Kapas! | Anusasana-Parva-Section-157 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 157)
பதிவின் சுருக்கம் : பூமியும், சொர்க்கமும் கபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது; தேவர்கள் பிராமணர்களால் அவற்றைத் திரும்பப் பெற்றது; கார்த்தவீரியார்ஜுனனுக்குப் பிராமணர்களால் ஏற்படப்போகும் அச்சம் ஆகியவற்றைக் குறித்து கார்த்தவீரியார்ஜுனனுக்குச் சொன்ன வாயு தேவன்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "காற்றின் தேவனுடைய இவ்வார்த்தைகளைக் கேட்ட {கார்த்தவீரிய} ஆர்ஜுனன் அமைதியாக இருந்தான். இதன்பேரில் காற்றின் தேவன் மீண்டும் அவனிடம், "இந்திரனின் தலைமையிலான சொர்க்கவாசிகள் அசுரன் மதனின் வாய்க்குள் தங்களைக் கண்டபோது, சியவனர் அவர்களிடம் இருந்து பூமியை அடைந்தார்.(1,2) ஏற்கனவே சொர்க்கத்தை இழந்தவர்களும், இப்போது பூமியை இழந்தவர்களுமான தேவர்க்ள உற்சாகமிழந்தனர். உண்மையில், அந்த உயர் ஆன்மாக்கள் துன்பத்தால் பீடிக்கப்பட்டு, பெரும்பாட்டனின் பாதுகாப்பின் கீழ் தங்களை நிறுத்திக் கொண்டனர் {பிரம்மனைத் தஞ்சமடைந்தனர்}.(3)
தேவர்கள் {பிரம்மனிடம்}, "ஓ! அண்டத்தின் உயிரினங்கள் அனைத்தாலும் துதிக்கப்படுபவரே, பூமியானது எங்களிடமிருந்து சியவனரால் எடுத்துக் கொள்ளப்பட்டது, ஓ! பலமிக்கவனே, அதே வேளையில் சொர்க்கமும் கபர்களால் அபகரிக்கப்பட்டது.(4)
பிரம்மன், "சொர்க்கவாசிகளே, இந்திரனின் தலைமையில் விரைவாகச் சென்று பிராமணர்களின் பாதுகாப்பை நாடுவீராக. அவர்களை நிறைவடையச் செய்வதன் மூலம் நீங்கள் முன்பு போலவே இரண்டு உலகங்களையும் பெறுவீர்கள்" என்றான்.(5)
பெரும்பாட்டனால் இவ்வாறு சொல்லப்பட்ட தேவர்கள், பிராமணர்களிடம் சென்று, அவர்களது பாதுகாப்பை அடைய வேண்டினார்கள். பிராமணர்கள் மறுமொழியாக, "நாங்கள் யாரை வசப்படுத்த வேண்டும்?" என்று கேட்டனர். இவ்வாறு கேட்கப்பட்ட தேவர்கள், அவர்களிடம், "கபர்களை அடக்குவீராக" என்றனர்.(6)
பிராமணர்கள், "முதலில் அவர்களைப் பூமிக்குக் கொண்டு வந்து, அதன் பிறகு அவர்களை விரைவில் அடக்குகிறோம்" என்றனர். அதன் பிறகு, கபர்களின் அழிவை நோக்கமாகக் கொண்ட ஒரு சடங்கை அந்தப் பிராமணர்கள் தொடங்கினர். இதைக் கேட்ட உடனேயே கபர்கள், தனி என்ற பெயர் கொண்டவனைத் தங்கள் தூதுவனாக அந்தப் பிராமணர்களிடம் அனுப்பி வைத்தனர்.(7)
தனி, அவர்களிடம் வந்து பூமியில் அமர்ந்து, கபர்களால் சொல்லப்பட்ட செய்தியை இவ்வாறு சொன்னான், "கபர்களும் உங்கள் அனைவரையும் போன்றோரே. (அவர்கள் உங்களில் எவரையும் காட்டிலும் தாழ்ந்தவர்களல்ல). எனவே, நீங்கள் நிறைவேற்றப் பார்க்கும் சடங்குகள் என்ன விளைவை ஏற்படுத்தப் போகின்றன?(8) அவர்கள் அனைவரும் வேதங்களை அறிந்தவர்களாகவும், ஞானம் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் வேள்விகளில் கவனம் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வாய்மையைத் தங்கள் நோன்பாகவும் கொண்டிருப்பதால் பெரும் முனிவர்களுக்கு இணையானவர்களாகக் கருதப்படுகிறார்கள்.(9) செழிப்பின் தேவி அவர்களுக்கு மத்தியில் விளையாடிக் கொண்டிருக்கிறாள். அவர்களும் பதிலுக்கு அவளை மதிப்புடன் ஆதரிக்கின்றனர். அவர்கள் கனியற்ற கலவிகளுக்காகத் தங்கள் மனைவியரை நாடுவதில்லை, மேலும், அவர்கள் வேள்விகளில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சியை ஒருபோதும் உண்பதில்லை.(10) அவர்கள் (ஒவ்வொருநாளும்) சுடர்மிக்க வேள்வித்தீயில் ஆகுதிகள் ஊற்றி, தங்கள் ஆசான்கள் மற்றும் பெரியோரின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தங்கள் ஆன்மாக்களை முற்றிலும் கட்டுப்படுத்தியவர்களாக இருக்கிறார்கள், மேலும் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு முறையாகப் பகர்ந்து கொடுக்காமல் ஒருபோதும் எந்த உணவையும் உட்கொள்வதில்லை.(11) அவர்கள் எப்போதும் தேர்களிலும், பிற வாகனங்களிலும் ஒன்றாகச் சேர்ந்தே செல்கிறார்கள் (அவர்களில் எவரும், பிறர் கால்நடையாகச் செல்லும்போது வாகனம் செலுத்திச் செல்வதில்லை). அவர்கள் தங்கள் மனைவியர் மாத விலக்குக் காலத்தில் இருக்கும்போது அவர்களிடம் ஒருபோதும் கலவியில் ஈடுபடுவதில்லை. மறுமையில் இன்பலோகங்களை அடையும் வழியிலேயே அவர்கள் அனைவரும் செயல்படுகின்றனர்.(12) பெண்கள் கருவுற்றிருக்கும்போதோ, முதியோர் உண்ணாதிருக்கும்போதோ, அவர்கள் ஒருபோதும் உண்பதில்லை. அவர்கள் முற்பகலில் எவ்வகை விளையாட்டுகளிலும் ஈடுபடுவதில்லை. ஒருபோதும் அவர்கள் பகலில் உறங்குவதில்லை.(13) கபர்களிடம் இவையும், இன்னும் பிற நல்லொழுக்கங்ளும், சாதனைகளும் இருக்கும்போது, ஏன் நீங்கள் அவர்களை அடக்க முயல்கிறீர்கள்? இம்முயற்சியை நீங்கள் தவிர்க்க வேண்டும். உண்மையில், அவ்வாறு தவிர்ப்பதன் மூலம் நீங்கள் நன்மையை அடைவீர்கள்" என்றான்.(14)
பிராமணர்கள், "ஓ, நாங்கள் கபர்களை அடக்கவே போகிறோம். இக்காரியத்தில் நாங்களும் தேவரும் ஒருவரே. எனவே, கபர்கள் எங்கள் கரங்களால் கொல்லப்படுவார்கள். தனியைப் பொறுத்தவரையில் {தனி என்ற உன்னைப் பொறுத்தவரையில்} அவன் எங்கிருந்து வந்தானோ அங்கேயே திரும்ப வேண்டும்" என்றனர்.(15)
இதன் பிறகு, கபர்களிடம் திரும்பிய தனி, அவர்களிடம், "பிராமணர்கள் உங்களுக்கு எந்த நன்மையும் செய்பவர்களாக இல்லை" என்றான். இதைக் கேட்ட கபர்கள் அனைவரும் தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, பிராமணர்களை நோக்கிச் சென்றனர்.(16) தேரின் கொடிமரங்கள் உயர்த்தப்பட்டு, தங்களை எதிர்த்து வரும் கபர்களைக் கண்ட பிராமணர்கள், கபர்களின் உயிர் மூச்சுகளுக்கு அழிவை உண்டாக்குவதற்காகக் குறிப்பிட்ட சுடர்மிக்க நெருப்புகளை உண்டாக்கினர்.(17) வேத மந்திரங்களின் துணையுடன் உண்டாக்கப்பட்ட அந்த நித்திய நெருப்புகள், கபர்களை அழித்து, (பொன்) மேகங்கள் பலவற்றைப் போல ஆகாயத்தில் ஒளிரத் தொடங்கின.(18) போரில் ஒன்றுகூடிய தேவர்கள், பல தானவர்களைக் கொன்றனர். பிராமணர்களே அவர்களுக்கு அழிவை உண்டாக்குகிறார்கள் என்பதை அந்நேரத்தில் அவர்கள் அறியவில்லை.(19)
ஓ! மன்னா, பெரும் சக்தி கொண்ட நாரதர் அங்கே வந்து, (தேவர்களால் அல்லாமல்) பிராமணர்களின் வலிய சக்தியின் மூலம் தங்கள் பகைவர்களான கபர்கள் எவ்வாறு உண்மையில் கொல்லப்பட்டனர் என்பதைத் தேவர்களுக்குச் சொன்னார்.(20) தேவர்களின் சொற்களைக் கேட்ட சொர்க்கவாசிகள் பெரும் நிறைவை அடைந்தனர். அவர்கள் பெரும்புகழைக் கொண்ட தங்கள் மறுபிறப்பாளக் கூட்டாளிகளை மெச்சினார்கள்.(21) பிறகு, தேவர்களின் சக்தியும் ஆற்றலும் பெருகத் தொடங்கின, அவர்கள் உலகங்கள் அனைத்திலும் வழிபடப்பட்டார்கள், அழிவின்மை என்ற வரத்தையும் அவர்கள் அடைந்தார்கள்" என்றான் {வாயு}.(22)
காற்றின் தேவன் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, அவனை முறையாக வழிபட்ட மன்னன் {கார்த்தவீரிய} அர்ஜுனன், அவனிடம் இந்த வார்த்தைகளில் பதிலளித்தான். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஏகாதிபதி, {கார்த்தவீரிய} அர்ஜுனன் என்ன சொன்னான் என்பதைக் கேட்பாயாக.(23)
{கார்த்தவீரிய} அர்ஜுனன் {வாயு தேவனிடம்}, "ஓ! பலமிக்கத் தேவா {வாயுவே}, எப்போதும், அனைத்து வழிமுறைகளிலும் நான் பிராமணர்களுக்காகவே வாழ்கிறேன். அவர்களிடம் அர்ப்பணிப்புள்ள நான் எப்போதும் அவர்களை வழிபட்டு வருகிறேன்.(24) தத்தாத்ரேயரின் அருளின் மூலம் நான் என்னுடைய இந்த வலிமையை அடைந்திருக்கிறேன். அவருடைய அருளின் மூலமே உலகில் பெருஞ்சாதனைகளைச் செய்தேன், உயர்ந்த பலன்களையும் அடைந்தேன்.(25) ஓ! காற்றின் தேவா, உன்னால் விரிவாகவும், கவனத்தைக் கவரும் வகையிலும் சொல்லப்பட்ட பிராமணர்களின் சாதனைகளை நான் கவனத்துடன் கேட்டேன்" என்றான்.(26)
காற்றின் தேவன், "பிறப்பால் உனதான க்ஷத்திரியக் கடமைகளை நீ செய்யும்போது, பிராமணர்களைப் பாதுகாத்து, அவர்களைப் பேணி வளர்ப்பாயாக. உன் புலன்களைக் காப்பது போலவே நீ அவர்களைக் காப்பாயாக. பிருகுவின் குலத்தில் இருந்து உனக்கு ஆபத்து இருக்கிறது. எனினும், நெடுங்காலம் கழித்தே அவை அனைத்தும் நடந்தேறும்" என்றான் {வாயு}".(27)
அநுசாஸனபர்வம் பகுதி – 157ல் உள்ள சுலோகங்கள் : 27
ஆங்கிலத்தில் | In English |