The grief of Ganga! | Anusasana-Parva-Section-168 | Mahabharata In Tamil
(ஸ்வர்க்காரோஹணிக பர்வம் - 2)
பதிவின் சுருக்கம் : யோகத்தில் நிலைத்து தமது உயிரைப் பிரித்த பீஷ்மர்; பீஷ்மரின் ஈமச் சடங்குகள்; கங்கையின் துயரம்; கங்கையைத் தேற்றிய கிருஷ்ணன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! பகைவர்களைத் தண்டிப்பவனே {ஜனமேஜயா}, குருக்கள் அனைவரிடமும் இவ்வாறு சொன்ன சந்தனுவின் மகன் {பீஷ்மர்} சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.(1) அவர் யோகத்தில் குறிப்பிட்டுள்ளவாறு அடுத்தடுத்து தன் உடற்பாகங்களில் இருந்து உயிர் மூச்சுகளை நிறுத்தினார். அந்த உயர் ஆன்மாவின் உயிர் மூச்சுகள் முறையாகக் கட்டுப்படுத்தப்பட்டு, மேல் நோக்கி எழுப்பப்பட்டது.(2) யோகத்தை ஏற்றிருந்ததன் விளைவால் உயிர்மூச்சுகள் மேல்நோக்கிச் செல்லும்போது, சந்தனு மகனின் {பீஷ்மரின்} உடற்பாகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வலியற்றவையாகின.(3) ஓ! மன்னா, வியாசரைத் தலைமையாகக் கொண்ட பெரும் முனிவர்கள் உள்ளிட்ட உயர் ஆன்ம மனிதர்களுக்கு மத்தியில் இந்தக் காட்சி வியப்பான ஒன்றாகப் பார்க்கப்பட்டது.(4) குறுகிய காலத்திற்குள் பீஷ்மரின் மொத்த உடலும் கணையற்றதாகவும், வலியற்றதாகவும் ஆனது. வாசுதேவனின் தலைமையிலான புகழ்பெற்ற மனிதர்களும், வியாசருடன் கூடிய தவசிகள் அனைவரும் இதைக் கண்டு ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(5) கட்டுப்படுத்தப்பட்டவை, எந்த வழியிலும் வெளியேற இயலாதவையுமான உயிர்மூச்சுகள், இறுதியாக உச்சந்தலையைத் துளைத்துக் கொண்டு சொர்க்கத்தை நோக்கிச் சென்றது.(6)
தேவதுந்துபிகள் முழங்கத் தொடங்கின, மலர்மாரி பொழிந்தது. சித்தர்களும், மறுபிறப்பாள முனிவர்களும் மகிழ்ச்சியால் நிறைந்து, "நன்று, நன்று" என்று சொன்னார்கள்.(7) உச்சந்தலையைப் பிளந்து சென்ற பீஷ்மரின் உயிர்மூச்சுகள் பெரும் எரிகல்லைப் போல ஆகாயத்தில் சென்று விரைவில் புலப்படாமல் போனது.(8) ஓ! பெரும் மன்னா, பாரதக் குலத்தின் தூணாகத் திகழ்ந்த சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, இவ்வாறு தம்மை நித்தியத்தோடு கலந்தார்.(9)
பிறகு, உயர் ஆன்ம பாண்டவர்களும், விதுரரும் பெரும் அளவிலான விறகுகளையும், பல்வேறு வகை நறுமணப் பொருட்களையும் கொண்டு ஈமச்சிதையை அமைத்தனர்.(10) யுயுத்சுவும் பிறரும் அந்த ஆயத்தங்களைக் கண்காணிதனர். அப்போது யுதிஷ்டிரனும், உயர் ஆன்ம விதுரரும்,(11) பீஷ்மரின் உடலை, பட்டுத் துணியாலும், மலர் மாலைகளாலும் போர்த்தினர். யுயுத்சு ஒரு சிறந்த குடையை அதன் மேல் ஏந்தினான்.(12) பீமசேனன் மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரும் தங்கள் கரங்களில் தூய வெண்ணிறத்திலான சாமரங்களை ஏந்தினர். மாத்ரியின் மகன்கள் {நகுலன், சகாதேவன்} இருவரும் தங்கள் கரங்களில் இரண்டு கிரீடங்களைக் கொண்டிருந்தனர்.(13) யுதிஷ்டிரனும், திருதராஷ்டிரனும் உடலின் {பீஷ்மருடைய சடலத்தின்} கால்மாட்டில் நின்றனர். குருக்களின் தலைவனுடைய மனைவிமார், பனையோலை விசிறிகளை எடுத்து, உடலைச் சுற்றிலும் நின்று மெதுவாக விசிறத் தொடங்கினர்.(14) உயர் ஆன்ம பீஷ்மரின் பித்ரு வேள்வி முறையாகச் செய்யப்பட்டது. புனித நெருப்பில் ஆகுதிகள் பல ஊற்றப்பட்டன. சாமங்களைப் பாடுவோர் பல சாமங்களைப் பாடினர்.(15)
கங்கையின் மகனுடைய உடலை சந்தனம், மரமஞ்சள் மற்றும் காரகில் கட்டைகளாலும், நறுமணமிக்க வேறு விறகுகளாலும் மறைத்து, அதற்கு நெருப்பிட்டு, அச்சிதைக்கு வலப்புறத்தில் திருதராஷ்டிரனுடன் கூடிய குருக்கள் நின்று கொண்டிருந்தனர்.(16,17) குரு குலத்தில் முதன்மையானோரான அவர்கள், இவ்வாறு கங்கையின் மகனுடைய உடலை எரித்து, முனிவர்கள் துணையுடன் புனித பாகீரதிக்கு {கங்கைக்குச்} சென்றனர்.(18) அந்த இடத்திற்கு வியாசர், நாரதர், அசிதர், கிருஷ்ணன், பாதர குலத்தின் பெண்கள், ஹஸ்தினாபுரவாசிகள் ஆகியோர் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.(19) அந்தப் புனித ஆற்றுக்கு வந்தடைந்த அனைவரும், உயர் ஆன்ம கங்கைமைந்தருக்கு நீர்க்காணிக்கைகளை முறையாகச் செலுத்தினர்.(20)
பாகீரதி தேவி, தன் மகனுக்கான நீர்க்காணிக்கைகள் செலுத்தப்பட்ட பிறகு, கவலையால் உடைந்தவளாக அழுது கொண்டே அந்த ஓடையில் இருந்து எழுந்தாள்.(21) அவளது புலம்பல்களுக்கு மத்தியில் குருக்களிடம் அவள், "பாவமற்றவர்களே, (என் மகனுக்கு) நேர்ந்ததனைத்தையும் உங்களுக்குச் சொல்கிறேன்; கேட்பீராக.(22) அறவொழுக்கம் மற்றும் இயல்புகளைக் கொண்டவனும், உயர்ந்த பிறவியையும், ஞானத்தைக் கொண்டவனுமான என் மகன், தன் குலத்துப் பெரியவர்கள் அனைவருக்கும் நன்மை செய்பவனாக இருந்தான். அவன் தன் தந்தையிடம் பக்தி கொண்டவனாகவும், உயர்ந்த நோன்புகளைக் கொண்டவனாகவும் இருந்தான்.(23) பெருஞ்சக்தியுடன் கூடிய தெய்வீக ஆயுதங்களைக் கொண்ட ஜமதக்னி குல ராமரால் {பரசுராமராலும்} வெல்லப்பட முடியாதவனாக அவன் இருந்தான். ஐயோ, அந்த வீரன் சிகண்டியால் கொல்லப்பட்டானே.(24) மன்னர்களே, என் மகன் போனதைக் கண்டும் பிளாக்காமல் இருக்கும் என் இதயம் இரும்பாலானது என்பதில் ஐயமில்லை.(25) காசியில் நடந்த சுயம்வரத்திற்குத் தனியாக ஒற்றைத் தேரில் சென்று, அங்கே கூடியிருந்த க்ஷத்திரியர்களை வீழ்த்தி, (தன் சகோதரனுக்காக) மூன்று இளவரசிகளை அபகரித்து வந்தான்.(26) அவனது வலிமைக்கு இணையாக இந்தப் பூமியில் எவனும் இல்லை. ஐயோ, அவ்வாறு இருந்த என் மகன் சிகண்டியால் கொல்லப்பட்டான் என்று கேட்டும் என் இதயம் பிளக்காமல் இருக்கிறதே" என்று சொல்லி புலம்பினாள்.(27)
பலமிக்கக் கிருஷ்ணன், பேராறாக ஓடும் அந்தத் தேவியின் புலம்பல்களைக் கேட்டு, ஆறுதலான பல சொற்களைச் சொல்லி அவளைத் தேற்றினான். கிருஷ்ணன், "ஓ! இனியவளே, ஆறுதலடைவாயாக. ஓ அழகிய பண்புகளைக் கொண்டவளே, வருந்தாதே. உன் மகன் இன்பம்நிறைந்த உயர்ந்த உலகத்திற்குச் சென்றிருக்கிறார் என்பதில் ஐயமில்லை.(28-30) அவர் வசுக்களில் பெருஞ்சக்தி கொண்டவராக இருந்தார். ஓ! அழகிய பண்புகளைக் கொண்டவளே, ஒரு சாபத்தின் மூலம் அவர் மனிதர்களுக்கு மத்தியில் பிறந்தார். அவருக்காக வருந்துவது உனக்குத் தகாது.(31) க்ஷத்திரியக் கடமைகளுக்கு ஏற்புடைய வகையில், போர்க்களத்தில் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே அவர் தனஞ்செயனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டார். ஓ! தேவி, அவர் சிகண்டியால் கொல்லப்படவில்லை.(32) பீஷ்மர் தம் கரத்தில் வில் வளைத்து நின்றால், தேவர்களின் தலைவனாலும் அவரைக் கொல்ல முடியாது.(33) ஓ! அழகிய முகம் கொண்டவளே உன் மகன் இன்பமாகச் சொர்க்கத்திற்குச் சென்றிருக்கிறார். தேவர்கள் அனைவரும் கூடியிருந்தாலும் அவரைப் போரில் கொல்ல முடியாது.(34) எனவே, ஓ! கங்கா தேவி, குரு குலத்தின் மகனுக்காக நீ வருந்தாதே. ஓ! தேவி, அவர் வசுக்களில் ஒருவராவார். உன் மகன் சொர்க்கத்திற்குச் சென்றிருக்கிறார். உன் இதய நோய் அகலட்டும்" என்றான் {கிருஷ்ணன்}".(35)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஆறுகள் அனைத்திலும் முதன்மையானவளான அவள் {கங்கை}, ஓ! பெரும் மன்னா {ஜனமேஜயா}, கிருஷ்ணனாலும், வியாசராலும் இவ்வாறு சொல்லப்பட்டதும், தன் துயரைக் கைவிட்டு உள்ளச் சமநிலையை அடைந்தாள்.(36) ஓ! ஏகாதிபதி, அங்குக் கிருஷ்ணனின் தலைமையில் இருந்த மன்னர்கள் அனைவரும், முறையாக அந்தத் தேவியைக் கௌரவித்து, அனுமதியைப் பெற்றுக் கொண்டு அவளது கரையில் இருந்து அகன்று சென்றனர்".(37)
அநுசாஸனபர்வம் பகுதி – 168ல் உள்ள சுலோகங்கள் : 37
********* ஸ்வர்க்காரோஹணிக உப பர்வம் முற்றும் *********
********* அநுசாஸன பர்வம் முற்றிற்று *********
********* அடுத்தது அஸ்வமேத பர்வம் *********
ஆங்கிலத்தில் | In English |