The greatness of Sankara! | Anusasana-Parva-Section-160 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 160)
பதிவின் சுருக்கம் : சிவனின் பெருமையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்...
யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! மதுசூதனா, துர்வாஸரின் அருள்மூலம் நீ அடைந்த அறிவை எனக்கு விளக்கிச் சொல்வதே உனக்குத் தகும்.(1) ஓ! நுண்ணறிவுமிக்கவர் அனைவரிலும் முன்மையானவனே, அந்த உயர்ந்த அருள், அந்த உயர் ஆன்மாவின் பெயர்கள் அனைத்தையும் விளக்கமாக நான் கேட்க விரும்புகிறேன்" என்று கேட்டான்[1].(2)
[1] துர்வாஸர் மஹாதேவனின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறார். எனவே, துர்வாஸர் என்ற பெயர் குறிப்பிடப்பட்டாலும் யுதிஷ்டிரன் உண்மையில் மஹாதேவனையே கேட்கிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகறார்.
வாசுதேவன் {யுதிஷ்டிரனிடம்}, "அந்த உயர் ஆன்மாவின் அருள் மூலம் நான் வென்ற புகழ் மற்றும் அடைந்த நன்மைகளை உமக்குச் சொல்கிறேன். உண்மையில், கபர்தினை வணங்கிய பிறகு இது குறித்து நான் உமக்குச் சொல்கிறேன்.(3) ஓ! மன்னா, ஒவ்வொரு நாள் படுக்கையில் இருந்து எழுந்ததும் நான் சொல்லும் சதருத்ரீயத்தை உமக்குச் சொல்கிறேன் கேட்பீராக.(4) அனைத்து உயிரினங்களின் பெருந்தலைவனும், தவங்களையே செல்வமாகக் கொண்டவனுமான பிரம்மனே, சில காலம் சிறப்புத் தவங்களைச் செய்து இந்த மந்திரங்களைத் தொகுத்தான். ஓ! ஐயா, அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்துடன் கூடிய இந்த அண்டத்தைச் சங்கரனே படைத்தான்.(5) ஓ! ஏகாதிபதி, மஹாதேவனை விட உயர்ந்தவன் வேறு எவனும் இல்லை. உண்மையில், மூவுலகங்களில் உள்ள அனைத்திலும் உயர்ந்தவன் அவனே.(6) அந்த உயர் ஆன்மாவின் எதிரே நிற்கவல்லவர்கள் வேறு எவரும் இல்லை. உண்மையில், அவனுக்கு நிகராக மூவுலகங்களிலும் ஒருவனும் இல்லை.(7)
போர்க்களத்தில் சினத்தால் நிறைந்தவனாக அவன் நிற்கும்போது, அவனது மேனி மணமே பகைவர்கள் அனைவரின் நினைவையும் இழக்கச் செய்யும். கொல்லப்படாதவர்கள் நடுங்கிக் கீழே விழுவார்கள்.(8) அவனது முழக்கங்கள் மேகங்களுக்கு ஒப்பான பயங்கரமானவை. போர்க்களத்தில் அவனது முழக்கங்களைக் கேட்கும் தேவர்களின் இதயங்களே கூட இரண்டாகப் பிளக்கும்.(9) பினாகைதாரி கோபமடைந்து பயங்கர வடிவை ஏற்று, தேவர்கள், அசுரர், கந்தர்வர், அல்லது பாம்பின் மீது வெறுமனே தன் பார்வையைச் செலுத்தினாலும், அவனுக்கு மலைக்குகையில் உறைவிடம் அமைந்தாலும் மனோ அமைதியை அடையத் தவறுவான். உயிரினங்கள் அனைத்தின் தலைவனான தக்ஷன் வேள்வி செய்ய விரும்பி, தன் வேள்வியைப் பரப்பியபோது,(10,11) அச்சமற்ற பவன், (தக்ஷனைக் கண்டு) கோபமடைந்து, (உடல்படைத்த) வேள்வியைத் துளைத்தான். தன்னுடைய பயங்கர வில்லில் இருந்து கணையை ஏவி உரக்க முழங்கினான்.(12) உண்மையில் மஹாதேவன் கோபமடைந்து உடல்வடிவம் கொண்ட வேள்வியைத் தன் கணையால் திடீரெனத் துளைத்தபோது, தேவர்கள் மகிழ்ச்சியையும், இதய அமைதியையும் இழந்து துன்பத்தில் நிறைந்தனர்.(13)
அவனது வில்லின் நாண்கயிற்றில் உண்டான நாணொலியின் விளைவால் மொத்த அண்டமும் கலக்கமடைந்தது. ஓ! பிருதையின் மகனே, தேவர்களும், அசுரர்களும், உற்சாகத்தை இழந்து கலக்கமடைந்தனர்.(14) பெருங்கடல் கலங்கியது, பூமியானவள் மையம் வரை நடுங்கினாள். மலைகளும், குன்றுகளும் தங்கள் அடித்தளத்தைவிட்டு நகரத் தொடங்கி, அனைத்துப் புறங்களிலும் ஓடின. ஆகாய வெளி உடைந்தது.(15) உலகங்கள் அனைத்தும் இருளில் மூழ்கின. எதையும் காண முடியவில்லை. ஓ! பாரதா, சூரியனுடன் சேர்த்து, ஒளிக்கோள்கள் அனைத்தின் ஒளியும் இருளடைந்தது.(16) அச்சமடைந்த பெரும் முனிவர்கள், தங்களுக்கும், அண்டத்திற்கும் நன்மை செய்ய விரும்பி, அமைதிக்கான வழக்கமான பரிகாரச் சடங்குகளைச் செய்தனர்.(17) அதே வேளையில், பயங்கர ஆற்றலைக்கொண்ட ருத்திரன் தேவர்களை எதிர்த்து விரைந்தான். சினத்தால் நிறைந்த அவன், பகனின் {பக தேவனின்} கண்களைக் கிழித்தெறிந்தான்.(18) சினத்தால் தூண்டப்பட்ட அவன், தன் காலால் பூஷனை {சூரியனைத்} தாக்கினான். (புரோடாசம் என்றழைக்கப்படும்) பெரிய வேள்விப்பிண்டத்தை அமர்ந்து உண்ட போது, அந்தத் தேவனின் {சூரியனின்} பற்கள் அவனால் {ருத்திரனால்} கிழித்தெறியப்பட்டன.(19)
அச்சத்தால் நடுங்கிய தேவர்கள் சங்கரனுக்குத் தலைவணங்கினர். தணிவடையாத ருத்திரன் மீண்டும் தன் வில்லின் நாணில் சுடர்மிக்கக் கூரிய கணையொன்றைப் பொருத்தினான்.(20) அவனது ஆற்றலைக் கண்ட தேவர்களும், முனிவர்கள் அனைவரும் அச்சமடைந்தனர். முதன்மையான தேவர்களான அவர்கள் அவனைத் தணிவடையச் செய்யத் தொடங்கினர்.(21) மதிப்புடன் தங்கள் கரங்களைக் கூப்பிக் கொண்ட அவர்கள், சதருத்ரீய மந்திரங்களைச் சொல்லத் தொடங்கினர். இறுதியாக, இவ்வாறு தேவர்களால் புகழப்பட்ட மஹேஸ்வரன் நிறைவடைந்தான்.(22) பிறகு தேவர்கள் (வேள்விக்காணிக்கைகளில்) ஒரு பெரும் பங்கை அவனுக்கு ஒதுக்கினார்கள். ஓ! மன்னா, அச்சத்தில் நடுங்கிய அவர்கள் அவனது பாதுகாப்பை நாடினார்கள்.(23) இரண்டாகப் பிளக்கப்பட்டிருந்த வேள்வியின் உடல் வடிவமானது ருத்திரன் நிறைவடைந்ததும் மீண்டும் ஒன்று சேர்ந்தது. மஹாதேவனின் கணைகளால் எந்த அங்கங்கள் அழிக்கப்பட்டனவோ அவை மீண்டும் முழுமையாக நலமாகத் திரும்பியது.(24)
பழங்காலத்தில், பெருஞ்சக்தி கொண்ட அசுரர்கள் ஆகாயத்தில் முந்நகரங்களை {திரிபுரத்தைக்} கொண்டிருந்தனர். அவற்றில் ஒன்று இரும்பாலானது; ஒன்று வெள்ளியாலானது; மற்றொன்று பொன்னாலானது.(25) மகவத்தால், தன்னிடம் இருந்த ஆயுதங்கள் அனைத்தாலும் அந்த நகரங்களைத் துளைக்க இயலவில்லை. அசுரர்களால் பீடிக்கப்பட்ட தேவர்கள் அனைவரும் அப்போது பெரும் ருத்திரனின் பாதுகாப்பை நாடினார்கள். உயர் ஆன்ம தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, அவனிடம் {ருத்திரனிடம்}, "ஓ! ருத்ரா, அசுரர்கள் தங்கள் செயல்கள் அனைத்திலும் அழிவாதிக்கத்தைச் செய்ய அச்சுறுத்துகின்றனர்.(27) ஓ! கௌரவங்களை அளிப்பவனே, மூவுலகங்களையும் பாதுகாப்பதற்க்காக அந்தத் தைத்தியர்களைக் கொன்று அவர்களது நகரத்தையும் அழிப்பாயாக" என்று கேட்டனர். அவர்களால் இவ்வாறு சொல்லப்பட்ட அவன், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, விஷ்ணுவைத் தன் கணையின் சிறந்த தலையாக அமைத்தான்.(28) நெருப்பின் தேவனைக் கணை முனையாகவும், சூரியனின் மகனான யமனை அந்தக் கணையின் சிறகுகளாகவும் அமைத்தான். வேதங்களைத் தன் வில்லாகவும், சாவித்ரி தேவியைத் தன் வில்லின் சிறந்த நாணாகவும் கொண்டான்.(29) பெரும்பாட்டன் பிரம்மனையே தன் தேரோட்டி ஆக்கிக் கொண்டான். இவை அனைத்தையும் பயன்படுத்தி, மூன்று பர்வங்கள் மற்றும் மூன்று சல்லியங்களைக் கொண்ட தன் கணையால் அசுரர்களின் முந்நகரத்தைத் துளைத்தான்[2].(30) உண்மையில், ஓ! பாரதா, யுக முடிவில் அனைத்துப் பொருட்களையும் எரிக்கத் தோன்றும் நெருப்பின் சக்தியுடன் கூடியவனும் சூரியனைப் போன்ற வெண்ணிறத்தவனுமான ருத்திரனின் கணையால் அசுரர்களும், அவர்களது நகரங்களும் எரிக்கப்பட்டன.(31)
[2] "ஒரு பர்வம் என்பது ஒரு முடிச்சாகும். நாணல்களும், மூங்கில்களும் வரிசையான முடிச்சுகளைக் கொண்டவையாகும். இரண்டு முடிச்சுகளுக்கு இடைப்பட்ட இடமே ஒரு சல்லியம் என்றழைக்கப்படும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஐந்து சடைகளைக் கொண்ட ஒரு குழந்தையாக மாறி பார்வதியின் மடியில் கிடக்கும் மஹாதேவனைக் கண்டு, தேவர்களிடம் அவள் {பார்வதி}, {குழந்தையின் வடிவில் இருக்கும்} அவன் யார் என்று கேட்டாள்.(32) அந்தக் குழந்தையைக் கண்ட சக்ரன், திடீரெனப் கோபம் மற்றும் பொறாமையால் நிறைந்து தன் வஜ்ரத்தைக் கொண்டு அவனைக் கொல்லத் தீர்மானித்தான். எனினும், அக்குழந்தை இரும்புத் தடியைப் போன்ற இந்திரனின் கரத்தையும், அதனுடன் கூடிய வஜ்ரத்தையும் சேர்த்து முடக்கினான்.(33) தேவர்கள் அனைவரும் கலக்கமடைந்தனர், அந்தப் பிள்ளைதான் அண்டத்தின் தலைவன் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. உண்மையில், அவர்கள் அனைவரும், லோகபாலர்களும் அந்தக் குழந்தையின் காரியத்தில் மதி கலங்கியவர்களாகினர்.(34)
அப்போது சிறப்புமிக்கப் பெரும்பாட்டன் பிரம்மன், தன் தவங்களின் உதவியால் நினைவுகூர்ந்து, அனைத்திலும் முதன்மையானவனும், உமையின் தலைவனும், அளவிலா ஆற்றல் கொண்டவனுமான மஹாதேவன் அந்தக் குழந்தையே என்பதைக் கண்டறிந்தான். பிறகு அந்தத் தலைவனை அவன் புகழ்ந்தான்.(35) தேவர்களும், உமை மற்றும் ருத்திரன் ஆகிய இருவரின் புகழையும் துதிக்கத் தொடங்கினர். பலனைக் கொன்றவனுடைய {சக்ரனுடைய} (முடக்கப்பட்ட) கரம் மீண்டும் பழைய நிலைமையை அடைந்தது.(36) பெரும் சக்தி கொண்ட பிராமணரான துர்வாசராகப் பிறந்த மஹாதேவன், என் வீட்டில் நெடுங்காலம் வசித்திருந்தான்.(37) என் வசிப்பிடத்தில் வசித்திருந்தபோது அவன் பல்வேறு குறும்புகளைச் செய்தான். பொறுத்துக் கொள்ளக் கடினமாக இருந்தாலும், {அவன் அளித்த} இதயப் பெருந்தன்மையால் அவற்றை நான் பொறுத்துக் கொண்டேன்.(38)
ருத்திரன் அவனே; சிவன் அவனே; அக்னி அவனே; சர்வன் அவனே; அனைவரையும் வெல்பவன் அவனே; இந்திரன் அவனே, வாயுவும், அஸ்வினிகளும், மின்னலின் தேவனும் அவனே.(39) சந்திரமாஸ் அவனே; ஈசானன் அவனே; சூரியன் அவனே; வருணன் அவனே; காலம் அவனே; அழிப்பவன் {மிருத்யு} அவனே; மரணம் {யமன்} அவனே; பகலும், இரவும் அவனே;(40) பக்ஷம் அவனே; பருவகாலங்கள் {ருது} அவனே; {காலை, மாலை என்ற} இரு சந்திப் பொழுதுகள் அவனே; வருடம் அவனே. தாத்ரி அவனே; விதாத்ரி அவனே; விஷ்வகர்மன் அவனே; அனைத்தையும் அறிந்தவன் அவனே.(41) திசைகளின் முக்கிய மற்றும் துணைப்புள்ளிகள் அவனே. அண்ட வடிவில் இருக்கும் அவன் அளவிலா ஆன்மா கொண்டவனாவான். புனிதமானவரும், சிறப்புமிக்கவருமான துர்வாசர் தெய்வீக நிறம் கொண்டவராவார்.(42) சில வேளைகளில் தனியாகவும்; சில வேளைகளில் தன்னை இரண்டாகப் பகுத்துக் கொண்டும்; சில வேளைகளில் பலவாகவும், நூறாகவும், ஆயிரமாகவும், நூறாயிரமாகவும் வெளிப்படுகின்றான்.(43) மஹாதேவன் இவ்வாறானவனே. மேலும், அவன் பிறப்பற்றவன் ஆவான். நூறு வருடங்கள் ஆனாலும் ஒருவனால் அவனது {மஹாதேவனது} குணங்களைச் சொல்லித் தீர்க்க முடியாது" என்றான் {கிருஷ்ணன்}.(44)
அநுசாஸனபர்வம் பகுதி – 160ல் உள்ள சுலோகங்கள் : 44
ஆங்கிலத்தில் | In English |