Krishna's desire to return to Dwaravati! | Aswamedha-Parva-Section-15 | Mahabharata In Tamil
(அஸ்வமேதிக பர்வம் - 15)
பதிவின் சுருக்கம் : களிப்புற்றிருந்த கிருஷ்ணார்ஜுனர்கள்; துவாரகைக்குத் திரும்ப விரும்புவதாகவும், யுதிஷ்டிரரிடம் அதற்கு அனுமதி பெறும்படியும் அர்ஜுனனிடம் கேட்ட கிருஷ்ணன்...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்} [1], "ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, பாண்டவர்கள் தங்கள் நாட்டை மீண்டும் அடைந்து அமைதியடைந்தபோது, போர்வீரர்களான வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரும் என்ன செய்தனர்?" என்று கேட்டான்.(1)
[1] கும்பகோணம் பதிப்பில் இதற்கு முந்தைய அத்தியாயத்தில் யுதிஷ்டிரனின் ஆட்சி சிறப்பு விவரிக்கப்படுகிறது. கங்குலி, மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராய் ஆகியோரின் பதிப்புகளில் அந்த அத்தியாயம் இல்லை.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! பூமியின் தலைவா, பாண்டவர்கள் தங்கள் ஆட்சிப்பகுதிகளை மீண்டும் அடைந்து தணிவடைந்தபோது, வாசுதேவனும், தனஞ்சயனும் பெரும் மகிழ்ச்சியடைந்து,(2) விசித்திரமான காடுகள், மலைகள், தாழ்வரைகள், புண்ணியத் தீர்த்தங்கள், தடாகங்கள், ஆறுகள், நந்தவனங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் சொர்க்கத்தின் தேவர்களைப் போலப் பெரும் நிறைவுடனிருந்து, இந்திரனின் நந்தவனத்தில் திரியும் அஸ்வினி தேவர்களைப் போலப் பெரும் மகிழ்ச்சியுடன் பயணித்தனர்.(3,4) ஓ! பாரதா, உயர் ஆன்மக் கிருஷ்ணனும் அந்தப் பாண்டுவின் மகனும் (தனஞ்சயனும்) இந்திரப்பிரஸ்தத்தின் அழகிய சபா மண்டபத்திற்குள் நுழைந்து பெரும் இன்பத்துடன் தங்கள் காலத்தைக் கழித்தனர்.(5)
ஓ! இளவரசே, அங்கே அவர்கள் போரில் நிகழ்ந்த பரபரப்பான நிகழ்வுகள் மற்றும் தங்கள் கடந்த கால வாழ்வின் துன்பங்கள் ஆகியவற்றை நினைவு கூர்ந்து தங்கள் காலத்தைக் கடத்தினர்.(6) இதய மகிழ்ச்சியுடன் கூடியவர்களும், உயர்ந்த ஆன்மாக்களைக் கொண்டவர்களுமான அந்தப் பழங்காலத் தவசிகள் இருவரும், தவசிகள் மற்றும் தேவர்களின் குலங்களைக் குறித்த மரபாய்வுகளைச் செய்வதில் ஈடுபட்டனர்.(7) அப்போது, காரியங்கள் அனைத்தின் நிச்சயத்தை அறிந்த கேசவன் {கிருஷ்ணன்}, பார்த்தனிடம் சிறந்த பாணி மற்றும் ஆழத்துடன் இனிமையாகவும், அழகாகவும் பேசினான்.(8) தன் மகன்கள் மற்றும், ஆயிரக்கணக்கான உறவினர்கள் இறந்ததனால் பீடிக்கப்பட்டிருந்த பிருதையின் மகனுக்கு {அர்ஜுனனுக்கு} ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} ஆறுதலளித்தான்.(9) பெரும் தவத்தகுதியைக் கொண்டவனும், அனைத்துப் பொருட்களின் அறிவியலை அறிந்தவனுமான அவன் முறையாக அவனுக்கு ஆறுதலைக் கூறி, தன் மேனியில் இருந்த பெருஞ்சுமை அகற்றப்பட்டவனைப் போலச் சிறிது காலம் ஓய்வெடுத்துக் கொண்டான்.(10) பிறகு அந்தக் கோவிந்தன், நல்ல பொருள் பொதிந்த வார்த்தைகளைக் கொண்ட இனிய பேச்சால் அர்ஜுனனுக்கு ஆறுதல் கூறினான்.(11)
வாசுதேவன் {கிருஷ்ணன்}, "ஓ! அர்ஜுனா, பகைவர்களுக்குப் பயங்கரனே, உன் கரத்தின் பலத்தைச் சார்ந்து மொத்த உலகையும் மன்னனான தர்மனின் மகன் {யுதிஷ்டிரர்} வென்றிருக்கிறார்.(12) ஓ! மனிதர்களில் சிறந்தவனே, அறம்சார்ந்த மன்னரான யுதிஷ்டிரர், பீமசேனர் மற்றும் இரட்டையர் தம்பிகள் ஆகியோரின் வலிமையின் மூலம் இப்போது பூமியின் அரசுரிமையை ஒரு பகையுமின்றி அனுபவிக்கிறார்.(13)
ஓ! அறத்தை அறிந்தவனே {அர்ஜுனனே}, அறத்தால் மட்டுமே மன்னரால் தன் நாட்டை எதிரிகள் அனைவரிடம் இருந்து மீட்டெடுக்க முடிந்தது, அறத்தினுடைய செயல்பாட்டின் மூலமே மன்னன் சுயோதனனும் போரில் கொல்லப்பட்டான்.(14) ஓ! பிருதையின் மகனே, குரு குலத்தின் தூணாக இருப்பவனே, பேராசை கொண்டவர்களும், எப்போதும் பேச்சில் முரட்டுத்தனம் கொண்டவர்களும், அறத்திற்கு மாறான நடைமுறையில் விருப்பம் கொண்டவர்களுமான தீய திருதராஷ்டிர மைந்தர்களும்,(15) அவர்களது தொண்டர்களும் கொல்லப்பட்டனர். பூமியின் தலைவரும், தர்மனின் மகனுமான மன்னர் {யுதிஷ்டிரர்}, பூமியில் உள்ள அரசு முழுமையையும் அமைதியாக அனுபவிக்கிறார்.(16) நானும், ஓ! பாண்டுவின் மகனே, உன்னுடன் சேர்ந்து காட்டுப்பகுதிகளுக்கு மத்தியில் மகிழ்ச்சியாகத் திரிந்து என் காலத்தைக் கழிக்கிறேன்.(17) ஓ! பகைவர்களுக்குப் பயங்கரனே, எங்கே நீயும், பிருதையும் {குந்தியும்}, தர்மனின் மகனான மன்னரும், பீமசேனரும், மாத்ரியின் இரு மகன்களும் இருக்கிறார்களோ அங்கே நான் அதிக மகிழ்ச்சியுடன் இருப்பேன் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?(18) ஓ! குருவின் வழித்தோன்றலே, வசுதேவர், பலதேவர் மற்றும் பிற விருஷ்ணி குலத் தலைவர்களைக் காணாமல் உன்னுடன் சேர்ந்து இனிமை நிறைந்தவையும், புனிதமானவையும், சொர்க்கம் போன்றவையுமான சபாமண்டபங்களில் வெகு காலத்தைக் கழித்துவிட்டேன்.(19,20)
நான் இப்போது துவாரவதி {துவாரகைக்குச்} செல்ல விரும்புகிறேன். எனவே, ஓ! மனிதர்களில் பெரும் வீரமிக்கவனே {அர்ஜுனா}, நான் செல்வதை ஏற்பாயாக.(21) மன்னர் யுதிஷ்டிரன் பெருந்துன்பத்தில் பீடிக்கப்பட்டிருந்தபோது, பீஷ்மருடன் சேர்ந்து நானும் சந்தர்ப்பத்திற்குத் தகுந்த புராணங்களைச் சொல்லி அவரது துயரைக் களைந்திருக்கிறேன். உயர்ந்த மனம் கொண்டவரும், இசைந்து கொடுப்பவருமான யுதிஷ்டிரன் நமது அரசராக இருந்தாலும், புராணங்கள் அனைத்தையும் அறிந்தவராக இருந்தாலும், எங்கள் வார்த்தைகளில் உரிய கவனத்தைச் செலுத்தினார்.(22) தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} வாய்மைக்கு மதிப்பளித்து, நன்றியுணர்வுடன், அறம்சார்ந்தவர்களாக இருப்பதால் அவரது அறமும், நல்ல குணமும், உறுதியான சக்தியும் எப்போதும் நிலைத்திருக்கும்.(23,24) ஓ! அர்ஜுனா, உனக்கு விருப்பமிருந்தால் உயர்ந்த மனம் கொண்ட அந்த இளவரசரிடம் {யுதிஷ்டிரரிடம்} சென்று, இந்த இடத்தைவிட்டுப் புறப்படும் என் நோக்கத்தை அவரிடம் சொல்வாயாக.(25)
நான் துவாராவதி நகரத்திற்குச் செல்வதைவிடு, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, எனக்கு மரணமே நேர்ந்தாலும் அவருக்கு விருப்பமில்லாத எதையும் செய்ய நான் விரும்பவில்லை {அவர் விரும்பாவிட்டால் துவாராவதி செல்ல மாட்டேன்}.(26) ஓ! பிருதையின் மகனே, குருவின் வழித்தோன்றலே, உனக்கு ஏற்புடையதையும் நல்லதையும் மட்டுமே செய்ய விரும்பி இப்போது ஓர் உண்மையைச் சொல்கிறேன். அதில் இரு பொருள் கொண்ட ஏதும் எந்த வகையிலும் இருக்காது. திருதராஷ்டிரர் மகனும், அவனுடைய படைகளும், தொண்டர்களும் கொல்லப்பட்ட பிறகும்,(27,28) மலைகள், காடுகள், வனங்கள், கடல்களைக் கச்சையாகக் கொண்ட பூமி மற்றும் பல்வேறு ரத்தினங்கள் நிறைந்திருக்கும் குரு மன்னனின் நாடு ஆகியவை தர்மனின் மகனுடைய {யுதிஷ்டிரருடைய} ஆளுகையின் கீழ் வந்துவிட்ட பிறகும், இனிமேலும் நான் இங்கிருக்க வேண்டிய தேவையில்லை. ஓ! பாரதக் குலத்தில் முதன்மையான இளவரசனே, அந்த அறம் சார்ந்த இளவரசர் {யுதிஷ்டிரர்}, தன் நாடாக உள்ள பூமி முழுவதையும் நீதியுடன் ஆண்டு,(29,30) உயர் ஆன்மாவைக் கொண்ட எண்ணற்ற சித்தர்களின் மதிப்புடன் கூடிய பாராட்டுகளைப் பெற்று, சபையில் உள்ள கட்டியங்கூறுவோரால் தன் புகழ் சொல்லப்பட்டுத் துதிக்கப்பெறட்டும்.(31)
ஓ! குரு குலத்தின் தலைவா {அர்ஜுனா}, குரு குலத்தைப் பெருமளவு உயர்த்தும் மன்னனின் {யுதிஷ்டிரரின்} முன்பு என்னுடன் வந்து துவாரகைக்குத் திரும்பும் என் நோக்கத்தைக் குறித்து அவருக்குச் சொல்வாயாக.(32) ஓ! பிருதையின் மகனே, குருக்களின் உயர் ஆன்ம மன்னர் யுதிஷ்டிரர் என்னிடம் எப்போதும் அன்பும் மதிப்பும் கொள்வதைப் போலவே, நான் என் உடலையும், என் வீட்டில் நான் கொண்டுள்ள செல்வமனைத்தையும் அவரது வசமே வைத்திருக்கிறேன் {அவருக்கே அர்ப்பணம் செய்திருக்கிறேன்}.(33) ஓ! இளவரசே, பார்த்தா (பிருதையின் மகனே), இந்தப் பூமியானது உனது ஆட்சியின் கீழும், சிறந்த குணத்தைக் கொண்டவரும், வழிபடத்தகுந்தவருமான யுதிஷ்டிரருடைய ஆட்சியின் கீழும் இருக்கும்போது, நான் உங்களிடம் கொண்ட அன்புக்காகத் தவிர நான் இங்கிருக்க வேண்டிய அவசியமே இல்லை" என்றான் {கிருஷ்ணன்}.(34)
ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, மீண்டும் மீண்டும் ஐயங்கொள்ளும் அர்ஜுனனிடம், உன்னத இதயம் கொண்ட ஜனார்த்தனன் இவ்வாறு கேட்டுக் கொண்ட போது, அவனுக்குரிய கௌரவங்கள் அனைத்தையும் அளித்த அவன், கவலை நிறைந்தவனாக, வெறுமனே "அவ்வாறே ஆகட்டும்" என்று சொன்னான்" {என்றார் வைசம்பாயனர்}.(35)
அஸ்வமேதபர்வம் பகுதி – 15ல் உள்ள சுலோகங்கள் : 35
ஆங்கிலத்தில் | In English |