Durvasa! | Anusasana-Parva-Section-159 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 159)
பதிவின் சுருக்கம் : பிராமண வழிபாட்டின் சிறப்பையும், துர்வாஸ முனிவரை வழிபட்டதனால் தனக்குக் கிடைத்த மேன்மையையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்...
யுதிஷ்டிரன் {கிருஷ்ணரிடம்}, "ஓ! மதுசூதனா, பிராமண வழிபாட்டினால் உண்டாகும் செழிப்பென்ன என்பதை எங்களுக்குச் சொல்வாயாக. இக்காரியம் குறித்து நன்கறிந்தவன் நீயே. உண்மையில் நம் பாட்டன் {பீஷ்மர்} உன்னை அறிந்திருக்கிறார்" என்றான்.(1)
வாசுதேவன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, ஓ! பாரதக் குலத்தின் தலைவா, ஓ! குருகுலத்தில் முதன்மையானவரே, வாய்மைக்கு இணக்கமனான வகையில் பிராமணர்களை வழிபடுவதால் கிட்டும் பலன்களை உமக்குச் சொல்கிறேன், குவிந்த கவனத்துடன் கேட்பீராக.(2) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவரே, ஒரு காலத்தில் நான் துவாராவதியில் அமர்ந்திருந்த போது, குறிப்பிட்ட பிராமணர்களிடம் சினம் அடைந்திருந்த என் மகன் பிரத்யும்னன் என்னிடம் வந்து,(3) "ஓ! மதுசூதனரே, பிராமண வழிப்பாட்டில் கிட்டும் பலனென்ன? இம்மையிலும், மறுமையிலும் அவர்களின் தலைமைத்துவம் எவ்வாறு உண்டானது?(4) ஓ! கௌரவங்களை அளிப்பவரே, பிராமணர்களைத் தொடர்ந்து வழிபடுவதன் மூலம் வெல்லப்படும் வெகுமதிகள் என்ன? இக்காரியத்தில் என் மனம் ஐயங்களால் குழப்பமடைவதால் இஃதை அன்புடன் எனக்கு விளக்கிச் சொல்வீராக" என்று கேட்டான்.(5)
பிரத்யும்னனால் என்னிடம் இவ்வார்த்தைகள் சொல்லப்பட்டதும், நான் அவனுக்குப் பின்வருமாறு பதிலளித்தேன். ஓ! மன்னா, அந்த வார்த்தைகளைச் சொல்கிறேன் குவிந்த கவனத்துடன் கேட்பீராக.(6) {நான் அவனிடம்}, "ஓ! ருக்மிணியின் பிள்ளாய், பிராமண வழிபாட்டின் மூலம் வெல்லப்படும் செழிப்பென்ன என்பதை உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக. ஒருவன், (அறம், பொருள், இன்பம் என்று) நன்கறியப்படும் முத்தொகையை அடைவதிலோ, முக்தியை அடைவதிலோ, புகழ் மற்றும் செழிப்பு ஆகியவற்றை அடைவதிலோ, தேவர்கள் மற்றும் பித்ருக்கள் வழிப்பாட்டிலோ தன்னை நிறுவிக் கொள்ளும்போது, அவன் மறுபிறப்பாளர்களை நிறைவடையச் செய்வதில் கவனம் கொள்ள வேண்டும். அவர்கள் ஒவ்வொருவரும் (ஆகாயத்தில் இனிய ஒளியைப் பொழியும்) சோம மன்னன் {சந்திரன்} ஆவர். அவர்கள் மகிழ்ச்சியையும், துன்பத்தையும் ஆள்பவர்கள்.(7,8) ஒரு ருக்மிணியின் பிள்ளாய், ஓ! மகனே, இம்மையிலோ, மறுமையிலோ ஏற்புடைய அனைத்தும் பிராமணர்களைத் தோற்றுவாயாகக் கொண்டவையே. இதில் எனக்கு ஐயமேதும் இல்லை.(9) பிராமண வழிபாட்டில் இருந்தே பெருஞ்சாதனைகளும், புகழும், பலமும் பாய்கின்றன. உலகங்கள் அனைத்திலும் வசிப்பவர்களும், லோகபாலர்கள் அனைவரும் பிராமணர்களை வழிபடுபவர்களே.(10) இவ்வாறிருக்கையில், ஓ! மகனே, நாமே பூமியின் தலைவர்கள் என்ற கருத்தால் நிறைந்து எவ்வாறு அவர்களை நாம் அவமதிக்கலாம்? ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, உன் கோபம், தனக்கான பொருளாகப் பிராமணர்களைத் தழுவ வேண்டாம்.(11) இம்மையிலும், மறுமையிலும் பிராமணர்கள் பெரியவர்களாகக் கருதப்படுகிறார்கள். அண்டத்தில் உள்ள அனைத்தையும் குறித்த நேரடி அறிவு பெற்றவர்கள் அவர்கள். உண்மையில் அவர்கள் கோபமடைந்தால் அனைத்தையும் சாம்பலாகக் குறைக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.(12)
அவர்கள் (இருப்பில் உள்ளவற்றைத் தவிர) வேறு உலகங்களையும், வேறு லோகபாலர்களையும் படைக்கவல்லவர்கள். அவ்வாறிருக்கையில், சக்தியும், சரியான அறிவும் படைத்த மனிதர்கள் ஏன் அவர்களிடம் மதிப்புடன் நடந்துகொண்டு, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருக்கக் கூடாது?(13) ஓ! மகனே, பச்சை மற்றும் பழுப்பு {பசும்பொன்} நிறம் கொண்ட பிராமணரான துர்வாசர் முன்பொரு சமயம் என் வீட்டில் வசித்திருந்தார். மரவுரியுடுத்திய அவர், வில்வ மரத்தாலான தண்டத்தைக் கொண்டிருந்தார். நீண்ட தாடியுடன் கூடிய அவர் மிகவும் மெலிந்தவராகவும் இருந்தார்.(14) பூமியில் உள்ள நெடிய மனிதனைவிட உயரத்தில் நெடியவராக இருந்தார். மனிதர்களுக்குரிய உலகங்கள், தேவலோகங்கள் மற்றும் வேறு மேன்மையானோருக்குரிய உலகங்கள் அனைத்திலும் திரிந்து கொண்டிருந்த அவர், சபைகளிலும், பொதுவெளிகளிலும் எப்போதும் இந்த ஸ்லோகங்களைப் பாடிக் கொண்டிருந்தார். {துர்வாஸர்} "பிராமணனான இந்தத் துர்வாசனை, விருந்தோம்பல் கடமைகளுடன் தன் வீட்டில் வசிக்கச் செய்பவன் எவன்?(16) அனைவரிடமும் சிறு மீறலையும் கண்டு கோபங்கொள்பவன் இவன். என் இயல்பைக் கேட்டும் இங்கே எனக்குப் புகலிடமளிப்பவன் எவன்?(17) உண்மையில், ஒரு விருந்தினனாக எனக்கு உறைவிடமளிக்கும் ஒருவன், என்னைக் கோபமடையச் செய்யும் எதையும் செய்யக்கூடாது" {என்ற வரிகளைப் பாடுவார்}.
எவரும் தம் வீட்டில் அவருக்கு உறைவிடமளிக்கத் துணியவில்லை என்பதை நான் கண்டபோது, அவரை அழைத்து என் வசிப்பிடத்தில் வசிக்கச் செய்தேன்.(18) ஆயிரக்கணக்கானோர் உண்ணப் போதுமான உணவை குறிப்பிட்ட நாட்களில் அவர் ஒருவரே உண்பார். வேறு குறிப்பிட்ட நாட்களில் மிகக் குறைவாகவே உண்பார். சில நாட்களில் என் வீட்டை விட்டு வெளியே செல்லும் அவர் திரும்பி வரமாட்டார்.(19) சில வேளைகளில் வெளிப்படையான காரணமேதுமின்றிச் சிரிப்பார். சில வேளைகளில் காரணமில்லாமல் அழுவார். அந்த நேரத்தில் பூமியில் அவருக்கு நிகரான வயதைக் கொண்டவர்கள் எவரும் இல்லை.(20) ஒரு நாள், தமக்கென ஒதுக்கப்பட்ட இடத்திற்குள் நுழைந்து அங்கே இருந்த படுக்கைகள், விரிப்புகளையும், அவருக்குத் தொண்டாற்றியவர்களும், நன்கு அலங்கரித்துக் கொண்டவர்களுமான காரிகையரையும் எரித்துவிட்டுச் சென்றுவிட்டார்[1].(21)
[1] கும்பகோணம் பதிப்பில், "பிராயதில் அவருக்கீடானவர் பூமியிலில்லை, சிறந்த மகிமையுள்ள ரிஷி ஒருகால் தம்மிடம் போய்க் கட்டில் மெத்தைகளை எரித்துத் தாமும் அவற்றிலிருந்து விழுந்தார்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் கங்குலியில் உள்ளவாறே இருக்கிறது.
உயர்வாகப் புகழத்தக்க நோன்புகளைக் கொண்ட அவர், இது நடந்த பிறகு என்னிடம், "ஓ! கிருஷ்ணா, தாமதமேதும் இல்லாமல் பாயஸம் உண்ண விரும்புகிறேன்" என்றார்.(22) அவரது மனத்தை முன்பே புரிந்து வைத்திருந்த நான் அனைத்து வகை உணவு மற்றும் பானங்களைத் தயாரிக்கும் வகையில் பணியாட்களை நிறுவியிருந்தேன்.(23) உண்மையில், சிறந்த உணவுப்பொருட்கள் தயாராக வைக்கப்பட்டிருந்தன. என்னிடம் பாயஸம் கேட்கப்பட்ட உடனே, நான் அதைக் கொண்டு வந்து அந்தத் தவசிக்கு அளித்தேன்.(24) சிறிதளவு உண்ட அவர், என்னிடம், "ஓ! கிருஷ்ணா, இந்தப் பாயஸத்தை எடுத்து உன் அங்கமெங்கும் பூசிக் கொள்வயாக" என்றான்.(25) எந்தத் தயக்கமுமின்றி அவர் சொன்னவாறே நான் செய்தேன். உண்மையில் எஞ்சியிருந்த பாயஸத்தை என் உடலிலும், தலையிலும் பூசிக் கொண்டேன்.(26)
அந்த நேரத்தில் அத்தவசி, இனிய முகம் படைத்த உன் அன்னை {ருக்மிணி} அருகில் நிற்பதைக் கண்டார். சிரித்துக் கொண்டே அந்தப் பாயஸத்தை அவள் மீதும் அவர் பூசினார்.(27) பாயஸம் பூசப்பட்ட உடலுடன் கூடிய உன் அன்னையைத் தாமதமேதும் இல்லாமல் ஒரு தேரில் பூட்டினார். அந்தத் தேரில் ஏறி அவர் என் வீட்டில் இருந்து புறப்பட்டார்.(28) பெரும் நுண்ணறிவைக் கொண்டவரும், நெருப்பைப் போன்று சுடர்விட்டுப் பிரகாசிக்கும் அந்தத் தவசி, மனிதர்களின் தேரை இழுக்கும் விலங்கைப் போல இளமையுடன் கூடிய என் ருக்மிணியை என் முன்னிலையிலேயே அடித்தார்.(29) இதைக் கண்டும், வன்மத்தில் பிறந்த சிறு துன்பத்தையும் நான் உணரவில்லை, அந்த முனிவரைக் காயப்படுத்தவும் விரும்பவில்லை. உண்மையில், தேரில் ருக்மிணியைப் பூட்டிய அந்த முனிவர், நகரத்தின் சாலைவழியே செல்ல விரும்பிப் புறப்பட்டார்.(30)
இயல்புக்குமீறிய இக்காட்சியைக் கண்ட தாசார்ஹர்களில் சிலர், கோபத்தால் நிறைந்து, ஒருவருக்கொருவர் இவ்வகையில் பேசத் தொடங்கினர், {அவர்கள் தங்களுக்குள்}{31) "ருக்மிணியைத் தேரில் பூட்டிய பிறகும் மூச்சை இழுக்க {சுவாசிக்கக்} கூடியவன் இந்தப் பூமியில் வேறு எவன் இருக்கிறான்? உண்மையில் இந்த உலகம் பிராமணர்களால் நிறையட்டும். வேறு வகையினர் எவரும் இங்கே பிறக்க வேண்டாம்.(32) நஞ்சுமிக்கப் பாம்பின் நஞ்சானது மிகக் கொடியதாகும். ஒரு பிராமணன் அதைவிடக் கொடிய நஞ்சாவான். நஞ்சுமிக்கப் பாம்பான ஒரு பிராமணனால் கடிபட்ட, அல்லது எரிக்கப்பட்ட ஒரு மனிதருக்கு மருத்துவன் எவனும் இல்லை" என்றனர்.(33)
தடுக்கப்பட முடியாதவரான துர்வாசர் அவ்வாறு தேரில் சென்ற போது, ருக்மிணி சாலையில் நிலைதடுமாறி நடந்து அடிக்கடி விழுந்தாள். இதனால் கோபமடைந்த அந்த மறுபிறப்பாள முனிவர், சாட்டையால் ருக்மிணியை அடித்து ருக்மிணியைத் தூண்டினார்.(34) இறுதியாக, பேரார்வத்தில் நிறைந்திருந்த அவர் தேரில் இருந்து குதித்து, வழியற்ற நிலத்தில் கால்நடையாகவே தென்திசையை நோக்கி ஓடினார்.(35) அந்தப் பிராமணர்களில் முதன்மையானவர் பாதையற்ற நிலத்தில் ஓடுவதைக் கண்ட நாங்கள், உடலில் பாயஸம் பூசப்பட்டவர்களாக இருந்தாலும், அவரைப் பின்தொடர்ந்து சென்று, "ஓ! புனிதமானவரே, எங்களிடம் நிறைவடைவீராக" என்றோம்.(36)
பெரும் சக்தி கொண்ட அந்தப் பிராமணர் {துர்வாஸர்}, என்னைக் கண்டு, "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணா, உன் இயல்பின் பலத்தால் உன் கோபத்தை அடக்கிக் கொண்டாய். ஓ! அற்புத நோன்புகளைக் கொண்டவனே, நான் உன்னிடம் சிறு குற்றத்தையும் காணவில்லை. ஓ! கோவிந்தா, நான் உன்னிடம் உயர்ந்த நிறைவையடைகிறேன். நீ விரும்பும் ஆசைகள் கனியும் நிலையை வேண்டுவாயாக.(38) ஓ! மகனே, நான் எவரிடமாவது நிறைவடையும்போது, என்னுடைய பலம் என்ன என்பதைக் காண்பாயாக. தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் உணவை விரும்புவதைத் தொடரும் வரையில் அவர்களில் ஒவ்வொருவரும் உணவில் கொள்வது போலவே உன்னையும் விரும்புவார்கள். பல்வேறு உலகங்களில் அறம் இருக்கும் வரை நீ செய்த சாதனைகளின் புகழ் நீடித்திருக்கும்(39,40) உண்மையில் உன் புகழ் மூவுலகங்கள் உள்ள வரை நீடித்திருக்கும். ஓ! ஜனார்த்தனா, நீ அனைவருக்கும் ஏற்புடையவனாக இருப்பாய்.(41) உன் பொருட்களில் உடைக்கப்பட்டவையோ, எரிக்கப்பட்டவையோ வேறுவகையில் (என்னால்) அழிக்கப்பட்டவையோ, அவை அனைத்தும் முன்போலவே, அல்லது முன்னிலும் சிறந்த வடிவில் மீளும்.(42) ஓ! மங்கா மகிமை கொண்டவனே, நீ வாழ விரும்பும் வரை, நான் கொடுத்த பாயஸந்தடவிய உடல் பகுதிகளில் தாக்கப்பட்டு மரணம் நேரும் அச்சமேதும் உனக்கு இருக்காது.(43) ஓ! மகனே, உள்ளங்கால்களிலும் அந்தப் பாயஸத்தை நீ ஏன் பூசவில்லை? அதைச் செய்யாததால், என்னால் அங்கீகரிக்கப்படாத வழியில் நீ செயல்பட்டிருக்கிறாய்" என்றார். அந்தச் சந்தர்ப்பத்தில் என்னிடம் நிறைவடைந்து அவர் சொன்ன வார்த்தைகள் இவையே. அவர் பேசுவதை நிறுத்திய பிறகு, என் உடல் பேரெழிலுடனும், காந்தியுடனும் கூடியதை நான் கண்டேன்.(44)
ருக்மிணியிடமும் நிறைவடைந்த அம்முனிவர் அவளிடம், "ஓ! அழகிய பெண்ணே, புகழடைவதில் பெண்களில் முதன்மையானவளாக இருப்பாய், பெரும் மகிமையும், சாதனைகளும் உனதாகும். முதுமை, நோய் அல்லது மேனிவண்ணம் குறைதல் ஆகியவை உனக்கு எப்போதும் ஏற்படாது.(45) எப்போதும் உன்னுடன் இருக்கும் நறுமணத்துடன் கிருஷ்ணனுக்கு நீ எப்போதும் பணிவிடை செய்வதை அனைவரும் காண்பார்கள்.(46) கேசவனின் பதினாறாயிரம் {16,000} மனைவியரில் நீ முதன்மையானவளாக இருப்பாய். இறுதியாக, இவ்வுலகில் இருந்து செல்லும் காலம் வரும்போது, மறுமையில் கிருஷ்ணனின் பிரியா துணையை அடைவாய்" என்றார்.(47)
உன் அன்னையிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன அம்முனிவர் மீண்டும் என்னிடம் பின்வரும் சொற்களைச் சொல்லிவிட்டு இடத்தை விட்டு அகன்றார். உண்மையில், சுடர்மிக்க நெருப்பைப் போன்ற முனிவர் துர்வாசர்,(48) "ஓ! கேசவா, பிராமணர்களிடம் எப்போதும் உன் புத்தி இவ்வாறே இருக்கட்டும்" என்றார். உண்மையில் இச்சொற்களைச் சொன்ன அந்தப் பிராமணர், என் கண் முன்பாகவே அங்கேயே அப்போதே மறைந்து போனார்.(49) அவர் மறைந்த பிறகு, யாரும் கேட்காத வகையில் அமைதியாகச் சில மந்திரங்களைச் சொல்லும் நோன்பை நோற்றேன். உண்மையில், அந்த நாளில் இருந்து பிராமணர்களிடம் நான் பெறும் ஆணைகளை நிறைவேற்றத் தீர்மானித்தேன்.(50) ஓ மகனே, நானும் உன் அன்னையும் இந்நோன்பைப் பின்பற்றி இன்பத்தில் நிறைந்த இதயங்களுடன் எங்கள் அரண்மனைக்குள் மீண்டும் நுழைந்தோம்.(51) வீட்டிற்குள் நுழைந்ததும், அம்முனிவரால் உடைக்கப்பட்ட, அல்லது எரிக்கப்பட்ட அனைத்தும் புதிதாக இருப்பதைக் கண்டேன்.(52) மேலும் நீடித்திருக்கும் தன்மையுடன் கூடிய அந்தப் புதிய பொருட்களைக் கண்டு நான் ஆச்சரியத்தால் நிறைந்தேன். உண்மையில், ஓ! ருக்மிணியின் மகனே, அந்நாளில் இருந்தே நான் பிராமணர்களை எப்போதும் மனத்தால் வழிபடுகிறேன்" என்றேன்.
ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரரே}, "தங்கள் வகையில் {வர்ணத்தில்} முதன்மையானவர்களான பிராமணர்களின் பெருமை குறித்து அந்தச் சந்தர்ப்பத்தில் நான் சொன்னது இதுவே.(54) ஓ! குந்தியின் மகனே, ஓ பலமிக்கவரே, நீரும் செல்வம் மற்றும் பசுக்களைக் கொடைகளாக அளித்து உயர்ந்த அருளைக் கொண்ட பிராமணர்களை வழிபடுவீராக.(55) இவ்வழியிலேயே பிராமணர்களின் அருள் மூலம் பிறந்த செழிப்பை நான் அனுபவிக்கிறேன். மேலும், ஓ! பாரதர்களின் தலைவா, பீஷ்மர் என்னைக் குறித்துச் சொன்னது அனைத்தும் உண்மையே" என்றான் {கிருஷ்ணன்}.(56)
அநுசாஸனபர்வம் பகுதி – 159ல் உள்ள சுலோகங்கள் : 56
ஆங்கிலத்தில் | In English |