Recitation of Names! | Anusasana-Parva-Section-165 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 165)
பதிவின் சுருக்கம் : பாவங்களை அகற்றவல்ல தேவர்கள், முனிவர்கள் மற்றும் அரசமுனிகளின் துதிக்கத்தக்க பெயர்ப்பட்டியலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனும், பாண்டுவின் மகனுமான யுதிஷ்டிரன், பாவங்களை அழிக்கும் நன்மையை அடைய விரும்பி, கணைப்படுக்கையில் கிடக்கும் பீஷ்மரிடம் (பின்வரும் வார்த்தைகளால்) கேள்வி கேட்டான்.(1)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "இவ்வுலகில் ஒரு மனிதனுக்கு நன்மையானதென்ன? எதைச் செய்வதன் மூலம் ஒருவன் மகிழ்ச்சியை ஈட்டுகிறான்? எதன் மூலம் ஒருவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்? உண்மையில் பாவங்களை அழிக்கத்தக்கது எது?" என்று கேட்டான்".(2)
வைசம்பாயனர் {ஜனமேயனிடம்} தொடர்ந்தார், "ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, இது தொடர்பாகக் கேட்டுக் கொண்டிருந்த யுதிஷ்டிரனிடம் சந்தனுவின் அரச மகன் {பீஷ்மர்} தேவர்களின் பெயர்களை முறையாக உரைத்தார்.(3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மகனே {யுதிஷ்டிரா}, தேவர்கள் மற்றும் முனிவர்களின் பின்வரும் பெயர்களைக் காலையிலும், நடுப்பகலிலும், மாலையிலும் முறையாக உரைத்தால், அவை அனைத்துப் பாவங்களையும் திறம்படத் தூய்மையாக்குகின்றன.(4) ஒருவன் (அறிவு மற்றும் செயல்) புலன்களின் {ஞானேந்திரியங்கள் மற்றும் கர்மேந்திரியங்களின்} துணையுடன் செயல்படுவதால் பகலிலோ, இரவிலோ, இரு சந்திப் பொழுதுகளிலோ, தெரிந்தோ தெரியாமலோ செய்த எந்தப் பாவமும் இந்தப் பெயர்களை உரைப்பதன் மூலம் தூய்மையடைந்து, அவன் முற்றிலும் தூயவனாகிறான். இந்தப் பெயர்களைச் சொல்லும் ஒருவன் ஒருபோதும் குருடனாகவோ, செவிடனாகவோ ஆவதில்லை; உண்மையில் இப்பெயர்களைச் சொல்வதன் மூலம் ஒருவன் நன்மையானதை அடைவதில் வெல்கிறான்.(5,6) அத்தகைய மனிதன் ஒருபோதும் இடைநிலை உயிரினங்களாகப் பிறக்காமல், ஒருபோதும் நரகத்திற்குச் செல்லாமல், மனிதர்களில் ஒருபோதும் கலப்புச் சாதியில் பிறக்காமல் இருக்கிறான். எந்தத் துயரையும் அடைவது குறித்த அச்சமேதும் அவனுக்கு ஏற்படாது. மரணம் நேரும் போது அவன் ஒருபோதும் கலங்குவதில்லை.(7)
தேவர்கள் மற்றும் அசுரர்கள் அனைவரையும் ஆள்பவனும், பிரகாசத்துடன் ஒளிர்பவனும், அனைத்து உயிரினங்களாலும் வழிபடப்படுபவனும், நினைத்தற்கரியவனும், விவரிக்கப்படமுடியாதவனும், அனைத்து உயிரினங்களுக்கும் உயிரைத் தருபவனும், பிறப்பில்லாதவனும்,(8) அண்டத்தின் தலைவனும், பெரும்பாட்டனுமாக இருப்பவன் பிரம்மன். அவனுடைய பத்தினி சாவித்ரி. அதன் பிறகு வருபவன், வேதங்களின் பிறப்பிடமும், படைப்பாளனும், அளவிலா பலம் கொண்ட நாராயணன் என்று அழைக்கப்படுபவனுமான விஷ்ணு.(9) அதன் பிறகு வருபவன் முக்கண்ணனான உமையின் தலைவன். அதன் பிறகு தேவர்ப்படைத்தலைவன் ஸ்கந்தன்; அதன் பிறகு விசாகன்; பிறகு வேள்வி ஆகுதிகளை உண்பவனான அக்னி: பிறகு காற்றின் தேவனான வாயு; பிறகு சந்திரமாஸ்; பிறகு, பிரகாசத்துடன் கூடிய சூரிய தேவன் ஆதித்யன்.(10)
பிறகு, சச்சியின் தலைவனான சிறப்புமிக்கச் சக்ரன், தூமோர்ணையென்ற மனைவியுடன் கூடிய யமன்; கௌரியுடன் கூடிய வருணன்; ருத்தியெனும் மனைவியுடன் கூடிய கருவூலத் தலைவன் {குபேரன்};(11) இனிமையானவளும், சிறப்பானவளுமான சுரபி எனும் பசு {காமதேனு}, பெரும் முனிவர் விஸ்ரவஸ்; ஸங்கல்பன் {காமன்}; பெருங்கடல் {சமுத்திரன்}; கங்கை; வேறு புனித ஆறுகள்; பல்வேறு {ஏழு} மருத்துகள்;(12) தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களான வாலகில்யர்கள்; தீவில் பிறந்த கிருஷ்ணர் {வியாசர்}; நாரதர்; பர்வதர்; விஸ்வாவஸு; ஹாஹாக்கள்; ஹூஹூக்கள்;(13) தும்புரு; சித்ரஸேனன்; பரந்த புகழ் கொண்ட தேவ தூதன் {விஸ்ருதன்}; உயர்ந்த அருளைப் பெற்ற தேவக்கன்னிகையர் மற்றும் தெய்வீக அப்சரஸ்கள்;(14) ஊர்வசி; மேனகை; ரம்பை; மிஸ்ரகேசி; அலம்புஷை; விஸ்வாசி; கிருதாசி; பஞ்சசூடை; திலோத்தமை;(15)
ஆதித்யர்கள்; வஸுக்கள்; {ருத்ரர்கள்;} அஸ்வினிகள்; பித்ருக்கள்; தர்மம் (அறம்); வேதகல்வி; தவங்கள்; தீக்ஷை; (அறச்செயல்களில்) விடாமுயற்சி; பெரும்பாட்டன்;(16) இரவு; பகல்; மரீசியின் மகனான கசியபர்; சுக்ரர்; பிருஹஸ்பதி; பூமியின் மகனா மங்கலன் {செவ்வாய் / குஜன்}; புதன்; ராஹு; சனீஸ்வரன்;(17) நட்சத்திரக் கூட்டங்கள்; பருவகாலங்கள் {ருதுக்கள்}; மாதங்கள்; பக்ஷங்கள்; வருடம்; வினதையின் மகன் கருடன்; பல்வேறு கடல்கள்; கத்ருவின் மகன்களான பாம்புகள்;(18) சதத்ரு; விபாசை; சந்திரபாகை; ஸரஸ்வதி; ஸிந்து; தேவிகை; பிரபாஸம்; புஷ்கரைத் தடாகங்கள்;(19) கங்கை; மகாநதி; வேணை; காவேரி; நர்மதை; குலம்புனை; விசல்யை; கரதோயை; அம்புவாஹினி;(20)
ஸரயு; கண்டகி; பேராறான லோஹிதம்; தாம்ரம்; ஆருணை; {தாமிரபரணி;} வேத்ரவதி; பர்ணாசை; கௌதமி;(21) கோதாவரி; வேணை; கிருஷ்ணவேணை; திவிஜை {அத்ரிஜை}; திருஷத்வதி; காவேரி; பங்கு {சக்ஷு}; மந்தாகினி;(22) பிரயாகை; பிரபாஸம்; புனித நைமிசம் {நைமிசாரண்யம்}; விஷ்வேஸ்வரன் அல்லது மஹாதேவனுக்குப் புனித இடமாகவும், தெளிந்த நீரைக் கொண்ட தடாகமாகவும் திகழும் காசி;(23) புனித நீர்நிலைகள் பலவற்றால் நிறைந்த குருக்ஷேத்திரம்; பெருங்கடல்களில் முதன்மையான கடல் (பாற்கடல்) {ஸிந்தூத்தமம்}; தவங்கள், கொடைகள் {தபோதானம்;} ஜம்புமார்க்கம்;(24) ஹிரண்யவதி; விதஸ்தை; பிலக்ஷவதி ஆறு; வேதஸ்மிருதி; வேதவதி; மாலவை; அஸ்வவதி;(25)
பூமியில் உள்ள புண்ணியத்தலங்கள்; கங்காத்வாரம்; {ஸிந்து ஆற்றைச் சேரும்} புனிதமான ரிஷிகுல்யைகள்; சித்திரபாகை;(26) சர்மண்வதி; புனித ஆறான கௌசிகி; யமுனை; பீமரதி ஆறு; பேராறான பாஹுதை;(27) மாஹேந்திரவாணி; திரிதிவை; நீலிகை; ஸரஸ்வதி; நந்தை; அபரநந்தை; புனிதமான பெருந்தடாகம் {தீர்த்தமகஹ்ரதம்};(28) கயை; பல்குனீ தீர்த்தம்; தேவர்கள் நிறைந்த (புனிதக் காடான) தர்மாரண்யம்; தேவநதி;(29) பெரும்பாட்டன் பிரம்மனால் படைக்கப்பட்டதும், புனிதமானதும், மூவுலகங்களிலும் கொண்டாடப்படுவதும், மங்கலமானதும், பாவங்கள் அனைத்தையும் தூய்மையாக்க வல்லதுமான தடாகம் {மானஸஸரஸ்};(29) சிறந்த மூலிகைகளுடன் கூடிய இமய மலை;(30)
பல்வேறு வகை உலகங்களும், தீர்த்தங்கள் மற்றும் மருத்துவமூலிகைகள் நிறைந்த விந்திய மலை; மேரு; மஹேந்திரம்; மலயம்; வெள்ளியுடன் கூடிய ஸ்வேதம்;(31) ஸ்ருங்கவான்; மந்தரம்; நீலம்; நிஷதம்; தர்த்துரம்; சித்ரகூடம்; அஞ்சனாபம்; கந்தமாதன மலைகள்;(32) புனிதமான ஸோமகிரி; வேறு பல்வேறு மலைகள்; திசைகள்; மூலைகள்; பூமி; மரங்கள்;(33) விஸ்வேதேவர்கள்; ஆகாயம்; நக்ஷத்திரக் கூட்டங்கள்; கோள்கள் {கிரகங்கள்} மற்றும் தேவர்கள் மற்றும் பெயர் குறிப்பிடப்பட்ட, குறிப்பிடப்படாத இவை அனைத்தும் நம்மை மீட்டுத் தூய்மையடையச் செய்யட்டும்.(34) இந்தப் பெயர்களைச் சொல்லும் மனிதன் தான் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். இவர்களைப் புகழ்ந்து நிறைவடையச் செய்வதன் மூலம் ஒருவன் அனைத்து அச்சங்களில் இருந்தும் விடுபடுகிறான்.(35) உண்மையில், தேவர்களின் புகழைப் பாடுவதில் திளைக்கும் மனிதன், தூய்மையற்ற வகைகளில் பிறப்பதற்கு வழிவகுக்கும் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(36)
தேவர்களின் பெயர்களைச் சொன்ன பிறகு, தவத்தகுதி மற்றும் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களும், ஒருவன் செய்த அனைத்துப் பாவங்களையும் தூய்மையாக்கவல்லவர்களும், கல்விமான்களுமான பிராமணர்களின் பெயர்களைச் சொல்லப் போகிறேன். அவர்கள் யவக்ரீதர், ரைப்யர், {உசிக்கின் மகனான} கக்ஷீவான், ஔஷிஜன்,(37) பிருகு, அங்கிரஸ், கண்வர், பலமிக்க மேதாதி, அனைத்து சாதனைகளையும் கொண்ட பர்ஹி ஆகியோராவர். அவர்கள் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.(38) உயர்ந்த அருளைக் கொண்டவர்களான உன்முசு {உல்முசு}, பிரமுசு, முமுசு ஆகியோர், பெருஞ்சக்தி கொண்ட ஸ்வஸ்த்யாத்ரேயர்;(39) மித்ரனுக்கும், வருணனுக்கும் மகனும், பேராற்றல் கொண்டவருமான அகஸ்தியர்; முனிவர்களில் கொண்டாடப்படும் முதன்மையான இருவரான திருடாயு, ஊர்த்வபாஹு ஆகியோர் அனைவரும் தெற்குப் பகுதியில் வாழ்கின்றனர்.(40) மேற்குப் பகுதியில் வசிக்கும் முனிவர்களின் பெயர்களை இப்போது சொல்லப் போகிறேன். அவர்கள் உடன் பிறந்த சகோதரர்களுடன் கூடிய உஷங்கு, பெருஞ்சக்தி கொண்ட பரிவ்யாதர்,(41) தீர்க்கதமஸ், கௌதமர், காசியபர், ஏகதர், திவிதர், திரிதர்,(42) அத்ரியின் அற ஆன்மா கொண்ட மகன் (துர்வாஸர்), பலமிக்க ஸாரஸ்வதர் ஆகியோராவர். வடக்குப் பகுதியில் வசித்து, வேள்விகளில் தேவர்களை வழிபடும் முனிவர்களின் பெயர்களை இப்போது சொல்லப் போகிறேன்.(43) அவர்கள் அத்ரி, வசிஷ்டர், சக்திரி, பராசரரின் மகனும், பெருஞ்சக்தி கொண்டவருமான வியாசர், விஷ்வாமித்ரர், பரத்வாஜர், ஜமதக்நி,(44) ரிசீகரின் மகன் {பரசுராமர்}, {உத்தாலகர் மகன்} ஔத்தாலகர், ஸ்வேதகேது, கோஹலர், விபுலர், தேவலர்,(45) தேவசர்மன், தௌமியர், ஹஸ்திகாசியபர், லோமசர், நாசிகேதர், லோமஹர்ஷணர்,(46) உக்ரஸ்ரவஸ், பிருகுவின் மகனான சியவனர் ஆகியோராவர். இது வேதகல்வி கொண்ட முனிவர்களின் பட்டியலாகும்.(47) ஓ! மன்னா, பெயர்கள் சொல்லப்பட்டால் ஒவ்வொரு பாவத்தையும் தூய்மையாக்கவல்ல ஆதி முனிவர்கள் இவர்கள்.
இதன் பிறகு நான் முக்கியமான மன்னர்களின் பெயர்களைச் சொல்லப் போகிறேன்.(48) அவர்கள் நிருகன், யயாதி, நகுஷன், யது, பெருஞ்சக்தி கொண்ட பூரு, ஸகரன், துந்துமாரன், பேராற்றல் கொண்ட திலீபன், கிருசாஸ்வன், யௌவனாஸ்வன், சித்ராஸ்வன், ஸத்யவான்,(49) துஷ்மந்தன் {துஷ்யந்தன்}, பல மன்னர்களுக்கும் மேலான சிறப்புமிக்கப் பேரரசனாக இருந்த பரதன், யவனன், ஜநகன், திருஷ்டரதன்,(50) ரகு, மன்னர்களில் முதன்மையான தசரதன், ராட்சசர்களைக் கொன்ற வீரனான ராமன், சசபிந்து, பகீரதன்,(51) ஹரிச்சந்திரன், மருத்தன், திருடரதன், பெரும் நற்பேறு பெற்றவனான அலர்க்கன், ஐலன் {புரூரவன்},(52) கரந்தமன், மனிதர்களில் முதன்மையான காஷ்மீரன், தக்ஷன், அம்பரீஷன், குகுரன், பெரும் புகழைக் கொண்ட ரைவதன், குரு, ஸம்வரணன், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட மாந்தாத்ரி {மாந்தாதா},(53) அரசமுனியான முசுகுந்தன், ஜாந்நவியால் (கங்கையால்) மிகவும் விரும்பப்பட்ட ஜஹ்நு, ஒரு காலத்தில் மன்னர்கள் அனைவரிலும் முதல்வனும், வேனனின் மகனுமான பிருது, மித்ரபானு, பிரியங்கரன்,(54) திரஸத்தஸ்யு, அரசமுனிகளில் முதன்மையான ஸ்வேதன், கொண்டாடப்பட்ட மகாபீஷன், நிமி, அஷ்டகன்,(55) ஆயு, அரச முனியான க்ஷுபன், கக்ஷேயு, பிரதர்த்தனன், திவோதாஸன், ஸுதாஸன், கோசலேஸ்வரன்,(56) ஐலன், அரச முனியான நளன், அனைத்து உயிரினங்களின் தலைவனான மனு, ஹவித்ரன், பிருஷத்ரன், பிரதீபன், சந்தனு,(57) அஜன், மூத்தவனான பர்ஹி {பினராசீபர்ஹி}, பெரும்புகழைக் கொண்ட இக்ஷ்வாகு, அநரண்யன், ஜானுஜங்கன், அரச முனியான கக்ஷஸேனன், மற்றும் (வரலாற்றில் உள்ள) பெயர் சொல்லப்படாத பலர் ஆகியோராவர்.(58)
விடியும் முன்பு எழுந்து, சூரியன் உதிக்கும் போதும், மறையும் போதும் எழும் இரு சந்தி வேளைகளிலும் இந்த மன்னர்களின் பெயர்களைத் தூய்மையான உடல் மற்றும் மனத்துடனும், கவனம் சிதறாமலும் சொல்லும் மனிதன் பெரும் அறத்தகுதியை ஈட்டுகிறான்.(59) ஒருவன், தேவர்கள், தெய்வீக முனிவர்கள் மற்றும் அரச முனிகளின் புகழைப் பாடி, "படைப்பின் தலைவர்களான இவர்கள் எனக்கு வளர்ச்சியையும், நீண்ட வாழ்நாளையும், புகழையும் விதிக்கட்டும். எத்துயரும் எனதாக வேண்டாம், எந்தப் பாவமும் எனதாக வேண்டாம், எதிர்ப்பவர்கள், அல்லது பகைவர்கள் யாரும் எனக்கு வேண்டாம். வெற்றி எப்போதும் எனதாகும், மறுமையில் மங்கல கதியும் எனதாகும். இதில் ஐயமில்லை" என்று சொல்ல வேண்டும்" என்றார் {பீஷ்மர்}".(60,61)
அநுசாஸனபர்வம் பகுதி – 165ல் உள்ள சுலோகங்கள் : 61
ஆங்கிலத்தில் | In English |