Bhishma gave leave! | Anusasana-Parva-Section-166 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 166)
பதிவின் சுருக்கம் : பீஷ்மரிடம் அனுமதி கேட்ட வியாசர்; யுதிஷ்டிரனின் ஐயங்களைத் தீர்த்த மனநிறைவுடன் அனைவருக்கும் விடைகொடுத்து அனுப்பிய பீஷ்மர்...
ஜனமேஜயன் {வைசம்பாயணரிடம்}, "கௌரவர்களில் முதன்மையான மனிதரான பீஷ்மர், வீரர்களால் எப்போதும் விரும்பப்படும் கணைப்படுக்கையில் கிடந்த போது, அவரைச் சுற்றிலும் பாண்டவர்கள் அமர்ந்திருந்தபோது,(1) என் பாட்டனும், பெரும் ஞானியுமான யுதிஷ்டிரன், கடமை குறித்த புதிர்களுக்கு விளக்கங்களைக் கேட்டு தன் ஐயங்கள் அனைத்தையும் தீர்த்துக் கொண்டான்.(2) கொடைகளின் காரியத்தில் பயன்படும் விதிகளையும் கேட்ட அவன், அறம் மற்றும் செல்வம் குறித்த காரியங்களில் தன் ஐயங்கள் அனைத்தும் அகலப்பெற்றான். ஓ! கல்விமானான பிராமணரே {வைசம்பாயணரே}, அந்தப் பெரும் பாண்டவ மன்னன் {யுதிஷ்டிரன்} அதன் பிறகு என்ன செய்தான் என்பதை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்" என்று கேட்டான்[1].(3)
[1] வைசம்பாயணர் சொல்லும்போது, மஹாபாரதத்தில் சாந்திபர்வத்தின் உபபர்வமான மோட்சபர்வம் இருந்திருக்க வாய்ப்புக் குறைவு என்பதற்கு இந்த ஸ்லோகம் சான்றாக அமைகிறது. அறம் மற்றும் செல்வத்தில் உள்ள ஐயங்கள் விலகப்பெற்றான் என்று இங்கே சொல்லப்படுகிறது. வீடுபேறு குறித்த ஐயங்களுக்கான விடைகளே மோட்ச பர்வத்தில் விரவிக் கிடக்கின்றன. சாந்தி பர்வத்தின் உபபர்வமான மோட்ச பர்வம் நைமிசாரண்யத்தில் சௌதி மஹாபாரதத்தை மீண்டும் சொன்னபோது சேர்க்கப்பட்டிருக்கலாம். அவ்வாறெனினும், அதுவும் மிகப் பழங்காலமே.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பீஷ்மர் அமைதியடைந்தபோது, (சுற்றிலும் அமர்ந்திருந்த) மன்னர் குழாம் முற்றிலும் அமைதியடைந்தது. உண்மையில், அவர்கள் அனைவரும் படத்தில் எழுதிய ஓவியத் தோற்றங்களைப் போல அசைவற்றவர்களாக அமர்ந்திருந்தனர்.(4)
அப்போது, சத்தியவதியின் மகனான வியாசர், ஒருகணம் சிந்தித்து, கங்கையின் அரசமகனிடம்,(5) "ஓ! மன்னா, தன் தம்பிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருடன் கூடிய குருக்களின் தலைவனான யுதிஷ்டிரன் தன் சொந்த இயல்பை அடைந்துவிட்டான்.(6) தன்னருகே பெரும் நுண்ணறிவைக் கொண்ட கிருஷ்ணனுடன் இருக்கும் அவன், உமக்கு மதிப்புடன் தலைவணங்குகிறான். அவன் நகரம் திரும்ப நீர் அவனுக்கு விடைகொடுப்பதே உமக்குத் தகும்" என்றார்.(7)
புனிதரான வியாசரால் இவ்வாறு சொல்லப்பட்டவரும், சந்தனு மற்றும் கங்கையின் அரச மகனுமானவர் {பீஷ்மர்}, யுதிஷ்டிரனுக்கும், அவனது அமைச்சர்களுக்கும் விடைகொடுத்தனுப்பினார்.(8)
குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, "அவ்வாறே ஆகட்டும்" என்று மறுமொழி கூறி, தன் பாட்டனை மதிப்புடன் வணங்கி, அங்கிருந்து தன் உறவினர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவருடன் யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்குப்} புறப்பட்டுச் சென்றான்.(15) திருதராஷ்டிரனையும், தன் தலைவனிடம் பெரும்பக்தி கொண்ட காந்தாரியையும் தலைமையில் நிறுத்திக் கொண்டும், முனிவர்கள் மற்றும் கேசவனின் துணையுடனும்,(16) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, குரு குலத்தில் முதன்மையான அவன் {யுதிஷ்டிரன்}, தன் குடிமக்கள், தன் நாட்டில் வசிப்போர் மற்றும் தன் அமைச்சர்களுடனும் சேர்ந்து யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்திற்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} நுழைந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(17)
அநுசாஸனபர்வம் பகுதி – 166ல் உள்ள சுலோகங்கள் : 17
*********அநுசாஸனிக உப பர்வம் {தான தர்ம உப பர்வம்} முற்றும்********
ஆங்கிலத்தில் | In English |