The glory of Krishna! | Anusasana-Parva-Section-158 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 123)
பதிவின் சுருக்கம் : : கிருஷ்ணனின் மகிமையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! மன்னா புகழத்தக்க நோன்புகளைக் கொண்ட பிராமணர்களை எப்போதும் நீர் வழிபடுகிறீர். எனினும், ஓ! மன்னா, அவர்களை வழிபடுவதால் நீர் காணும் கனியென்ன?(1) ஓ! உயர்ந்த நோன்புகளைக் கொண்டவரே, பிராமணர்களை வழிபடுவதில் கிடைக்கும் எந்தச் செழிப்பால் நீர் அவர்களை வழிபடுகிறீர்? ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, இவை அனைத்தையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பெரும் நுண்ணறிவைக் கொண்டவனான கிருஷ்ணன் இங்கே இருக்கிறான். அவன் உனக்கு அனைத்தையும் சொல்வான். உயர்ந்த நோன்புகளையும், செழிப்பையும் கொண்ட அவன், பிராமண வழிபாட்டுடன் தொடர்புடைய செழிப்பைக் குறித்து உனக்குச் சொல்வான்.(3) என் பலம், காதுகள், வாக்கு, மனம், கண்கள், புத்தி ஆகியன (இன்று குழம்புவதால்) தெளிவாக இல்லை. என் உடலைக் கைவிடுவதற்கான நேரம் தொலைவிலில்லை என நினைக்கிறேன். சூரியன் வெகு மெதுவாகச் செல்வதாக எனக்குத் தெரிகிறது[1].(4) ஓ! மன்னா, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்களால் பின்பற்றப்படுபவையும், புராணங்களில் குறிப்பிடப்படுபவையுமான உயர்ந்த கடமைகள் அனைத்தையும் நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன். ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, அவ்வகையில் கொஞ்சம் எஞ்சி இருப்பதைக் கிருஷ்ணனிடம் இருந்து அறிவாயாக.(5)
[1] "துன்பத்தில் பீடிக்கப்பட்ட மனிதனுக்கு ஒரு நாள் என்பது நெடுங்காலமாகத் தெரியும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
நான் கிருஷ்ணனை உண்மையில் அறிவேன். அவன் யார் என்பதையும், அவனது புராதன வலிமை என்ன என்பதையும் நான் அறிவேன். ஓ! கௌரவர்களின் தலைவா, கேசவன் அளக்க இயலாத ஆன்மா கொண்டவன். ஐயங்கள் எழும்போது அறத்தை நிலைநிறுத்துபவன் அவனே.(6) பூமி, ஆகாயம், சொர்க்கம் ஆகியவற்றைப் படைத்தவன் கிருஷ்ணனே. உண்மையில், பூமியானது கிருஷ்ணனின் உடலில் இருந்தே எழுந்தது. பயங்கர ஆற்றலைக் கொண்டவனும், தொடக்கக் காலத்தில் இருந்தே இருப்பவனுமான கிருஷ்ணனே வலிமைமிக்கப் பன்றியாகி மூழ்கிப் போன பூமியை உயர்த்தியவன். திசைப்புள்ளிகளையும், மலைகளையும் படைத்தவன் அவனே.(7) ஆகாயம், சொர்க்கம், திசைப்புள்ளிகள் நான்கு, திசைகளின் துணைப்புள்ளிகள் நான்கு ஆகியன அவனுக்குக் கீழேயே இருக்கின்றன. அவனிடம் இருந்தே மொத்த படைப்பும் உண்டானது. பழைமையான அண்டத்தைப் படைத்தவன் அவனே.(8) அவனது உந்தியில் ஒரு தாமரை தோன்றியது. அந்தத் தாமரைக்குள் அளவிலா சக்தி கொண்ட பிரம்மன் எழுந்தான். ஓ! பிருதையின் மகனே, (ஆழத்திலும், அகலத்திலும்) கடலையே கடந்திருக்கும் {விஞ்சியிருக்கும்} இருளைப் போக்கியவன் பிரம்மனே.(9)
ஓ! பார்த்தா, கிருத யுகத்தில் கிருஷ்ணன் அறத்தின் {தர்மத்தின்} வடிவில் (பூமியில்) இருந்தான். திரேதா யுகத்தில் அறிவின் வடிவில் இருந்தான். துவாபர யுகத்தில் வலிமையின் வடிவில் இருந்தான். கலி யுகத்தில் அவன் மறத்தின் {அதர்மத்தின்} வடிவில் பூமிக்கு வந்தான்[1].(10) பழங்காலத்தில் தைத்தியர்களைக் கொன்றவன் அவனே. புராதன தேவன் அவனே. அசுரப் பேரரசனின் (பலியின்) வடிவில் அசுரர்களை ஆண்டவன் அவனே. அனைத்தையும் படைத்தவன் அவனே. அனைத்து உயிரினங்களின் எதிர்காலமாக இருப்பவனும் அவனே. அழிவின் வித்துகள் நிறைந்த இந்த அண்டத்தைப் பாதுகாப்பவனும் அவனே.(11) அறம் குன்றும்போது, தேவகுலத்திலோ, மனித குலத்திலோ பிறப்பவன் இந்தக் கிருஷ்ணனே. (அத்தகைய சந்தர்ப்பங்களில்) மேல் மற்றும் கீழ் உலகங்கள் இரண்டையும் பாதுகாப்பவன் அறத்தில் நிலைத்திருக்கும் தூய ஆன்மா கொண்ட இந்தக் கிருஷ்ணனே.(12) ஓ! பார்த்தா, அசுரர்களில் விடத் தகுந்தவர்களை விட்டு, அவர்களைக் கொல்வதில் தன்னை நிறுவி கொள்கிறான். முறையான மற்றும் முறையற்ற செயல்கள் அனைத்தாகவும், அவற்றின் காரணமாகவும் இருப்பவன் அவனே. செய்யப்பட்ட செயலும், செய்யப்பட வேண்டிய செயலும், செய்துவரும் செயலும் கிருஷ்ணனே ஆவான். ராகு, சோமன் மற்றும் சக்ரன் ஆகியோரும் இந்தச் சிறப்புமிக்கவனே என்பதை அறிவாயாக.(13) விஷ்வகர்மன் அவனே. அண்டவடிவில் இருப்பவன் அவனே. அண்டத்தை அழிப்பவனும், படைப்பவனும் அவனே. சூலபாணி அவனே, மனித வடிவம் அவனே, பயங்கர வடிவம் அவனே. செயல்களால் அறியப்படுபவனாக இருப்பதால் உயிரினங்கள் அனைத்தும் அவனது புகழையே பாடுகின்றன.(14)
[1] கும்பகோணம் பதிப்பில், "இந்தக் கிருஷ்ணமூர்த்திக் கிருதயுகத்தில் நிரம்பின தர்மமாயிருந்தார்; த்ரேதாயுகத்தில் யாகரூபத்தையடைந்தார்; த்வாபரயுகத்தில் தேகவன்மையாயிருந்தார்; கலியில் அதர்மமாகப் பூமியிலேயே அவதரித்திருக்கிறார்" என்றிருக்கிறது.
நூற்றுக்கணக்கான கந்தர்வர்களும், அப்சரஸ்களும், தேவர்களும் எப்போதும் அவனுடன் இருக்கின்றனர். ராட்சசர்களும் கூட அவனது புகழைப் பாடுகின்றனர். செல்வத்தைப் பெருக்குபவன் அவனே; அண்டத்தின் ஒரே வெற்றியாளன் அவனே.(15) நாநயமிக்க மனிதர்கள் வேள்விகளில் அவனது புகழையே பாடுகிறார்கள். சாமங்களைப் பாடுபவர்கள் ரதந்தரங்களைச் சொல்லி அவனைப் புகழ்கின்றனர். பிராமணர்க்ள வேத மந்திரங்களில் அவனையே புகழ்கின்றனர். வேள்விப் புரோகிதர்கள் அவனிடமே தங்கள் ஆகுதிகளை ஊற்றுகின்றனர்.(16) சினத்தில் இந்திரன் பொழிந்த மழையில் இருந்து பிருந்தாவனத்தின் மாட்டிடையர்களைப் பாதுகாப்பதற்காகக் கோவர்த்தன மலைகளை அவன் {கிருஷ்ணன்} உயர்த்திய போது இந்திரனின் தலைமையிலான தேவர்கள் அவனது புகழைப் பாடினர். ஓ!பாரதா, அனைத்து உயிரினங்களுக்குமான ஒரே பேறு அவனே. ஓ! பாரதா, அவன் பழைய பிரம்மக் குகைக்குள் நுழைந்து, அவ்விடத்தில் இருந்து, உலகத்தை மறைத்த ஆதி தொடக்கத்தைக் கண்டவன்[2].(17)
[2] "ஒன்றுமற்ற பிரம்மத்தின் இருப்பை இவ்விடம் குறிக்கிறது" என்கிறார் கங்குலி.
முதன்மையான சாதனைகளைக் கொண்ட இந்தக் கிருஷ்ணனே தானவர்கள் மற்றும் அசுரர்கள் அனைவரையும் கலங்கடித்து, பூமியை மீட்டான். மக்கள் அவனுக்கே பல்வேறு வகை உணவுகளை அர்ப்பணிக்கிறார்கள். போர் நேரும் சமயத்தில் போர்வீரர்கள் அனைவரும் அவனுக்கே தங்கள் வாகனங்களை அர்ப்பணிக்கிறார்கள்.(18) அவன் நித்தியமானவன், சிறப்புமிக்க அவனுக்குக் கீழ்தான் பூமி, சொர்க்கம் மற்றும் இருப்பில் உள்ள பொருட்கள் அனைத்தும் இருக்கின்றன. மித்ரன் மற்றும் வருணன் ஆகிய தேவர்களின் உயிர் வித்துகளைக் குடுவைக்குள் விழச் செய்து, வசிஷ்டர் என்ற பெயரில் அறியப்பட்ட முனிவரை உண்டாக்கியவன் அவனே.(19) கிருஷ்ணனே காற்றின் தேவனாக {வாயுவாக} இருக்கிறான்; அவனே பலமிக்க அஸ்வினிகளாக இருக்கிறான்; அவனே தேவர்களில் முதல்வனும், ஆயிரங்கதிர்களைக் கொண்டவனுமான சூரியனாக இருக்கிறான். அவனாலேயே அசுரர்கள் அடக்கப்பட்டார்கள். அவனே தன் மூன்று அடிகளால் மூவுலகங்களையும் மறைத்தான்.(20) தேவர்கள், மனிதர்கள் மற்றும் பித்ருகளின் ஆன்மாவாக இருப்பவன் அவனே. வேள்விச் சடங்குகளை அறிந்தோரால் செய்யப்படும் வேள்வி அவனே. ஒவ்வொரு நாளும் (சூரியனின் வடிவில்) ஆகாயத்தில் எழுந்து பகல் மற்றும் இரவாகக் காலத்தைப் பகுத்து, அரைவருடம் வடக்கு நோக்கியும், அரைவருடம் தெற்கு நோக்கியும் செல்பவன் அவனே.(21)
மேல்நோக்கியும், கீழ்நோக்கியும், பக்கவாட்டிலும் அவனிடமிருந்து எழும் எண்ணற்ற ஒளிக்கதிர்கள் உலகத்திற்கு ஒளியூட்டுகின்றன. வேதமறிந்த பிராமணர்கள் அவனைத் துதிக்கின்றனர். அவனுடைய கதிர்களில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டே சூரியன் ஆகாயத்தில் ஒளிர்கிறான்.(22) மாதாமாதம் வேள்வி செய்பவன் அவனை வேள்வியாகவே விதிக்கிறான். வேதங்களை அறிந்த மறுபிறப்பாளர்கள் அனைத்து வகை வேள்விகளிலும் அவனது புகழையே பாடுகின்றனர். மூன்று அச்சுகளைக் கொண்டதும், ஏழு குதிரைகள் பூட்டப்பட்டதுமான ஆண்டுச் சக்கரமாக இருப்பவன் அவனே. இவ்வழியில் (பருவகாலங்கள் என்ற) மூன்று மாளிகைகளை ஆதரிப்பவன் அவனே.(23) பெருஞ்சக்தி கொண்டவனும், அனைத்திலும் நிறைந்திருப்பவனும், உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனுமான கிருஷ்ணனே உலகங்கள் அனைத்தையும் நிலைநிறுத்துகிறான். இருள் அனைத்தையும் விலக்கும் சூரியன் அவனே. அனைத்தையும் படைத்தவன் அவனே. ஓ! வீரா, நீ கிருஷ்ணனை அணுகுவாயாக.(24)
உயர் ஆன்மாவும் பலமும் கொண்டவனான கிருஷ்ணன் ஒரு காலத்தில் காண்டவ வனத்தின் புல்லில் அக்னியின் வடிவில் வசித்திருந்தான். (அந்தக் காட்டில் இருந்த மூலிகைகள் அனைத்தையும் எரித்ததால்) விரைவில் அவன் நிறைவடைந்தான். விரும்பிய எங்கும் செல்லவல்லவனான கிருஷ்ணன், ராட்சசர்கள் மற்றும் உரகர்களை அடக்கிவிட்டு, சுடர்மிக்க நெருப்புக்குள் ஆகுதிகளை ஊற்றினான்.(25) அர்ஜுனனுக்கு எண்ணற்ற வெண்குதிரைகளைக் கொடுத்தவன் கிருஷ்ணன். குதிரைகள் அனைத்தையும் படைத்தவன் அவனே. இந்த உலகம் (அல்லது மானுட வாழ்வு) அவனது தேராக இருக்கிறது. அந்தத் தேருக்கு (சத்வ, ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களாலான) மூன்று சக்கரங்கள் இருக்கின்றன.(26) அது (செயல்களால் கொண்டுவரப்படும் மேன்மையான, தாழ்ந்த, இடைநிலை பிறவிகளைக் குறிக்கும் மேல்நோக்கு, கீழ்நோக்கு, குறுக்கு என) மூவகை நகர்வியக்கங்களைக் கொண்டிருக்கிறது. அதில் (காலம், முன்வினை, தேவர்கள் விருப்பம் மற்றும் சுய விருப்பம் என்ற) நான்கு குதிரைகளைப் பூட்டப்பட்டுள்ளன. அது (நற்செயல்கள், தீச்செயல்கள் மற்றும் கலப்புத்தன்மையுள்ள செயல்களைக் குறிக்கும் வகையில் வெள்ளை, கருப்பு மற்றம் கலந்த வண்ணங்களில்) மூன்று அச்சுகளைக் கொண்டிருக்கிறது.(27) வானத்துடன் சேர்ந்த ஐம்பூதங்களுக்கும் புகலிடமாக இருப்பவன் இந்தக் கிருஷ்ணனே. பூமியையும், சொர்க்கத்தையும் இடையில் உள்ள வெளியையும் படைத்தவன் அவனே. உண்மையில், காடுகளையும், மலைகளையும் படைத்தவன் அளவிலா சுடர்மிக்க சக்தி கொண்ட இந்தக் கிருஷ்ணனே. தன் மீது வஜ்ரத்தை ஏவ இருந்த சக்ரனைத் தண்டிக்க விரும்பி, ஆறுகளைக் கடந்து அவனை உடனே முடக்கியவன் இந்தக் கிருஷ்ணனே. பழைமையான ஆயிரம் ரிக்குகளின் துணையால் பெரும் வேள்விகளில் பிராமணர்களால் துதிக்கப்படுபவன் இந்தக் கிருஷ்ணனே.(28) ஓ! மன்னா, வீட்டிற்கு விருந்தினராக வந்தவரும், புராதன முனிவர்களில் ஒருவராகச் சொல்லப்படுபவரும், பெருஞ்சக்தி கொண்டவருமான முனிவர் துர்வாசரைப் பராமரிக்க இந்தக் கிருஷ்ணனால் மட்டுமே முடிந்தது. அண்டத்தைப் படைத்தவன் அவனே. உண்மையில் அவன் தன் சொந்த இயல்பில் இருந்தே அனைத்தையும் படைக்கிறான்.(29) தேவர்கள் அனைவரையும் விட மேன்மையான அவனே தேவர்கள் அனைவருக்கும் கற்பிக்கிறான். பழைமையான விதிகள் அனைத்தையும் பிழையில்லாமல் பின்பற்றுபவன் அவனே. ஓ! மன்னா, இன்பம் தொடர்புடைய அனைத்துச் செயல்கள், வேதங்களில் காணப்படும் அனைத்துச் செயல்கள், உலகம் தொடர்புடைய அனைத்துச் செயல்களின் கனியாக இருப்பவன் விஷ்வக்ஸேனன் என்றழைக்கப்பபடும் இந்தக் கிருஷ்ணனே. (30)
உலகங்கள் அனைத்திலும் காணப்படும் ஒளியின் வெண்கதிர்கள் அவனே. மூவுலகங்கள் அவனே. உலகங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் மூவர் {மும்மூர்த்திகள்} அவனே. வேள்வி நெருப்புகள் மூன்றிலும் இருப்பவன் அவனே. {பூ: புவ: ஸ்வ: எனும்} வியாஹ்ருதிகள் மூன்றும் அவனே. உண்மையில் அனைத்து தேவர்களும் ஒன்றாகச் சேர்ந்தவன் இந்தத் தேவகியின் மைந்தனே.(31) ஆண்டு அவனே; பருவகாலங்கள் அவனே; பக்ஷங்கள் அவனே, பகலும், இரவும் அவனே; கலைகள், காஷ்டைகள், மாத்திரைகள், முகூர்த்தங்கள், லவங்கள், க்ஷணங்கள் என்றழைக்கப்படும் காலப்பிரிவுகள் அவனே. இவை யாவும் இந்த விஷ்வக்ஸேனனே என்பதை அறிவாயாக.(32) சந்திரன், சூரியன், கோள்கள், நட்சத்திரக்கூட்டங்கள், விண்மீன்கள், முழு நிலவு {பௌர்ணமி} நாள் உள்ளிட்ட பர்வ நாட்கள் அனைத்தும், நட்சத்திரக் கூடுகைகள் மற்றும் பருவகாலங்கள் ஆகியன விஷ்வக்ஸேனனான இந்தக் கிருஷ்ணனிடம் இருந்தே பாய்கின்றன.(33) ருத்திரர்கள், ஆதித்தயர்கள், வசுக்கள், அஸ்வினிகள், சாத்யர்கள், விஷ்வேதேவர்கள், பல்வேறு மருத்துக்கள், பிரஜாபதி, தேவர்களின் தாயான அதிதி, முனிவரெழுவர் {சப்தரிஷிகள்} ஆகியோரனைவரும் கிருஷ்ணனில் இருந்தே எழுந்தனர்.(34)
காற்றாகத் தன்னை மாற்றிக் கொண்டு அவன் அண்டத்தைச் சிதறடிக்கிறான். அண்ட வடிவிலான அவன் அனைத்தையும் எரிக்கும் நெருப்பாகிறான். நீராக மாறி அனைத்தையும் நனைத்து மூழ்கடிக்கிறான், பிரம்மனின் வடிவை ஏற்று உயிருள்ள மற்றும் உயிரற்ற பல்வேறு இனங்களைப் படைக்கிறான்.(35) தானே வேதமாக இருந்தாலும், வேதங்கள் அனைத்தையும் கற்கிறான். விதிகள் அனைத்துமாக இருந்தாலும், அறம் தொடர்பாகக் காரியங்களில் விதிக்கப்பட்டிருக்கும் விதிகள் அனைத்தையும், வேதங்களையும், அண்டத்தை ஆளும் சக்தியையும் பின்பற்றுகிறான். உண்மையில், ஓ! யுதிஷ்டிரா, அசையும் மற்றும் அசையாத அண்டமனைத்தும் இந்தக் கேசவனே என்பதை அறிவாயாக. மிகப் பிரகாசமான ஒளியின் வடிவில் இருப்பவன் அவனே. அண்டவடிவம் கொண்ட இந்தக் கிருஷ்ணன், அந்தச் சுடர்மிக்கப் பிரகாசத்தில் வெளிப்படுகிறான். இருப்பிலுள்ள அனைத்து உயிரின ஆன்மாக்களின் உண்மை காரணமாக இருக்கும் அவன் முதலில் நீரையே படைத்தான். அதன் பிறகு இந்த அண்டத்தை அவன் படைத்தான்.(37) இந்தக் கிருஷ்ணனே விஷ்ணு என்பதை அறிவாயாக. அண்டமனைத்தின் ஆன்மா அவனே என்பதை அறிவாயாக. பருவகாலங்கள் அனைத்தும் அவனே என்பதை அறிவாயாக. இயற்கையில் நாம் காணும் பல்வேறு அற்புதங்கள் அவனே. மழைபொழியும் மேகங்களும், வானத்தில் மின்னும் மின்னல்களும் அவனே. யானை ஐராவதன் அவனே. உண்மையில், அசையும், அசையாத அண்டமனைத்தும் அவனே.(38)
அண்டத்தின் வசிப்பிடமாகவும், குணங்கள் அனைத்தையும் கடந்தவனாகவும் இருக்கும் இந்தக் கிருஷ்ணனே வாசுதேவன். அவன் ஜீவன் ஆகும்போது சங்கர்ஷணன் என்றழைக்கப்படுகிறான். அடுத்ததாக அவன் பிரத்யும்னனாகவும், அநிருத்தனாகவும் ஆகிறான். இவ்வழியில் தெய்வப் பிறவியான உயர் ஆன்ம கிருஷ்ணன், நான்கு வகை வடிவங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான்.(39) ஐம்பூதங்களாலான இந்த அண்டத்தை உண்டாக்க விரும்பிய அவன், தன்னை அப்பணியில் நிறுவி கொண்டு, தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள் என்ற உயிருள்ள ஐந்து இருப்புகளில் அண்டத்தை இயங்கச் செய்கிறான். ஓ! பிருதையின் மகனே, பூமி {நிலம்}, காற்று, வானம், ஒளி, நீர் ஆகியற்றைப் படைத்தவன் அவனே. அசையும் மற்றும் அசையாத பொருட்களுடன் கூடிய இந்த அண்டத்தைப் படைத்து, அவற்றை (ஈன்றுபெறும் இனம், முட்டையிட்டுப் பெறும் இனம், தாவரங்கள் மற்றும் கழிவில் பிறப்பவை என்ற) நால்வகையாகப் பிரித்த பிறகு, பூமியை {ஆகாயம், நிலம், நெருப்பு, நீர், காற்று என்ற) ஐந்துவகை வித்துகளுடன்[3] கூடியவளாகப் படைத்தான். பிறகு, பூமியில் நீரை அபரிமிதமாகப் பொழிவதற்காக ஆகாயத்தை உண்டாக்கினான்.(41)
[3] "ஐவகை வித்துகள் என்பன நால்வகை உயிரினங்களும், அனைத்து உயிரினங்களின் சூழ்நிலைகளையும் தீர்மானிக்கும் செயல்களும் ஆகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். மேலே அடைப்புக்குறிக்குள் தரப்பட்டிருப்பது கும்பகோணம் பதிப்பில் உள்ளதாகும்.
ஓ! மன்னா, இந்த அண்டத்தை உண்டாக்கியவன் இந்தக் கிருஷ்ணனே என்பதில் ஐயமில்லை. அவன் தானே தோன்றியவன் ஆவான். அவன் தன் பலத்தால் அனைத்துப் பொருட்களையும் இருப்பில் இருக்கச் செய்கிறான். தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், உலகங்கள், முனிவர்கள், பித்ருக்கள் மற்றும் உயிரினங்கள் அனைத்தையும் படைத்தவன் அவனே. அனைத்து உயிரினங்களின் தலைவன், படைக்க விரும்பியவனாக உயிருள்ள மொத்த அண்டத்தையும் முறையாகப் படைத்தான். நன்மை மற்றும் தீமை, அசைவன மற்றும் அசையாதன ஆகிய அனைத்தும் விஷ்வக்ஸேனனான இவனிடம் இருந்தே பாய்கின்றன. இருப்பில் உள்ள எதுவும், இருப்பில் உதிக்கும் எதுவும், அனைத்தும் கேசவனே. உயிரினங்களுக்கு முடிவு ஏற்படுகையில் மரணமாக வருபவனும் இந்தக் கிருஷ்ணனே. அவன் நித்தியமானவன், அறக் காரணங்களை நிலைநிறுத்துபவன். கடந்த காலத்தில் இருந்த எதுவும், நாம் அறிந்த எதுவும், உண்மையில் அனைத்தும் இந்த விஷ்வக்ஸேனனே.(42-44) அண்டத்தில் உன்னதமானவையும், பலன்மிக்கவையுமான எவையும், நன்மை, தீமை என்று இருக்கும் எவையும், அனைத்தும் நினைத்தக்கரியவனான இந்தக் கேசவனே. எனவே கேசவனைவிட மேன்மையானது என எதையும் நினைப்பதே பொருளற்றதாகும்.(45) கேசவன் அத்தகையவனே. இதையும்விடப் பெரியவனே. உயர்ந்தவற்றில் உயர்ந்தவனும், மாற்றமில்லாதவனும், மங்காதவனுமான நாராயணன் அவனே. அசைவன மற்றும் அசையாதனவற்றுடன் கூடியதும், தொடக்கம், நடு மற்றும் முடிவுடன் கூடியதுமான மொத்த அண்டத்திற்கும், ஆசைகளைப் பின்தொடர்ந்து பிறக்கும் உயிரினங்கள் அனைத்திற்கும் மாற்றமற்ற நித்திய காரணன் அவனே" என்றார் {பீஷ்மர்}.(46)
அநுசாஸனபர்வம் பகுதி – 158ல் உள்ள சுலோகங்கள் : 46
ஆங்கிலத்தில் | In English |