் இருந்து விடுபட்டிருக்கும் மனிதனே ஒரு புருஷன் என்று அழைக்கப்படுகிறான்[2].(15) ஓ! அனைத்துயிரினங்களின் தலைவா, பெண்களைப் பொறுத்தவரையில் அவள் தன் பாலினம் கொண்டவர்களையே பின்பற்றுகிறாள். இந்த முதன்மையான ஆறுகளிடம் ஆலோசிப்பதன் மூலம் அவை என்னால் கௌரவிக்கப்பட்டவையாக இருக்கும்.(16) புனிதமான சரஸ்வதி ஆறுகள் அனைத்திலும் முதன்மையானவள் ஆவாள். பெருங்கடலை நோக்கிச் செல்லும் அவள் உண்மையில் ஓடைகள் அனைத்திலும் முதல்வியாவாள்.(17) விபாசை, விதஸ்த்யை, சந்திரபாகை, ஐராவதி, சதத்ரு, தேவிகையாறு, {சிந்து, கௌதமி}, கௌசிகி, கோமதி[3],(18) {யமுனை, நர்மதை, காவேரி மற்றும்} தன்னுள் அனைத்து தீர்த்தங்களையும் கொண்டவளும், ஓடைகள் அனைத்திலும் முதன்மையாகக் கருதப்படுபவளும், சொர்க்கத்தில் எழுந்து, பூயியில் இறங்கி வந்த தெய்வீக ஆறுமான கங்கா தேவி ஆகியோர் இங்கே இருக்கின்றனர்" என்றாள்.(19)
[1] "நதிகள் அல்லது ஆறுகள் பெண்களாகும். ஆனால், சிந்து போன்ற குறிப்பிடத்தக்க ஆண் ஆறுகள் இருக்கின்றன. தீர்த்தங்கள் என்பன புனித நீர்நிலைகளாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] "பகட்டு மற்றும் ஆணவத்தில் இருந்து விடுபட்ட ஒருவனே புருஷன் என அழைக்கப்படத் தகுந்தவனாவான். ஒருவன் தானே திறன்மிக்கவனாக இருந்தாலும் பிறரின் உதவியை நாடுவது பகட்டின்மையாகக் குறிப்பிடப்படுகிறது. பெண்கள் தங்கள் இயல்பின்படி பெண்களேயே பின்பற்றுகின்றனர். சிவன் தானே திறன்மிக்கவனாக இருப்பினும் இக்காரியம் குறித்து அவளைப் பேசச் சொன்னதால் இது பார்வதி சிவனுக்குச் செலுத்தும் பாராட்டாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] "இங்கே உள்ள சிந்து என்ற சொல் சிந்து நதியைக் குறிக்காமல் ஆறு என்ற பொதுச் சொல்லாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இலக்கணரீதியாக அது தேவிகையின் தகுதியைப் பெறுகிறது. தேவிகை என்பது சரயு ஆற்றின் மற்றொரு பெயராகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "விபாசை, விதஸ்த்யை, சந்திபாகை, ஸரஸ்வதி, சதத்ரு, தேவிகை, ஸிந்து, கௌதமி, கௌசிகி, யமுனை, நர்மதை, காவேரி, தேவநதியும், ஸ்வர்க்கமத்திய பாதாளங்களென்று மூன்று உலகங்களிலும் ஸஞ்சரித்து நன்மையைச் செய்பவளும், எல்லாப் புண்யதீர்த்தங்களையும் வசிப்பவளும் எல்லாப் பாவங்களையும் போக்குபவளுமான கங்கை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போன்றே இருக்கிறது.
அறவோர் அனைவரிலும் முதன்மையான தேவர்களுக்குத் தேவனின் மனைவி இதைச் சொல்லிவிட்டுத் தன் பாலினத்தைச் சேர்ந்தவர்களான அந்த ஆறுகள் அனைத்திடமும் புன்னகைத்தவாறே பேசினாள்.(20) உண்மையில், அனைத்துக் கடமைகளையும் செய்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அந்தப் பெருந்தேவனின் மனைவி, தன் பாலினத்தைச் சேர்ந்த அவர்கள் ஒவ்வொருவரிடமும் பெண்களின் கடமைகளைக் குறித்துக் கேட்டாள். உண்மையில், கங்கையை முதல்வியாகக் கொண்ட அந்த முதன்மையான ஆறுகள் பெண்களின் கடமைகள் அனைத்தையும் அறிந்தவையாகும்.(21)
உமை, "சிறப்புமிக்கத் தேவன் {மஹேஸ்வரன்} பெண்களின் கடமைகள் தொடர்பான கேள்வியைக் கேட்டுள்ளார். நான் உங்களுடன் ஆலோசித்த பிறகு சங்கரருக்குப் பதிலளிக்க விரும்புகிறேன்.(22) துணையற்ற எந்தத் தனி மனிதராலும் சொர்க்கத்திலோ பூமியிலோ உள்ள எந்த ஞானக்கிளையையும் அறிந்து கொள்ள இயன்றதாக நான் காணவில்லை. பெருங்கடலை நோக்கிப் பாயும் ஆறுகளே, இதற்காகவே நான் உங்கள் கருத்துகளை நாடுகிறேன்" என்றாள்.(23)
மங்கலமானவையும், உயர்ந்த புனிதம் கொண்டவையுமான அந்த முதன்மையான ஆறுகள் அனைத்தும் சிவனின் மனைவியால் இவ்வழியிலேயே கேள்வி கேட்கப்பட்டன. அப்போது பதிலுக்கு மலைகளின் இளவரசனுடைய மகளை {உமையை} வழிபட்ட தெய்வீக ஆறான கங்கை அந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டாள்.(24) உண்மையில், இனிய புன்னகை கொண்ட அவள் {கங்கை}, பல்வேறு வகைப் புத்திகளில் பெருகுபவளாகவும், பெண்களின் கடமைகள் அனைத்தும் நன்கறிந்தவளாகவும் கொள்ளப்படுகிறாள். பாவத்தால் உண்டாகும் அனைத்து அச்சங்களையும் விலக்கவல்லவளும், புத்தியின் காரணமாகப் பணிவைக் கொண்டவளும், கடமைகள் அனைத்தையும் அறிந்தவளும், மிக விரிவான நுண்ணறிவு எனும் வளம் கொண்டவளுமான அந்தப் புனிதமான தேவி {கங்கை}, இனிமையாகப் புன்னகைத்தபடியே இந்தச் சொற்களைச் சொன்னாள்,(25,26) "ஓ! தேவி, அனைத்துக் கடமைகளையும் முறையாகச் செய்வதில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவள் நீ. என்னைக் கேள்வி கேட்டதன் மூலம் நீ எனக்கு உயர்ந்த உதவியைச் செய்திருக்கிறாய். ஓ! பாவமற்றவளே, மொத்த அண்டத்தாலும் மதிக்கப்படுபவளாக நீ இருந்தாலும், ஓர் ஆறான என்னிடம் நீ கேட்டிருக்கிறாய்.(27) ஒருவன் தானே (ஒரு காரியத்தைக் குறித்து உரையாடத்) திறன்மிக்கவனாக இருந்தாலும், மற்றொருவனைக் கேட்பவன், அல்லது அருள்நிறைந்த கொடையை அளிப்பவன் நிச்சயம் அற ஆன்மாவாகக் கருதத்தக்கவன் என்று நான் நினைக்கிறேன். உண்மையில், அத்தகைய மனிதன் கல்விமான் என்றும் ஞானி என்றும் அழைக்கப்படத் தகுந்தவனாவான்.(28) அறிவைக் கொண்டவர்களும், அறிவியில் அறிந்தவர்களும், முன்தீர்மானங்கள் மற்றும் அனுமானங்களை அறிந்தவர்களுமான பேச்சாளர்களைக் கேட்கும் மனிதர்கள் ஒருபோதும் அவமானமடைய மாட்டார்கள்.(29) செருக்குமிக்க மனிதன், நுண்ணறிவுமிக்க மனிதனாக இருந்தாலும், வேறுவகையில் (பிறரின் ஆலோசனைகளை ஏற்காமல் தன்னை மட்டுமே சார்ந்து) ஒரு கூட்டத்தின் மத்தியில் பேசுவதன் மூலம் பலமற்ற, முக்கியத்துவமற்ற சொற்களைப் பேசுபவனாகவே தன்னைக் காண்பான்.(30) ஆன்ம அகப்பார்வைக் கொண்டவள் நீ. சொர்க்கவாசிகள் அனைவரிலும் முதன்மையானவள் நீ. பல்வேறு வகைச் சிறந்த தகுதிகளின் துணையுடன் எழுந்தவள் நீ. ஓ! தேவி, பெண்களின் கடமைகள் குறித்து உரையாட முற்றிலும் தகுந்தவள் நீ" என்றாள் {கங்கா தேவி}.(31) இவ்வழியில் கங்கையால் வழிபடப்பட்ட உமாதேவி, உயர்ந்த தகுதிகள் பலவற்றைச் சார்ந்தவளாக மதிக்கப்பட்டாள். இவ்வாறு புகழப்பட்ட அந்த அழகிய தேவி, பெண்களின் கடமைகளைக் குறித்து முழுமையாக உரையாடத் தொடங்கினாள்.(32)
உமை, "நான் அறிந்தவரையில் பெண்களின் கடமைகளைக் குறித்து விதிப்படி உரையாடுவேன். குவிந்த கவனத்துடன் நீங்கள் அனைவரும் கேட்பீராக.(33) உறவினர்களால் திருமணச் சடங்குகள் தொடங்கப்படும் போதே பெண்களின் கடமைகள் உண்டாகி எழுகின்றன. உண்மையில், திருமண நெருப்பின் முன்னிலையில் ஒரு பெண்ணானவள் தன் தலைவன் செய்யும் அறச் சடங்குகள் அனைத்தையும் செய்வதில் துணைவியாகிறாள்.(34) நல்லியல்பும், இனிய பேச்சும், இனிய ஒழுக்கமும், இனிமையான குணங்களும் கொண்டு, எப்போதும் தன் கணவனின் முகத்தைத் தன் பிள்ளையின் முகம் போலப் பார்த்து இன்பம் அடைபவளும்,(35) பரிந்துரைக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் இருப்பவளுமான ஒரு பத்தினி உண்மையில் அறம் சார்ந்த தன் ஒழுக்கம் கொண்டவளாகக் கருதப்படுகிறாள். (சாத்திரங்களில் விவரிக்கப்பட்டுள்ள படி) திருமண வாழ்வின் கடமைகளை (மதிப்புடன்) கேட்டு, அந்த மங்கலக் கடமைகள் அனைத்தையும் நிறைவேற்றுபவளும்,(36) தேடும் பொருட்கள் அனைத்திலும் முதன்மையாக அறத்தைக் கருதுபவளும், தன் தலைவன் நோற்கும் நோன்புகளைத் தானும் நோற்பவளும், கற்பால் அலங்கரிக்கப்பட்டவளும், தன் கணவனைத் தேவனாகக் காண்பவளும்,(37) ஒரு தேவனைப் போலவே அவனுக்குப் பணிவிடை செய்து தொண்டாற்றுபவளும், உற்சாகம் நிறைந்தவளும், சிறந்த நோன்புகளை நோற்பவளும், நல்ல குணங்களைக் கொண்டவளும்,(38) வேறு எந்த மனிதனையும் மனத்தாலும் நினையாமல் முற்றிலும் தன் கணவனுக்கு அர்ப்பணித்த இதயத்தைக் கொண்டவளுமான பெண், உண்மையில் அறவொழுக்கம் கொண்டவளாகக் கருதப்படுகிறாள். தன் கணவனின் கோபக் கண்களால் பார்க்கப்பட்டு, அவனது கடுமொழியை எதிர்கொண்டாலும்(39) அவனிடம் உற்சாகமாக நடந்து கொள்பவள், தன் கணவனுக்கு உண்மையில் அர்ப்பணிப்புள்ளவளாகச் சொல்லப்படுகிறாள். சூரியன், சந்திரன், ஆண்பெயர் கொண்ட மரம் ஆகியவற்றில் தன் கண்களைச் செலுத்தாதவளும்,(40) தன் கணவனால் துதிக்கப்படுபவளும், அழகிய குணங்களைக் கொண்டவளுமான பெண் உண்மையில் அறம் சார்ந்தவளாகக் கருதப்படுகிறாள். தன் கணவன் ஏழையாகவோ, நோய்வாய்ப்பட்டவனாகவோ, பலவீனனாகவோ, பயணக் களைப்புக் கொண்டவனாகவோ இருந்தாலும், தன் பிள்ளையிடம் அன்பு காட்டுவதைப் போலவே அவனை அன்புடன் நடத்தும் பெண் உண்மையில் அறவொழுக்கம் கொண்டவளாகக் கருதப்படுகிறாள்.(41)
தற்கட்டுப்பாடுடையவளும், பிள்ளைகளை ஈன்றவளும், தன் கணவனுக்கு அர்ப்பணிப்புடன் தொண்டாற்றுபவளும், அர்ப்பணிப்புள்ள மொத்த இதயத்தையும் அவனிடம் கொண்டவளுமான பெண் உண்மையில் அறவொழுக்கம் கொண்டவளாகக் கருதப்படுகிறாள். தன் தலைவனுக்குக் காத்திருந்து பணிவிடை செய்து, உற்சாகமிக்க இதயத்துடன் தொண்டாற்றுபவளும்,(42,43) எப்போதும் உற்சாகமிக்க இதயத்துடன் இருப்பவளும், பணிவுடையவளுமான பெண் உண்மையில் அறவொழுக்கம் கொண்டவளாகக் கருதப்படுகிறாள். தன் உற்றார் உறவினருக்கு உணவளித்து எப்போதும் ஆதரிப்பவளும்,(44) விருப்பங்களையோ, இன்ப நுகர் பொருட்களையோ, தான் கொண்ட செல்வத்தையோ, தான் சூழ்ந்திருக்கும் மகிழ்ச்சியையோ நிறைவடையச் செய்வதைவிடத் தன் கணவனுடன் அடையும் மகிழ்ச்சியைப் பெரிதாகக் கருதம் பெண் உண்மையில் அறவொழுக்கம் கொண்டவளாகக் கருதப்படுகிறாள்.(45) விடிவதற்கு முன்பு எழுவதில் எப்போதும் இன்பங்கொள்பவளும், இல்லம் சார்ந்த கடமைகளை வெளிப்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் உள்ளவளும், எப்போதும் தன் வீட்டைத் தூய்மையாக வைத்துக் கொள்பவளும், ஒவ்வொரு நாளும் பசுஞ்சாணத்தால் தன் வீட்டை மெழுகுபவளும்,(46) (ஆகுதிகளை ஊற்றுவதற்கான) இல்லற நெருப்பை எப்போதும் கவனிப்பவளும், தேவர்களுக்கு மலர்களையும், பிற பொருட்களையும் காணிக்கையளிப்பதை எப்போதும் புறக்கணிக்காதவளும், கணவனுடன் சேர்ந்து, விதிப்படி கொடுக்க வேண்டிய உணவுப் பங்குடன் தேவர்கள், விருந்தினர்கள், பணியாட்கள் மற்றும் குடும்பத்தில் தங்களைச் சார்ந்திருப்போரை எப்போதும் நிறைவடையச் செய்பவளும்,(47) தேவர்கள், விருந்தினர்கள் மற்றும் பணியாட்களின் தேவைக்குக் கொடுத்தது போக வீட்டில் எஞ்சி இருக்கும் உணவை உண்பவளும், தங்கள் குடும்பத்தோடு தொடர்புடைய அனைத்து மக்களையும் நிறைவடையச் செய்து அவர்களுக்கு நிறைவான உணவை அளிப்பவளுமான பெண் பெரும் பலனை அடைவதில் வெல்கிறாள்.(48)
சாதனைகள் அனைத்துடன் கூடியவளும், தன் மாமனார், மாமியாரின் பாதங்களுக்கு நிறைவைத் தருபவளும், தன் தந்தை மற்றும் தாய்க்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவளுமான பெண் தவச் செல்வத்தை உடையவளாகக் கருதப்படுகிறாள்.(49) பலவீனர்களும், ஆதரவற்றவர்களுமான பிராமணர்களுக்கும், துன்புற்றவர்களுக்கும், குருடர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் உணவளித்து ஆதரிக்கும் பெண் தன் கணவன் அடையும் பலன்களின் பங்குக்குரியவள் என்று கருதப்படுவாள்.(50) கடும் நோன்புகளை இலகுவான இதயத்துடன் எப்போதும் நோற்பவளும், தன் தலைவனிடம் அர்ப்பணிப்புள்ள இதயத்தைக் கொண்டவளும், தன் தலைவனின் நன்மையையே எப்போதும் நாடுப்பவளுமான பெண், தன் கணவன் அடையும் பலன்களின் பங்குக்குரியவள் என்று கருதப்படுவாள்.(51) தலைவனிடம் கொள்ளும் அர்ப்பணிப்பு {பக்தி} பெண்ணுக்குப் பலனைத் தருவதாகும்; அதுவே அவளது தவமாகும், அதுவே அவளது நித்திய சொர்க்கமாகும். தன் கணவனையே எல்லாமாகப் பார்ப்பவளும், கற்புடன் கூடியவளும், அனைத்திலும் தன் தலைவனுக்குத் தன்னை அர்ப்பணிப்பதையே நாடுபவளுமான பெண்ணுக்கு, பலன் {புண்ணியம்}, தவங்கள், சொர்க்கம் ஆகியன அவளுடையதாகின்றன.(52)
கணவனே பெண்களுக்கு தேவனாவான். கணவனே அவர்களுடைய நண்பனாவான். கணவனே அவர்களுடைய உயர்ந்த புகலிடமுமாவான். கணவனோடு ஒப்பிடத்தக்க புகலிடம் எதுவும், அவனோடு ஒப்பிடத்தக்க தேவன் எவனும் கிடையாது.(53) பெண்களின் கணிப்பில் கணவனின் அருளும், சொர்க்கமும் சரிநிகரானவை; அல்லது சரிநிகராக இல்லையென்றாலும், அந்த ஏற்றத்தாழ்வு மிக அற்பமான அளவிலேயே இருக்கும். ஓ! மஹேஸ்வரரே, நீர் என்னிடம் நிறைவகொள்ளவில்லையெனில் நான் சொர்க்கத்தையும் விரும்ப மாட்டேன்(54) ஏழையாகவோ, நோய்வாய்ப்பட்டவனாகவோ, துன்பமடைந்தவனாகவோ, பகைவர்களிடம் வீழ்ந்துவிட்டவனாகவோ, பிராமணச் சாபத்தால் பீடிக்கப்பட்டவனாகவோ இருக்கும் கணவன், முறையற்ற அல்லது அறமற்ற அல்லது உயிரின் அழிவுக்கே வழிவகுக்ககூடிய எதையும் நிறைவேற்றச் சொல்லி மனைவிக்கு ஆணையிட்டால், அந்த மனைவியானவள், துன்பச்சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட தனியுரிமை குறியீட்டினால் வழிநடத்தப்பட்டு எந்தத் தயக்கமுமின்றி அதை நிறைவேற்ற வேண்டும்.(55,56) ஓ! தேவா, உமது ஆணையின் பேரில் பெண்களின் கடமைகள் என்னென்ன என்பதைச் சொன்னேன். உண்மையில், இவ்வழியில் தன்னை ஒழுங்கமைத்துக் கொள்ளும் பெண் தன் கணவனால் வெல்லப்பட்ட பலன்களின் பங்கைப் பெறும் உரிமைபெறுகிறாள்" என்றாள் {உமை}".(57)
நாரதர் தொடர்ந்தார், "இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பெருந்தேவன், மலைகளின் இளவரசனுடைய மகளை {உமையை} மெச்சி, அங்கே கூடியிருந்தோர் அனைவருக்கும், உடன் இருந்த தன் பணியாளர்களுக்கும் விடை கொடுத்து அனுப்பினான்.(58) பல்வேறு இனக்குழுக்களைச் சார்ந்த பூதகணங்களும், உடல்படைத்த ஆறுகள் அனைத்தும், கந்தர்வர்களும், அப்சரஸ்கள் அனைவரும் மஹாதேவனுக்குத் தலைவணங்கியவர்களாகத் தாங்கள் வந்த இடம் நோக்கி அங்கிருந்து சென்றார்கள்".(59)
அநுசாஸனபர்வம் பகுதி – 146ல் உள்ள சுலோகங்கள் : 59
ஆங்கிலத்தில் | In English |