Discourse between Siddha and Kasyapa! | Aswamedha-Parva-Section-16 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 01)
பதிவின் சுருக்கம் : கீதையை மறுபடியும் உரைக்கும்படி கோவிந்தனிடம் கேட்ட அர்ஜுனன்; சித்தர் மற்றும் காசியபருக்கிடையில் நடந்த உரையாடலைச் சொன்ன கிருஷ்ணன்...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "பகைவர்களைக் கொன்றுவிட்டு சபா மண்டபத்திற்குச் சென்ற உயர் ஆன்ம கேசவன் மற்றும் அர்ஜுனனுக்கிடையில் என்ன உரையாடல் நடந்தது?" என்று கேட்டான்.(1)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தன் நாட்டை மீட்ட பிருதையின் மகன் (அர்ஜுனன்), தெய்வீக அழகுடைய அந்த அரண்மனையில் மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடனும், கிருஷ்ணனின் துணையுடனும் வேறு எதையும் செய்யாமல் தன் காலத்தை இன்பமாகக் கழித்தான்.(2) ஒருநாள், ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவ்விருவரும் சொர்க்கத்தின் ஒரு பகுதியைப் போலத் தூய்மையாகத் தெரிந்த அந்த அரண்மனையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குச் சென்றனர். மகிழ்ச்சியில் நிறைந்திருந்த அவர்கள், தங்கள் உறவினர்கள் மற்றும் பணியாட்களால் சூழப்பட்டிருந்தனர்.(3)
கிருஷ்ணனுடனான தோழமையால் மகிழ்ச்சியில் நிறைந்திருந்த பாண்டுவின் மகன் அர்ஜுனன், இனிமைநிறைந்த அம்மாளிகையைக் கண்டு, தன் தோழனிடம், "ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, போர் அணுகி வந்தபோது உன் பெருமையை நான் அறிந்தேன்.(4) ஓ! தேவகியின் மகனே, அண்டத்தின் தலைவனான உன் வடிவத்தை நான் அறிந்தேன்.(5) ஓ! கேசவா, புனிதனான நீ அந்நேரத்தில் அன்புடன் எனக்குச் சொன்னதனைத்தையும் என் மனத்தின் நிலையின்மையால் மறந்துவிட்டேன்.(6) எனினும், அந்த உண்மைகளை அறிய மீண்டும் மீண்டும் நான் ஆவல் கொள்கிறேன். நீயோ விரைவில் துவாரகை செல்லப் போகிறாய்" என்றான்".(7)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அவனால் இவ்வாறு கேட்கப்பட்டதும், வலிமைமிக்கவனும், சக்திமானும், பேசுபவர்களில் முதன்மையானவனுமான கிருஷ்ணன், பல்குனனை {அர்ஜுனனை} ஆரத்தழுவி பின்வருமாறு பதில் கூறினான்.(8)
வாசுதேவன் {அர்ஜுனனிடம்}, "புதிர்கள் {இரகசியங்கள்} எனக் கருதப்படும் உண்மைகளை உன்னைக் கேட்கச் செய்தேன். நிலையான உண்மைகளை நான் உனக்குச் சொன்னேன். அறத்தின் நிலையான வடிவம் {ஸனாதன தர்மத்தின் ஸ்வரூபம்} குறித்தும், நித்திய உலகங்கள் அனைத்தைக் குறித்தும் நான் உனக்குச் சொன்னேன்.(9) நான் உனக்குச் சொன்னதை மடமையினால் நீ புரிந்து கொள்ளவில்லை என்பதை அறிவது பெரும் ஒவ்வாமையைத் தருகிறது. அச்சமயத்தில் நான் உன்னிடம் சொன்னது அனைத்தையும் இப்போது நினைவுகூர்ந்து என்னால் உனக்குச் சொல்ல இயலாது.(10) ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, நீ நம்பிக்கையற்றவனாகவும், புத்தி கெட்டவனாகவும் இருக்கிறாய். ஓ! தனஞ்சயா, அச்சந்தர்ப்பத்தில் நான் சொன்ன அனைத்தையும் விரிவாக மீண்டும் சொல்ல என்னால் இயலாது.(11)
(அப்போது நான் உனக்குச் சொன்ன) அந்த அறம் பிரம்மத்தைப் புரிந்து கொள்ளப் போதுமானதற்கும் காலம் அதிகமானதாகும். அது குறித்து மீண்டும் விரிவாக என்னால் சொல்ல முடியாது.(12) யோகத்தில் என்னை நானே குவித்துக் கொண்ட பிறகு பரப்பிரம்மம் குறித்து உன்னிடம் உரையாடினேன். எனினும், அதே காரியம் குறித்த ஒரு பழைய வரலாற்றை நான் உனக்குச் சொல்கிறேன்.(13) ஓ! கடமையை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, நான் சொல்லப் போகும் அனைத்தையும் என் போதனைக்கு ஏற்ற புத்தியுடன் கேட்டால், உன்னால் உயர்ந்த கதியை அடைவதில் வெல்ல முடியும்.(14) ஓ! பகைவரைத் தண்டிப்பவனே, ஒரு சந்தர்ப்பத்தில் சொர்க்கத்தில் இருந்து ஒரு பிராமணர் எங்களிடம் வந்தார். தடுக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட அவர் பிரம்ம லோகத்தில் இருந்து வந்தார். எங்களால் அவர் முறையாகக் கௌரவிக்கப்பட்டார்.(15) ஓ! பிருதையின் மகனே, சொர்க்க வடிவங்களுக்கு ஏற்புடைய வகையில் எங்கள் கேள்விகளுக்கு அவர் அளித்த பதிலில் எவ்வகையான ஐயுணர்வுக்கும் வசப்படாமல் கேட்பாயாக" என்றான் {கிருஷ்ணன்}.(16)
பிராமணன், "ஓ! கிருஷ்ணா, (உன் சொந்த நன்மைக்காக அல்லாமல்) அனைத்து உயிரினங்களிடம் கொண்ட கருணையால் உந்தப்பட்டு, மோக்ஷ அறம் தொடர்பாக நீ என்னிடம் எதைக் கேட்டாயோ, மாயைகள் அனைத்தையும் எது அழிக்குமோ, ஓ! உயர்ந்த பலத்தைக் கொண்டவனே,(17) ஓ! மதுசூதனா அதை நான் உனக்கு முறையாகச் சொல்லப் போகிறேன். ஓ! மாதவா, நான் சொல்வதைக் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக.(18) தவம் செய்தவரும், கடமைகளை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், காசியபர் என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு பிராமணர் அறப்புதிர்கள் {தர்மங்கள் குறித்த சாஸ்திர ரஹஸ்யங்கள்} அனைத்தையும் அறிந்த மற்றொரு பிராமணரிடம் சென்றார்.(19) உண்மையில், பின்னவர், உயிரினங்களின் மரணம் மற்றும் மறுபிறவிகள் குறித்துச் சாத்திரங்கள் போதிக்கும் அறிவு அனைத்திலும், யோகம் தரும் அனைத்துப் பொருட்களின் நேரடி அறிவு ஆகியவற்றிலும் தேர்ச்சி அடைந்தவராக இருந்தார். அவர் உலகம் தொடர்பான காரியங்களில் உள்ள உண்மைகள் அனைத்திலும் நல்ல நிபுணராக இருந்தார். இன்ப, துன்பங்களின் உண்மையையும் நன்கு அறிந்தவராக இருந்தார்.(20) அவர் பிறப்பு மற்றும் மரணம் குறித்தும், நிறை {புண்ணியம்} மற்றும் குறை {பாவம்} ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடுகளையும் அறிந்திருந்தார். தற்செயல்களின் {சுய கர்மத்தின்} விளைவால் உயர்ந்த மற்றும் இழிந்த உடல் கொண்ட உயிரினங்களால் அடையப்படும் கதிகளைக் காண்பவராக இருந்தார்.(21)
உலகில் இருந்து விடுதலை {முக்தி} அடைந்த ஒருவரைப் போல அவர் வாழ்ந்தார். தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவராகவும், முற்றான ஆன்ம அமைதியை அடைந்தவராகவும் இருந்த அவர், தமது புலன்கள் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். பிரம்ம ஒளியால் சுடர்விடுபவராகவும், {நினைத்தாலே} விரும்பிய இடமெங்கும் செல்லக்கூடியவராகவும் இருந்தார். விரும்பினால் அனைவரின் கண்களின் முன்பும் மறைந்து போகும் அறிவியலை அவர் அறிந்திருந்தார். அவர் புலப்படாத சித்தர்கள் மற்றும் தெய்வீக இசைக் கலைஞர்களின் துணையுடன் திரிபவராக இருந்தார். மனிதர்களின் பரபரப்புக்கு அப்பால் ஏதோவோரிடம் அவர்களுடன் அமர்ந்து உரையாடுபவராகவும் இருந்தார். அவர் காற்றைப் போல அனைத்துப் பொருட்களில் இருந்தும் தொடர்பறுந்தவராக இருந்தார். உண்மையில் அவரைக் குறித்துக் கேள்விப்பட்டிருந்த காசியபர் அவரைக் காண விரும்பினார். நுண்ணறிவைக் கொண்டவரும், பிராமணர்கள் அனைவரிலும் முதன்மையானவருமான அவர் {காசியபர்} அந்தத் தவசியை அணுகினார்.(22-24) தவம் செய்பவரும் புண்ணியம் ஈட்ட விரும்பியவருமான காசியபர், அந்த அற்புதக் குணங்கள் அனைத்தையும் கண்டதும் அந்தத் தவசியின் பாதங்களில் குவிந்த இதயத்துடன் விழுந்தார்.(25) அவருடைய இயல்புக்கு மீறிய சாதனைகளைக் கண்ட காசியபர், ஒரு சீடன் தன் ஆசானுக்காகக் கடமையுணர்வுடனும், மதிப்புடனும் காத்திருப்பதைப் போல அந்த முதன்மையான பிராமணரிடம் காத்திருந்து, அவரைத் தணிப்பதில் வென்றார்.(26) ஓ! பகைவர்களை வாட்டுபவனே {கிருஷ்ணா}, சாத்திரக் கல்வி, சிறந்த ஒழுக்கம் ஆகியவற்றைத் தவிர இந்தச் சாதனைகள் அனைத்தையும் செய்திருந்த அந்தப் பிராமணரை, ஓர் ஆசானிடம் கீழ்ப்படிந்திருக்கும் சீடனைப் போலத் தம் பக்தியால் நிறைவடையச் செய்தார்.(27) காசியபரிடம் நிறைவடைந்த அந்தப் பிராமணர் ஒரு நாள் அவரிடம் உற்சாகமாகவும், உயர்ந்த வெற்றியில் ஒரு கண்ணை வைத்துக் கொண்டும் பின்வருமாறு பேசினார். ஓ! ஜனார்த்தனா, அந்த வார்த்தைகளை நான் மீண்டும் சொல்கிறேன் கேட்பாயாக.(28)
வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவரான அந்தத் தவசி {சித்தர்}, "ஓ! மகனே {காசியபா}, பல்வேறு செயல்களின் மூலமும், தகுதியின் {புண்ணியத்தின்} துணை மூலமும் இறந்து போகக்கூடிய உயிரினங்கள் இம்மையில் பல்வேறு கதிகளையும், சொர்க்கத்தில் வசிப்பிடத்தையும் அடைகின்றன.(29) எங்கும் உயர்ந்த மகிழ்ச்சி கிடையாது; எங்கும் நிலையான வசிப்பிடம் கிடையாது. துன்பத்துடன் அடையப்பட்ட உயர்ந்த உலகங்களில் இருந்து மீண்டும் மீண்டும் விழ்ச்சிகள் நேரிடும்.(30) பாவத்தில் ஈடுபட்டதன் விளைவாகக் காமமும், கோபமும் நிறைந்தவனாக, பேராசையால் மயக்கப்பட்டவனாக இருந்த நான் பரிதாபகரமான, மங்கலமற்ற பல்வேறு கதிகளை அடைய வேண்டி இருந்தது.(31) நான் மீண்டும் மீண்டும் இறந்து, மீண்டும் மீண்டும் பிறந்தேன். நான் பல்வேறு வகை உணவுகளை உண்டேன், நான் பல்வேறு முலைகளைப் பருகியிருக்கிறேன்.(32)
ஒருவருக்கொருவர் வெவ்வேறான பல்வேறு வகைத் தாய்மாரையும், பல்வேறு வகைத் தந்தைமாரையும் நான் கண்டிருக்கிறேன். ஓ! பாவமற்றவனே, பல்வேறு வகை இன்பங்களையும், பல்வேறு வகைத் துயரங்களையும் எனதாகியிருக்கின்றன.(33) பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் எனக்கு ஏற்புடையவற்றில் இருந்து பிரிக்கப்பட்டு, ஏற்பில்லாதவற்றோடு சேர்க்கப்பட்டிருக்கிறேன். கடும் உழைப்பினால் செல்வத்தை ஈட்டி, அதை இழந்திருக்கிறேன்.(34) அவமதிப்புகள், அதீத துயரங்கள் ஆகியவற்றை மன்னர்களிடம் இருந்தும், உறவினர்களிடம் இருந்தும் நான் அடைந்திருக்கிறேன்.(35) அவமானங்கள், மரணம், மிகக் கடுமையான சூழ்நிலைகளின் கீழ் சிறைவாசம் ஆகியவற்றை நான் அனுபவித்திருக்கிறேன். நரகத்தில் விழுவதும், யமனின் ஆட்சிப்பகுதிகளுக்குள் பெரும் சித்திரவதைகளும் எனதாகியிருக்கின்றன.(36) முதுமையும், நோய்களும் மீண்டும் மீண்டும் என்னைத் தாக்கியிருக்கின்றன, அடிக்கடி அபரிமிதமான அளவில் பேரிடர்கள் நேர்ந்திருக்கின்றன. முரண்பட்ட இரட்டைகள் அனைத்தின் கருத்துகளில் இருந்தும் பாயும் துன்பங்களை இவ்வுலகில் நான் மீண்டும் மீண்டும் அனுபவித்திருக்கிறேன்.(37)
இவை யாவற்றுக்கும் பிறகு, ஒரு நாள், துன்பத்தில் மூழ்கியிருந்த எனக்கு வெறுமையான மனத்தளர்ச்சி {நம்பிக்கையின்மை} ஏற்பட்டது. வடிவமற்ற புகலிடத்தை நான் அடைந்தேன். பெரும் துயரத்தால் பீடிக்கப்பட்டிருந்த நான் இன்ப துன்பங்கள் நிறைந்த இந்தப் பூமியைக் கைவிட்டேன்[1].(38) இந்தப் பாதையைப் புரிந்து கொண்ட நான், இவ்வுலகில் தானே பயின்று வந்தேன். அதன் பிறகு, ஆன்ம அமைதியின் மூலம் நீ காணும் இந்த வெற்றியை அடைந்தேன்.(39) (இங்கிருந்து நான் சென்ற பிறகு) இவ்வுலகத்திற்கு நான் மீண்டும் வர மாட்டேன். உண்மையில், நிலைத்த பிரம்மத்துக்குள் ஈர்க்கப்படும் நிலையை நான் அடையும் வரை, அண்டத்தின் இறுதி அழிவு வரை எனக்கு நேரும் மகிழ்ச்சிகரமான கதிகளையும், இந்த அண்டத்தில் உள்ள உயிரினங்களின் கதிகளையும் பார்த்துக் கொண்டிருப்பேன்[2].(40) இந்தச் சிறந்த வெற்றியை அடைந்திருக்கும் நான் இவ்வுலகில் இருந்து சென்ற பிறகு, அதற்கு மேலிருப்பது எதுவோ (சத்தியலோகத்திற்கு) செல்வேன். அங்கிருந்து மேலும் உயர்வானதை அடைவேன் (பிரம்மத்திற்குள் ஈர்க்கப்படுவேன்).(41) புலப்படாத நிலையான அந்தப் பிரம்ம நிலையை உண்மையில் நான் அடைவேன். இதில் உனக்கு எந்த ஐயமும் வேண்டாம். ஓ! பகைவரை எரிப்பவனே, இறந்து போகும் உயிரினங்களைக் கொண்ட இவ்வுலகிற்கு மீண்டும் நான் திரும்ப மாட்டேன்.(42)
[1] "இங்கே வரும் "நிராகாராக்ருதேனா’ என்பது நீல கண்டரால் பிரம்மத்தைச் சார்ந்து சமாதியை அடைந்து அல்லது உடல் மற்றும் மனம் ஆகிய இரண்டின் செயல்பாடுகள் அனைத்தையும் (யோகத்தின் மூலம்) நிறுத்தி, முற்றான நினைவின்மையை அடைவது என்று விளக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] "இங்கே சொல்லப்படும் அண்ட அழிவு மஹாபிரளயமாகும், கண்டம் அல்லது அவாந்தரப் பிரளயங்கள் அல்ல. அதுவரை அந்தத் தவசி உயிரினங்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் பிறந்து இறப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! பெரும் ஞானியே, நான் உன்னிடம் நிறைவடைந்திருக்கிறேன். நான் உனக்குச் செய்ய வேண்டியதென்ன என்பதைச் சொல்வாயாக. நீ இங்கே வந்திருக்கும் நோக்கம் நிறைவேறுவதற்கான காலம் வந்துவிட்டது.(43) நீ என்னை நாடி வந்ததற்கான நோக்கத்தை உண்மையில் நான் அறிவேன். அதனால்தான் நான் உனக்கு இந்தச் சிறு குறிப்பைத் தருகிறேன்.(44) ஓ! பெரும் ஞானமும், அனுபவமும் கொண்டவனே, உன் நடத்தையில் நான் உயர்ந்த நிறைவை அடைந்திருக்கிறேன். நீ என்னைக் கேள்வி கேட்கலாம். உன் விருப்பப்படியே உனக்கு நன்மையானவற்றைக் குறித்து நான் உனக்குச் சொல்வேன்.(45) உன் புத்தி பெரியதென நான் நினைக்கிறேன். அந்தப் புத்தியின் துணையுடன்தான் நீ என்னை அறிந்து கொண்டாய் என்பதால் நான் உண்மையில் உன்னை வெகுவாக மெச்சுகிறேன். ஓ! காசியபா, நீ நிச்சயம் பெரும் நுண்ணறிவைக் கொண்டவனாவாய்" என்றார் {அந்த சித்தர்}.(46)
அஸ்வமேதபர்வம் பகுதி – 16ல் உள்ள சுலோகங்கள் : 46
ஆங்கிலத்தில் | In English |