Sata-rudriya! | Anusasana-Parva-Section-161 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 161)
பதிவின் சுருக்கம் : சதருத்ரீயம் மற்றும் சிவலிங்கப் பெருமை ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்...
வாசுதேவன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! வலிய கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரரே, ருத்திரனின் பல்வேறு பெயர்களையும், அந்த உயர் ஆன்மாவின் உயர்ந்த அருள்நிலையையும் சொல்கிறேன் கேட்பீராக.(1) முனிவர்கள் மஹாதேவனை அக்னி என்றும், ஸ்தாணு என்றும், மஹேஸ்வரன் என்றும், ஒற்றைக் கண்ணன் என்றும், அண்ட வடிவம் கொண்ட முக்கண்ணன் என்றும், சிவன் அல்லது மங்கலமானவன் என்றும் சொல்கிறார்கள்.(2) வேதங்களை அறிந்த பிராமணர்கள் இரு வடிவங்களைக் கொண்டவன் அந்தத் தேவன் என்று சொல்கின்றனர். ஒன்று பயங்கரமானதும், மற்றொன்று மங்கலமான மென்மை நிறைந்ததுமாகும். அவ்விரு வடிவங்களும் இன்னும் பல வடிவங்களாகப் பகுக்கப்படுகின்றன.(3) கடுமையான பயங்கர வடிவம், அக்னி, மின்னல் மற்றும் சூரியனோடு ஒப்பிடத்தக்கதாகக் கருதப்படுகிறது. மென்மையான மங்கல வடிவம் அறம், நீர் மற்றும் சந்திரனோடு ஒப்பிடத்தகுந்ததாக இருக்கிறது.(4)
மேலும் அவனது பாதி உடல் நெருப்பெனவும், பாதி உடல் சோமன் (அல்லது சந்திரன்) எனவும் சொல்லப்படுகிறது. மென்மையான மங்கல வடிவம் பிரம்மச்சரிய நோன்பில் ஈடுபடுவதாகச் சொல்லப்படுகிறது.(5) மிகப் பயங்கரமான மற்றொரு வடிவம் அண்டத்தை அழிக்கும் அனைத்து இயக்கங்களிலும் ஈடுபடுகிறது. அவனே பெரியவன் (மகத்), அனைத்து உயிரினங்களுக்கும் உயர்ந்த தலைவன் (ஈஸ்வரன்) என்பதால் அவன் மஹேஸ்வரன் என்றழைக்கப்படுகிறான்.(6) அவன் எரிக்கிறான், ஒடுக்குகிறான், கடுமையாக இருக்கிறான், பெருஞ்சக்தியுடன் கூடியவனாக இருக்கிறான், சதை, குருதி, மஜ்ஜை ஆகியவற்றை உண்பவனாகவும் இருக்கிறான் என்பதாலேயே அவன் ருத்திரன் என்று சொல்லப்படுகிறான்.(7) தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவனாக இருப்பதாலும், அவனுடைய ஆட்சிப் பகுதியும், செல்வங்களும் மிகப் பெரியவையாக இருப்பதாலும், அவன் பாதுகாக்கும் அண்டம் மிகப் பெரியதாக இருப்பதாலும் அவன் மஹாதேவன் என்றழைக்கப்படுகிறான்.(8)
புகையின் வடிவம் அல்லது நிறத்தில் அவன் இருப்பதன் காரணத்தால் அவன் தூர்ஜடி {தூர்ஜடை} என்றழைக்கப்படுகிறான். தன் செயல்கள் அனைத்தாலும் அனைவருக்குமான வேள்விகளைச் செய்வதாலும்,(9) அனைத்து உயிரினங்களின் நன்மையை நாடுவதாலும் அவன் சிவன் அல்லது மங்கலமானவன் என்றழைக்கப்படுகிறான். (ஆகாயத்தில்) நின்று கொண்டு அனைத்து உயிரினங்களையும் அழிப்பதையும் தவிர அவன் வழுவாத குறிப்பிட்ட ஒரு பாதையில் நிலைத்திருக்கிறான்.(10) அவனுடைய சின்னம் {லிங்கம்} நிலையானது, எக்காலத்திலும் அழிவற்றது. இந்தக் காரணங்களினால் அவன் ஸ்தாணு என்றழைக்கப்படுகிறான். அவன் பல்வேறு வடிவங்களைக் கொண்டவனாக இருக்கிறான். கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் அவனே.(11) அசைவனவும், அசையாதனவும் அவனே. இதன் காரணமாக அவன் பஹுரூபன் என்றழைக்கப்படுகிறான். விஷ்வேதேவர்கள் என்றழைக்கப்படும் தேவர்க்ள அவனது உடலில் வசிக்கிறார்கள். இதன் காரணமாக அவன் (அண்ட வடிவம் கொண்ட) விஷ்வரூபன் என்றழைக்கப்படுகிறான்.(12)
ஆயிரம் கண் கொண்டவன்; அல்லது எல்லையற்ற கண்களைக் கொண்டவன்; அல்லது எங்கும், தன் உடலெங்கும் கண் கொண்டவன். அவனது சக்தி அவனது கண்களின் மூலம் வெளிப்படுகிறது. அவனது கண்களுக்கு ஓர் எல்லையில்லை {அவன் ஸர்வதஸ்சக்ஷு என்றழைக்கப்படுகிறான்}.(13) உயிரினங்கள் {பசுக்கள்} அனைத்திற்கும் உணவூட்டி வளர்ப்பவனாகவும், அவற்றுடன் விளையாடுபவனாகவும் இருப்பதாலும், அவற்றின் தலைவனாகவோ, அவற்றை ஆள்பவனாகவோ இருப்பதனால் அவன் பசுபதி (அனைத்து உயிரினங்களின் தலைவன்) என்றழைக்கப்படுகிறான்.(14) அவனுடைய சின்னம் {லிங்கம்} எப்போதும் பிரம்மச்சரிய நோன்பை நோற்பதால் உலகங்கள் அனைத்தும் அதை முறைப்படி வழிபடுகிறார்கள். இந்த வழிபாட்டுச் செயல் அவனுக்குப் பெரும் நிறைவைத் தருவதாகச் சொல்லப்படுகிறது.(15) சிலையை உண்டாக்கி அவனை ஒருவன் வழிபட்டாலும், மற்றொருவன் அவனது சின்னத்தை {லிங்கத்தை} வழிபட்டாலும், பின்னவனே {லிங்கத்தை வழிபட்டவனே} எப்போதும் பெருஞ்செழிப்பை அடைவான்[1].(16)
[1] கும்பகோணம் பதிப்பில், "அந்த மஹாத்மாவின் விக்ரகத்தைப் பூஜிப்பவன் லிங்கத்தையும் பூஜிக்க வேண்டும். நாள்தோறும் லிங்கத்தைப் பூஜிப்பவன் பெரிய ஐஸ்வர்யத்தை அடைவான்" என்றிருக்கிறது.
முனிவர்கள், தேவர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோர் எப்போதும் நிமிர்ந்து உயர்ந்திருக்கும் அவனது சின்னத்தையே {லிங்கத்தையே} வழிபடுகின்றனர்.(17) தன் சின்னம் {லிங்கம்} வழிபடப்பட்டால், அந்த வழிபாட்டைச் செய்பவனிடம் மஹேஸ்வரன் உயர்ந்த நிறைவை அடைகிறான். தன் பக்தர்களிடம் அன்பு கொண்ட அவன், உற்சாகம் நிறைந்த ஆன்மாவுடன் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறான்.(18) அந்தப் பெருந்தேவன் சுடலையில் வசிக்க விரும்புகிறான், அங்கே அவன் சடலங்கள் அனைத்தையும் எரிக்கிறான். அத்தகைய இடங்களில் {சுடலைகளில்} வேள்விகளைச் செய்யும் மனிதர்கள், வீரர்களுக்கெனத் தனியே ஒதுக்கப்பட்ட உலகங்களை இறுதியில் அடைவார்கள்[2].(19) நியாயமாகச் செயல்படுவதில் ஈடுபடும் அவனே உயிரினங்களின் உடல்களில் வசிக்கும் மரணமாக {மிருத்யுவாகக்} கருதப்படுகிறான். மேலும் அவன், பிராணன், அபானன் என்றழைக்கப்படும் உயிர்மூச்சுகளாக உடல்படைத்த அனைத்து உயிரினங்களின் உடல்களிலும் இருக்கிறான்.(20)
[2] கும்பகோணம் பதிப்பில், "வீரஸ்தானமென்னப்படும் வீரலோகத்தை விரும்புகிற ஜனங்கள் அவரை அங்கே பூஜிக்கின்றனர்" என்றிருக்கிறது.
அவன் சுடர்மிக்கப் பல்வேறு பயங்கர வடிவங்களைக் கொண்டவனாவான். இவ்வுலகத்தில் வழிபடப்படும் அந்த வடிவங்கள் அனைத்தையும், ஞானம் கொண்ட பிராமணர்கள் அறிந்திருக்கிறார்கள்.(21) தேவர்களுக்கு மத்தியில் பெரும் முக்கியத்தவம் வாய்ந்த பல பெயர்களை அவன் கொண்டிருக்கிறான். அந்தப் பெயர்களின் பொருள்கள் அவனது பெருமையில் இருந்தோ, சாதனைகளில் இருந்தோ, ஒழுக்கத்தில் இருந்தோ எடுக்கப்படுகின்றன.(22) வியாசரால் தொகுக்கப்பட்ட வேதங்களில் தோன்றும் சிறந்த சதருத்ரீயத்தை அவனைக் கௌரவிக்கும் வகையில் பிராமணர்கள் எப்போதும் உரைக்கிறார்கள்.(23) உண்மையில், பிராமணர்களும், முனிவர்களும் அனைத்து உயிரினங்களுக்கும் மூத்தவன் என்று அவனை அழைக்கின்றனர்.(24)
தேவர்கள் அனைவரிலும் முதல்வன் அவன், அவனது வாயில் இருந்தே அக்னி உண்டானான். அற ஆன்மா கொண்டவனும், எப்போதும் அனைவருக்கும் பாதுகாப்பை வழங்க விரும்புபவனுமான அந்தத் தேவன், தன்னிடம் பணிவோரை ஒருபோதும் கைவிடாதவன்.(25) அதைவிட அவன் தன் உயிர் மூச்சையே கைவிட்டு, சாத்தியப்படும் துன்பங்கள் அனைத்தையும் தானே ஈட்டிக் கொள்வான். நீண்ட வாழ்வுக்காலம், உடல்நலம், நோயிலிருந்து விடுதலை, செல்வாக்கு, செல்வம் பல்வேறு வகை இன்பங்கள் ஆகியனவற்றை(26) அளிப்பவனும், பறிப்பவனும் அவனே[3]. சக்ரன் மற்றும் பிற தேவர்களிடம் ஒருவன் காணும் தலைமைத்துவம் மற்றும் செல்வாக்கு ஆகியவை உண்மையில் அவனுடையவையே.(27)
[3] கும்பகோணம் பதிப்பில், "அவர் தேவர்களுக்கு முதல்வர், அவர் தம் முகத்திலிருந்து அக்நியையுண்டாக்கினார். அவரே அனேக ப்ராணாயாமங்களினால் மூச்சை அடக்கிவிடுகிறார். ரக்ஷிப்பதில் ஸமர்த்தராகிய அவர் மகிழ்ந்து அனுக்ரஹம் வைத்துச் சரணாகதர்களுக்கு முக்தியளிக்கிறார்" என்றிருக்கிறது.
மூவுலகங்களிலும் நேரும் நன்மை, தீமைகள் அனைத்திலும் ஈடுபடுபவன் அவனே. அனுபவிக்கத் தகுந்த பொருட்கள் அனைத்தையும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் விளைவால் அவன் ஈஸ்வரன் (உயர்ந்த தலைவன், அல்லது உயர்ந்த பொருள்) என்று அழைக்கப்படுகிறான்.(28) மேலும், பரந்த அண்டத்தை ஆள்பவனாக இருப்பதால் அவன் மஹேஸ்வரன் என்றழைக்கப்படுகிறான். மொத்த அண்டமும் பல்வேறு வடிவங்களின் மூலம் அவனால் நிறைந்திருக்கிறது. பெரும் பெண்குதிரைத்தலையின் வடிவில் கடலின் நீரை {வடவாமுகாக்னியாக} எரிப்பவனும், முழக்கங்களை இடுபவனும் அந்தத் தேவனே " என்றான் {கிருஷ்ணன்}".(29)
அநுசாஸனபர்வம் பகுதி – 161ல் உள்ள சுலோகங்கள் : 29
ஆங்கிலத்தில் | In English |