Reward of Exertion! | Anusasana-Parva-Section-163 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 163)
பதிவின் சுருக்கம் : விதி மற்றும் முயற்சிக்கிடையிலான வேறுபாட்டை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஒரு மனிதன் கெடுபேறு கொண்டவனாக இருந்தால் அவன் எவ்வளவு பலம் கொண்டவனாக இருந்தாலும் செல்வமீட்டத் தவறுவது காணப்படுகிறது. மறுபுறம் நற்பேறு பெற்ற ஒருவன் பலவீனனாகவோ, மூடனாகவோ இருந்தாலும் செல்வத்தை அடைகிறான்.(1) மேலும், அடைவதற்கான காலமாக இல்லாதபோது, ஒருவன் சிறப்பாக முயற்சி செய்தாலும் ஒன்றையும் அவனால் அடைய முடிவதில்லை. எனினும், அடைவதற்கான காலம் வரும்போது, எந்த முயற்சியும் இல்லாமலே ஒருவன் பெருஞ்செல்வத்தை வெல்கிறான்.(2) சிறப்பாக முயற்சி செய்தும் விளைவேதும் அடையாத நூற்றுக்கணக்கான மனிதர்கள் காணப்படுகின்றர். மேலும், எம்முயற்சியுமின்றிச் செல்வீட்டும் பலரும் காணப்படுகின்றனர்.(3)
முயற்சியின் விளைவே செல்வம் என்றால், ஒருவன் முயற்சி செய்த உடனேயே அஃதை அடைய வேண்டும். உண்மையில் அவ்வாறிருந்தால், கல்வி கற்ற எந்த மனிதனும், தன் வாழ்வாதாரத்திற்காகக் கல்லாதவனிடம் பாதுகாப்பை அடைவது காணப்படாது.(4) ஓ! பாரதர்களின் தலைவரே, மனிதர்களுக்கு மத்தியில் அடையக்கூடாது என்பது (என விதிக்கப்பட்ட எதுவும்) ஒருபோதும் அடையப்படுவதில்லை. சிறந்த முயற்சிகளின் துணையுடன் கூட மனிதர்கள் விளைவுகளை அடைவதில் தவறுவது காணப்படுகிறது.(5)
ஒருவன் நூறு வழிமுறைகளின் மூலம் செல்வத்தைத் தேடுவது (தேடினாலும் அஃதை அடையத்தவறுவது) காணப்படுகிறது; அதே வேளையில் மற்றொருவன் தேடவே செய்யாமல் அஃதை {செல்வத்தை} அடைந்து மகிழ்ச்சி அடைகிறான். மனிதர்கள் (செல்வத்துக்காகத்) தொடர்ந்து தீச்செயல்களைச் செய்து, அதை அடையத் தவறுவது காணப்படுகிறது.(6) எந்த வகைத் தீச்செயலும் செய்யாமல் செல்வத்தை அனுபவிக்கும் பிறரும் இருக்கின்றனர். மேலும், சாத்திரங்களில் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட கடமைகளைச் செய்தும் செல்வமில்லாத பிறரும் இருக்கின்றனர். ஒருவன் நெறிகள் மற்றும் கொள்கை அறிவியலைச் சார்ந்த ஆய்வுகள் அனைத்தையும் கற்றும் அவற்றைக் குறித்த எந்த அறிவும் இல்லாமல் இருப்பது காணப்படுகிறது.(7) மேலும், நெறிகள் மற்றும் கொள்கை அறிவியல் எதையும் கற்காமலேயே ஒருவன் மன்னனின் முதன்மை அமைச்சராக நியமிக்கப்படுவதும் காணப்படுகிறது. கல்விமான் ஒருவன் செல்வம் கொண்டிருப்பதும் காணப்படுகிறது. கல்லாதவன் செல்வம் கொண்டிருப்பதும் காணப்படுகிறது. இரு வகை மனிதர்களும் முற்றிலும் செல்வம் இல்லாதவர்களாக இருப்பதும் காணப்படுகிறது.(8)
ஒருவன் கல்வியை அடைவதன் மூலம் செல்வத்தின் மகிழ்ச்சியை அடையலாம் என்றால், கல்விமான் எவனும், தன் வாழ்வாதாரத்திற்காகக் கல்லாதவனின் பாதுகாப்பில் இருப்பது ஒருபோதும் காணப்படாது.(9) உண்மையில், கல்வியை அடைவதனால் ஒருவன் நீரை அடைந்து தாகம் தணிப்பவனைப் போல விரும்பத்தக்க அனைத்துப் பொருட்களையும் அனுபவிக்கலாம் என்றால், கல்வியை அடைவதில் இவ்வுலகில் எவரும் சோம்பியிருக்க மாட்டார்கள்.(10) ஒருவனுக்கான காலம் வராவிட்டால், அவன் நூறு கணைகளால் துளைக்கப்பட்டாலும் மாளமாட்டான். மறுபுறம், வேளை வந்தவுடனேயே, புல்லால் தாக்கப்பட்டவனும் தன் உயிரைவிடுவான்" என்றான்.(11)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பெரும் முயற்சிகளில் ஈடுபாடு கொள்வதில் ஒருவன் தன்னை நிறுவிக் கொண்டும் செல்வமீட்டத் தவறினால் அவன் கடுந்தவங்களைச் செய்ய வேண்டும். விதைகள் விதைக்கப்படாமல் பயிர்கள் தோன்றுவதில்லை.(12) வயதால் மதிப்பிற்குரியோரிடம் பணி செய்வதன் மூலம் ஒருவன் நுண்ணறிவையும், ஞானத்தையும் அடைவதைப் போலவே, (இம்மையில் தகுந்த மனிதர்களுக்குக்) கொடைகளை அளிப்பதன் மூலம் ஒருவன் (மறுமையில்) இன்பத்திற்குரிய எண்ணற்ற பொருட்களை அடைகிறான். உயிரினங்கள் அனைத்துக்கும் கொடுமை செய்யாமல் இருக்கும் கடமையைச் செய்வதன் மூலம் ஒருவன் நீண்ட வாழ்நாளைப் பெறுவான் என ஞானிகள் சொல்கின்றனர்.(13) எனவே, ஒருவன் கொடைகளை அளிக்க வேண்டுமேயன்றி வேண்டக் கூடாது (அல்லது பிறரால் கொடுக்கப்படும் போது ஏற்றுக் கொள்ள வேண்டும்). ஒருவன் அறவோரை வழிபட வேண்டும். உண்மையில், அவன் இனிய பேச்சுக் கொண்ட அனைவருக்கும், பிறருக்கும் ஏற்புடையதையே எப்போதும் செய்ய வேண்டும். ஒருவன் (மனம் மற்றும் புறத்) தூய்மையை அடைய முனைய வேண்டும். உண்மையில், அவன் எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைப்பதைத் தவிர்க்க வேண்டும்.(14) ஓ! யுதிஷ்டிரா, பூச்சிகளும், எறும்புகளும் கூட, (இப்பிறவி மற்றும் முற்பிறவிகளில் செய்த) தங்கள் செயல்கள் மற்றும் இயல்பின் விளைவாக இன்ப துன்பங்களைச் சந்திக்கின்றன. நீ அமைதியடைவாயாக" என்றார் {பீஷ்மர்}[1].(15)
[1] "இங்கே சொல்லப்படுவது என்னவேன்றால்: அனைத்து உயிரினங்களின் நிலையும், இந்த மற்றும் கடந்த பிறவிகளின் செயல்களால் தீர்மானிக்கப்படுகின்றன. மேலும், இயல்பு என்பது செயல்களின் விளைவாகவே இருக்கிறது. எனவே, இவ்வுலகில் ஒருவன் காணும் இன்பமும், துன்பமும், இவ்விரண்டு காரணங்களாலேயே உண்டாகின்றன. உன்னைப் பொறுத்தவரையில், ஓ! யுதிஷ்டிரா, அண்டவிதியில் இருந்து நீ விடுபட்டவனல்ல. எனவே, எவ்வகை ஐயங்களையும் வளர்க்காதே. ஒரு கல்விமான ஏழையாக இருப்பதையும், அறியாமை கொண்டவன் செல்வந்தனாக இருப்பதையும் நீ கண்டால், முயற்சி தவறுவதையும், முயற்சியில்லாமை வெற்றிக்கு வழிவகுப்பதையும் கண்டால், எப்போதும் செயல்கள் மற்றும் இயல்பின் விளைவே அந்நிலைகள் என நீ தீர்மானிப்பாயாக" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அநுசாஸனபர்வம் பகுதி – 163ல் உள்ள சுலோகங்கள் : 15
ஆங்கிலத்தில் | In English |