2018 டிசம்பர் மாதம் வைகுண்ட ஏகாதசி அன்று மஹாபாரதத்தின் பதிமூன்றாம் பர்வமான அநுசாஸன பர்வத்தை மொழிபெயர்க்கத் தொடங்கினேன். மொத்தம் 168 பகுதிகளைக் கொண்ட இந்தப் பர்வத்தின் மொழிபெயர்ப்பு 2019 ஜூலை மாதம் 27ம் தேதி அன்று நிறைவடைந்தது. மொத்தம் 221 நாட்கள் ஆகியிருக்கின்றன. மஹாபாரதத்திலேயே கடினமான பகுதி சாந்தி பர்வம் மட்டும்தான் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். உண்மையில் அநுசாஸன பர்வம் சற்றும் அதற்குச் சளைத்ததல்ல. இது, மொத்த மகாபாரதத்தில் அளவில் மூன்றாவது பெரிய பர்வமாகும். அளவில் வன பர்வத்திற்குச் சற்றே குறைந்ததாகும்.
அநுசாஸன பர்வம், அநுசாஸனிகம் {தான தர்மம்} மற்றும் ஸ்வர்க்காரோஹகணிகம் என்ற உப பர்வங்கள் இரண்டைக் கொண்டதாகும். இந்தப் பர்வத்தில் யுதிஷ்டிரன் கேட்கும் கேள்விகளுக்கான விடைகளாக மனிதர்கள் தங்கள் வாழ்வின் பல்வேறு நிலைகளில் ஆற்ற வேண்டிய கடமைகளைக் குறித்துப் பீஷ்மர் உரையாடுகிறார். குறிப்பாகக் கொடை குறித்தே அதிகம் பேசப்படுகிறது. என்னென்ன பொருட்களை, யார் யாருக்கு, எதற்காக, என்ன பலன் விரும்பி கொடுக்கப்பட வேண்டும் என்பதைப் பீஷ்மர் விரிவாக அலசுகிறார். பாரத மக்கள் பெரிதும் கொண்டாடும் சிவஸஹஸ்ரநாமம், விஷ்ணுஸஹஸ்ரநாமம் ஆகியவை இந்தப் பர்வத்திலேயே இருக்கின்றன. சிவ வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கிட்டத்தட்ட சமமாகவே மெச்சப்படுகின்றன. பீஷ்மர் என்ற ஒரே மனிதர் சிவ வழிபாட்டுக்கும், விஷ்ணு வழிபாட்டுக்கும் உரிய நாமாவளிகளை உரைத்திருக்கிறார் எனும்போது, தற்போது நமக்கு மத்தியில் உள்ள சிவ விஷ்ணு சச்சரவுகள் நகைப்பிற்கிடமானவையாகின்றன. இந்த ஸஹஸ்ரநாமங்களின் முக்கியத்துவம் கருதி, வாசகர்கள் எளிதாகத் தேடிப் படிக்கும் வகையில் சிவஸஹஸ்ரநாமம் - மூலம், சிவஸஹஸ்ரநாமம் - மூலம் எளிய வடிவில், சிவஸஹஸ்ரநாமம் - எளிய தமிழில், சிவஸஹஸ்ரநாமம் அகராதி, விஷ்ணுஸஹஸ்ரநாமம் - மூலம், விஷ்ணுஸஹஸ்ரநாமம் - மூலம் எளிய வடிவில், விஷ்ணுஸஹஸ்ரநாமம் - எளிய தமிழில், விஷ்ணு ஸஹஸ்ரநாமம் - அகராதி என்ற பக்கங்களைக் கொண்ட நிரந்தரச் சுட்டிகளை உருவாக்கியிருக்கிறேன்.
முழு மஹாபாரதத்திற்காக, கிசாரி மோகன் கங்குலியின் மஹாபாரதப் பகுதிகளை மொழிபெயர்த்தாலும், ஆங்கிலத்தில் மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகள் மற்றும் தமிழில் உள்ள கும்பகோணம் பதிப்பு ஆகியவற்றை ஒப்புநோக்கியே மொழிபெயர்த்து வருகிறேன். குறிப்பாகக் கும்பகோணம் பதிப்பின் துணை இல்லாவிட்டால், சாந்தி மற்றும் அநுசாஸன பர்வங்களை எவ்வாறு மொழிபெயர்த்திருக்க முடியும் என்ற நினைப்பு மலைப்பைத் தருகிறது. இந்த இரு பர்வங்களை மொழிபெயர்க்கும்போதும், முடவனுக்குதவும் கைத்தடியைப் போல அப்பதிப்பே எனக்குப் பெரிதும் உதவியிருக்கிறது. இருப்பினும், பொருள் விளங்கிக் கொள்ள மட்டுமே அதைப் பயன்படுத்திருக்கிறேன், மொழிபெயர்ப்பானது கங்குலியில் இருந்து சற்றும் பிறழ்ந்துவிடக் கூடாது என்பதில் பெருங்கவனத்தைச் செலுத்தியிருக்கிறேன். வழக்கம் போலவே ஐயம் ஏற்படும் இடங்களில், அடிக்குறிப்புகள் இட்டு மேற்கண்ட மூன்று பதிப்புகளில் இருந்தும் விளக்கங்களை அளித்திருக்கிறேன்.
சாந்தி மற்றும் அநசாஸன பர்வங்கள் கதை நகராமல் நின்ற இடத்திலேயே நீதிகள், கடமைகள், அறம் ஆகியவற்றைக் குறித்து உரையாடும் பகுதிகளாக இருந்தாலும், மனத்தைப் பண்படுத்தும் காரியத்தில் இவை மஹாபாரதத்தில் உள்ள சிறந்த பகுதிகளாகும். இவற்றைப் படிப்பவர்களால், நம் மூதாதையரின் பரந்து விரிந்த அறிவை எண்ணியெண்ணி வியப்படையாமல் இருக்க முடியாது. இவற்றில் பெரும்பாலானவை இடைசெருகல் என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் இவை பாரதத்தின் ஞானக்கிடங்கில் உள்ள மிகச்சிறந்த ரத்தினங்களாகும்.
இவற்றில் பல பகுதிகளில் பிராமணப் பெருமை பேசப்படுகிறது என்பது உண்மையே. முகநூலில் இப்பதிவுகளைப் பகிரும் போது பலர் இதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். நாம் இந்தக் காலத்தில் அமர்ந்து கொண்டு, நம் சூழ்நிலைகளோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதால், நம் மனச்சாய்வுகளின் எல்லைக்கு ஏற்றபடி சில இடங்களில் ஒவ்வாமை ஏற்படவே செய்யும். இவற்றில் சொல்லப்பட்டுள்ளவற்றைப் புரிந்து கொள்ளப் பல நூற்றாண்டுகளைத் தாண்டிச் சென்று சாதி போன்ற அடையாளங்களைக் கடந்து, ஆன்ம அறிவைத் தேடும் நுண்மனம் வேண்டும்.
அநுசாஸன பர்வத்தின் மொழிபெயர்ப்பு நிறைவடைந்த அடுத்த நாளே வங்கிக் கணக்கில் ரூ.16,800/- வரவு வந்தது. பணி நிமித்தமாக ஒன்றரை வருடங்களாக இங்கிலாந்தில் இருக்கும் நண்பர் ஜெயவேலன் தற்போது இத்தாலி சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். இருப்பினும், நினைவில் வைத்துக் கொண்டு மொழிபெயர்ப்பு நிறைவடைந்த அடுத்த நாளே பணத்தை அனுப்பி வைத்திருக்கிறார். எந்த முற்பிறவி தொடர்போ, பணத்தையும் அனுப்பி வைத்து உடனுக்குடன் முழுமஹாபாரதப் பதிவுகளைத் திருத்தியும் வருகிறார். 2013ம் வருடம் முதல் இதுவரை மஹாபாரதம் மொழிபெயர்ப்புக்காக ஜெயவேலன் எனக்குக் கொடுத்திருக்கும் தொகை ரூ.1,96,800/- ஆகும்.
முகநூல் மூலம் அறிமுகமான நண்பர் கார்கில் ஜெய் அவர்கள் 8.6.2019 அன்று என் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அவர் வந்தபோது பணிநிமித்தமாக மற்றொரு நண்பரும் வந்திருந்ததால் அதிகம் பேச முடியவில்லை. இருப்பினும் பணி முடிந்ததும் இருவரும் திருவொற்றியூர் தியாகராஜர் கோவிலுக்குச் சென்றோம். உலக முழுவதும் சுற்றி விபரங்கள் பலவற்றை அறிந்தவர் என்பதை அறிந்து கொண்டேன். இச்சந்திப்பு மகிழ்ச்சியை அளித்தது. அவர் கொடுத்துச் சென்ற எர்கோனாமிக் கீபோர்டில்தான் தற்போது தட்டச்சுச் செய்து வருகிறேன். முகநூல் மூலம் அறிமுகமான மற்றொரு நண்பர் லோகேஷ் ராஜு அவர்களும் அப்போதைக்கப்போது கூகிள் பே மூலம் பணம் அனுப்புகிறார். மேலும் ஒருவர் என் வங்கிக் கணக்கில் ரூ.3,000/- அனுப்பி வைத்திருந்தார். ஆனால் அவரது பெயரைக் குறிப்பிடவில்லை. என்னைத் தொடர்புகொள்ளவும் இல்லை. மேலே சொல்லப்பட்ட நண்பர்கள் அனைவருக்கும், பல்வேறு வகைகளில் எனக்கு உதவி வரும் அனைவருக்கும் நன்றி.
அடுத்ததும், வரிசையில் பதினான்காவதுமான அஸ்வமேத பர்வம் 92 பகுதிகளைக் கொண்டதாகும். அதன்பிறகு வரப்போகும் ஆசிரமாவாசிக பர்வம் 39 பகுதிகளையும், மௌசல பர்வம் 8 பகுதிகளையும், மஹாபிரஸ்தானிக பர்வம் 3 பகுதிகளையும், ஸ்வர்க்கரோஹணிக பர்வம் 6 பகுதிகளையும் கொண்டவையாகும். எனவே, இவ்வருட இறுதிக்குள் முழு மஹாபாரதத்தின் நிறைவை எட்டிவிடலாம் என்று கருதியிருந்தேன். ஆடிப்பெருக்கன்று பதினான்காம் பர்வமான அஸ்வமேத பர்வத்தைத் தொடங்கிவிட வேண்டும் என்றிருந்தேன். இயலவில்லை. வாழ்வின் மிக இக்கட்டான சூழலுக்குள் தற்போது பயணித்துக் கொண்டிருப்பதாக உணர்கிறேன். மொழிபெயர்ப்பைத் தொடங்கிய காலம் முதலே நிறைவை எட்டிவிடுவேன் என்ற நினைப்பில் இப்பணியைச் செய்ததில்லை. இன்று ஒரு பதிவு இட்டிருக்கிறோம்; நாளை ஒரு பதிவு இட வேண்டும்; சிறு பகுதிகள்தானே, எனவே இன்று இரண்டு மூன்று பகுதிகளைச் செய்துவிடலாம் என்ற வகையிலேயே செய்து வந்திருக்கிறேன். இருப்பினும் இவ்வளவு காலமும், இவ்வளவு பகுதியையும் என்னை மொழிபெயர்க்கச் செய்த பரமன், இப்பணியின் நிறைவை நினைத்த காலத்திற்குள் எட்டச் செய்வான் என நம்புகிறேன். அனைத்தும் அவன் சித்தம்.
நன்றி
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
திருவொற்றியூர்
201908082100