kind of creature? | Anusasana-Parva-Section-152 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 152)
பதிவின் சுருக்கம் : தத்தாத்ரேயரிடம் இருந்து நான்கு வரங்களை அடைந்த கார்த்தவீரியார்ஜுனன்; பிராமண மகிமை குறித்து வாயு தேவனுக்கும் கார்த்தவீரியார்ஜுனனுக்கும் இடையில் நடந்த உரையாடல்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! மன்னா, ஓ! மேன்மையான நுண்ணறிவைக் கொண்டவரே, பிராமணர்களை வழிபடுவதில் கிட்டும் எந்த வெகுமதியைக் கண்டு நீர் அவர்களை வழிபடுகிறீர்? உண்மையில், பிராமணர்களை வழிபடுவதில் கிட்டும் எந்த வெற்றியால் வழிநடத்தப்பட்டு நீர் அவர்களை வழிபடுகிறீர்?" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதா, இது தொடர்பாகப் பவனனுக்கும், அர்ஜுனனுக்கும் {கார்த்தவீரியார்ஜுனகுக்கும்} இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட இந்தப் பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(2) ஆயிரங்கரங்களைக் கொண்டவனும், பேரெழில்வாய்ந்தவனுமான வலிமைமிக்கக் கார்த்தவீரியன் பழங்கலாத்தில் உலகம் அனைத்திற்குமான தலைவனானான். மாஹிஷ்மதி நகரம் அவனுடைய தலைநகரமாக இருந்தது.(3) கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட அந்த க்ஷத்திரிய குல ஹைஹய {ஹேஹயத்} தலைவன், கடல்களைத் தன் கச்சையாகக் கொண்டவளும், தீவுகள், தங்கச்சுரங்கங்கள் மற்றும் மதிப்புமிக்க ரத்தினச் சுரங்கங்கள் அனைத்துடன் கூடியவளுமான மொத்த பூமியையும் ஆண்டு வந்தான்.(4) க்ஷத்திரிய வகைக்கான கடமைகளைத் தன் முன் கொண்டவனும், பணிவுடனும், வேத அறிவுடனும் கூடிய அம்மன்னன், தத்தாத்ரேய முனிவருக்குப் பெரும் செல்வக்கொடையை அளித்தான்.(5) உண்மையில், கிருதவீரியனின் மகனால் இவ்வாறு துதிக்கப்பட்ட அந்தப் பெருந்தவசி, அவனிடம் நிறைவடைந்தவராக, தம்மிடம் மூன்று வரங்களைக் கேட்குமாறு அவனைக் கேட்டுக் கொண்டார்.(6)
வரங்கள் குறித்து அம்முனிவரால் இவ்வாறு வேண்டப்பட்ட அம்மன்னன், அவரிடம், "நான் என் துருப்புகளுக்கு மத்தியில் இருக்கும் போது ஆயிரம் கரங்களைக் கொண்டவனாக இருக்க வேண்டும். எனினும், வீட்டில் இருக்கும் போது, வழக்கம் போலவே இரு கரங்கள் மட்டுமே இருக்க வேண்டும்.(7) உண்மையில் போரில் ஈடுபடும்போது, ஆயிரம் கரங்களைப் படைத்தவனாகப் போராளிகள் என்னைக் காண வேண்டும். உயர்ந்த நோன்புகளை நோற்றவனான நான், என் ஆற்றலின் துணையுடன் மொத்த பூமியையும் அடக்குவதில் வெல்ல வேண்டும்.(8) அறம் சார்ந்து பூமியை அடைந்த பிறகு அவளை நான் விழிப்புடன் ஆள வேண்டும். ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நான்காவது வரத்தையும் நீர் அருள நான் வேண்டுகிறேன்.(9) ஓ! களங்கமற்றவரே, எனக்கு உதவும் மனோநிலையில் நீர் இருப்பதன் விளைவால், எனக்கு அஃதை அருள்வதே உமக்குத் தகும். நான் உம்மையே சார்ந்திருக்கிறேன். தான் தவற நேரும்போதெல்லாம் அறவோர் என்னைத் திருத்தி நிலைபெறச் செய்ய வேண்டும்" என்று கேட்டான்.(10)
இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பிராமணர், அந்த மன்னனிடம், "அப்படியே ஆகட்டும்" என்று சொன்னார். சுடர்மிக்கப் பிரகாசம் கொண்ட அந்த மன்னனால் அந்த வரங்கள் இவ்வாறே அடையப்பட்டன.(11) நெருப்புக்கோ, சூரியனுக்கோ ஒப்பான காந்தியுடன் கூடிய தன் தேரைச் செலுத்திக் கொண்டிருந்த அந்த ஏகாதிபதி, தன்னுடைய பேராற்றலால் குருடாகி, "பொறுமை, சக்தி, புகழ், வீரம், ஆற்றல் மற்றும் பலம் ஆகியவற்றில் எனக்கு நிகராகக் கருதத்தகுந்தவன் எவன்?" என்றான். அவன் இவ்வார்த்தைகளைச் சொன்னதும், ஆகாயத்தில் இருந்து ஒரு புலப்படாத குரல்,(13) "ஓ! இழிந்த மூடா, க்ஷத்திரியனைவிடப் பிராமணன் உயர்ந்தவன் என்பதை நீ அறியமாட்டாயா? பிராமணனால் உதவப்படும் க்ஷத்திரியனே அனைத்து உயிரினங்களையும் ஆள்கிறான்" என்றது.(14)
{கார்த்தவீரிய} அர்ஜுனன், "நான் நிறைவடையும்போது, உயிரினங்களைப் படைக்கவல்லவனாக இருக்கிறேன். நான் கோபமாக இருக்கும்போது, அனைத்தையும் அழிக்கவல்லவனாக இருக்கிறேன். எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் நானே முதன்மையானவனாக இருக்கிறேன். நிச்சயம் பிராமணன் என்னைவிட உயர்ந்தவனல்ல.(15) பிராமணன் க்ஷத்திரியனைவிட மேன்மையானவன் என்பது முதல் கருத்து. க்ஷத்திரியனே மேன்மையானவன் என்பது எதிர் கருத்து. (ஓ! புலப்படாதவளே, அடிப்படையில் க்ஷத்திரிய மேன்மை வேண்டப்படும் செயலில்) இருவரும் ஒன்று சேர்வதாக நீ சொல்கிறாய். எனினும், இதில் ஒரு வேறுபாடு காணக்கிடைக்கிறது.(16) பிராமணர்கள், க்ஷத்திரியர்களைப் புகலிடமாகக் கொள்வது காணப்படுகிறது. உண்மையில், பூமி முழுவதிலும், வேதங்களைக் கற்பிக்கும் தோரணையில் அத்தகைய புகலிடத்தை ஏற்கும் அவர்கள் {பிராமணர்கள்}, க்ஷத்திரியர்களிடம் இருந்து தங்கள் வாழ்வாதாரத்தை ஈர்க்கிறார்கள்.(17) உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் கடமை க்ஷத்திரியர்களுக்குரியது. க்ஷத்திரியர்களிடம் இருந்தே பிராமணர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை அடைகின்றனர்[1]. அவ்வாறிருக்கையில் பிராமணன் எவ்வாறு க்ஷத்திரியர்களைவிட மேன்மையானவனாக இருக்க முடியும்?(18) நன்று, உயிரினங்கள் அனைத்தையும் விட மேன்மையாக இருந்தாலும் பிச்சையெடுப்பதைத் தொழிலாகக் கொண்டவர்களும், தற்பெருமை கொண்டவர்களுமான உங்கள் பிராமணர்களை இன்று முதல் என் ஆளுகைக்குள் கொண்டு வருகிறேன்.(19) ஆகாயத்தில் இருந்து கன்னி காயத்ரி சொல்வது உண்மையல்ல. தோலாடை உடுத்திய பிராமணர்கள் சுதந்திரமாகத் திரிகின்றனர். சுதந்திரமாக இருக்கும் அவர்களை என் ஆளுகைக்குள் கொண்டவரப் போகிறேன்.(20) தேவனோ, மனிதனோ, நான் அனுபவிக்கும் இந்த அரசுரிமையில் இருந்து என்னைத் தூக்கி வீச மூவுலகங்களிலும் யாருமில்லை. எனவே, நான் நிச்சயம் பிராமணர்களைவிட மேன்மையானவனே.(21) பிராமணர்களையே முதன்மைவாசிகளாகக் கருதப்படும் இவ்வுலகில், க்ஷத்திரியர்களே முதன்மையானவர்கள் என்பது நிறுவப்படும். போரில் என் வலிமையைப் பொறுத்துக்கொள்ளவல்லவன் எவனுமில்லை" என்றான்[2].(22)
[1] கார்த்தவீரியனின் இக்கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில், "அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல்" எனும் குறள் நிற்கிறது.
[2] இதன்பிறகு கங்குலியில் இல்லாத ஒரு வரிக் கும்பகோணம் பதிப்பில் இருக்கிறது. அது பின்வருமாறு: "கார்த்தவீரியார்ஜுனனுடைய சொல்லைக் கேட்டு அந்த அசரீர வாக்குச் சொன்ன ராக்ஷஸி பயந்தாள். பிறகு, ஆகாயத்திலிருக்கும் வாயு அவனைப் பார்த்து" பேசத் தொடங்கினான் என்றிருக்கிறது.
அப்போது, வானத்தில் இருந்து அம்மன்னனிடம் பேசிய காற்றின் தேவன் {வாயு}, "பாவம் நிறைந்த இந்த மனோநிலையைக் கைவிடுவாயாக. பிராமணர்களை வணங்குவாயாக. அவர்களுக்குத் தீங்கிழைப்பதன் மூலம் நீ உன் நாட்டுக்குத் தொல்லைகளைக் கொண்டு வரப் போகிறாய்.(24) மன்னனாக இருக்கும் உன்னைப் பிராமணர்கள் கொன்றுவிடுவார்கள், அல்லது பெரும் வலிமை கொண்ட அவர்கள் உன் சக்தியைக் கெடுத்து உன்னை உன் நாட்டில் இருந்து விரட்டிவிடுவார்கள்" என்றான்.(25)
இந்தப் பேச்சைக் கேட்ட மன்னன், அவ்வாறு பேசியவனிடம், "உண்மையில், நீ யார்?" என்று கேட்டான். காற்றின் தேவன், "நான் காற்றின் தேவன் மற்றும் தேவர்களின் தூதுவன். உனக்கான நன்மையே நான் உனக்குச் சொன்னேன்" என்றான்.(26)
{கார்த்தவீரிய} அர்ஜுனன், "ஓ! நீ இன்று பிராமணர்களிடம் கொண்ட உன் பக்தியையும், பற்றையும் காட்டிவிட்டாய். பிராமணன் பூமி சார்ந்த என்ன வகை உயிரினம் என்பதை இப்போது எனக்குச் சொல்வாயாக.(27) ஒரு மேன்மையான பிராமணன் எந்த வகையிலாவது காற்றுக்கு ஒப்பானவனா என்பதை எனக்குச் சொல்வாயாக. அல்லது, அவன் நீரையோ, நெருப்பையோ, சூரியனையோ, ஆகாயத்தையோ போன்றவனா?" என்று கேட்டான்.(28)
அநுசாஸனபர்வம் பகுதி – 152ல் உள்ள சுலோகங்கள் : 28
ஆங்கிலத்தில் | In English |