Righteousness! | Anusasana-Parva-Section-162 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 162)
பதிவின் சுருக்கம் : அறத்தைத் தீர்மானிப்பதில் ஐயம் நேரும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும், அறப்பலன்களையும், பல அறங்களையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தேவகியின் மகனான கிருஷ்ணன் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, யுதிஷ்டிரன் மீண்டும் சந்தனுவின் மகனான பீஷ்மரிடம்,(1) "ஓ! பெரும் நுண்ணறிவுமிக்கவரே, ஓ! கடமைகளை அறிந்தவர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, ஒரு தீர்மானத்தை எட்டுவதற்கு, நேரடியாகக்கண்டுணர்தல் மற்றும் சாத்திரங்கள் ஆகிய இரண்டில் அதிகாரமிக்கதாகக் கருதப்பட வேண்டியது எது?" என்று கேட்டான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இதில் எந்த ஐயமும் கிடையாது என நினைக்கிறேன். ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, நான் சொல்வதைக் கேட்பாயாக. நீ என்னிடம் கேட்டிருக்கும் கேள்வி நிச்சயம் சரியானதே. ஐயம் வளர்ப்பது எளிதே. ஆனால், அந்த ஐயத்திற்கான தீர்வை அடைவது கடினம்.(3) நேரடியாகக் கண்டுணர்தல், திறன் தேர்வு (அல்லது சாத்திரங்கள்) ஆகிய இரண்டிலும் ஐயங்கள் எழும் சந்தர்ப்பங்கள் எண்ணற்றவையாகும். தர்க்கவியலாளர் {பண்டிதர்கள்} என்ற பெயரில் திளைக்கும் சில மனிதர்கள், மேன்மையான அறிவைக் கொண்டவர்கள் தாங்கள் என்று கற்பனை செய்து கொண்டு, நேரடி கண்டுணர்தல் மட்டுமே அதிகாரமிக்கது என்று உறுதிகூறுகிறார்கள்.(4) இஃது உண்மையாக இருந்தாலும், நேரடியாகக் கண்டுணர முடியாத ஏதும் இருப்பில் இல்லை என்று அவர்கள் உறுதியடைகிறார்கள்; அல்லது அந்தப் பொருட்களின் இருப்பில் அவர்கள் ஐயுறுகிறார்கள். உண்மையில் அத்தகைய கூற்றுகள் பற்றாக்குறையுடன் கூடியவையாகும்; கல்வியில் எவ்வளவு செருக்குள்ளவர்களாக இருப்பினும் அவற்றைச் சொல்பவர்கள் மூட புத்தி கொண்டவர்களே.(5)
மறுபுறம், ஒன்று (பகுபடா பிரம்மம்) எவ்வாறு காரணமாக இருக்க முடியும் என நீ ஐயுறுகிறாயெனில், நீண்ட வருட காலம், சோம்பலில்லாமல், யோகத்தின் துணையின் மூலமே ஒருவனால் அதைப் புரிந்து கொள்ள முடியும் என்பது என் மறுமொழியாக இருக்கும்.(6) உண்மையில், ஓ! பாரதா, (அந்த அல்லது இந்த நிலையான வாழ்வுமுறைகளில் பற்றுக் கொள்ளாமல்) தனக்கு நேரும் வழிமுறைகளின்படி வாழ்பவன் மற்றும் (கேள்விக்கான விடை தேடுவதில்) அர்ப்பணிப்புள்ள ஒருவனால் மட்டுமே அதைப் புரிந்து கொள்ள இயலும். உண்மையில் வேறு எவராலும் அதைப் புரிந்து கொள்ள முடியாது.(7) காரணங்களின் எல்லையை (பகுத்தறிவு செயல்முறையை} ஒருவன் அடையும்போது, அவன் சிறந்ததும், அனைத்தையும் புரிந்து கொள்ளக் கூடியதும், (பிரம்மம் என்றழைக்கப்படும்) அண்டத்திற்கு ஒளியூட்டும் பிரகாசப் பெருந்திரளாக இருப்பதுமான அறிவை அடைகிறான்.(8) ஓ! மன்னா, காரணத்தில் (அல்லது அனுமானத்தில்) இருந்து பெறப்படும் அறிவை அறிவென்று சொல்வது அரிதே. அத்தகை அறிவு மறுக்கப்பட வேண்டும். இது சொல்லால் வரையறுக்கப்படவில்லை, அல்லது புரிந்து கொள்ளப்படவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே அது மறுக்கப்பட வேண்டும்" என்றார் {பீஷ்மர்}[1].(9)
[1] "4 முதல் 9ம் ஸ்லோகம் வரை உள்ள பகுதி மிகக் கடினமானது" எனச் சொல்லிவிட்டு, நீலகண்டர் தந்திருக்கும் விளக்கமெனக் கங்குலி பெரிய விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார். அதைப்புரிந்து கொள்ள இன்னும் கடினமாக இருப்பதால் கும்பகோணம் பதிப்பில் உள்ள இப்பகுதியை அப்படியே தருகிறேன், "பண்டிதனாக நினைத்திருப்பவனுக்கு யுக்திவாதம் பிரமாணமாகிறது. அவர்கள் ஸத்யவாக்யத்தையும், சாஸ்திரத்தையும் இல்லாதவையாக நிச்சயிக்கின்றனர். அவர்கள் நினைப்பது பிழை. அவர் தங்களைப் பண்டிதராக நினைத்திருக்கும் அறிவீனர். எதையும், ‘இது ஸரியான பிரமாணமாகுமா’ என்று ஆராய்ந்து பார்க்க வேண்டுவதுதான். உலக வாழ்க்கையை நடத்தும் மனிதன் யுக்திகளாலும், சாஸ்திர விசாரணைகளாலும் நீண்ட காலத்தினால் நிச்சயிக்க முடியும். ஒரு விஷயத்திலேயே ஊக்கம் வைத்தாலன்றி அந்தப் பிரமாணத்தை நிச்சயிக்க முடியாது. ஹேதுவாதங்களை நிறைத்தினபிறகுதான் எல்லா உலகங்களுக்கும் ஒளியாயிருக்கும் சிறந்த பேரறிவைத் தடையின்றி அறியலாம். வேந்தனே, யுக்திகளைக் கொண்டு அறிவது சரியான அறிவன்று. நம்பத்தகாததும், முடிவில்லாததுமான யுக்திவாதத்தை வாக்கினால் சொல்லாமல் விட வேண்டும்" என்றிருக்கிறது.
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, நேரடியாகக் கண்டுணர்தல், கவனித்து அனுமானம் செய்தல், ஆகம அறிவியல், அல்லது சாத்திரங்கள் மற்றும், நல்லவற்றை வேறுபடுத்திக் காட்டும் பல்வேறுவகை நடைமுறைகள் ஆகிய இவற்றில் (நான்கில்) அதிகாரமிக்கது எது என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(10)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பெரும் வலிமை கொண்ட தீய மனிதர்களால் அறம் அழிக்கப்படும்போது, நல்லோர் கவனத்துடனும், ஊக்கத்துடனும் செயல்படுவதன் மூலம் அப்போதைக்கு அதை {அறத்தைப்} பாதுகாக்க முடியும். எனினும், முடிவில் அறம் அழிவடையும் என்பதால் அத்தகைய பாதுகாப்பு நீண்ட காலம் நீடிக்காது.(11) மேலும், ஆழமான குழியைப் பார்வையில் இருந்து மறைத்து, அதன் {அந்தக் குழியின்} வாயை மூடியிருக்கும் புல்லைப் போல, அறமானது சில வேளைகளில் மறத்திற்கான {அதர்மத்திற்கான} முகமூடியாக இருக்கிறது. ஓ! யுதிஷ்டிரா, மேலும் கேட்பாயாக. இதன் விளைவால், நல்லோரின் நடைமுறைகளைத் தீயோர் குறுக்கிட்டு அழிக்கின்றனர்.(12) தீய நடத்தை கொண்டோரும், ஸ்ருதிகளைப் புறக்கணிப்பவர்களும், அறத்தை வெறுப்பவர்களும் தீயோருமான இழிந்தவர்கள், (நிலையாக நிறுவப்பட வேண்டிய) நல்லொழுக்கத்துடன் கூடிய நடைமுறைகளை அழிக்கின்றனர். எனவே, நேரடியாகக் கண்டுணர்வது, அனுமானம் மற்றும் நன்னடத்தை ஆகியவற்றில் ஐயங்கள் தோன்றுகின்றன[2].(13)
[2] "நேரடியாகக்கண்டுணர்தல், அனுமானம் மற்றும் நன்னடத்தை ஆகிய காரணங்களில் தவறு நேர்வதால், தவறு நேராத ஒரே நிலையாக எஞ்சுவது திறன் தேர்வு, அல்லது சாத்திரங்களாகும். அல்லது 14ம் ஸ்லோகம் சொல்வது போலச் சாத்திரங்களில் பிறந்த புத்தியைக் கொண்டோராவர்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
எனவே, நல்லோருக்கு மத்தியில், சாத்திரங்களில் பிறந்த (அல்லது தூய்மையடைந்த) புத்தியைக் கொண்டவர்களும், எப்போதும் நிறைவான மனம் கொண்டவர்களும் முதன்மையானவர்களாகக் கருதப்பட வேண்டும். கவலைநிறைந்தவர்களாக, ஆன்ம அமைதி இல்லாதவர்களாக இருப்பவர்கள், இவர்களையே அணுகட்டும். உண்மையில், ஓ! யுதிஷ்டிரா, உன் ஐயங்களுக்கான தீர்மானங்களை அடைய நீ அவர்களையே நாடுவாயாக.[3](14) இன்பத்தையும், பேராசையைத் தொடர்ந்துவரும் செல்வத்தையும் அலட்சியம் செய்து, அறம் மட்டுமே நாடப்பட வேண்டிய ஒன்று என்ற நம்பிக்கையில் விழிப்படைந்த மனிதர்களுக்குப் பணிவிடை செய்து, அவர்களிடம் (உனக்கு ஞானமளிக்குமாறு) கேட்பாயாக.(15) அத்தகைய மனிதர்களின் ஒழுக்கம் ஒருபோதும் தவறவோ, அழியவோ செய்யாது. அதே போல அவர்களது வேள்விகளும், வேத கல்வியும், சடங்குகளும் அழிவடையாது. உண்மையில் வெளிப்படையான செயல்களை உள்ளடக்கிய ஒழுக்கம், (மனத்) தூய்மையுடன் கூடிய நடத்தை, வேதங்கள் ஆகியவை சேர்ந்ததே அறம் ஆகும்" என்றார் {பீஷ்மர்}.(16)
[3] "யுதிஷ்டிரனைப் போலவே, தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் கவலை நிறைந்தவர்களே ’அத்ருப்யந்த’ என்றழைக்கப்படும் மனிதர்களாவர். அவர்கள் சரியானவற்றைத் தேடுபவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, என் புத்தி மீண்டும் ஐயத்தால் கலங்குகிறது. நான் பெருங்கடலின் இந்தப் பக்கத்தில், அதைக் கடப்பதற்கான வழிமுறைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன். எனினும் அக்கடலின் மறுகரையை என்னால் காண முடியவில்லை.(17) வேதங்கள், நேரடியாகக்கண்டுணர்தல், நடத்தை (அல்லது மனத்தூய்மை) ஆகிய இம்மூன்றும் சேர்ந்ததே அதிகாரமிக்கது எனக் கருதப்படுமானால், அவை ஒவ்வொன்றுக்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன என்று பிழைகூறலாம். அவ்வாறெனில் அறமானது பகுபடாத ஒன்றாக இருப்பினும், உண்மையில் மூன்று வகையாகிறதே" என்றான்.(18)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "சில வேளைகளில், பெருஞ்சக்தி கொண்ட தீயோரால் அறம் அழிக்கப்படுவது காணப்படுகிறது. அறம் உண்மையில் மூன்றுவகையானது என நீ கருதினால், உன் தீர்மானம் உத்தரவாதம் அளிக்கப்பட்டது என்று நான் சொல்வேன்.(19) உண்மையென்னவென்றால், அறமானது மூன்று வெவ்வேறு புள்ளிகளில் இருந்து பார்க்கக்கூடியதாக இருப்பினும், அஃது ஒன்றாகவும், பகுக்கப்பட முடியாததாகவும் இருக்கிறது.(20) அறத்தின் அடித்தளமாக இருக்கும் இம்மூன்று பாதைகள் (குறியீடுகள்) ஒவ்வொன்றுக்கும் விதிகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. விதிக்கப்பட்ட அறிவுரைகளின்படி நீ செயல்படுவாயாக. நீ அறம் குறித்து ஒருபோதும் சச்சரவு செய்யாமல், அந்த ஐயங்களைத் தீர்க்க முனைந்தால் நீ அவற்றை அடைவாய்.(21) ஓ! பாரதர்களின் தலைவா, இதுபோன்ற ஐயங்கள் ஒருபோதும் உன் மனத்தைப் பீடிக்காதவாறு செய்வாயாக. எவ்வகைத் தயக்கமுமின்றி நான் சொல்வதற்குக் கீழ்ப்படிவாயாக. ஒரு குருடனைப் போலவோ, வேறொருவனைச் சார்ந்திருக்கும் புலனற்றவனைப் போலவோ என்னைப் பின்பற்றுவாயாக.(22)
ஓ! பகைவர் எவனும் இல்லாத மன்னா, தீங்கிழையாமை, வாய்மை, கோபமின்மை (அல்லது மன்னிக்கும்தன்மை), ஈகை அல்லது கொடைகள் ஆகிய நான்கும் நித்திய அறமாக அமைவதால் இவை நான்கையும் நீ பயில்வாயாக.(23) ஓ! வலிய கரங்கொண்ட இளவரசே, உன் தந்தைமார் மற்றும் பாட்டன்களிடம் நீ நடந்து கொள்வது போலவே, பிராமணர்களிடம் உன் நடத்தை இருக்கட்டும். இவையே அறத்தின் முக்கியக் குறியீடுகளாகும்.(24) எப்போதும் ஏற்றுக்கொள்ளப்படும் தரத்தை மறுப்பதன் மூலம் அதிகாரத்தின் கனத்தை அழிக்கும் சிறு மதி கொண்ட மனிதன், மனிதர்களுக்கு மத்தியில் அதிகாரமிக்கவனாவதில் தவறுவான். அத்தகைய மனிதன் உலகத்தில் துன்பம் அதிகரிப்பதற்கான காரணமாவான்.(25) நீ பிராமணர்களை மதித்து, அவர்களை விருந்தோம்பலுடன் கவனிப்பாயாக. நீ எப்போதும் அவர்களுக்கு இவ்வாறே தொண்டாற்றுவாயாக. இந்த அண்டமே அவர்களைச் சார்ந்திருக்கிறது. நீயும் அவ்வாறே அவர்களைப் புரிந்து கொள்வாயாக" என்றார் {பீஷ்மர்}.(26)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, அறத்தை வெறுப்போர் மற்றும் அதைத் துதித்து நோற்போர் ஆகியோர் அடையும் கதிகளை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(27)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அறத்தை வெறுக்கும் மனிதர்கள், ஆசை {ரஜஸ்} மற்றும் இருள் {தமஸ்} குணங்களில் மூழ்கிய இதயம் கொண்டவர்களாகச் சொல்லப்படுகிறார்கள். அத்தகைய மனிதர்கள் எப்போதும் நரகத்திற்கே செல்வார்கள்.(28) மறுபுறம், ஓ! ஏகாதிபதி, அறத்தைத் துதித்து நோற்போரும், வாய்மை மற்றும் நேர்மையில் அர்ப்பணிப்புள்ளோருமான மனிதர்களே, நல்லோர் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் எப்போதும் சொர்க்கத்தின் இன்பங்களை அனுபவிக்கிறார்கள்.(29) ஆசான்களிடம் மதிப்புடன் காத்திருப்பதன் விளைவால் அவர்களின் இதயங்கள் எப்போதும் அறத்தை நோக்கித் திரும்புகின்றன. உண்மையில் அறத்தைத் துதிப்போர் தேவலோகங்களை அடைகின்றனர்.(30) மனிதர்களாக இருந்தாலும், தேவர்களாக இருந்தாலும், பேராசை மற்றும் வன்மத்தைத் தவிர்த்து, தவங்களைப் பயில்வதன் மூலம் தங்கள் உடல்களை மெலியச் செய்யும் மனிதர்கள், தங்களுடையதாகும் அறத்தின் விளைவால் பேரின்பத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(31) பிரம்மனின் மூத்த மகன்களான பிராமணர்கள் அறத்தைப் பிரதிபலிப்பவர்களாவர் என்று ஞானத்தைக் கொடையாகப் பெற்றவர்கள் சொல்கின்றனர். அறவோர் எப்போதும் அவர்களை வழிபடுகின்றனர், அவர்களது இதயங்கள், பசித்த மனிதனின் வயிறு கனிந்த இனிய கனிகளை விரும்புவதைப் போலவே அவர்களிடம் அன்பும் பாசமும் கொள்ளும்" என்றார் {பீஷ்மர்}.(32)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "தீயோர் வெளிப்படுத்தும் தோற்றமென்ன? நல்லோர் என்றழைக்கப்படுவோர் செய்யும் செயல்களென்ன? ஓ! புனிதமானவரே, எனக்கு இதை விளக்குவீராக. உண்மையில், நல்லோர் மற்றும் தீயோருக்குண்டான குறியீடுகள் என்னென்ன என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(33)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "தீச்செயல் செய்பவர்கள், அடக்க முடியாதவர்கள், அல்லது விதிகளெனும் கட்டுப்பாடுகளுக்குள் வைக்கப்பட முடியாதவர்கள், கெட்ட வாக்கு கொண்டோர் ஆகியோர் தீயோராவர். மறுபுறம், எப்போதும் நற்செயல்களைச் செய்பவர்கள் நல்லோராவர். உண்மையில், இந்த மனிதர்களே நல்லொழுக்க நடைமுறையின் குறியீடுகளாகக் கருதப்படுகிறார்கள்.(34) ஓ! ஏகாதிபதி, நல்லோர் அல்லது அறவோர், இயற்கையின் அழைப்புகளுக்குப் பொதுச் சாலையிலோ, மாட்டுக் கொட்டகையின் மத்தியிலோ, நெற்களத்திலோ {வயலிலோ} பதிலளிக்க மாட்டர்கள் {சிறுநீர் மற்றும் மலம் கழிக்கமாட்டார்கள்}.(35) ஐவருக்கு உணவூட்டிய பிறகே தாங்கள் உணவை உண்பார்கள்[4]. உண்ணும் போது அவர்கள் ஒருபோதும் பேச மாட்டார்கள், ஈரக் கரங்களுடன் ஒருபோதும் உறங்கச் செல்லமாட்டார்கள்.(36) சுடர்மிக்க நெருப்பு, காளை, ஒரு தேவனின் வடிவம் {சிலை}, மாட்டுக் கொட்டகை, நாற்சந்திகள், முதிர்ந்தவரும், அறம் சார்ந்தவருமான ஒரு பிராமணர் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றையோ, ஒருவரையோ கண்டாலும், தங்கள் மதிப்பை வெளிப்படுத்துவதற்காக அவர்கள் அவற்றை வலம் வருவார்கள்.(37) முதியவர்கள், சுமை சுமப்போர், பெண்கள், கிராம மற்றும் நகர நிர்வாகிகள், பிராமணர்கள், பசுக்கள், மன்னர்கள் ஆகியோர் எதிரில் வந்தால் அவர்கள் ஒதுங்கி வழிவிடுவார்கள்.(38)
[4] "இவர்கள் தேவர்கள், பித்ருக்கள், விருந்தினர்கள், பூதங்கள் என்றழைக்கப்படும் பல்வேறு உயிரினங்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோராவர்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
விருந்தினர்கள், பணியாட்கள், தன்னைச் சார்ந்திருப்போர், உறவினர்கள் மற்றும் தன் பாதுகாப்பை நாடுவோர் அனைவரையும் நல்லோர், அல்லது அறவோர் பாதுகாப்பார்கள். அத்தகைய மனிதன் எப்போதும் அவர்களை மதிப்புடன் விசாரிப்பான்.(39) காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகள் மனிதர்கள் தங்கள் உணவை உண்பதற்கான நேரமாகத் தேவர்களால் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. இடைவேளைகளில் அவன் எதையும் உண்ணக்கூடாது. இந்த விதியைப் பின்பற்றுவதன் மூலம் ஒருவன் உண்ணா நோன்பை நோற்பவனாகச் சொல்லப்படுகிறான்.(40) ஆகுதிகள் பெறுவதற்காக ஹோம நேரம் வரும் வரைக் காத்திருக்கும் புனித நெருப்பைப் போலவே, ஒரு பெண்ணானவள், தன் மாதவிலக்குக் காலம் முடிந்ததும், கணவனுடன் கலவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள்.(41) மாதவிலக்கு முடிந்த காலத்திற்குப் பிறகு உள்ள காலத்தைத் தவிர வேறு காலத்தில் {மாதவிலக்கு காலத்தில்} தன் மனைவியை ஒருபோதும் அணுகாதவன் பிரம்மச்சரிய நோன்பைப் பின்பற்றுபவனாகச் சொல்லப்படுகிறான். அமிர்தம் (அமுதம்), பிராமணர்கள், பசுக்கள் ஆகிய மூன்றும் நிகரானவையாகக் கருதப்படுகின்றன.(42) எனவே, ஒருவன் பிராமணர்களையும், பசுக்களையும் உரிய சடங்குகளுடன் எப்போதும் வழிபட வேண்டும். யஜுர் வேத மந்திரங்களின் துணையுடன் வேள்விகளில் கொல்லப்படும் விலங்குகளின் இறைச்சியை உண்பதன் மூலம் ஒருவன் எந்தக் குற்றத்தையும், அல்லது களங்கத்தையும் {பாவத்தையும்} ஈட்டுவதில்லை.(43) ஒருவன் தன் மகனின் இறைச்சியைத் தவிர்ப்பதைப் போலவே முதுகெலும்பைச் சேர்ந்தவையும், வேள்விகளில் கொல்லப்படாத விலங்குகளைச் சேர்ந்தவையுமான இறைச்சியும் தவிர்க்கப்பட வேண்டும். ஒருவன் தன் நாட்டில் வசித்தாலும், அயல்நாட்டில் வசித்தாலும் தன் விருந்தினருக்கு உணவளிக்காமல் அனுப்பக்கூடாது.(44)
கல்வி நிறைவடைந்ததும் ஒருவன் தன் ஆசானுக்குத் தக்ஷிணை அளிக்க வேண்டும். அவன் தன் ஆசானைக் காணும்போது, அவரை மதிப்புடன் வணங்கி, ஓர் இருக்கையை அளித்து அவரை வழிபட வேண்டும்.(45) தன் ஆசானை வழிபடுவதன் மூலம் ஒருவன் தான் வாழும் காலத்தையும், புகழையும், செழிப்பையும் பெருக்கிக் கொள்கிறான். முதியோரை ஒருபோதும் நிந்திக்கக்கூடாது, மேலும் அவர்களை எக்காரியத்திலும் ஈடுபடுத்தக் கூடாது[5].(46) முதியவர் ஒருவர் நிற்கும்போது ஒருவன் ஒருபோதும் அமரக்கூடாது. இவ்வாறு செயல்படுவதன் மூலம் ஒருவன் தன் வாழ்நாள் காலத்தைப் பாதுகாத்துக் கொள்கிறான். ஒருவன் நிர்வாணமாக இருக்கும் ஒரு பெண், அல்லது ஆணின் மீது தன் கண்களை ஒருபோதும் செலுத்தக்கூடாது.(47) தனிமையிலன்றி வேறு இடங்களில் ஒருவன் பாலியல்கலவியில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது. பிறர் பார்க்க ஒருவன் உண்ணக்கூடாது. ஆசான்களே முதன்மையான தீர்த்தங்களாவர்; புனிதமான பொருட்கள் அனைத்திலும் இதயமே முதன்மையானதாகும்;(48) தேடத்தகுந்தவற்றுள் ஞானமே முதன்மையானதாகும்; இன்பங்கள் அனைத்திலும் மனநிறைவே முதன்மையானதாகும். காலையும், மாலையும் ஒருவன் முதியோரின் முக்கிய ஆலோசனைகளைக் கேட்க வேண்டும். வயதால் மதிக்கத் தகுந்தவர்களிடம் தொடர்ந்து காத்திருப்பதன் மூலம் ஒருவன் ஞானத்தை அடைகிறான். வேதங்களைப் படிக்கும்போதும், உண்ணும் போதும் ஒருவன் தன் வலக்கரத்தையே பயன்படுத்த வேண்டும்.(50)
[5] "சில உரைகளில் ஒருவன் ஒரு முதிய மனிதனை ஒருபோதும் வெல்லக்கூடாது என்றிருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஒருவன் தன் வாக்கு, மனம் மற்றும் புலன்களை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். நன்கு சமைக்கப்பட்ட பாயஸம், யாவகம், கிருசரம், ஹவி (தெளிந்த நெய்)) ஆகியவற்றுடன்(51) ஒருவன் அஷ்டகை என்றழைக்கப்படும் சிராத்தத்தில் பித்ருக்களையும், தேவர்களையும் வழிபட வேண்டும். கோள்களை வழிபடுவதிலும் அவற்றையே பயன்படுத்த வேண்டும். ஒருவருடைய ஆசி பெறாமல் சிரைத்துக் கொள்வது {சவரம் செய்தல்} கூடாது. ஒருவன் தும்மினால், அங்கே இருப்பவர்கள் அவனுக்கு ஆசி கூற வேண்டும்[6]. உடல் நலமில்லாதவர்கள், அல்லது நோயால் பீடிக்கப்பட்டவர்களனைவருக்கும் ஆசி கூற வேண்டும். அவர்களுடைய வாழ்நாள் நீட்டிப்பு வேண்டப்பட வேண்டும்.(52) உயர்ந்த மனிதர்களை ஒருபோதும் (நீ என்ற சொல்லைப் பயன்படுத்தி) வழக்கான சொற்களால் அழைக்கக்கூடாது. பெரும் இக்கட்டுகளிலும் ஒருவன் ஒருபோதும் அதைச் செய்யக்கூடாது. அத்தகைய மனிதனை, நீ என்று அழைப்பது அவனைக் கொல்வதற்கு இணையானதாகும். கல்விமான்கள் இவ்வாறு அழைக்கப்படுவதால் இழிவுபடுத்தப்படுகிறார்கள்.(53) தாழ்ந்தவர்கள், இணையானவர்கள், அல்லது சீடர்களிடம் இத்தகைய சொல் பயன்படுத்தப்படலாம். பாவம் நிறைந்த மனிதனின் இதயம் எப்போதும் தான் செய்த பாவங்களை அறிவித்துக் கொண்டே இருக்கும்.(54)
[6] "திரு.டிஇஸ்ரேலி என்பவரின் "கியூரியாசிட்டீஸ் ஆப் லிட்ரச்சர்" (Curiosities of Literature) என்ற சிறந்த படைப்பில், தும்முபவர்களுக்கு ஆசி கூறும் வழக்கத்தின் தொடக்கத்தை அறிய முற்படுகிறார். எனினும், இவ்வழக்கம் மிகப் பழைமையானதாகவும், பரவலாகச் செய்யப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது. இந்நாள் வரை இந்தியாவில் இந்துக்களிடம் இருக்கும் இந்தப் பழக்கம் மஹாபாரதக் காலத்திலும் இருந்திருப்பது தெரியவருகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
வேண்டுமென்றே பாவங்களைச் செய்துவிட்டு, நல்லோரிடம் அவற்றை மறைக்க முயலும் மனிதர்கள் அழிவை அடைவார்கள். உண்மையில், நிச்சயமான பாவிகள் தங்கள் பாவச் செயல்களைப் பிறரிடம் இருந்து மறைக்கவே முனைவார்கள்[7].(55) அத்தகைய மனிதர்கள் தங்கள் பாவங்களை வேறு மனிதர்களோ, தேவர்களோ பார்ப்பதில்லை என்று நினைக்கிறார்கள். பாவங்களில் மூழ்கி பாவியாக இருக்கும் மனிதன், {தன் அடுத்தப் பிறவியில்} அவலம் நிறைந்த உயிரினமாகப் பிறப்பான்.(56) அத்தகைய மனிதனின் பாவங்கள், (கடன் வழங்கும்) ஈட்டிக்காரனின் வட்டியைப் போலவே நாளுக்கு நாள் பெருகுகிறது. ஒரு பாவத்தைச் செய்த மனிதன் அதை அறத்தின் மூலம் மறைக்க முனைந்தால், அந்தப் பாவம் அழிவை அடைந்து, வேறு பாவங்களுக்கு வழிவகுப்பதற்குப் பதில் அறத்திற்கு வழிவகுக்கிறது[8].(57) உப்பின் மீது நீரை ஊற்றினால் அஃது உடனே கரைந்து போகும். அதைப் போலவே, பரிகாரம் செய்யப்படும்போது பாவமும் கரைந்து போகிறது.(58) இந்தக் காரணங்களினால் ஒருவன் ஒருபோதும் பாவத்தை மறைக்கக்கூடாது. மறைக்கப்பட்டால், அது நிச்சயம் வளரும். பாவமிழைக்கப்பட்டால் ஒருவன் அதை நல்லோரின் முன்பு ஒப்புக்கொள்ள வேண்டும். அப்போது அவை {பாவங்கள்} உடனே அழிந்து போகும்.(59)
[7] "தான் செய்த பாவங்களை ஞானிகளிடம் ஒப்புக் கொள்வது ஒருவன் செய்த பாவங்களின் கனத்தைக் குறைக்கிறது எனப் பீஷ்மர் கருதுவதாகத் தெரிகிறது. ஒரு பாவத்தைச் செய்துவிட்டு அதை மறைப்பது நிச்சயமான பாவி என்று ஒருவனை நிரூபிக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[8] "’அறத்தின் மூலம் மறைப்பது’ என்பது, ஒருமுறை தவறிழைத்த பாவி, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அறச் செயல்கள் செய்வதில் ஈடபடுவதைக் குறிக்கும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
நம்பிக்கையுடன் சேகரிக்கப்பட்டவற்றை ஒருவன் சரியான நேரத்தில் அனுபவிக்காவிட்டால், சேகரிக்கப்பட்ட அந்தச் செல்வம் அவனது மரணத்திற்குப் பின் வேறோர் உரிமையாளரைக் கண்டடையும்.(60) ஒவ்வொரு உயிரினத்தின் மனமும், உண்மையான அறச்சோதனையைச் செய்யும் என்று ஞானிகள் சொல்கின்றனர். எனவேதான், உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் அறத்தை அடைவதை உள்ளார்ந்த போக்காகக் கொண்டிருக்கின்றன.(61) ஒருவன் அறத்தைத் தனியாகவே அடைய வேண்டும். உண்மையில் அவன் தன்னை அறவோனாக அறிவித்துக் கொள்ளக்கூடாது, மேலும், {தன்னை அறவோனாக} வெளிப்படுத்தும் நோக்கத்திற்காக அறக்கொடியை உயர்த்திப் பிடித்துக் கொண்டு நடக்கவும் கூடாது. அறம் கொண்டுவரும் கனிகளை அனுபவிக்க அதைப் பின்பற்றுபவர்கள் அறவணிகர்களாவர்.(62) செருக்கெண்ணங்களைக் கைவிட்டு ஒருவன் தேவர்களைத் துதிக்க வேண்டும். அதே போல, அவன் தன் ஆசானுக்கு வஞ்சனையில்லாமல் தொண்டாற்ற வேண்டும். இம்மையில் தகுந்த மனிதர்களுக்குக் கொடையளிப்பதால், மறுமையில் கிட்டும் விலைமதிப்புமிக்கச் செல்வத்தை ஈட்டும் ஏற்பாட்டை ஒருவன் செய்து கொள்ள வேண்டும்" என்றார் {பீஷ்மர்}.(63)
அநுசாஸனபர்வம் பகுதி – 162ல் உள்ள சுலோகங்கள் : 63
ஆங்கிலத்தில் | In English |