Utathya and Varuna! | Anusasana-Parva-Section-154 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 154)
பதிவின் சுருக்கம் : பிராமணர்களின் மேன்மையை விவரிக்க கசியபர் மற்றும் உதத்தியரின் கதையைக் கார்த்தவீரியார்ஜுனனுக்கு எடுத்துரைத்த வாயு தேவன்...
காற்றின் தேவன் {வாயு கார்த்தவீரியார்ஜுனனிடம்}, "ஓ! மன்னா, ஒரு காலத்தில், அங்கன் என்ற பெயரைக் கொண்ட ஓர் ஆட்சியாளன், மொத்த பூமியையும் பிராமணர்களுக்கு வேள்விக் கொடையாக அளிக்க விரும்பினான். இதனால் பூமி கவலையில் நிறைந்தாள்.(1)
அவள் {பூமி}, "நான் பிரம்மனின் மகளாவேன். அனைத்து உயிரினங்களையும் நான் தாங்குகிறேன். ஐயோ, என்னை அடைந்த பிறகும் மன்னர்களில் முதன்மையான இவன் ஏன் பிராமணர்களுக்கு என்னைக் கொடுக்க விரும்புகிறான்?(2) இந்த நிலத் தன்மையைக் கைவிட்டு நான் என் தந்தையிடம் செல்லப் போகிறேன். இந்த மன்னன் தன் நாடு மற்றும் அனைத்துடன் அழிவையடையட்டும்" என்று நினைத்தாள். இந்தத் தீர்மானத்தை அடைந்ததும் அவள் பிரம்மலோகத்திற்குச் சென்றாள்.(3) இவ்வாறு {தன் உடல்வடிவமான பூமியைவிட்டுச்} செல்லும் பூமாதேவியைக் கண்ட முனிவர் கசியபர், யோகத்தின் உதவியால் தன் உடலைக் கைவிட்டு அந்தத் தேவியின் புலப்படத்தக்க உடல்வடிவத்திற்குள் {பூமிக்குள்} உடனே நுழைந்தார்.(4) கசியபரின் ஆன்மாவால் ஊடுருவப்பட்ட பூமியானது, செழிப்பில் வளர்ந்து அனைத்து வகைப் பயிர்களின் விளைச்சலும் நிறைந்ததாக இருந்தது. உண்மையில், ஓ! மன்னா, பூமிக்குள் கசியபர் நுழைந்த நேரத்தில் இருந்து, எங்கும் அறமே முதன்மையானது, அனைத்து அச்சங்களும் இல்லாமற்போயின.(5)
இவ்வழியில், ஓ! மன்னா, பூமியானது, முப்பதாயிரம் தேவ வருடங்கள் கசியபரின் ஆன்மாவால் ஊடுருவப்பட்ட நிலையிலேயே இருந்தது. பிரம்மனின் மகளுடைய ஆன்மா ஊடுருவியிருந்தபோது இருந்த செயல்பாடுகள் அனைத்துடனும் சேர்ந்து முழுமையான உயிர்ப்புடன் இருந்தது.(6) இந்தக் காலம் முடிந்ததும் அந்தத் தேவி {பூமா தேவி} பிரம்மலோகத்தில் இருந்து திரும்பி வந்து, கசியபரை வணங்கி நின்று, அதுமுதல் அந்த முனிவரின் மகளானாள் {காசியபி ஆனாள்}.(7) கசியபர் ஒரு பிராமணராவார். ஓ! மன்னா, இஃது அவர் செய்த சாதனையாகும். அந்தக் கசியபரை விட மேன்மையானவன் என்று சொல்லத்தக்க ஒரு க்ஷத்திரியனின் பெயரை எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டான்.(8)
இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் {கார்த்தவீரிய} அர்ஜுனன் அமைதியாக இருந்தான். அவனிடம் மீண்டும் காற்றின் தேவன் {வாயு}, "ஓ! மன்னா, அங்கிரஸ் குலத்தில் பிறந்த உதத்தியரின் {உசத்தியரின்} கதையை இப்போது கேட்பாயாக.(9) பத்ரை என்ற பெயரைக் கொண்ட சோமனின் மகள் ஒப்பற்ற அழகுடன் கூடியவளாகக் கருதப்பட்டாள். அவளது தந்தையான சோமன் உதத்தியரை அவளுக்குத் தகுந்த கணவனாகக் கருதினான்.(10) புகழ்பெற்றவளும், உயர்ந்த அருளைக் கொண்டவளும், குற்றமில்லா அங்கங்களைக் கொண்டவளுமான அந்தக் கன்னிகை, பல்வேறு நோன்புகளை நோற்றபடியே, உதத்தியரைத் தன் தலைவனாக அடைய விரும்பிக் கடுந்தவங்களைச் செய்தாள்.(11) சிறிது காலம் கழித்து, சோமனின் தந்தையான அத்ரி, உதத்தியரைத் தன் வீட்டுக்கு அழைத்துப் புகழ்பெற்ற அந்தக் கன்னிகையை அவருக்கு அளித்தார். அபரிமிதமான அளவில் வேள்விக் கொடைகளைக் கொடுப்பவரான உதத்தியர், அந்தப் பெண்ணைத் தம் மனைவியாக முறைப்படி ஏற்றுக் கொண்டார்.(12)
எனினும், அழகிய வருணன் நீண்ட நாட்களாக அந்தப் பெண்ணின் மீது ஆசை கொண்டிருந்தான். உதத்தியர் வசித்து வந்த வனத்திற்கு வந்த அவன், நீராடுவதற்காக யமுனையில் மூழ்கிய அந்தப் பெண்ணை அபகரித்துச் சென்றான்.(13) அந்த நீர்நிலைகளின் தலைவன், இவ்வாறு அவளை அபகரித்துத் தன் வசிப்பிடத்திற்குக் கொண்டு சென்றான். அந்த மாளிகை அற்புதம் நிறைந்த தன்மையுடன் இருந்தது. அஃது அறுநூறாயிரம் தடாகங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(14) வருணனின் அரண்மனையைவிட மிக அழகானதாக வேறு எந்த மாளிகையும் கருதப்பட்டதில்லை. பல்வேறு அரண்மனைகளாலும், அப்சரஸ்களின் பல்வேறு இனக்குழுக்கள் மற்றும் இன்பத்திற்கான பல்வேறு பொருட்களின் இருப்பாலும் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது.(15) அங்கே, ஓ! மன்னா, நீர்நிலைகளின் தலைவன் அந்த அரண்மனைக்குள் அந்தக் காரிகையுடன் விளையாடினான். சிறிது காலம் கழித்து உதத்தியரிடம் அவரது மனைவி கெடுக்கப்பட்டது சொல்லப்பட்டது.
உண்மையில், செய்திகள் அனைத்தையும் நாரதரிடம் இருந்து கேட்ட உதத்தியர், அந்தத் தெய்வீக முனிவரிடம்,(16) "ஓ! நாரதரே, வருணனிடம் சென்று கடுமையாக நீர் பேச வேண்டும். அவன் ஏன் என் மனைவியை அபகரித்தான் என்றும், என் பெயரை அவனிடம் சொல்லி அவளைத் தர வேண்டும் என்றும் கேட்பீராக.(17) மேலும் அவனிடம், "ஓ! வருணா, நீ உலகங்களைக் காப்பவனன்றி அழிப்பவனல்ல. அவ்வாறிருக்கையில், சோமனால் எனக்கு அளிக்கப்பட்ட என் மனைவியை நீ ஏன் அபகரித்தாய்?" என்றும் கேட்பீராக" என்று சொன்னார் {உதத்தியர்}.(18)
தெய்வீக முனிவரான நாரதர், உதத்தியரால் இவ்வாறு வேண்டப்பட்டதும், வருணன் இருக்கும் இடத்திற்குச் சென்று, அவனிடம், "உதத்தியரின் மனைவியை விடுவிப்பாயாக. உண்மையில் நீ ஏன் அவளை அபகரித்தாய்?" என்று கேட்டார்.(19)
நாரதரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட வருணன், அவரிடம், "மருட்சியுடைய இந்தப் பெண் எனது பேரன்புக்குரியவள். நான் அவளை அனுப்பத் துணியேன்" என்றான்.(20)
இந்த மறுமொழியைக் கேட்ட நாரதர், உதத்தியரிடம் சென்று, உற்சாகமில்லாமல் அவரிடம்,(21) "ஓ! பெருந்தவசியே, வருணன் என் தொண்டையைப் பிடித்து {கழுத்தைப் பிடித்து} அவனது வீட்டில் இருந்து என்னை விரட்டிவிட்டான். அவன் உமது மனைவியைத் திருப்பி அனுப்ப விரும்பவில்லை. நீர் விரும்பியவண்ணம் செயல்படுவீராக" என்றார்[1].(22)
[1] கும்பகோணம் பதிப்பில், "மஹாமுனிவரே, வருணனால் பிடர்பிடித்துத் தள்ளப்பட்டேன். அவன் உமது பாரியையைக் கொடுக்கிறதாக இல்லை. நீர் செய்யக்கூடியதைச் செய்யும்" என்றிருக்கிறது.
நாரதரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அங்கிரஸ் {உதத்தியர்}, கோபத்தில் எரிந்தார். தவச் செல்வம் கொண்ட அவர், நீர் நிலைகளைத் திடமாக்கி, தன் சக்தியால் அவற்றைக் குடித்தார்.(23) இவ்வாறு நீரனைத்துப் பருகப்பட்டதும் நீரின் தேவன், தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து உற்சாகமிழந்தான். இவ்வளவு நடந்தும் அவன் உதத்தியரின் மனைவியைக் கொடுத்தானில்லை.(24)
பிறகு மறுபிறப்பாளர்களில் முதன்மையான உதத்தியர், கோபத்தில் நிறைந்தவராகப் பூமியிடம், "ஓ! இனியவளே, அறுநூறாயிரம் தடாகங்கள் உள்ள நிலத்தை எனக்குக் காட்டுவாயாக" என்றார்.(25)
முனிவரின் இந்த வார்த்தைகளில் குறிப்பிட்ட இடத்தில் இருந்து பெருங்கடல் பின்வாங்கியதும், விளைச்சலே இல்லாத நிலம் தோன்றியது. அந்தப் பகுதியின் வழியாகப் பாய்ந்த ஆற்றிடம், உதத்தியர்,(26) "ஓ! சரஸ்வதி, இங்கே புலப்படாதவளாவாயாக. உண்மையில், ஓ! மருண்ட மங்கையே, இந்தப்பகுதியை விட்டுப் பாலைவனத்திற்குச் செல்வாயாக. ஓ! மங்கல தேவி, நீ இல்லாமல் இந்தப் பகுதி புனிதமற்றதாகட்டும்" என்றார்.(27)
(நீரின் தலைவன் வசித்த) அந்தப் பகுதி வறண்டதும், அவன் உதத்தியரின் மனைவியைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு அங்கிரஸிடம் சென்று அவளை அவரிடம் கொடுத்தான்.(28) தம் மனைவியைத் திரும்பப் பெற்ற உதத்தியர் உற்சாகம் நிறைந்தவரானார். ஓ! ஹைஹய குலத் தலைவா, அப்போது அந்தப் பெரும்பிராமணர், இந்த அண்டத்தையும், நீரின் தேவனையும் {வாயுவையும்} தாம் கொடுத்துவந்த துன்பத்தில் இருந்து மீட்டார்.(29) ஓ! மன்னா, அனைத்துக் கடமைகளையும் அறிந்தவரும், பெருஞ்சக்தி கொண்டவருமான முனிவர் உதத்யர், தம் மனைவியைத் திரும்பப் பெற்றதும், வருணனிடம்,(30) "நீரின் தலைவா {ஜலாதிபதியே}, என் தவங்களின் துணையுடன் உனக்குப் பெரும் துன்பத்தைக் கொடுத்து வேதனையில் உரக்க அழ வைத்த பிறகே நான் என் மனைவியை மீட்டுக் கொண்டேன்" என்றார். இவ்வாறு சொல்லிவிட்டு, தம் மனைவியுடன் அவர் தமதில்லத்திற்குச் சென்றார்.(31) ஓ! மன்னா, பிராமணர்களில் முதன்மையான உதத்தியர் இவ்வாறே இருந்தார். நான் இன்னும் சொல்லட்டுமா? அல்லது, நீ உன் கருத்தில் இன்னும் பிடிவாதமாக இருக்கப் போகிறாயா? உதத்தியருக்கும் மேன்மையான எந்த க்ஷத்திரியன் இருக்கிறான்?" என்று கேட்டான் {வாயு}".(32)
அநுசாஸனபர்வம் பகுதி – 154ல் உள்ள சுலோகங்கள் : 32
ஆங்கிலத்தில் | In English |