The greatness of Atri and Chyavana! | Anusasana-Parva-Section-156 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 156)
பதிவின் சுருக்கம் : பிராமணர்களான அத்ரி மற்றும் சியவனரின் பெருமையைக் கார்த்தவீரியார்ஜுனனுக்கு எடுத்துரைத்த வாயு தேவன்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இவ்வாறு சொல்லப்பட்ட {கார்த்தவீரிய} அர்ஜுனன் அமைதியாக இருந்தான். காற்றின் தேவன் மீண்டும் அவனிடம், "ஓ! ஹைஹயர்களில் முதன்மையானவனே, உயர் ஆன்ம அத்ரியின் சாதனையைச் சொல்கிறேன் கேட்பாயாக.(1) ஒரு காலத்தில், இருளில் தேவர்களும், தானவர்களும் ஒருவருக்கொருவர் போரிட்டபோது, சூரியன் மற்றும் சோமன் {சந்திரன்} ஆகிய இருவரையும் ராகு {ஸ்வர்ப்பானு} தன் கணைகளால் துளைத்தான்.(2) ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, இருளில் மூழ்கிய தேவர்கள் வலிமைமிக்கத் தானவர்களின் முன்பு வீழத் தொடங்கினர்.(3) அசுரர்களால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்ட சொர்க்கவாசிகள், தங்கள் பலத்தை இழக்கத் தொடங்கினர். அப்போது அவர்கள் தவங்களைச் செல்வமாகக் கொண்டவரும் கல்விமானுமான பிராமணர் அத்ரி கடுந்தவத்தில் இருப்பதைக் கண்டனர்.(4)
புலன்கள் அனைத்தையும் வென்றவரும், கோபமில்லாதவருமான அந்த முனிவரிடம் {அத்ரியிடம்} அவர்கள், "ஓ! முனிவரே, அசுரர்களின் கணைகாளல் துளைக்கப்பட்டிருக்கும் இந்தச் சோமன் மற்றும் சூரியன் ஆகிய இருவரையும் காண்பீராக.(5) இதன் விளைவால் நாங்கள் இருளில் மூழ்கியிருக்கிறோம், பகைவர்களால் நாங்கள் வீழ்த்தப்படுகிறோம். எங்கள் தொல்லைகளுக்கான ஒரு முடிவை நாங்கள் காணவில்லை. ஓ! பெரும்பலத்தில் தலைவரே, இந்தப் பேரச்சத்தில் இருந்து எங்களை மீட்பீராக" என்றனர்.(6)
அதற்கு முனிவர், "உண்மையில், எவ்வாறு நான் உங்களைப் பாதுகாக்க வேண்டும்?" என்றார். அவர்கள், "நீரே சந்திரமாஸாவீராக. நீரே சூரியனாகி, இந்தக் கள்வர்களைக் கொல்வீராக" என்றனர்.(7)
அவர்களால் இவ்வாறு வேண்டப்பட்ட அத்ரி, இருளை அழிக்கும் சோமனின் வடிவை ஏற்றார். உண்மையில் தமது ஏற்புடைய இயல்பின் விளைவால் அவர் சோமனைப் போன்றே அழகானவராகவும் ஒளி நிறைந்தவராகவும் காணப்படத் தொடங்கினார்.(8) இதைக் கண்டவர்களான உண்மையான சோமனும், உண்மையான சூரியனும் பகைவரின் கணைகளால் இருளடைந்தனர். இந்த ஒளிக்கோள்களின் வடிவங்களை ஏற்ற அத்ரி, தமது தவப் பலத்தின் துணையுடன் போர்க்களத்தின் மீது காந்தியுடன் ஒளிரத் தொடங்கினார்.(9) உண்மையில் அத்ரி, இருள் அனைத்தையும் விலக்கி அண்டத்தை ஒளியில் சுடர்விடச் செய்தார். மேலும் தம் பலத்தை வெளிப்படுத்திய அவர், தேவர்களுடைய பகைவர்களின் கூட்டத்தையும் அடக்கினார்.(10)
அத்ரியினால் எரிக்கப்படும் அந்தப் பேரசுரர்களைக் கண்ட தேவர்களும், அத்ரியின் சக்தியால் பாதுகாக்கப்பட்டவர்களாக, அவர்களை {தானவர்களை} விரைவில் அகற்றத் தொடங்கினர்.(11) தமது சக்தி அனைத்தையும் திரட்டி, தம் ஆற்றலை வெளிப்படுத்திய அத்ரி இவ்வழியிலேயே நாளின் தேவனுக்கு ஒளியூட்டி, தேவர்களை மீட்டு, அசுரர்களைக் கொன்றார்.(12) புனித நெருப்பைத் துணையாகக் கொண்டவரும், அமைதியாக மந்திரங்களை ஓதுபவரும், மான் தோல் உடுத்தியவருமான அந்த மறுபிறப்பாளரால் செய்யப்பட்ட சாதனை இதுவே. ஓ! அரசமுனியே, கனிகளைமட்டுமே உண்டு வாழ்ந்த அந்த முனிவர் செய்த சாதனையைக் காண்பாயாக.(13) உயர் ஆன்ம அத்ரியின் சாதனையை நான் விரிவாக உனக்கு உரைத்தேன். நான் தொடரலாமா? அல்லது, நீ ஏதாவது சொல்லப் போகிறாயா? இந்த மறுபிறப்பாள முனிவரைவிட மேன்மையான க்ஷத்திரியன் யாரேனும் உண்டா?" என்று கேட்டான் {வாயு}.(14)
இவ்வாறு சொல்லப்பட்ட {கார்த்தவீரிய} அர்ஜுனன் அமைதியாக இருந்தான். காற்றின் தேவன் மீண்டும் அவனிடம், "ஓ! மன்னா, (பழங்காலத்தில்) உயர் ஆன்ம சியவனரால் செய்யப்பட்ட சாதனையைக் கேட்பாயாக.(15) அஸ்வினி இரட்டையர்களுக்கு உறுதி மொழி அளித்த சியவனர், பாகனைத் தண்டித்தவனிடம் {இந்திரனிடம்}, "வேறு தேவர்கள் அனைவருடன் சேர்ந்து அஸ்வினிகளையும் சோமம் பருகுபவர்களாகச் செய்வாயாக" என்றார்.(16)
இந்திரன் {சியவனரிடம்}, "அஸ்வினிகள் எங்களால் கைவிடப்பட்டவர்கள். அவர்களைப் பிறரோடு சேர்ந்து சோமம் பருக வேள்வி வட்டத்திற்குள் எவ்வாறு அனுமதிக்க முடியும்? அவர்கள் தேவர்களோடு கணக்கிடப்படுவதில்லை. எனவே, எங்களிடம் அவ்வாறு சொல்லாதீர்.(17) ஓ! பெரும் நோன்புகளைக் கொண்டவரே, அஸ்வினிகளுடன் சேர்ந்து நாங்கள் சோமம் பருக விரும்பவில்லை. ஓ! கல்விமானான பிராமணரே, நீர் சொல்லும் வேறு எதையும் நாங்கள் நிறைவேற்றத் தயாராக இருக்கிறோம்" என்றான்.(18)
சியவனர், "அஸ்வினி இரட்டையர்களும் உங்கள் அனைவருடன் சேர்ந்து சோமம் பருக வேண்டும். ஓ! தேவர்களின் தலைவா, அவ்விருவரும் சூரியனுடைய மகன்களாக இருப்பதால் அவர்களும் தேவர்களே.(19) நான் சொன்னதைத் தேவர்கள் செய்ய வேண்டும். அந்த வார்த்தைகளின்படி செயல்படும்போது, தேவர்கள் பெரும் நன்மையை அறுவடை செய்வார்கள். வேறு வகையில் செய்பட்டால் தீமையே அவர்களை மூழ்கடிக்கும்" என்றார்.(20)
இந்திரன், "ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நான் அஸ்வினிகளுடன் சேர்ந்து சோமம் பருக மாட்டேன். மற்றவர்கள் விரும்பினால் அவர்களோடு பருகட்டும். என்னைப் பொறுத்தவரையில், நான் அதைச் செய்யத் துணியேன்" என்றான்.(21)
சியவனர், "ஓ! பலனைக் கொன்றவனே, என் வார்த்தைகளுக்கு நீ கீழ்ப்படியாவிட்டால், இந்த நாளிலேயே என்னால் வற்புறுத்தப்பட்டு வேள்வியில் அவர்களோடு சோமம் பருகுவாய்" என்றார்".(22)
காற்றின் தேவன் {தொடர்ந்தான்}, "பிறகு, தம்மோடு அஸ்வினிகளை அழைத்துச் சென்ற சியவனர், அவர்களின் நன்மைக்காக ஒரு பேரறச் சடங்கைத் தொடங்கினார். மந்திரங்களின் துணையுடன் சியவனரால் தேவர்கள் அனைவரும் கலங்கடிக்கப்பட்டனர்.(23) சியவனரால் தொடங்கப்பட்ட காரியத்தைக் கண்ட இந்திரன், கோபத்தால் தூண்டப்பட்டான். ஒரு பெரும் மலையைத் தூக்கிக் கொண்டு அவன் {இந்திரன்} அந்த முனிவரை எதிர்த்து ஓடினான்.(24) தேவர்களின் தலைவன் வஜ்ரமும் தரித்திருந்தான். அப்போது, தவங்களுடன் கூடிய சியவனர், அவ்வாறு முன்னேறி வரும் இந்திரனின் மீதும் தம் கோபப் பார்வையைச் செலுத்தினார்.(25) சிறிதளவு நீரைத் தெளித்த அவர் தேவர்களின் தலைவனை அவனது வஜ்ரத்தோடும் மலையோடும் சேர்த்து முடக்கினார். அவரால் தொடங்கப்பட்ட அந்த அறச்சடங்கின் விளைவால் அவர் இந்திரனுக்குப் பகையான ஒரு பயங்கர அசுரனை உண்டாக்கினார்.(26) வேள்வித் தீயில் ஊற்றப்பட்ட ஆகுதிகளால் அமைந்தவனும், அகன்று விரிந்த வாயைக் கொண்டவனுமான அந்த அசுரன் மதன் என்றழைக்கப்பட்டான். மந்திரங்களின் துணையுடன் அந்தப் பெருந்தவசியால் உண்டாக்கப்பட்ட அந்த அசுரன் இவ்வாறே இருந்தான். அவனது வாயில் நூறு யோஜனைகள் தொலைவுக்கு நீளும் ஆயிரம் பற்கள் இருந்தன.(27) பயங்கர முகத் தோற்றத்தைக் கொண்டிருந்த அவனுடைய கோரப் பற்கள் இருநூறு யோஜனைகள் நீளம் இருந்தன. அவனுடைய கன்னங்களில் ஒன்று பூமியில் இருந்தது, மற்றொன்று சொர்க்கங்களைத் தொட்டுக் கொண்டிருந்தது.(28) உண்மையில், வாசவனுடன் கூடிய தேவர்கள் அனைவரும், லேவியாதனத்தின் {பெரிய மீன் ஒன்றின்} அகன்று திறந்திருக்கும் வாய்க்குள் நுழையப் போகும் மீன்களைப் போல அந்தப் பேரசுரனின் நாவின் அடிப்பாகத்தில் {தொண்டையில்} நின்று கொண்டிருந்தனர்.(29)
தேவர்கள், மதனின் வாய்க்குள் நின்று கொண்டிருந்தபோது, அவர்களுள் அவசர ஆசலோசனை செய்து இந்திரனிடம், "இந்த மறுபிறப்பாளரிடம் மதிப்புடன் தலைவணங்குவாயாக.(30) அனைத்து ஐயங்களில் இருந்து விடுபட்டு, அஸ்வினிகளின் துணையுடன் நாங்கள் சோமத்தைப் பருகுவோம்" என்றனர். அதன் பிறகு, சக்ரன் சியவனரிடம் தலைவணங்கி அவரது ஆணைக்குக் கீழ்ப்படிந்தான்.(31) இவ்வாறே சியவனர், அஸ்வினிகளைப் பிற தேவர்களுடன் சேர்ந்து சோமம் பருகுபவர்களாக்கினார். மதனைத் திருப்பி அழைத்துக் கொண்ட அந்த முனிவர், அவன் செய்ய வேண்டிய செயல்களை அவனுக்கு ஒதுக்கினார்.(32) அந்த மதன், பகடையிலும், வேட்டையிலும், குடியிலும், பெண்களிடத்திலும் வசிக்குமாறு பணிக்கப்பட்டான். எனவே, ஓ! மன்னா, இவற்றில் ஈடுபடும் மனிதர்கள் ஐயமில்லாமல் அழிவையே அடைவார்கள்.(33) எனவே, ஒருவன் இந்தக் களங்கங்களை எப்போதும் நெடுந்தொலைவுக்குக் களைய வேண்டும். இவ்வாறே, ஓ! மன்னா, சியவனர் செய்த சாதனையை நான் உனக்குச் சொன்னேன். நான் தொடரட்டுமா? அல்லது, நீ மறுமொழியேதும் சொல்லப் போகிறாயா? பிராமணரான சியவனரைவிட உயர்ந்த க்ஷத்திரியன் எவனும் இருக்கிறானா?" என்று கேட்டான் {வாயு}[1]".(34,35)
[1] இந்தக் கதை ஏற்கனவே வனபர்வத்தில் பகுதி 124 மற்றும் பகுதி 125ல் சொல்லப்பட்டிருக்கிறது.
அநுசாஸனபர்வம் பகுதி – 156ல் உள்ள சுலோகங்கள் : 35
ஆங்கிலத்தில் | In English |