Practical ethics! | Anusasana-Parva-Section-164 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 164)
பதிவின் சுருக்கம் : அறத்தைப் பின்பற்றும் முறை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஒருவன் தானே நல்லது செய்யும்போதும், அல்லது பிறரைச் செய்ய வைக்கும்போதும், அவன் அறத்தகுதிகளை அடைவதை எதிர்பார்க்கலாம். அதேபோல, ஒருவன் தானே தீமை செய்தாலும், பிறரைச் செய்ய வைத்தாலும், அறத்தகுதிகளை அடைவதை அவன் ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.(1) எல்லா நேரங்களிலும், காலமே உயிரினங்கள் அனைத்தின் புத்தியிலும் நுழைந்து, அவற்றை அறச்செயல்களையோ, மறச் செயல்களையோ செய்வதில் நிறுவி, அதன் பின் அவற்றுக்கு இன்பத்தையோ, துன்பத்தையோ அளிக்கிறது.(2)
ஒரு மனிதன் அறத்தின் கனிகளைக் கண்டு, அறமே மேன்மையானது என்பதைக் காணும்போதுதான், அவன் அறத்தில் நம்பிக்கை கொண்டு அதைப் பின்பற்றுகிறான். எனினும், உறுதியற்ற புரிதல் கொண்டவன் அதில் நம்பிக்கை வைக்கத் தவறுகிறான்.(3) அறத்தில் நம்பிக்கை என்பது இதுதான் (வேறேதுமல்ல). அறத்தில் நம்பிக்கை கொள்தல் என்பது மனிதர்கள் அனைவருக்கும் ஞானத்தின் குறியீடாகும். (எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்ற) இரண்டையும் அறிந்த ஒருவன், வாய்ப்புகளைப் பயன்படுத்தும் நோக்கத்தோடும், கவனம் மற்றும் அர்ப்பணிப்புடனும் சரியானதைச் செய்ய வேண்டும்.(4) இப்பிறவியில் செல்வாக்குடன் அருளப்பட்ட அறவோர், மறுபிறவியில் ஆசை குணம் {ரஜோகுணம்) தலைதூக்கும் பிறவியை அடையாமல் தவிர்க்க தங்கள் இயல்பின்படியே செயல்பட்டு, தங்கள் ஆன்மாக்களில் குறிப்பிட்ட கவனத்தைச் செலுத்த வேண்டும்.(5)
(அனைத்தையும் அகற்றவல்ல) காலத்தால் அறத்தைத் துன்பத்திற்கான காரணமாக ஒருபோதும் மாற்ற முடியாது. எனவே, அறம் சார்ந்த ஆன்மா நிச்சயம் தூய்மையானது (தீமை மற்றும் துயரத்தில் இருந்து விடுபட்டு இருப்பது) என்பதை ஒருவன் அறிய வேண்டும்.(6) மறத்தை {அதர்மத்தைப்} பொறுத்தவரையில், அது பெருமளவில் இருந்தபோதிலும் கூட, காலத்தால் எப்போதும் பாதுகாக்கப்படுவதும், சுடர்மிக்க நெருப்பைப் போல ஒளிர்வதுமான அறத்தைத் தீண்ட முடியாது.(7)
களங்கமில்லா ஆன்மா, மறத்தால் {அதர்மத்தால்} தீண்டப்படாத ஏற்பில்லாமை ஆகிய இரண்டு விளைவுகளும் அறத்தால் அடையப்படுகின்றன. உண்மையில், அறமே வெற்றியைத் தரும். மூவுலகங்களுக்கும் ஒளியூட்டும் அளவிற்கு அது பெரும் பிரகாசம் கொண்டது.(8) ஒரு பாவியைப் பிடித்து அறவோனாக்குதல் ஞானியாலும் முடியாது. அறச்செயல் செய்ய வலுக்கட்டாயமாகத் தூண்டப்படும்போது பாவிகள் அச்சத்தால் தூண்டப்பட்டவர்களாக {உள்ளொன்றும் புறமொன்றாகவும்} கபடமாகவே செயல்படுவார்கள்.(9) சூத்திரர்களில் அறவோர், பரிந்துரைக்கப்பட்ட நான்கு வாழ்வுமுறைகளில் {ஆசிரமங்களில்} எதையும் பின்பற்றி வாழ சூத்திர வகையினர் அனுமதிக்கப்படவில்லை என்ற முறையீட்டின் மூலம் ஒருபோதும் போலியாக நடந்து கொள்ள மாட்டார்கள்.(10)
நான்கு வகையினருக்கான {வர்ணத்தினருக்கான} உண்மையான கடமைகள் என்னென்ன என்பதை நான் உனக்குக் குறிப்பாகச் சொல்கிறேன். நான்கு வகையை {வர்ணங்களைச்} சேர்ந்த ஒவ்வொருவரும் கொள்ளும் உடல்களைப் பொறுத்தவரையில் ஐம்பூதங்களே அவற்றின் {அவ்வுடல்களின்} உட்பொருட்களாக அமைகின்றன. உண்மையில், அவை அனைத்தும் ஒரே பொருளைச் சார்ந்தவையே.(11) இவ்வாறிருப்பினும் அவற்றுக்கிடையில், வாழ்வு அல்லது உலக நடைமுறைகள் மற்றும் அறக்கடமைகள் ஆகிய இரண்டிலும் வேறுபாடுகள் உள்ளன. இந்த வேறுபாடுகள் இருந்தபோதிலும், அனைவருக்குள்ளும் ஒரு சமநிலையை எட்டக்கூடிய வகையில் செயல்பாடுகளில் போதுமான சுதந்திரம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.(12)
அறத்தின் விளைவுகள் அல்லது வெகுமதிகளாக இருக்கும் இன்ப உலகங்களுக்கும் ஒரு முடிவுண்டு என்பதால் அவை நித்தியமானவையல்ல. எனினும், அறம் நித்தியமானது. காரணம் நித்தியமானதாக இருக்கையில், விளைவு {காரியம்} ஏன் அவ்வாறில்லை?[1] அதற்கான பதில் பின்வருமாறு அமையும். கனி அல்லது வெகுமதியில் உள்ள ஆசையால் தூண்டப்படாமல் செய்யப்படும் அறமே நித்தியமானதாகும். (எனினும், வெகுமதி மீது கொண்ட ஆசையால் செய்யப்படும் அறமானது நித்தியமானதல்ல. எனவே, வெகுமதி விரும்பப்படவில்லை என்றாலும், முதல் வகை அறத்தோடு தொடர்புடைய {வெகுமதியான} பிரம்மத்தை அடைதல் என்பது நித்தியமானதாகும். எனினும், கனியில் உள்ள ஆசையால் தூண்டப்பட்டுச் செய்யப்படும் அறத்துடன் தொடர்புடைய வெகுமதியான சொர்க்கம் நித்தியமானதல்ல)[2].(13)
[1] "அறம் இன்ப உலகங்களுக்கு வழிவகுக்கிறது. அறமானது நித்தியமானதாகச் சொல்லப்படுகையில் இன்ப உலகங்கள் அவ்வாறு சொல்லப்படுவதில்லை. கேட்கப்படும் கேள்வி (அல்லது எழுப்பப்படும் ஐயம்) என்பது காரணம் நித்தியமானதாக இருக்கையில், காரியம் ஏன் அவ்வாறில்லை என்பதாகும். அது கீழே விளக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] "நிஷ்காமம், ஸகாமம் என்று இருவகை அறங்கள் இருக்கின்றன. நிஷ்காம அறம் பிரம்மத்திற்கு வழிவகுக்கிறது, ஸகாம அறம் சொர்க்கம் மற்றும் இன்பத்திற்கு வழிவகுக்கிறது. பிரம்மம் நித்தியமானது; சொர்க்கமோ, இன்பமோ நித்தியமானதல்ல. நிஷ்காம அறம் நித்தியமானதாக இருப்பதால் நித்திய வெகுமதிக்கு வழிவகுக்கிறது. ஸகமாம அறம் அவ்வாறு இல்லாததால் நித்திய வெகுமதிக்கு வழிவகுப்பதில்லை. இங்கே காலம் என்ற சொல் சங்கல்பம் என்ற பொருளைத் தரும். எனவே, துருவகாலம் என்பது நிஷ்காம தர்மத்தைக் குறிக்கும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "உலகம் நிலையற்றதாகவும், தர்மம் மற்றும் நிலைபெற்றதாகவும் சொல்லப்படுவது எப்படியென்றால் காலம் அழியாது. ஆதலால், தர்மம் அழியாது" என்றிருக்கிறது.
உடலுயிரைப் பொறுத்தவரையில் அனைத்து மனிதர்களும் நிகரானவர்களே. மேலும், அவர்கள் அனைவரும் தங்கள் இயல்பின்படியே நிகரான ஆன்மாக்களைக் கொண்டவர்களே. அண்டம் அழியும்போது அனைத்தும் கரைந்துவிடுகின்றன. அறத்தை அடைவதற்கான செயலற்ற விருப்பம் மட்டுமே எஞ்சி நிற்கிறது. உண்மையில் அதுவே (மறுபிறவியில்) மீண்டும் தன்னைத் தோற்றுவித்துக் கொள்ளும்.(14) விளைவு இத்தகையதாயிருக்கையில் (வாழ்வின் இன்பங்களும், துன்பங்களும் முற்பிறவிச் செயல்களின் விளைவுகளாக இருப்பதால்), மனிதர்களுக்கிடையில் காணப்படக்கூடிய சமமின்மைகளை எந்த வகையிலும் முரண்பட்டவையாகக் கருதமுடியாது. அதே போலவே, இருப்பில் உள்ள இடைநிலை உயிரினங்களின் செயல்கள் இந்த உதாரணத்தின்படி சமமாக இருப்பதும் காணப்படுகிறது" என்றார் {பீஷ்மர்}".(15)
அநுசாஸனபர்வம் பகுதி – 164ல் உள்ள சுலோகங்கள் : 15
ஆங்கிலத்தில் | In English |