Northern course of the Sun! | Anusasana-Parva-Section-167 | Mahabharata In Tamil
(ஸ்வர்க்காரோஹணிக பர்வம் - 1)
பதிவின் சுருக்கம் : உத்தராயணம் வந்ததும் பீஷ்மரிடம் சென்ற யுதிஷ்டிரன்; பீஷ்மர் இவ்வுலகை விட்டுச் சென்று வசுக்களை அடைய அனுமதித்த கிருஷ்ணன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "குந்தியின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, தன் குடிமக்களையும், தன் மாகாணத்தில் வசிப்போரையும் முறையாகக் கௌரவித்து, அவர்களுக்குரிய இல்லங்களுக்கு அனுப்பி வைத்தான்.(1) பிறகு, போரில் தங்கள் வீரக் கணவர்களையும், மகன்களையும் இழந்த பெண்களுக்குப் பெருஞ்செல்வக் கொடைகளை அளித்து அவர்களுக்கு ஆறுதலளித்தான்.(2) பெரும் ஞானியான யுதிஷ்டிரன், தன் நாட்டை மீட்டு, அரியணையில் முறையாகத் தன்னை நிறுவிக் கொண்டான். பிறகு அந்த மனிதர்களில் முதன்மையானவன், நல்விருப்பத்தின் படியான பல்வேறு செயல்களைச் செய்வதாகத் தன் குடிமக்கள் அனைவருக்கும் உறுதியளித்தான்.(3) அப்போது அறவோரில் முதன்மையான அவன், பிராமணர்கள், படை அதிகாரிகளில் முதன்மையானோர், முன்னணி குடிமக்கள் ஆகியோரின் பெருவாரியான ஆசிகளை ஈட்டுவதில் தன்னை நிறுவிக் கொண்டான்.(4)
அருள் நிறைந்த அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, தலைநகரில் {ஹஸ்தினாபுரத்தில்} ஐம்பது இரவுகளைக் கழித்த பிறகு, தன் பாட்டன் {பீஷ்மர்} இவ்வுலகில் இருந்து செல்வதற்கான காலமெனக் குறிப்பிட்ட நேரத்தை நினைவுகூர்ந்தான்.(5) சூரியன் தெற்கு நோக்கிச் செல்வதை நிறுத்தி, வடக்கு நோக்கி நகரத் தொடங்கியதைக் கண்ட அவன், பெரும் எண்ணிக்கையிலான புரோகிதர்களின் துணையுடன், யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரில் இருந்து புறப்பட்டுச் சென்றான்.(6) குந்தியின் மகனான யுதிஷ்டிரன், பீஷ்மரின் உடலுக்கு எரியூட்ட தன்னுடன் பெரும் அளவிலான தெளிந்த நெய், மலர் மாலைகள், நறுமணப் பொருட்கள், பட்டுத் துணிகள், சிறந்த சந்தனம், கறுப்பும், வெளுப்புமான அகிற்கட்டைகள் ஆகியவற்றை எடுத்துச் சென்றான். விலைமதிப்புமிக்கப் பல்வேறு வகை மாலைகளும், ரத்தினங்களும் அந்தச் சேகரிப்பில் இருந்தன.(7,8)
திருதராஷ்டிரன், நற்பண்புகளுக்காகக் கொண்டாடப்படும் ராணி காந்தாரி, தன் தாயான குந்தி, தன் தம்பிகள் அனைவரையும் முன்னணியில் நிறுத்திய பெரும் நுண்ணறிவுமிக்க யுதிஷ்டிரன்,(9) கிருஷ்ணன் மற்றும் பெரும் ஞானியான விதுரன் ஆகியோர் துணையுடனும், யுயுத்சு மற்றும் யுயுதானனுடனும்,(10) வேறு உறவினர்கள் மற்றும் தொண்டர்களுடனும் கூடிய ஒரு பெரிய வரிசையில், வந்திகளும், பாணர்களும் தன்னைத் துதிக்கப் பின் சென்றான். பீஷ்மரின் வேள்வி நெருப்புகளும் ஊர்வலத்தில் சுமந்து செல்லப்பட்டன.(11) இவ்வாறான துணையுடன் மன்னன் தன் நகரத்தில் இருந்து தேவர்களின் இரண்டாவது தலைவனைப் போலப் புறப்பட்டுச் சென்றான். விரைவில் அவன் சந்தனுவின் மகன் {பீஷ்மர்} தமது கணைப்படுக்கையில் கிடந்த இடத்தை அடைந்தான்.(12)
பெரும் நுண்ணறிவுமிக்கவரும், பராசரரின் மகனுமான வியாசர், நாரதர், தேவலர், அசிதர் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து திரண்டவர்களும், கொல்லப்படாமல் எஞ்சியவர்களுமான மன்னர்கள் ஆகியோர் தம் பாட்டனுக்கு மதிப்புடன் பணிவிடை செய்து கொண்டிருப்பதை அவன் கண்டான். உண்மையில் அந்த மன்னன், பாதுகாக்கும் கடமையில் நியமிக்கப்பட்ட போர்வீரர்களால் அனைத்துப் புறங்களிலும் நன்கு பாதுகாக்கப்பட்ட வீரர்களின் படுக்கையில் கிடக்கும் தன் உயர் ஆன்ம பாட்டனைக் கண்டான். தன் தேரில் இருந்து இறங்கிய மன்னன் யுதிஷ்டிரன், பகைவர்கள் அனைவரையும் தண்டிப்பவரான தன் பாட்டனைத் தன் தம்பிகள் அனைவருடன் சேர்ந்து வணங்கினான். தீவில் பிறந்தவரான வியாசரைத் தலைமையாகக் கொண்ட முனிவர்களையும் அவர்கள் வணங்கினார்கள். தாங்களும் அவர்களால் பதிலுக்கு வணங்கப்பட்டனர்.(13-16) மங்கா புகழ் கொண்டவனான யுதிஷ்டிரன், பெரும் பாட்டன் பிரம்மனுக்கே ஒப்பானவர்களான தன் புரோகிதர்கள் துணையுடனும், தன் தம்பிகளுடனும் சேர்ந்து, இந்த மதிப்புமிக்க முனிவர்கள் சூழ கணைப்படுக்கையில் பீஷ்மர் கிடக்கும் இடத்திற்குச் சென்றான்.(17)
அப்போது தன் தம்பிகளுக்குத் தலைமையில் நின்றிருந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், அப்படுக்கையில் கிடந்தவரும், கங்கையாற்றின் மைந்தருமான அந்தக் குருகுலத்தில் முதன்மையானவரிடம் {பீஷ்மரிடம்},(18) "ஓ! மன்னா, நான் யுதிஷ்டிரன். ஓ! ஜானவி ஆற்றின் மைந்தரே, உம்மை வணங்குகிறேன். ஓ! நீர் இன்னும் கேட்டுக் கொண்டிருந்தால், நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வீராக.(19) ஓ! மன்னா, உமது வேள்வி நெருப்புகளைச் சுமந்து கொண்டு, நீர் குறிப்பிட்ட காலம் வரை உமக்குப் பணிவிடை செய்யவே நான் இங்கே வந்திருக்கிறேன். கல்வியின் அனைத்துக் கிளைகளையும் சார்ந்த ஆசான்கள், பிராமணர்கள், ரித்விஜர்கள் ஆகியோரும், என் தம்பிகள் அனைவரும்,(20) உமது மகனான பெருஞ்சக்தி கொண்ட மன்னன் திருதராஷ்டிரரும், என் அமைச்சர்களும், பேராற்றல் கொண்ட வாசுதேவன் ஆகியோரும் இங்கிருக்கின்றனர்.(21) கொல்லப்படாமல் எஞ்சிய போர்வீரர்களும், குருஜாங்கலத்தில் வசிப்போர் அனைவரும் இங்கே இருக்கின்றனர். ஓ! குரு குலத்தின் தலைவா, உமது கண்களைத் திறந்து அவர்களைக் காண்பீராக.(22) இந்தச் சந்தர்ப்பத்திற்குத் தேவையான அனைத்தையும் நான் ஏற்பாடு செய்திருக்கிறேன். உண்மையில், நீர் குறிப்பிட்ட இந்தக் காலத்திற்கான அனைத்துப் பொருட்களும் ஆயத்தமாக இருக்கின்றன" என்றான் {யுதிஷ்டிரன்}".(23)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பெரும் நுண்ணறிவைக் கொண்ட குந்தியின் மகனால் இவ்வாறு சொல்லப்பட்ட கங்கையின் மைந்தர், தன் கண்களைத் திறந்து, அங்கே தன்னைச் சுற்றிலும் கூடியிருந்த பாரதர்கள் அனைவரையும் கண்டார்.(24) அப்போது வலிமைமிக்கப் பீஷ்மர், யுதிஷ்டிரனின் வலிய கரங்களைப் பிடித்துக் கொண்டு, மேகங்களைப் போன்ற ஆழமான குரலில் அவனிடம் பேசினார்.(25)
சொற்களை முற்றிலும் ஆள்பவரான அவர், "ஓ! குந்தியின் மகனே, ஓ! யுதிஷ்டிரா, நற்பேற்றின் மூலமே, நீ உன் அமைச்சர்கள் அனைவருடனும் இங்கே வந்திருக்கிறாய். நாள் சமைக்கும் ஆயிரங்கதிரோனான புனிதமான சூரியன், தன் வடக்கு நோக்கிய போக்கைத் தொடங்கிவிட்டான்.(26) நான் என் படுக்கையில் எண்பத்தைந்து நாட்கள் கிடந்திருக்கிறேன். இந்தக் கூர்முனைக் கணைகளில் நீட்டிக் கிடந்த நான், இந்தக் காலத்தை நூறு ஆண்டுகளாக உணர்ந்தேன்.(27) ஓ! யுதிஷ்டிரா, மாகச் சந்திர மாதம் {மாசி மாதம்} தொடங்கிவிட்டது. மேலும் இது வளர்பிறைக் காலமாகும், (என் கணக்கீடுகளின்படி) இதில் நான்கில் ஒருபகுதி முடிந்திருக்க வேண்டும்[1]" என்றார்.(28)
[1] கும்பகோணம் பதிப்பில், "புண்ணியமான மாக மாஸம் இப்போது வந்திருக்கிறது. இதில் மூன்று பாகம் மிச்சமிருக்கும். இது சுக்லபக்ஷமாயிருக்க வேண்டும்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "பீஷ்மர் ஸ்வர்க்கம்புக்கது சுக்லபக்ஷம் அஷ்டமி" என்றிருக்கிறது.
தர்மனின் மகனான யுதிஷ்டிரனிடம் இவ்வாறு சொன்ன கங்கையின் மகன் பீஷ்மர், திருதராஷ்டிரனை வணங்கி, அவனிடம் பின்வருமாறு சொன்னார்.(29)
பீஷ்மர் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, நீ கடமைகளை நன்கறிந்தவனாக இருக்கிறாய். பொருளியல் தொடர்பான உன் ஐயங்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டன. பெருங்கல்வி கொண்ட பல பிராமணர்களுக்கு நீ பணிவிடை செய்திருக்கிறாய்.(30) வேதங்களுடன் தொடர்புடை நுண்ணறிவியல்களையும், அறக்கடமைகள் அனைத்தையும், முழுமையாக நான்கு வேதங்களையும் நீ நன்கறிந்திருக்கிறாய்.(31) எனவே, ஓ! குருவின் மகனே {திருதராஷ்டிரனே}, நீ வருந்தாதே. ஏற்கனவே விதிக்கப்பட்டதே நடந்திருக்கிறது. இது வேறு வகையில் ஆகாது. தேவர்கள் தொடர்பான புதிர்களை {ரகசியங்களை} தீவில் பிறந்த முனிவரின் {வியாசரின்} உதடுகளில் இருந்து நீ கேட்டிருக்கிறாய்.(32) யுதிஷ்டிரனும், அவனுடைய தம்பிமாரும், பாண்டுவின் மகன்களாவதைப் போலவே நியாயமாக உனக்கும் மகன்களாவர். அறக்கடமைகளை நோற்கும் நீ அவர்களைப் பேணி வளர்த்துப் பாதுகாப்பாயாக. அவர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் தங்கள் பெரியோருக்குத் தொண்டாற்றுவதில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவர்களாவர்.(33) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் தூய ஆன்மா கொண்டவனாவான். அவன் எப்போதும் உனக்குக் கீழ்ப்படிந்திருப்பான். கருணையறம் {கொல்லாமை} அல்லது தீங்கிழையாமையில் அவன் அர்ப்பணிப்புடன் இருப்பதை நான் அறிவேன். பெரியோர்கள் மற்றும் ஆசான்களின் அவன் அர்ப்பணிப்புமிக்கவனாவான்.(34) உன் மகன்கள் அனைவரும் தீய ஆன்மாக்களைக் கொண்டோராவர். அவர்கள் கோபமும், பேராசையும் கொண்டவர்களாக இருந்தனர். பொறாமையில் மூழ்கிய அவர்கள் அனைவரும் தீய நடத்தை கொண்டிருந்தனர். அவர்களுக்காக வருந்துவது உனக்குத் தகாது" என்றார் {பீஷ்மர்}".(35)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பெரும் ஞானியான திருதராஷ்டிரனிடம் இவ்வளவும் சொன்ன அந்தக் குரு வீரர் {பீஷ்மர்}, பிறகு வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} பேசினார்.(36)
பீஷ்மர் {கிருஷ்ணனிடம்}, "ஓ! புனிதமானவனே, ஓ! தேவர்கள் அனைவருக்கும் தேவா, ஓ! தேவர்கள் மற்றும் அசுரர்கள் அனைவராலும் வழிபடப்படுபவனே, ஓ! மூன்று அடியால் மூவுலகங்களையும் மறைத்தவனே, ஓ! சங்கு, சக்கரம் மற்றும் கதாயுதம் தரித்தவனே உன்னை வணங்குகிறேன்.(37) வாசுதேவன் நீயே, பொன்னுடல் நீயே, ஒரே புருஷன் (அல்லது ஒரே செயல்படும் இயக்கம்) நீயே, (அண்டத்தைப்) படைத்தவன் நீயே, பேரளவு கொண்டவன் நீயே. ஜீவன் நீயே. நுட்பமானவன் நீயே. நித்தியமான பரமாத்மா நீயே.(38) ஓ! தாமரைக் கண்ணா, ஓ! அனைத்திலும் முதன்மையானவனே என்னைக் காப்பாயாக.(39) ஓ! கிருஷ்ணா, ஓ! பரமானந்தமே, ஓ! அனைத்திலும் முதன்மையானவனே இவ்வுலுகில் இருந்து செல்வதற்கு எனக்கு அனுமதி அளிப்பாயாக. பாண்டுவின் மகன்களை எப்போதும் நீ பாதுகாக்க வேண்டும். உண்மையில், ஏற்கனவே ஒரே புகலிடமாக அவர்களுக்கு இருப்பவன் நீயே.(40)
முன்பொரு சமயம், தீய புத்தி கொண்ட மூடனான துரியோதனனிடம், எங்கே அறம் இருக்குமோ அங்கே கிருஷ்ணன் இருப்பான், எங்கே அறம் இருக்குமோ அங்கேயே வெற்றியும் இருக்கும் என்று சொன்னேன்.(41) மேலும் நான் அவனிடம் வாசுதேவனையே புகலிடமாகக் கொண்டு அவனைச் சார்ந்திருந்து பாண்டவர்களுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்ளவும் ஆலோசனை கூறினேன். உண்மையில் நான் அவனிடம் மீண்டும் மீண்டும், "அமைதியை ஏற்படுத்திக் கொள்ள உனக்கு இதுவே தகுந்த நேரம்" என்று சொன்னேன்.(42) எனினும், தீய புத்தி கொண்ட மூடனான துரியோதனன், நான் சொன்னதைக் கேட்டானில்லை. அவன் {துரியோதனன்}, பூமியில் ஒரு பெரும் அழிவை ஏற்படுத்திவிட்டு தன் உயிரையும் விட்டுவிட்டான்.(43) ஓ! சிறப்புமிக்கவனே, பதரி ஆசிரமத்தில் நரனின் துணையுடன் பல ஆண்டுகள் வசித்த பழைமையான சிறந்த முனிவன் நீ என்பதை நான் அறிவேன்.(44) தெய்வீக முனிவர் நாரதரும், கடுந்தவங்களைச் செய்த வியாசரும் இதை எனக்குச் சொல்லியிருக்கின்றனர். அவர்களே இதை எனக்குச் சொன்னார்கள். நீயும், அர்ஜுனனும், பழங்காலத்தில் மனிதர்களுக்கு மத்தியில் பிறந்திருந்த நாராயணன் மற்றும் நரன் என்ற முனிவர்களாவீர்.(45) ஓ! கிருஷ்ணா, நான் என் உடலைக் கைவிடப் போகிறேன் எனக்கு விடை அருள்வாயாக. உன்னால் அனுமதிக்கப்பட்டு நான் உயர்ந்த கதியை அடையப் போகிறேன்" என்றார் {பீஷ்மர்}.(46)
வாசுதேவன் {கிருஷ்ணன்}, "ஓ! பீஷ்மரே, நான் உமக்கு விடைகொடுக்கிறேன். ஓ! மன்னா, நீர் வசுக்களின் நிலையை அடைவீராக. ஓ !பெரும் காந்தி கொண்டவரே, இவ்வுலகில் ஒரே ஒரு மீறலையும் செய்த குற்றமுள்ளவரில்லை.(47) ஓ! அரசமுனியே, நீர் உமது தந்தையிடம் பக்தி கொண்டவராவீர். எனவே, நீர் இரண்டாவது மார்க்கண்டேயனைப் போன்றவராவீர். இதன் காரணமாகவே உம் விருப்பப்படியே யமன், உமது விருப்பத்தைப் படிக்க எதிர்பார்த்து உமது அடிமையாகக் காத்திருக்கிறான்" என்றான் {கிருஷ்ணன்}".(48)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இந்த வார்த்தைகளைச் சொன்ன கங்கையின் மைந்தர், திருதராஷ்டிரன் தலைமையிலான பாண்டவர்களிடமும், வேறு நண்பர்களிடமும், தன் நலம் விரும்பிகளிடமும் மீண்டும் பேசினார்.(49) {அவர்}, "நான் என் உயிர்மூச்சைக் கைவிட விரும்புகிறேன். நீங்கள் எனக்கு விடை கொடுப்பதே தகும். வாய்மையை அடைய நீங்கள் முயல வேண்டும். வாய்மையே உயர்ந்த பலமாக இருக்கிறது.(50) தவங்களில் அர்ப்பணிப்புடனும், எப்போதும் கொடூர நடத்தைகளைக் கைவிட்டும், ஆன்மாக்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டும் அறமொழுகும் பிராமணர்களுடனே நீங்கள் எப்போதும் வாழ வேண்டும்" என்றார்.(51)
தன் நண்பர்களிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன நுண்ணறிவுமிக்கப் பீஷ்மர் மீண்டும் யுதிஷ்டிரனிடம்,(52) "ஓ! மன்னா, பிராமணர்கள் அனைவரும், குறிப்பாக ஞானம் கொண்டோரும், ஆசான்களும், வேள்விகளில் துணைபுரியவல்ல புரோகிதர்களும் உன் மதிப்பீட்டின்படி துதிக்கத்தக்கவர்களாகவே இருக்கட்டும்" என்றார் {பீஷ்மர்}".(53)
அநுசாஸனபர்வம் பகுதி – 167ல் உள்ள சுலோகங்கள் : 53
ஆங்கிலத்தில் | In English |