Births and deaths! | Aswamedha-Parva-Section-17 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 02)
பதிவின் சுருக்கம் : உயிரினங்களின் பிறப்பு மற்றும் இறப்புக் குறித்துக் காசியபருக்குக் கூறிய சித்தர்...
வாசுதேவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "அந்தத் தவசியின் பாதங்களைத் தீண்டிய அந்தப் பிராமணர் {காசியபர்}, பதிலளிப்பதற்கு மிகக் கடினமான சில கேள்விகளை அவரிடம் கேட்டார். அறம்சார்ந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையான அவர், குறிப்பிடப்பட்ட அந்தக் கடமைகள் குறித்து அப்போது உரையாடினர்.(1)
காசியபர், "உடல் எவ்வாறு சிதைவடைகிறது?<1> மற்றொன்று {மற்றொரு உடல்} எவ்வாறு அடையப்படுகிறது?<2> துன்பம் நிறைந்த மறுபிறவி சுழற்சியை மீண்டும் மீண்டும் கடந்த பிறகு ஒருவன் எவ்வாறு விடுதலை {முக்தி} அடைகிறான்?<3>(2) சிலகாலம் பிரகிருதியை அனுபவித்துவிட்டு, (அந்தப் பிரகிருதி தரும்) குறிப்பிட்ட உடலை ஜீவன் எவ்வாறு கைவிடுகிறது?<4> உடலில் இருந்து விடுபட்ட ஜீவன், அதனில் இருந்து வேறுபட்டதை (பிரம்மத்தை) எவ்வாறு அடைகிறது?<5>(3) ஒரு மனிதன் தன்னால் செய்யப்படும் நல்ல மற்றும் தீய செயல்களை எவ்வாறு அனுபவிக்கிறான் (அனுபவிக்கவும் அதன் விளைவுகளை எவ்வாறு பொறுத்துக் கொள்ளவும் செய்கிறான்)?<6> உடலை இழந்த ஒருவனுடைய செயல்கள் எங்கிருக்கின்றன {சரீரமற்ற ஆத்மாவுக்கு (சரீரத்திற்குக் காரணமான) கர்மம் எங்கிருந்து வருகிறது}?<7>" என்று கேட்டார்"[1].(4)
[1] "மொத்தம் ஏழு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என உரையாசிரியர் விளக்குகிறார். முதல் கேள்வி உடல் அழிவடைவது குறித்தது. இரண்டாவது, மீண்டும் உடலை அடையும் விதம் தொடர்புடையது. மூன்றாவது, மறுபிறப்பைத் தவிர்க்கும் விதம் குறித்தது. நான்காவது, ஜீவனுக்கு உடலைக் கொடுக்கச் செயல்படும் காரணங்கள் தொடர்புடையது. "பிரகிருதி" என்று சொல்வதன் மூலம் இயற்கை அல்லது உடலுக்குக் காரணமான விழிப்புணர்வின்மை பொருள் கொள்ளப்படுகிறது. ஐந்தாவது, அன்யத் அல்லது பரம், அஃதாவது இறுதி விடுதலை {முக்தி} அல்லது பிரம்மத்துக்குள் ஈர்க்கப்படுதல் எவ்வாறு நிகழ்கிறது என்பது தொடர்பானது. ஆறாவது, செயற்கனிகள் {செயல்களின் பலன்கள்} எவ்வகையில் அனுபவிக்கப்படுகின்றன அல்லது தாங்கிக் கொள்ளப்படுகின்றன என்பதன் தொடர்பானது. ஏழாவது, உடலற்ற ஜீவனைச் செயல்கள் {கர்மங்கள்} பிணைக்கும் வழிமுறைகளைக் குறித்துப் பேசுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
{கிருஷ்ணனுடன் உரையாடிக் கொண்டிருந்த} பிராமணர், "இவ்வாறு காசியபரால் தூண்டப்பட்டவரும், முக்தருமான அந்தத் தவசி அந்தக் கேளவிகளுக்கு ஒன்றன் பின் ஒன்றாகப் பதிலளித்தார். ஓ விருஷ்ணி குலக் கொழுந்தே, அவர் சொன்ன பதில்களை நான் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(5)
முக்தரான அந்தத் தவசி {சித்தர்}, "ஜீவன் ஏற்றுக் கொள்ளும் ஒரு குறிப்பிட்ட உடலால் செய்யப்படுபவையும், வாழ்வை நீட்டிக்கச் செய்யவல்லவையும், புகழைக் கொண்டுவரக்கூடியவையுமான செயல்கள் தீர்ந்து போகும்போது,(6) உடல்கொண்டதும், வாழ்வு குறுகியதுமான அந்த ஜீவன், வாழ்வுக்கும், உடல்நலத்திற்கும் பகையான செயல்களைச் செய்யத் தொடங்குகிறது. அழிவு அணுகும்போது அவனுடைய புத்தி முறையான நடைமுறையில் இருந்து விலகுகிறது.(7) தூய்மையற்ற ஆன்மா கொண்ட மனிதன், தன்னுடைய உடல் கட்டுமானம், பலம், தன் உயிர் மற்றும் வருடத்தின் காலம் ஆகியவற்றைச் சரியாகப் புரிந்து கொண்ட பிறகும் கூட, ஒழுங்கற்ற இடைவெளிகளில் உண்ணவும், தனக்குப் பகையான உணவை உண்ணவும் தொடங்குகிறான்[2].(8) அத்தகைய நேரத்தில் அவன் மிகத் தீங்கான நடைமுறைகளில் {செயல்களில்} ஈடுபடுகிறான். சில வேளைகளில் அவன் அதிகமாக உண்கிறான், மேலும் சில சமயங்களில் அவன் மொத்தமாக உணவைத் தவிர்க்கிறான்.(9) கெட்ட உணவையோ, கெட்ட இறைச்சியையோ உண்கிறான், அல்லது கெட்ட பானத்தைப் பருகுகிறான், அல்லது ஒன்றோடொன்று பொருந்தாத உட்பொருள்களாலான உணவை உண்கிறான். நன்மை தரக்கூடிய கடின உணவை அதிக அளவில் அவன் உண்கிறான், அல்லது முன்பு உண்ட உணவு செரிக்கும் முன்பே மீண்டும் உண்கிறான்.(10)
[2] "இங்கே குறிப்பிடப்படும் காலம் என்பது வருட காலம் மற்றும் அந்த மனிதனின் வயது ஆகிய இரண்டையும் குறிக்கிறது. கோடையில் நன்மை தரும் உணவு, குளிர்காலத்தில் அவ்வாறு இருப்பதில்லை, அல்லது இளமையில் நன்மை தருவது, முதுமையில் தருவதில்லை. நான் கண்ட உரைகள் அனைத்திலும் விதித்வா என்றே இருக்கிறது. தெலங்க் {காசிநாத் திரயம்பக் தெலங்க்} அவர்கள் தனது கிழக்கத்திய புனித நூல்களில் (Sacred books of the east {Part 8}) {1882ல் வெளிவந்த அநுகீதையில்} குறிப்பிடுவது போல அவித்வா என்றில்லை. சரகத்தின் {சரகம் / சரகர் சம்ஹிதையின்} உரையாசிரியர்கள் ஒன்று காலத்தை வாழ்வு காலம் என்றோ, வருட காலம் என்றோதான் எப்போதும் குறிப்பிடுகின்றனர். இதுவும், பின்வரும் சுலோகங்களும் சரகரால் விளக்கப்பட்ட உடல்நல விதிகள் தொடர்பானவையே" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அதிகமான வேலைகளிலும், உரிய அளவுக்கு மீறிய பாலியல் இன்பத்திலும் ஈடுபடுகிறான், அல்லது வேலைக்கான ஆதாரத்தால் தன்னுடைய உடல் உறுப்புகளின் தூண்டுதல்களை ஒடுக்குகிறான்.(11) அல்லது அவன் அதிகச் சுவையுள்ள உணவை உண்ணவோ, பகல் வேளையில் உறங்குவதில் ஈடுபடவோ செய்கிறான். முறையாகச் செரிக்கப்படாத உணவானது, வேளை வரும்போது தானே குற்றங்களை {தோஷங்களைத்} தூண்டுகிறது[3].(12) உடலில் இவ்வாறு குற்றங்கள் தூண்டப்படுவதன் மூலம் அவன் நோயடைந்து மரணத்தை அடைகிறான். சில வேளைகளில் ஒருவன் (தான் இறந்து போவதற்காக) தூக்கிட்டுக் கொள்வது {உத்பந்தனம்} போன்ற பிறழ்நடத்தை அல்லது இயல்பற்ற செயல்களின் ஈடுபடுகிறான்.(13) இந்தக் காரணங்களினால் ஓர் உயிரினத்தின் உடல் அழிவடைகிறது. நான் உனக்குச் சொல்லும் வகையில் இதைச் சரியாகப் புரிந்து கொள்வாயாக.(14)
[3] "காற்று {வாதம்}, பித்தம் மற்றும் சளி {கபம்} என்ற மூன்றும் குற்றங்களாகும். இணக்கத்துடன் இருக்கும் வரையில் அவை உடல்நலத்தை உண்டாக்குகின்றன. ஒன்றோ, இரண்டோ, அனைத்துமோ தூண்டப்படும்போது நிலையில்லாமை ஏற்படுகிறது. நோயைத் தூண்டவும், உண்டாக்கவும் செய்வதால் அவை தோஷங்கள் என்றோ குற்றங்கள் என்றோ அழைக்கப்படுகின்றன. தெலங்க் அவர்கள், இந்த மொத்த பத்தியும், சரகரால் செய்யப்பட்ட பழைய படைப்பில் இருக்கும் பத்தியின் மறுவடிவம் என்பதை அறியாமல், தோஷான் என்பதற்குச் சீர்கேடுகள் எனத் தவறாகப் பொருள் கொள்கிறார்" எனக் கங்குலி இங்கு விளக்குகிறார்.
கடுமையடையும் காற்றால் {வாயுவால் / வாதத்தால்} தூண்டப்பட்ட உடல் வெப்பமானது, ஒன்றன்பின் ஒன்றாக உடலின் ஒவ்வொரு பகுதியையும் அடைந்து, உயிர் மூச்சுகள் {மூச்சு நகர்வுகள்} அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது.(15) உடல் முழுவதும் தூண்டப்பட்டதை உண்மையில் அறிந்து கொள்ளும் வெப்பமானது, உயிர் தங்கியிருப்பதாகச் சொல்லப்படும் உடலின் முக்கியப் பகுதிகள் அனைத்தையும் மிகக் கடுமையாகத் துளைக்கிறது.(16) இதன் விளைவாக ஜீவன் பெரும் துன்பத்தை உணர்ந்து, தன் உடல் உறையில் இருந்து விரைவாக விடைபெறுகிறது. ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவனே, உடல் உறுப்புகளின் முக்கிய அங்கங்கள் இவ்வாறு பீடிக்கப்படும்போது பெரும் துன்பத்தில் மூழ்கும் ஜீவன் உடலை விட்டு நழுவுகிறது என்பதை அறிவாயாக. அனைத்து உயிரினங்களும் பிறப்பு மற்றும் இறப்பால் பீடிக்கப்படுகின்றன.(17,18) ஓ! பிராமணர்களின் தலைவா, ஒரு மனிதன் தன் உடலைக் கைவிடும்போது அவனால் உணரப்படும் வலியானது, அவன் ஒரு கருவறைக்குள் முதலில் நுழையும்போதோ, அதைவிட்டு வெளியேறும்போதோ {பிறக்கும்போதோ} அவனால் உணரப்படும் வலியைப் போன்றதே ஆகும். அவனது மூட்டுகள் கிட்டத்தட்ட விலகி, (கருவறைக்குள்) உள்ள நீரின் மூலம் அவன் பெரும் துன்பமடைகிறான்.(19,20)
(மற்றொரு) கடுங்காற்றால் {வாயுவால்} தூண்டப்படும், உடல் காற்றானது, குளிர் மூலம் தூண்டப்பட்டு, (உடல் என்று அழைக்கப்படும்) பருப்பொருள் ஒன்றியத்தை, எண்ணிக்கையில் ஐந்தான பூதங்களாகச் சிதைவுறச் செய்கிறது.(21) ஐந்து அடிப்படை பூதங்களின் இந்தக் கலவைக்குள் தோன்றும பிராணன் என்றும் அபானன் என்றும் அழைக்கப்படும் உயிர்மூச்சுகளில் வசிக்கும் காற்றானது, துன்பச் சூழ்நிலையில் இருந்து உடல்கொண்ட உயிரினத்தை விட்டு அகன்று, மேல் நோக்கி எழுகிறது.(22) இவ்வாறே காற்றானது உடலை விட்டு விலகுகிறது. பிறகே மூச்சில்லாமை காணப்படுகிறது. அதன் பிறகு அந்த மனிதன் வெப்பம், மூச்சு, அழகு மற்றும் நினைவு அற்றவன் ஆகிறான்.(23) (ஜீவனும் பிரம்மமே என்பதால்) பிரம்மத்தால் கைவிடப்படும் மனிதன் இறந்தவன் எனச் சொல்லப்படுகிறான். அந்த உடலைத் தாங்கியவன், உணரத்தக்க அனைத்துப் பொருட்களையும் எந்தக் குழாய்களின் {புலன்களின்} வழியாக உணர்ந்தானோ, அவற்றின் மூலம் அதற்கு மேலும் அவற்றை அவன் உணரமாட்டான்.(24)
உடலில் உள்ள அந்தக் குழாய்களில் {புலன்களில்} உயிர்மூச்சுகளை உணவில் இருந்து நித்திய ஜீவனே உண்டாக்குகிறது.(25) ஒன்று திரளும் பூதங்கள் சில பகுதிகளில் உறுதியாக ஒன்றிணைகின்றன. அந்தப் பகுதிகளே உடலில் முக்கியப் பகுதிகள் {மர்மஸ்தானங்கள்} என்று அழைக்கப்படுகின்றன என்பதை அறிவாயாக. இவ்வாறே சாத்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.(26) அந்த முக்கியப் பகுதிகள் துளைக்கப்படும்போது, மேலே எழும் ஜீவனானது, உயிரினத்தின் இதயத்திற்குள் நுழைந்து, தாமதமில்லாமல் அசைவூட்டக் கோட்பாட்டை நிறுத்துகிறது.(27) அந்த உயிரினம் அப்போதும் நினைவுக் கோட்பாட்டுடன் கூடியதாக இருந்தாலும், எதையும் அறியத் தவறுகிறது. முக்கியப் பகுதிகள் அனைத்தும் மூழ்கியதும், அந்த உயிரினத்தின் ஞானம் இருளால் மூடப்படுகிறது.(28)
வசிக்கக்கூடிய இடங்கள் அனைத்தையும் இழந்த ஜீவன் அப்போது காற்றால் கலங்கடிக்கப்படுகிறது. அதன் பிறகு அவன், ஆழமானதும், நீண்டதும், துன்பம் நிறைந்ததுமான மூச்சைவிட்டு,(29) அசைவூட்டமுள்ள உடலை நடுங்கச் செய்தபடி விரைவாக வெளியேறுகிறான். எனினும், உடலில் இருந்து தொடர்பறுந்த ஜீவன், தன் செயல்களால் சூழப்பட்டிருக்கிறான்.(30) தான் செய்த மங்கலச் செயல்கள் அனைத்தின் புண்ணியங்கள் மற்றும் தன் பாவங்கள் அனைத்தாலும் அவன் அனைத்துப் புறங்களிலும் சூழப்படுகிறான். ஞானமும், சாத்தியத் தீர்மானங்களின் அறிவையும் கொண்ட பிராமணர்கள், அவன் புண்ணியத்தைக் கொண்டிருக்கிறானா, அல்லது பாவத்தைக் கொண்டிருக்கிறானா என்பதைச் சில குறியீடுகளின் மூலம் அறிந்து கொள்கிறார்கள். கண்களைக் கொண்ட மனிதர்கள், இருளுக்கு மத்தியில் விட்டில் பூச்சியானது தோன்றி மறைவதைக் காண்பதைப் போலவே, அறிவுக் கண் கொண்டவர்களும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களுமான மனிதர்கள், தங்கள் ஆன்மப் பார்வையின் மூலம் உடலைவிட்டு ஜீவன் செல்வதையும், மறுபிறவியில் அவன் கருவறைக்குள் நுழைவதையும் காண்கிறார்கள். ஜீவனுக்கு மூன்று உலகங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாகக் காணப்படுகிறது.(31,34)
உயிரினங்கள் வசிக்கும் இவ்வுலகம் செயற்களம் என்றழைக்கப்படுகிறது. நல்ல அல்லது தீய செயல்களை நிறைவேற்றும் உடல் கொண்ட உயிரினங்கள் அனைத்தும் அவற்றின் பேரில் உண்டாகும் கனிகளை அடைகின்றன.(35) தாங்கள் செய்யும் செயல்களின் விளைவாக உயிரினங்கள் இம்மையில் மேன்மையான அல்லது தாழ்ந்த இன்பங்களை அடைகின்றன. இங்கே தீச்செயல் செய்பவர்கள் தங்கள் செயல்களின் விளைவாக நரகத்தை அடைகிறார்கள்.(36) உயிரினங்கள் தலைகீழாகத் தொங்கி மூழ்கி, சமைக்கப்படும் நிலை மிகத் துன்பகரமான ஒன்றாகும். அங்கிருந்து தப்புவது மிகக் கடினமாகும். உண்மையில் ஒருவன் இந்தத் துன்பத்தில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மிகக் கடினமாக முயல வேண்டும்.(37)
இவ்வுலகில் இருந்து உயர்ந்து சென்ற பிறகு உயிரினங்கள் உண்மையில் வசிக்கப் போகும் உலகங்களை இப்போது சொல்லப் போகிறேன். கவனத்துடன் கேட்பாயாக.(38) நான் சொல்வதைக் கேட்பதன் மூலம், புத்தியில் உறுதியையும், (நல்ல மற்றும் தீய) செயல்களைப் புரிந்து கொள்வதில் ஒரு தெளிவையும் நீ அடைவாய். ஆகாயத்தில் ஒளிரும் நட்சத்திர உலகங்கள், சந்திர வட்டில் மற்றும் சொந்த ஒளியில் அண்டத்தில் ஒளிரும் சூரிய வட்டில் ஆகியவை அறம் சார்ந்த செயல்களைச் செய்த உயிரினங்கள் அனைத்திற்குமான உலகங்கள் என்பதை நீ அறிவாயாக.(39,40)
புண்ணிங்கள் தீர்ந்ததும் அவர்கள் அந்த உலகங்களில் இருந்து மீண்டும் வீழ்ச்சியடைகிறார்கள். சொர்க்கத்திலும்கூட, தாழ்ந்த, மேன்மையான, நடுத்தரமான இன்பநிலைகள் என்ற வேறுபாடு இருக்கிறது.(41) சொர்க்கத்திலேயே கூட, தன்னைவிட அதிகச் செழிப்புடன் இருப்பவர்களைக் கண்டு நிறைவின்மை ஏற்படுகிறது. இவையே நான் விரிவாகக் குறிப்பிட்ட இலக்குகள் {கதிகள்} ஆகும்.(42) இதன்பிறகு, ஜீவன் கருவறை வாசத்தை அடையும் நிலை குறித்து நான் உனக்குச் சொல்லப் போகிறேன். ஓ! மறுபிறப்பாளனே, நான் சொல்லப் போவதைக் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக" என்றார் {சித்தர்}.(43)
அஸ்வமேதபர்வம் பகுதி – 17ல் உள்ள சுலோகங்கள் : 43
ஆங்கிலத்தில் | In English |