The greatness of Agastya and Vasishtha! | Anusasana-Parva-Section-155 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 155)
பதிவின் சுருக்கம் : பிராமணர்களான அகஸ்தியர் மற்றும் வசிஷ்டரின் பெருமையைக் கார்த்தவீரியார்ஜுனனுக்கு எடுத்துரைத்த வாயு தேவன்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் {கார்த்தவீரிய} அர்ஜுனன் அமைதியாக இருந்தான். காற்றின் தேவன் மீண்டும் அவனிடம் பேசினான், "ஓ! மன்னா, பிராமணரான அகஸ்தியரின் பெருமையைக் கேட்பாயாக.(1) ஒரு காலத்தில் தேவர்கள் அசுரர்களால் அடக்கப்பட்டதால் அவர்கள் உற்சாகமிழந்தவர்களாக இருந்தனர். தேவர்களுக்கான வேள்விகள் அனைத்தும் கொள்ளையடிக்கபட்டன, பித்ருக்களின் ஸ்வதாவும் அபகரிக்கப்பட்டது.(2) உண்மையில், ஓ! ஹைஹயர்களின் தலைவா, மனிதர்கள் செய்யும் அறச்செயல்கள் மற்றும் நோன்புகள் அனைத்தும் தானவர்களால் தடுக்கப்பட்டன. தேவர்கள் செழிப்பிழந்து பூமியில் திரிந்தனர் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(3) ஒரு நாள் அவ்வாறு அவர்கள் திரிந்து வருகையில் உயர்ந்த நோன்புகளையும் பெருஞ்சக்தியையும், சூரியனைப் போன்ற சுடர்மிக்கக் காந்தியையும் கொண்ட பிராமணரான அகஸ்தியரைக் கண்டனர்.(4)
அவரை முறையாக வணங்கிய தேவர்கள், மதிப்புக்குரிய வழக்கமான விசாரிப்புகளைச் செய்தனர். பிறகு, ஓ! மன்னா, அந்த உயர் ஆன்மாவிடம் {அகஸ்தியரிடம்},(5) "நாங்கள் போரில் தானவர்களால் வீழ்த்ததால் செழிப்பையும், செல்வாக்கையும் இழந்தவர்களாக இருக்கிறோம். எனவே, ஓ! தவசிகளில் முதன்மையானவரே, பேரச்சந்தரும் இந்நிலையில் இருந்து நீர் எங்களை மீட்பீராக" என்று வேண்டினர்.(6)
தேவர்களின் அவலநிலையை இவ்வாறு அறிந்த அகஸ்தியர் (தானவர்களிடம்) பெருங்கோபம் கொண்டார். பெருஞ்சக்தி கொண்ட அவர், அண்டப் பேரழிவின் போது தோன்றும் அனைத்தையும் எரிக்கும் நெருப்பைப் போல உடனே சுடர்விடத் தொடங்கினார்.(7) அம்முனிவரிடம் இருந்து வெளிப்பட்ட சுடர்மிக்கக் கதிர்களில் தானவர்கள் எரியத் தொடங்கினர். உண்மையில், ஓ! மன்னா, அவர்களில் ஆயிரக்கணக்கானோர் ஆகாயத்திலிருந்து விழத் தொடங்கினர்.(8) அகஸ்தியரின் சக்தியில் எரிந்த தானவர்கள், சொர்க்கத்தையும், பூமியையும் கைவிட்டு, தெற்குத் திசை நோக்கித் தப்பி ஓடினர்.(9)
அந்நேரத்தில் தானவ மன்னன் பலி, பாதாளலோகத்தில் ஒரு குதிரை வேள்வியைச் செய்து கொண்டிருந்தான். பூமியின் குடல்களுக்குள் இருந்த அந்தப் பகுதியில் அவனோடு வசித்து வந்த பேரசுரர்கள் எரியாமல் இருந்தனர்.(10) தேவர்கள், தங்கள் பகைவர்கள் அழிந்ததும், முற்றிலும் அச்சம் விலகியவர்களாகத் தங்கள் உலகங்களை மீட்டனர். அவர்களுக்காக அவர் சாதித்த காரியத்தின் மூலம் ஊக்கமடைந்த அவர்கள், பூமியின் குடல்களுக்குள் பாதாள லோகத்தில் தஞ்சம் அடைந்த அசுரர்களை அழிக்குமாறு அம்முனிவரை வேண்டினர்.(11)
தேவர்களால் இவ்வாறு வேண்டப்பட்ட அகஸ்தியர், அவர்களிடம், "ஆம், பூமிக்கடியில் வசிக்கும் அசுரர்களையும் எரிக்க நான் முழுத் தகுதி கொண்டவனாக இருந்தாலும், அக்காரியத்தைச் செய்தால் என் தவங்கள் பழுதடையும். எனவே, நான் என் சக்தியைப் பயன்படுத்தமாட்டேன்" என்றார்.(12)
ஓ! மன்னா, இவ்வாறே அந்தச் சிறப்புமிக்க முனிவரின் சக்தியால் தானவர்கள் எரிக்கப்பட்டனர். ஓ! ஏகாதிபதி, இவ்வாறே தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்ட அகஸ்தியர், தம் தவங்களின் துணையுடன் அக்காரியத்தைச் சாதித்தார்.(13) ஓ! பாவமற்றவனே, என்னால் விவரிக்கப்பட்டவாறே அகஸ்தியர் இருந்தார். நான் தொடரலாமா? அல்லது, நீ மறுமொழியேதும் கூறப் போகிறாயா? அகஸ்தியரைவிடப் பெரியவனாக எந்த க்ஷத்திரியனும் இருக்கிறானா?" என்று கேட்டான் {வாயு}".(14)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் {கார்த்தவீரிய} அர்ஜுனன், அமைதியாக இருந்தான். காற்றின் தேவன் {வாயு} மீண்டும், "ஓ! மன்னா, சிறப்புமிக்க வசிஷ்டரின் பெருஞ்சாதனைகளைக் கேட்பாயாக.(15) ஒரு காலத்தில் தேவர்கள், {கங்கையில்} வைகானஸத் தடாகக் கரைகளில் ஒரு வேள்வி செய்வதில் ஈடுப்பட்டிருந்தனர். வேள்வி செய்து வந்த தேவர்கள், வசிஷ்டரின் பலத்தை அறிந்து அவரையே தங்கள் புரோகிதராகத் தங்கள் மனத்தில் நிறுவினர்.(16) அதேவேளையில், மலைகளுக்கொப்பான வடிவங்களைக் கொண்டவர்களும் கலினர்கள் {பலிகள்} என்ற பெயர்படைத்தவர்களுமான தானவ குலத்தினர், தேவர்கள் தங்களின் தீக்ஷையின் விளைவால், மெலிந்து குறைந்திருப்பதைக் கண்டு அவர்களைக் கொல்ல விரும்பினர்.(17)
அந்தப் போரில் தானவர்களில் அங்கம் பழுதுபட்டவர்களும், கொல்லப்பட்டவர்களும் மானஸத் தடாக நீரில் மூழ்கச் செய்யப்பட்டு, பெரும்பாட்டனின் வரத்தின் விளைவால் உடனே உயிரையும், வன்மையையும் பெற்றனர்.(18) பெரியவையும், பயங்கரமானவையுமான மலைச்சிகரங்களையும், பரிகங்களையும், மரங்களையும் எடுத்துக் கொண்டு தடாகத்தின் நீரைக் கலக்கி, நூறு யோஜனை உயரத்திற்கு அவற்றைப் பெருகச் செய்தனர்.(19) பிறகு அவர்கள் எண்ணிக்கையில் பத்தாயிரமான இருந்த தேவர்களை எதிர்த்து ஓடினர். தானவர்களால் பீடிக்கப்பட்ட தேவர்கள், தங்கள் தலைவனான வாசவனின் பாதுகாப்பை நாடினார்கள்.(20) எனினும், சக்ரனும் அவர்களால் விரைவில் பீடிக்கப்பட்டான். அவன் மனத்தளர்வுடன் வசிஷ்டரின் பாதுகாப்பை நாடினான். இதன்பேரில் புனித முனிவரான வசிஷ்டர் தேவர்களின் அச்சங்களை விலக்குவதாக உறுதியளித்தார்.(21)
தேவர்கள் பெரிதும் உற்சாகமிழந்திருப்பதைப் புரிந்து கொண்ட அந்தத் தவசி {வசிஷ்டர்}, தமது கருணையின் மூலம் இதைச் செய்தார். அவர் தமது சக்தியை வெளிப்படுத்தி, கலினர்கள் {பலிகள்} என்றழைக்கப்பட்ட அந்தத் தானவர்களை எந்த முயற்சியுமின்றி எரித்தார்.(22) தவங்களையே செல்வமாகக் கொண்ட அம்முனிவர், கைலாசத்திற்குச் சென்றிருந்த கங்கையை அந்த இடத்திற்கு வரச் செய்தார். உண்மையில் கங்கையானவள், அந்தத் தடாகத்தின் நீரைத் துளைத்தபடி தோன்றினாள்.(23) தடாகமானது அந்த ஆற்றால் துளைக்கப்பட்டது {உடைக்கப்பட்டது}. அந்தத் தெய்வீக ஓடையானவள், அத்தடாகத்தின் நீரைத் துளைத்துத் தோன்றி, சரயு என்ற பெயரில் பாய்ந்தாள். அந்தத் தானவர்கள் வீழ்ந்த இடம் அவர்களின் பெயராலேயே {கலினம் / பலினம் என்று} அழைக்கப்படலாயிற்று.(24)
இவ்வாறே, இந்திரனின் தலைமையிலான சொர்க்கவாசிகள், வசிஷ்டரின் மூலம் பெரும் துன்பத்தில் இருந்து மீட்கப்பட்டனர். இவ்வாறே, பிரம்மனிடம் வரம்பெற்றவர்களான அந்தத் தானவர்கள், அந்த உயர் ஆன்ம முனிவரால் கொல்லப்பட்டனர்.(25) ஓ! பாவமற்றவனே, வசிஷ்டர் செய்த சாதனையை நான் சொன்னேன். நான் தொடரட்டுமா? அல்லது, நீ ஏதாவது சொல்லப் போகிறாயா? பிராமணரான வசிஷ்டரை விஞ்சியவன் என்று எந்த க்ஷத்திரியனையாவது சொல்ல முடியுமா?" என்று கேட்டான் {வாயு}".(26)
அநுசாஸனபர்வம் பகுதி – 155ல் உள்ள சுலோகங்கள் : 26
ஆங்கிலத்தில் | In English |