Increate Space is the origin! | Anusasana-Parva-Section-153 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 153)
பதிவின் சுருக்கம் : பிராமணர்களின் மேன்மையைக் கார்த்தவீரியார்ஜுனனுக்கு எடுத்துரைத்த வாயு தேவன்...
காற்றின் தேவன் {வாயு தேவன் கார்த்தவீரியனிடம்}, "ஓ! மூடா, உயர் ஆன்மாக்களைக் கொண்டவர்களான பிராமணர்கள் அனைவரின் குணங்கள் என்னென்ன என்பதைக் கேட்பாயாக. ஓ! மன்னா, நீ சொன்ன அனைத்தையும்விடப் பிராமணன் மேன்மையானவன்.(1) பழங்காலத்தில் பூமாதேவியானவள், அங்கர்களின் மன்னனிடம் பகை பாராட்டி பூமியென்ற தன் தன்மையைக் கைவிட்டாள். மறுபிறப்பாளரான கஸ்யபர், அவளை {பூமா தேவியை} முடக்கி, அழிவடையச் செய்தார்[1].(2) ஓ! மன்னா, பிராமணர்களைப் பூமியில் உள்ளதைப் போலவே எப்போதும் சொர்க்கத்திலும் வெல்லப்படமுடியாதவர்கள். பழங்காலத்தில், பெரும் முனிவரான அங்கிரஸ், தன் சக்தியின் மூலம் நீரனைத்தையும் பருகினார்.(3) அந்த உயர் ஆன்ம முனிவர், பாலைக் குடிப்பது போல நீரனைத்தையும் குடித்தும், தன் தாகம் தணிந்தவராக உணரவில்லை. எனவே, அவர் பேரலைகள் எழும்பும் நீர் நிறைந்ததாகப் பூமியை மீண்டும் செய்தார்.(4) மற்றொரு சந்தர்ப்பத்தில், அங்கிரஸ் என்னிடம் கோபமடைந்த போது, நான் உலகத்தைவிட்டுத் தப்பிச் சென்று, அந்த முனிவரிடம் கொண்ட அச்சத்தின் காரணமாக, ஒரு பிராமணரின் {உதத்தியரின் / உசத்தியரின்} அக்னிஹோத்ரத்தில் நெடுங்காலம் ஒளிந்திருந்தேன்.(5)
[1] கும்பகோணம் பதிப்பில், "பூமி தேவியானவள் கஸ்பரோடு சண்டைசெய்து பூமியுருவத்தையே இழந்து அழிந்து போனாள். அவளைப் பிராம்மணரான கஸ்யபர் நிலைநிறுத்தினார்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "பழங்காலத்தில், பூமியானவள் அங்க மன்னனை அறைகூவியழைத்து, தன்னுடைய நிலத்தன்மையை இழந்தாள். பிராமணரான கஸ்யபரால் கலங்கடிக்கப்பட்ட அவள் அழிவை அடைந்தாள்" என்றிருக்கிறது.
சிறப்புமிக்கப் புரந்தரன், அஹல்யையின் உடலில் ஆசை கொண்டதன் விளைவால், கௌதமரால் சபிக்கப்பட்டாலும், அறம் மற்றும் செல்வத்தின் நிமித்தமாக அந்தத் தேவர்களின் தலைவனை அம்முனிவர் முற்றாக அழிக்கவில்லை.(6) ஓ! மன்னா, முற்காலத்தில் தெளிந்த நீரால் நிறைந்திருந்த பெருங்கடல், பிராமணர்களால் சபிக்கப்பட்டு உப்பு நீரின் சுவையை அடைந்தது.(7) பொன்னிறம் கொண்டவனும், புகையற்றிருக்கும்போது, பிரகாசமாகச் சுடர்விடுபவனும், ஒன்றுசேர்ந்து மேலெழும் தழல்களைக் கொண்டவனுமான அக்னியும் கூட, கோபமடைந்த அங்கிரஸால் சபிக்கப்பட்ட போது, இந்தக் குணங்கள் அனைத்தையும் இழந்தான்[2].(8) பெருங்கடலைத் துதிக்க வந்தவர்களும், சகரனின் மகன்களுமான அறுபதினாயிரம் பேரும் பொன்னிறம் கொண்ட பிராமணரான கபிலரின் மூலம் பொடியாக்கப்பட்டதைப் பார்.(9) நீ பிராமணர்களுக்கு நிகரானவனில்லை. ஓ! மன்னா, உன் நன்மையை நாடுவாயாக. பெரும் பலம் கொண்ட க்ஷத்திரியனும், தாயின் கருவறையில் உள்ள பிராமணப் பிள்ளைகளைக்கூட வணங்குகிறான்.(10)
[2] "இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் கவி என்ற சொல் அக்னி என்ற பொருளைத் தருமென உரையாசிரியர் விளக்குகிறார். வட்டார மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர் இச்சொல்லை சுக்கிராசாரியரைக் குறிப்பதாக இதை எடுத்துக் கொள்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பொன்னிறமுள்ளதும், ஒன்றுசேர்ந்து எழுந்த ஜ்வாலைளோடு கூடியதும் மகிமை பொருந்தியதுமான அக்னி, அங்கிரஸ் கோபித்துச் சபித்ததனால் இந்தக் குணங்கள் இல்லாமல் போயிற்று" என்றிருக்கிறது.
தண்டகர்களின் பெரும் நாடு ஒரு பிராமணனால் அழிக்கப்பட்டது. வலிமைமிக்க க்ஷத்திரியனான தாலஜங்கன், ஔர்வர் என்ற ஒற்றைப் பிராமணரால் அழிக்கப்பட்டான்.(11) நீயும் கூட, தத்தாத்ரேயரின் அருளின் மூலம், பெரும் நாட்டையும், அடைதற்கரிதானவையான பெரும் வலிமை, அறத்தகுதி, கல்வி ஆகியவற்றை அடைந்திருக்கிறாய்.(12) ஓ! அர்ஜுனா, பிராமணனான அக்னியை நீ ஏன் ஒவ்வொரு நாளும் வணங்குகிறாய்? அண்டத்தின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் வேள்விக் காணிக்கைகளைச் சுமந்து செல்பவன் அவனே. இதை நீ அறிந்தாயில்லையா?(13) உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் ஒரு மேன்மையான பிராமணனே உண்மையில், வாழும் உலகைப் படைத்தவன் என்பதை நீ அறியாமலில்லை எனும்போது, ஏன் இந்த மூடத்தனத்தில் அவதியுறுகிறாய்?(14) புலப்படாதவனும், பலங்கொண்டவனும், மங்கா மகிமை கொண்டவனும், அசையும் மற்றும் அசையாதவற்றுடன் கூடிய எல்லையற்ற அண்டத்தையும் படைத்தவன் அனைத்து உயிரினங்களின் தலைவனான பிரம்மனாவான் (அவனும் ஒரு பிராமணனாவான்).(15)
ஞானமற்ற சிலர், பிரம்மன் ஒரு முட்டையில் இருந்து பிறந்தான் என்று சொல்கின்றனர். மூலமுட்டை வெடித்தபோது, மலைகளும், திசைப்புள்ளிகளும், நீரும், பூமியும், சொர்க்கங்கள் அனைத்தும் இருப்புக்குள் எழுந்தன.(16) அந்தப் படைப்பின் பிறப்பை யாரும் காணவில்லை. அவ்வாறிருக்கையில் பிறப்பில்லாதவனாக அறிவிக்கப்பட்டிருக்கும் பிரம்மன், மூல முட்டையில் இருந்து பிறந்தான் என்று எவ்வாறு சொல்லப்படுகிறது? படைக்கப்படாத வெளியே மூல முட்டையெனச் சொல்லப்படுகிறது. படைக்கப்படாத வெளியில் (அல்லது பரமாத்மாவில்) இருந்தே பெரும்பாட்டான் {பிரம்மன்} பிறந்தான்[3].(17) "படைக்கப்படாத வெளியில் இருந்து பெரும்பாட்டன் பிறந்த பிறகு, வேறொன்றும் இருந்திருக்காதே அவன் எங்கே நின்றான்?" என்று நீ கேட்டால், பின்வரும் சொற்களில் பதில் அமையக் கூடும். நினைவு {அகங்காரம்} என்ற பெயரில் ஓர் இருப்பு உள்ளது. வலிமைமிக்க அந்த இருப்பு பெருஞ்சக்தி கொண்டதாகும்.(18) {அப்போது} முட்டை என்று ஏதுமில்லை. எனினும், பிரம்மன் இருந்தான். அவன் அண்டத்தைப் படைத்தவன், அவனே அதன் மன்னன்[4]" என்றான் {வாயு தேவன்}.
[3] கும்பகோணம் பதிப்பில், "பிரம்மதேவர் அண்டத்திலுண்டானவரென்று சில அறவீனர் நினைக்கின்றனர். அண்டம் வெடித்தபின் மலைகளும், திசைகளும், ஜலமும், பூமியும், ஆகாயமும் உண்டாயின. பிரம்மதேவர் இவற்றை அவ்விதமாகக் கண்டவர். பிறப்பில்லாத அவர் பிறப்பதேது? பிரம்மதேவர் எந்த அண்டத்தினின்றுண்டானாரோ அந்த அண்டமாகிய இடம் ஆகாயமன்றோ?" என்றிருக்கிறது. "வெட்ட வெளி தன்னை மெய்யென்றிருப்போர்க்குப் பட்டயம் ஏதுக்கடி – குதம்பாய் பட்டயம் ஏதுக்கடி" என்ற குதம்பைச் சித்தர் பாடலும், " வெட்ட வெளிக்குள்ளே விளங்கும் சதாசிவத்தைக் கிட்டவரத் தேடிக் கிருபை செய்வது எக்காலம்?" என்ற பத்திரகிரியார் பாடலும் இங்கே நினைவுகூரத்தக்கது.[4] கும்பகோணம் பதிப்பில், "ஆகாயத்தில் அவர் எப்படி நிற்பரென்று சொல்லலாம்? அந்தக் காலத்தில் ஒன்றும் இராதன்றோ? எல்லாச்சக்திகளையுமடைந்த பிரம்மதேவர் அகங்காரமென்று சொல்லப்படுகிறார். அவருக்கு முடிவில்லை. அந்தப் பிரம்மதேவர் உலகங்களைப் படைத்து அவற்றிற்கு ஈஸ்வரராயிருக்கிறார்" என்றிருக்கிறது. இங்கே அகங்காரம் என்ற சொல்லின் அடிக்குறிப்பில், "மகத்திலிருந்து உண்டான அகங்காரம் என்னும் தத்துவம்" என்றிருக்கிறது.
காற்றின் தேவனால் {வாயுவால்} இவ்வாறு சொல்லப்பட்டதும் மன்னன் {கார்த்தவீரிய} அர்ஜுனன் அமைதியாக இருந்தான்".(19)
அநுசாஸனபர்வம் பகுதி – 153ல் உள்ள சுலோகங்கள் : 19
ஆங்கிலத்தில் | In English |