Means for attaining emancipation! | Aswamedha-Parva-Section-19 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 04)
பதிவின் சுருக்கம் : முக்தியை அடையும் வழிமுறைகளைக் குறித்துக் காசியபருக்குச் சொன்ன சித்தர்; சித்தர் கூறியதை அர்ஜுனனிடம் முழுமையாகச் சொல்லி முடித்த கிருஷ்ணன்...
பிராமணர் {சித்தர் காசியபரிடம்}, "(அனைத்துப் பொருட்களின்) ஒரே கொள்ளிடத்தில் {பிரம்மத்தில்} ஈர்க்கப்பட்டவனும், அனைத்துப் பொருட்களுடனான தன் அடையாளத்தைக் குறித்த எண்ணத்தில் இருந்து விடுபட்டவனும், தன் இருப்பைக் குறித்து நினைப்பதையே நிறுத்தியவனுமான ஒருவன், {யோகத்தின் மூலம்} ஒன்றன்பின் ஒன்றாக இவற்றைப் படிப்படியாகக் கைவிட்டு தன் கட்டுகளைக் கடப்பதில் வெல்கிறான்[1].(1) அனைத்திற்கும் நண்பனும், அனைத்தையும் தாங்குபவனும் {பொறுத்துக் கொள்பவனும்}, அமைதியாக இருப்பவனும், தன் புலன்கள் அனைத்தையும் வென்றவனும், அச்சம் மற்றும் கோபமற்றவனும், ஆன்மக்கட்டுப்பாடு கொண்டவனுமான மனிதன் தன்னை விடுவித்துக் கொள்வதில் {முக்தி அடைவதில்} வெல்கிறான்.(2) தன்னைப் போலவே வேறு உயிரினங்கள் அனைத்துடனும் நடந்து கொள்பவனும், கட்டுப்பாடு, தூய்மை, பகட்டின்மை, மமதையின்மை ஆகியவற்றைக் கொண்டவனுமான ஒருவன் அனைத்திலிருந்தும் விடுதலை அடைந்தவனாகக் கருதப்படுகிறான்.(3) பிறப்பிறப்பு {ஜனனமரணம்}, இன்பதுன்பம், ஈட்டலிழத்தல் {லாபநஷ்டம்}, ஏற்புடைமை ஏற்பில்லாமை ஆகியவற்றைச் சமமாகக் காணும் ஒருவனும் விடுதலை {முக்தி} அடைகிறான்.(4) பிறர் பொருளை அபகரிக்க விரும்பாதவனும், எவரையும் அவமதிக்காதவனும், முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்தவனும், பற்றிலிருந்து விடுபட்ட ஆன்மாவைக் கொண்டவனுமான ஒருவன் அனைத்து வழியில் விடுதலை {முக்தி} அடைந்தவனாவான்.(5)
[1] "ஏகாயனம்’ என்பது அனைத்துப் பொருட்களின் கொள்ளிடமான பிரம்மமாகும். ’தூஷ்ணி’ என்பது அனைத்துப் பொருட்களுடனான தன்னுடைய அடையாளத்தைக் குறித்த நினைவைத் தக்க வைத்துக் கொள்ளாமல் என்று பொருள் படும். ’கிஞ்சிகசிந்தயன்’ என்பது, தன்னிருப்பை மறத்தலாகும். ’பூர்வம் பூரவம் பரித்யஜ்ய’ என்பது திரளானதைப் படிப்படியாக நுட்பதில் கலப்பதாகும், அதாவது யோகத்தில் அடுத்தடுத்த படிநிலைகளின் வழியாகப் பிரம்மத்தில் ஈர்க்கப்படுதல் ஆகும். நான் இதில் நீலகண்டரையே பின்பற்றுகிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "எவன் ஏகாந்த ஸ்தலத்தில் உட்கார்ந்து கொண்டு, பேசாமலும், ஒன்றையும் ஆலோசியாமலும் தன்முன் உள்ளதை விடுகிறானோ அவன் கர்மமற்றவனாவான் {பந்தத்திலிருந்து விடுபட்டவனாவான்}" என்று இருக்கிறது.
பகைவனோ, உறவினனோ, பிள்ளையோ இல்லாதவனும், அறம், பொருள் மற்றும் இன்பத்தைக் கைவிட்டவனும், ஆசை அல்லது பேராசையில் இருந்து விடுபட்டவனுமான ஒருவன் விடுதலை {முக்தி} அடைந்தவனாவான்.(6) தகுதியையோ {புண்ணியத்தையோ}, குறையையோ {பாவத்தையோ} ஈட்டாதவனும், முற்பிறவிகளில் குவிக்கப்பட்ட தகுதிகள் {புண்ணியங்கள்} மற்றும் குறைகளை {பாவங்களைக்} கைவிட்டவனும், அமைதியான ஆன்மாவை அடைய தன்னுடலின் பூதங்களை வீணாக்குபவனும், முரண்பட்ட இரட்டைகள் {இருமைகள்} அனைத்தையும் கடந்தவனுமான ஒருவன் விடுதலை {முக்தி} அடைகிறான்.(7) செயல்கள் அனைத்தையும் தவிர்ப்பவனும், ஆசை அல்லது பேராசையில் இருந்து விடுபட்டவனும், சகிப்புத் தன்மை கொண்டதாகவோ, பிறப்பு, இறப்பு மற்றும் முதுமையை எப்போதும் கொண்ட அஸ்வத {அரச} மரத்தைப் போலவோ அண்டத்தைப் பார்ப்பவனும்,(8) துறவில் நிலைத்த புத்தியைக் கொண்டவனும், தன் குற்றங்களிலேயே எப்போதும் கண்களைக் கொண்டவனுமான ஒருவன் தன்னைக் கட்டியிருக்கும் கட்டுகளில் இருந்து விரைவாகத் தன்னை விடுவித்துக் கொள்வதில் {முக்தி அடைவதில்} வெற்றி அடைகிறான்[2].(9) மணம் {கந்தம்}, சுவை {ரஸம்}, ஊறு {ஸ்பர்சம் / தீண்டல்}, ஒலி {சப்தம்}, உடைமைகள் {பந்தம்}, பார்வை {ரூபம் / வடிவம்} அற்றதும், அறிய முடியாததுமாகத் தன் ஆன்மாவைக் காண்பவன் விடுதலை {முக்தி} அடைகிறான் {மோக்ஷமடைகிறான்}[3].(10)
[2] "8ம் ஸ்லோகத்தின் இரண்டாவது வரியில் வரும் முதல் பாதிப் பகுதி வங்க உரைகளில் வேறு வகையில் உள்ளது. "அஸ்வஸ்தமவசம்முதம்" என்பது சுகமோ, மகிழ்ச்சியோ இல்லாமல் அடிமைத்தனம் மற்றும் அறியாமையுடன் கூடியது என்ற பொருளைத் தரும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "கர்மங்களும், ஆசையுமற்றவனும், உலகத்தை நிலையற்றதும், தன் நிலைமையிலாரததும் எப்பொழுதும் தன் வசமற்றதும், பிறப்பும், மூப்பும், மரணமுமுள்ளதுமாகப் பார்ப்பவனும், எப்பொழுதும் வைராக்யமுள்ள புத்தியுள்ளவனும் தன்னிடத்திலுள்ள தோஷங்களை நன்றாகப் பார்ப்பவனுமாகச் சீக்கிரத்தில் ஆத்மாவைப் பந்தத்தினின்று விடுபட்டதாகச் செய்கிறான்" என்றிருக்கிறது.[3] "இவையற்ற ஆன்மா சின்மாத்திரையாகிறது. அஃதாவது அறியாமையாலோ உணராமையாலோ வெகுவாகத் தூண்டப்படும் குணங்கள் இல்லாத தூய சித் ஆகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஐம்பூதங்களின் குணங்களற்றதாகவும், வடிவமும், காரணமும் அற்றதாகவும், குணங்களை அனுபவித்தாலும் அவையற்றதாகவும் தன் ஆன்மாவைக் காணும் ஒருவன் விடுதலை {முக்தி} அடைகிறான்[4].(11) உடல் மற்றும் மனம் தொடர்பான காரியங்கள் அனைத்தையும் புத்தியின் துணையுடன் கைவிடும் ஒருவன், விறகற்ற நெருப்பைப் போல {தனக்கெனத்} தனித்த இருப்பற்ற நிலையைப் படிப்படியாக அடைகிறான்.(12) அனைத்து மனப்பதிவுகளில் {எண்ணங்களில்} இருந்தும் விடுபட்டவனும், முரண்பட்ட இரட்டைகள் {இருமைகள்} அனைத்தையும் கடந்தவனும், உடைமைகளேதும் அற்றவனும், தவத்தின் வழிகாட்டுதலின்படி தன் புலன்கள் அனைத்தையும் பயன்படுத்துபவனுமான ஒருவன் விடுதலை {முக்தி} அடைகிறான்[5].(13) மனப்பதிவுகள் அனைத்தில் இருந்தும் விடுபட்ட ஒருவன், நித்தியமானதும், மேலானதும், அமைதி நிறைந்ததும், நிலையானதும், நீடித்ததும், அழிவற்றதுமான பிரம்மத்தை அடைகிறான்.(14) எதைக் காட்டிலும் மேன்மையானது வேறேதும் இல்லையோ அந்த யோக அறிவியலையும் {யோக சாஸ்திரத்தையும்}, தியானத்தின் மூலம் யோகிகள் எவ்வாறு ஆன்மாவை மிகச்சரியாகக் காண்கிறார்கள் என்பதையும் இனி உனக்குச் சொல்லப் போகிறேன்[6].(15)
[3] "வடிவமற்றது என்று சொல்வது நுட்பமானது என்ற பொருளைத் தரும். காரணமற்றது என்பது படைக்கப்படாதது, அல்லது நிலையான பிரம்மத்துடன் அடையாளங்காணப்படுவது என்ற பொருளைத் தரும். குணங்களை அனுபவித்தாலும் அவற்றில் இருந்து தொடர்பறுந்து இருத்தல் முக்தி நிலையைக் குறிப்பிடும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[4] "பழைமைவாத உரையாசிரியர்களின் கூற்றுப்படி நிர்வாணம் என்பது அண்டந்தழுவிய நித்திய பிரம்மத்திற்குள் ஈர்க்கப்படுவதன் மூலம் தனிப்பட்ட இருப்பை அழித்துக் கொள்வதைக் குறிக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[5] "புறப்பொருட்களால் உண்டாக்கப்படும் மனப்பதிவுகள் {எண்ணங்கள்} தியான எண்ணங்களால் அழிவை அடைகின்றன. மேலும் பின்னதும் {தியான எண்ணங்கள்} பிரம்மத்திற்குள் ஈர்க்கப்படும் நிலை ஏற்படும் முன்னர் அழிவடைய வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[6] "சித்தம் என்பது அறியாமையால் உண்டாகும் பிழைகள் {குற்றங்கள்} அற்றது என விளக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "உலகத்தில் யோகிகள் எதனை அறிந்து தம்மை ஸித்தர்களாகப் பார்க்கிறார்களோ மிகச் சிறந்ததான அந்த யோகசாஸ்திரத்தை இனி மேல் சொல்லுகிறேன்" என்றிருக்கிறது.
அது தொடர்பான வழிமுறைகளை நான் முறையாக அறிவிக்கிறேன். உடலுக்குள் உள்ள ஆன்மாவை எவற்றின் வழியாகச் செலுத்துவதன் மூலம் தொடக்கமும், முடிவுமற்ற ஒன்றை ஒருவனால் காண முடியுமோ அந்தக் கதவுகளைக் குறித்து என்னிடம் இருந்து தெரிந்து கொள்வாயாக.(16) புலன்களை அவற்றுக்குரிய பொருட்களில் {புலன்நுகர் பொருட்களில்} இருந்து விலக்கும் ஒருவன், ஆத்மாவில் தன் மனத்தை நிலைக்கச் செய்ய வேண்டும்; அதற்கு முன்பே அவன் கடுமையான தவங்களைச் செய்து, விடுதலைக்கு வழிவகுக்கும் மனக்குவிப்பைப் பயில வேண்டும்[7].(17) எப்போதும் மனச்செறிவாக்கத்தைப் பயில்பவனும், தவங்களை நோற்பவனும், புத்தியுடன் கூடியவனும், கல்விமானுமான ஒரு பிராமணன், உடலுக்குள் ஆன்மாவைக் காணச் செய்யும் யோக அறிவியலின் விதிகளைப் பின்பற்ற வேண்டும்.(18) முழுமையான தியானத்தை வழக்கமாகக் கொண்ட அந்த நல்லோன் ஆன்மாவில் மனத்தைச் செறிவடையச் செய்வதில் வென்றால், தன் ஆன்மாவிலேயே பரமாத்மாவைக் காண்பான்.(19) தற்கட்டுப்பாட்டுடனும், எப்போதும் செறிவுடனும் {மனக்குவிப்புடனும்}, தன் புலன்கள் அனைத்தையும் வென்ற நிலையிலும், தூய்மையான ஆன்மாவுடனும் கூடிய ஒரு மனிதன், அத்தகைய முழுமையான மனச்செறிவின் விளைவால் ஆன்மாவைக் கொண்டே ஆன்மாவைக் காண்பதில் வெல்வான்.(20)
[7] "ஆன்மாவில் மனத்தை நிலைக்கச் செய்வது என்பதே விடுதலைக்கு வழிவகுக்கும் அந்த மனக்குவிப்பாகும். முன்பே கடுந்தவங்களைச் செய்வதன் விளைவாகவே இது சாத்தியப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "இந்திரியங்களை (விஷயங்களிலிருந்து) திருப்பி மனத்தை ஆத்மாவினிடத்தில் நிலைநிறுத்த வேண்டும். முந்திக் கடுந்தவம் புரிந்து பிறகு மோக்ஷயோகத்தை அனுஷ்டிக்க வேண்டும்" என்றிருக்கிறது.
எவனோ ஒருவனைக் கனவில் காணும் ஒருவன் விழித்துக் கொண்ட பிறகு, "இவன் அவனே" என அடையாளம் கண்டு கொள்வதைப் போலவே ஆழ்ந்த தியானத்தின் சமாதி நிலையில் பரமாத்மாவைக் காணும் நல்லோன், அந்தச் சமாதி நிலையில் இருந்து விழித்துக் கொண்ட பிறகு {மேற்கண்டவாறே} அடையாளம் காண்கிறான்[8].(21) முஞ்சப் புல்லில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பிறகு ஈர்க்கைக் காணும் ஒருவனைப் போலவே, உடலில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஆன்மாவையே ஒரு யோகி காண்கிறான்.(22) உடலானது முஞ்சம் என்றழைக்கப் படுகிறது, ஈர்க்கானது ஆன்மாவாகவும் சொல்லப்படுகிறது. இந்தச் சிறந்த எடுத்துக்காட்டானது யோகத்தை அறிந்த மனிதர்களால் முன்வைக்கப்படுகிறது.(23) உடலைச் சுமப்பவன் யோகத்தில் போதுமான அளவுக்கு ஆன்மாவைக் காணும்போது, அவன் தனக்கு மேல் எவனும் இல்லாதவனாகவும், மூவுலகங்களுக்கும் தலைவனாகவும் ஆகிறான்[9].(24) அவன் தன் விருப்பத்தின் பேரில் பல்வேறு உடல்களை ஏற்கவல்லவனாவதில் வெல்கிறான். முதுமை மற்றும் மரணத்தைத் தவிர்க்கும் அவன் வருந்துவதோ, பெருங்களிப்படைவதோ கிடையாது.(25)
[8] "இந்தச் சுலோகத்தைப் புரிந்து கொள்வதற்காகச் சற்றே விரிவாக்கிப் பார்க்கிறேன். பொருள் இதுதான்: சமாதி நிலையில் பரமாத்மாவைக் கண்ட பிறகு அதிலிருந்து விழிக்கும் ஒருவன் அண்டத்தில் பரமாத்மாவைக் காண்கிறான். அஃதாவது, அண்டமானது பரமாத்மாவைத் தவிர வேறேதும் இல்லை என்று கருதுகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[9] "’தனக்கு மேம்பட்ட எவனும் இல்லாதவனாகவும், அண்டத்தின் தலைவனே அவனுக்கு மேம்பட்டவன் இல்லை என்ற நிலையை அடைந்தவனாகவும் ஆகிறான்’ என்றும் பொருள் கொள்ளலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
யோகத்தில் மனங்குவிந்த தற்கட்டுப்பாடுடைய மனிதன், தேவர்களுக்கான தெய்வத்தன்மையை (தனக்காக) உண்டாக்கிக் கொள்வான். அவன், நிலையற்றதாக இருக்கும் தன் உடலைக் கைவிட்டு மாறாவியல்புடைய பிரம்மத்தை அடைகிறான்[10].(26) உயிரினங்கள் (தன் கண்களுக்கு முன்பே) அழிவடையும்போதும் அவனுக்குள் அச்சம் எழுவதில்லை. உயிரினங்கள் அனைத்தும் பீடிக்கப்படும்போதும் எவனாலும் அவன் ஒருபோதும் பீடிக்கப்படுவதில்லை.(27) ஆசையற்றவனும், அமைதியான மனம் கொண்டவனுமான யோகியானவன், துன்பம், கவலை, அச்சம் ஆகியவற்றாலும், பற்றும் மற்றும் அன்பிலிருந்து உண்டாகும் பயங்கர விளைவுகளாலும் ஒருபோதும் நிலைகுலைவதில்லை.(28) அவனை ஆயுதங்கள் துளைப்பதில்லை; அவனுக்கு மரணமுமில்லை. அவனை விட மகிழ்ச்சியான வேறு எவனையும் இவ்வுலகில் வேறெங்கும் காணமுடியாது.(29) போதுமான அளவுக்குத் தன் ஆன்மாவைச் செறிவடையச் செய்யும் அவன் நிலையாகத் தன்னைச் சார்ந்தே வாழ்கிறான். அவன், முதுமை, துன்பம் மற்றும் இன்பத்தை விலக்கி சுகமாக உறங்குகிறான்.(30) தனது மனித உடலைக் கைவிடும் அவன் தன் விருப்பத்தின் பேரில் (வேறு) வடிவங்களை ஏற்கிறான். ஒருவன் யோகம் அளிக்கும் கோன்மையை அனுபவிக்கும்போது, யோக அர்ப்பணிப்பில் இருந்து அவன் ஒருபோதும் வீழ்ந்துவிடக்கூடாது[11].(31) ஒருவன் யோகத்தில் போதுமான அர்ப்பணிப்பைச் செலுத்தித் தனக்குள்ளே ஆன்மாவைக் கண்டபிறகு, அவன் நூறு வேள்விகளைச் செய்தவனையும் {இந்திரனையும்} பொருட்படுத்தமாட்டான்[12].(32)
[10] "முதல் வரி ஐயம் நிறைந்ததாக உள்ளது. அத்தகைய மனிதன் தேவர்களுக்கே தேவனாவான் என்று நான் புரிந்து கொள்கிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "இந்திரிய ஜயமுள்ள யோகியானவன் தேவர்களுக்கும் தேவனாயிருக்கும் தன்மையைப் பெறுவான்; நிலையற்றதான சரீரத்தைவிட்டு அழிவற்ற பிரம்மத்தை அடைவான்" என்றிருக்கிறது.[11] "இரண்டாவது வரிக்குப் பொருள் கொள்வதில் நான் நீலகண்டரைப் பின்பற்றியிருக்கிறேன். யோகம் தரும் பலத்தில் மயங்கி ஒருவன் யோகப் பயிற்சியில் இருந்து ஒருபோதும் வீழ்ந்துவிடக்கூடாது. "செறிவேற்றம் பயிலும் ஒருவன் ஒருபோதும் மனச் சோர்வடையக்கூடாது" எனத் தெலங்க் அவர்கள் பொருள் கொள்கிறார். இதில் நீலகண்டர் சொல்வதே சரியென நான் கருதுகிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[12] "யோகத்தில் அதிக முன்னேற்றம் அடையாத யோகியே இன்ப விருப்பத்தில் மயக்கமடைவான் என்பது குறிப்பிடப்படுகிறது என நீலகண்டர் சொல்கிறார். எனினும், போதுமான அளவில் யோகத்தில் அர்ப்பணிப்புள்ள ஒருவன், பேரரசன் அலக்சேண்டரைப் புறக்கணித்த டையோஜினீஸ் போல, இந்திரனையும் பொருட்படுத்தமாட்டான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
முழுமையாகத் தியானிப்பதையே வழக்கமாகக் கொண்ட ஒருவன் யோகத்தை அடைவதில் எவ்வாறு வெல்கிறான் என்பதை இனி சொல்லப் போகிறேன் கேட்பாயாக. சூரியனுக்குப் பின்னால் உள்ள திசைப்புள்ளியின் நினைப்பில் மனத்தை நிலைக்கச் செய்து, தான் வாழும் மாளிகைக்கு வெளியே அல்லாமல் உள்ளேயே ஒருவன் வாழ வேண்டும். அந்த மாளிகைக்குள் வசித்துக் கொண்டே மனமானது தன் அக மற்றும் புற (இயக்கங்கள்) வாயிலாகத் தான் வாசிக்கும் அந்தக் குறிப்பிட்ட அறையைப் பார்க்க வேண்டும். ஆழமான தியானத்தில் ஒருவன் (அண்டத்தின் ஆன்மாவான பிரம்மத்தை) அனைத்தையும் பார்க்கும்போது, அந்த மனம் வசிப்பதற்குப் பிரம்மத்தைத் தவிரப் புறப்பொருள் வேறேதும் இல்லை. ஆள் அரவமற்ற காட்டில் புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு,(33-36) மனத்தை அவற்றிலேயே நிலைக்கச் செய்யும் ஒருவன், தனது உடலுக்குப் புறத்திலேயும், அகத்திலேயும் உள்ள அனைத்தையும் குறித்துத் தியானிக்க வேண்டும். அவன் தனது பற்கள், மேல்வாய், நாவு, தொண்டை, கழுத்து போன்றவற்றிலும், இதயம் மற்றும் இதயத்தின் நாடிகள் ஆகியவற்றிலும் {மனத்தைச் செலுத்தி} தியானம் செய்ய வேண்டும்"[13].(37)
[13] "நீலகண்டரின் ஊகங்களைத் தவிர்த்து, அவரது வழிகாட்டுதலின் படியே 33 முதல் 37ம் ஸ்லோகம் வரை நான் சொல்ல முயன்றிருக்கிறேன். இந்த வாக்கியம் யோகப் புதிர்கள் {ரகசியங்கள்} தொடர்புடையதாகும். 33ம் ஸ்லோகத்தின் இரண்டாம் வரியில் "சூரியனுக்குப்பின்னால் உள்ள திசை" என்பது சுருதிகளின் அடிப்படையிலான வேதாந்தத்தில் விதிக்கப்பட்டுள்ள போதனைகள் என்று பொருள் கொள்ளப்பட வேண்டும். புரம் என்பது நகரம் அல்லது மாளிகையைக் குறிக்கும். ஆனால் இங்கே உடலைக் குறிக்கிறது. அவஸ்தை என்பது மூலாதாரம் என்றழைக்கப்படும் நரம்பு மண்டல மையமான சக்கரத்தைக் குறிக்கிறது. பிரம்மம் உணரப்படும் வேளையில், மனம் வசிக்கக்கூடிய பிரம்மத்தைத் தவிர அண்டம் முழுவதிலும் பிரம்மத்தைத் தவிர வேறெதுவும் இல்லை என்று தோன்ற வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "வேதாந்தஸ்ரவணம் செய்து அவ்வுபதேசத்தை ஆலோசித்து எந்தச் சரீரத்தில் வசிக்கிறானோ அந்தச் சரீரத்திற்குள் மனத்தை நிறுத்த வேண்டும்; வெளியில் செலுத்தக் கூடாது. சரீரத்தினுள்ளிருந்து கொண்டு வாஸம் செய்வதற்கேற்ற மூலாதாரம் முதலான சக்ரங்களுள் ஒன்றில் கர்மேந்திரியங்களுடனும், ஞானேந்திரியங்களுடனும் மனத்தை நிலை நிறுத்த வேண்டும். (அந்தச்) சக்ரத்தில் தியானம் செய்து எல்லாமாயிருக்கும் பிரம்மத்தை அவன் எந்தக் காலத்தில் பார்க்கிறானோ அந்தக் காலத்தில் அவனுடைய மனமும் வெளியிலுள்ள ஒன்றையும் அறிகிறதில்லை. ஜனங்களில்லாத வனத்தில் சப்தமில்லாத இடத்தில் இந்திரியங்களின் கூட்டத்தை நன்றாக அடக்கிச் சரீரத்திற்கு வெளியிலும் உள்ளிலும் நிறைந்திருக்கும் பிரம்மத்தை ஒருவழிப்பட்ட மனமுள்ளவனாக இருந்து கொண்டு தியானம் செய்ய வேண்டும். பற்களிலும், தாலுவிலும், நாவிலும், நாவின் கீழ்க்கப்பக்கத்திலும், கண்டத்திலும், ஹிருதயத்திலும், ஹிருதயபந்தனத்திலும் தியானம் செய்ய வேண்டும்" என்றிருக்கிறது.
பிராமணர் {சித்தர்} தொடர்ந்தார், "இவ்வாறு நான் சொன்னதும், ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, நுண்ணறிவுமிக்க அந்தச் சீடன் {காசியபன்}, விளக்குவதற்குக் கடினமான இந்த விடுதலை அறம் {மோக்ஷதர்மம்} குறித்து மீண்டும் என்னிடம் கேட்டான்.(38) அவன் {காசியபன்}, "காலாகாலம் உண்ணப்படும் இந்த உணவானது வயிற்றுக்குள் செரிப்பது எவ்வாறு? அது சாறாக மாறுவது எவ்வாறு? மேலமும் அது குருதியாக மாறுவது எவ்வாறு?(39) சதை, மஜ்ஜை, நரம்புகள் மற்றும் எலும்புகள் ஆகியவற்றை அது வளர்ப்பது எவ்வாறு? உடல் படைத்த உயிரினங்களில் இருக்கும் உறுப்புகள் வளர்வது எவ்வாறு?(40) வளரும் மனிதனிடம் பலம் வளர்வது எவ்வாறு? ஊட்டச்சத்தற்றத் தனிமங்கள் அனைத்தும், {மலம் உள்ளிட்ட} மாசுகள் அனைத்தும் தனித்தனியாக வெளியேறுவது எவ்வாறு?(41) மூச்சை உள்ளே இழுப்பதும், வெளியே விடுவதும் நேர்வது எவ்வாறு? ஆன்மாவானது, உடலுக்குள் குறிப்பிட்ட எந்த இருப்பிடத்தில் வசிக்கிறது?(42)
ஜீவன் முயற்சியுள்ளவனாக உடலைத் தாங்குவது எவ்வாறு? (ஒரு குறிப்பிட உடலை விட்டகன்ற பிறகு) அவன் {ஜீவன்} மீண்டும் வசிக்கும் உடல் எந்த நிறத்தை என்ன வகையைக் கொண்டதாக இருக்கும்?(43) ஓ! புனிதமானவரே, ஓ! பாவமற்றவரே, இவை யாவற்றையும் எனக்கு மிகச் சரியாகச் சொல்வதே உமக்குத் தகும்" என்று கேட்டான் {சீடன் காசியபன்}. ஓ! மாதவா, இவ்வாறே கல்விமானான அந்தப் பிராமணனால் {காசியபனால்} நான் கேள்வி கேட்கப்பட்டேன்.(44) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! பகைவர் அனைவரையும் தண்டிப்பவனே நான் (என் குருவிடம் இருந்து) கேட்டிருக்கும் வகையிலேயே அவனுக்கு மறுமொழி கூறினே1ன். ஒருவன் தன் அறையில் வைத்த ஏதோ ஒரு மதிப்புமிக்கப் பொருளில் தன் மனத்தை வைத்திருப்பதைப் போலவே,(45) புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தித் தன் உடலில் மனத்தை நிறுத்தி, வழிப்புணர்வின்மைகள் அனைத்தையும் தவிர்த்து ஆன்மாவை நாட வேண்டும்.(46) இவ்வழியில் எப்போதும் விடாமுயற்சியுடன் தன்னில் நிறைவடையும் ஒருவன், குறுகிய காலத்திற்குள் பிரம்மத்தை ஆடைந்து, அதன் மூலம் அவன் பிரதானத்தை அறிகிறான்[14].(47)
[14] "பிரதானம் என்பது, படைக்கப்பட்ட மொத்த அண்டத்தின் வடிவம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அவன் கண்களுக்குப் புலப்படுவதில்லை; அதே போலப் புலன்கள் அனைத்திற்கும் புலப்படுவதில்லை. மனம் எனும் விளக்கால் மட்டுமே பேரான்மாவைக் காண முடியும்.(48) அவன் அனைத்துப் பக்கங்களிலும் கைகளையும், கால்களையும் கொண்டவனாகிறான்; அனைத்துப் புறங்களிலும் காதுகளைக் கொண்டவனாகிறான்; உலகில் உள்ள அனைத்துப் பொருட்களிலும் அவன் படர்ந்தூடுருவி வசிக்கிறான்[15].(49) ஜீவனானவன், (ஞானம் வாய்க்கும்போது, முஞ்சப் புல்லில் இருந்து ஈர்க்கைக் காண்பதைப் போல) உடலில் இருந்து ஆன்மாவைத் தனியாகக் காண்கிறான். உடலில் மனத்தைத் தாங்குவதன் மூலம் உடலுடன் கூடிய பிரம்மத்தைக் கைவிட்டு, குணங்கள் அனைத்திலும் இருந்து விடுபட்ட பிரம்மத்தை அவன் காண்கிறான்[16].(50) அவன் ஆன்மாவை அந்நேரம் உள்ளபடியே மனத்தில் கண்டு புன்னகைக்கிறான். அந்தப் பிரம்மத்தைச் சார்ந்து அவன் என்னில்[17] விடுதலையை {முக்தியை} அடைகிறான்.(51) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவனே {காசியபா}, இந்தப் புதிர்கள் {ரகசியங்கள்} அனைத்தும் இப்போது என்னால் அறிவிக்கப்பட்டன. நான் இவ்விடத்தைவிட்டு அகல உன் அனுமதியை வினவுகிறேன். நீயும் விரும்பிய இடத்திற்குச் செல்வாயாக.(52) ஓ! கிருஷ்ணா, அந்தச் சந்தர்ப்பத்தில் என்னால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், கடுந்தவங்களைக் கொண்டவனும், கடும் நோன்புகளைக் கொண்ட பிராமணனுமான என் சீடன் {காசியபன்} தான் விரும்பிய இடத்திற்குச் சென்றான்" என்றார் {சித்தர்}".(53)
[15] "ஆன்ம வடிவம் குறித்த கேள்விக்கு இது பதிலளிப்பதாக நீலகண்டர் சொல்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[16] "நான் நீலகண்டரின் விளக்கத்தைப் பின்பற்றியே இந்தச் சுலோகத்தைச் சொல்கிறேன். 50ம் ஸ்லோகத்தின் இரண்டாவது வரியானது குணங்களுடன் கூடிய பிரம்மத்தில் இருந்து குணங்கள் ஏதுமற்ற பிரம்மத்தை ஒரு யோகி அடைவதைக் குறிக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஜீவனானவன் சரீரத்தைக் காட்டிலும் வேறான ஆத்மாவை நன்றாகத் தெரிந்து கொண்டு அவ்விதமான தன் சரீரத்தை (ப்பற்றிய அபிமானத்தை) விட்டுச் சுத்தஸ்வரூபியான பிரம்மத்தை அடைய வேண்டும்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "’யோகியான ஜீவன் (மரணக் காலத்தில்) சரீரத்திலிருந்து தான் வெளிப்படுவதை அறிவான். (அப்பொழுது) அவன் அந்தத் தேகத்தை விட்டுவிட்டுப் பிரம்மத்தை அடைவான்’ என்றும் கொள்ளலாம்" என்றிருக்கிறது.[17] "பேசுபவர் கிருஷ்ணனிடம் வந்துள்ள இருபிறப்பாள விருந்தினராவார். அந்த விருந்தினரின் வார்த்தைகளைக் கிருஷ்ணனே மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த ஸ்லோகத்தில், கிருஷ்ணன் தான் மற்றொருவரின் வார்த்தைகளை வெறுமனே உரைப்பதை மறந்து, முக்தி அடைவதற்கு ஒருவன் கலக்க வேண்டிய பரப்பிரம்மமாகத் தன்னையே குறிப்பிடுகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அந்தப் பிரம்மத்தை இவ்விதம் ஆஸ்ரயித்துப் பிறகு மோக்ஷமடைகிறான்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "’மயி’ {என்னில்} என்னும் சொல் விடப்பட்டது" என்றிருக்கிறது.
வாசுதேவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்} தொடர்ந்தான், "ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, அந்தச் சந்தர்ப்பத்தில் இந்த வார்த்தைகளை என்னிடம் சொன்ன அந்தப் பிராமணர்களில் சிறந்தவர், விடுதலை அறத்தை {மோக்ஷதர்மத்தை} முறையாக என்னிடம் சொல்லிவிட்டு அங்கேயே அப்போதே மறைந்து போனார்.(54) ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, நீ முழுமையாக உன் மனத்தைச் செலுத்தி இந்த உரையாடலைக் கேட்டாயா? நீ உனது தேரில் இருந்த போது இதையே {இக்கருத்துகளையே} நீ கேட்டாய்.(55) ஓ! பிருதையின் மகனே, குழம்பிய புத்தியைக் கொண்ட, அல்லது கல்வியின் மூலம் எந்த ஞானத்தையும் அடையாத, அல்லது தன் உடலுக்குப் பொருந்தாத உணவை உண்ணும், அல்லது தூய்மையடையாத ஆன்மாவைக் கொண்ட ஒருவனால் இதைப் புரிந்து கொள்வது மிகக் கடினம் என்பது என் கருத்தாகும்[18].(56)
[18] "இந்த ஸ்லோகத்தின் இரண்டாவது வரி வெவ்வேறு உரைகளில் வெவ்வேறு வகையில் உரைக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பார்த்த! வேறு ஞாபகமுள்ளவனால் இது தெரிந்து கொள்ள முடியாததென்று நான் எண்ணுகிறேன். (வேறு விஷயத்தில்) பற்றுதலற்றவனும், பரிசுத்தமான சித்தமுள்ளவனுமான மனிதனால் தெரிந்து கொள்ளத்தக்கது" என்றிருக்கிறது.
ஓ! பாரதக் குலத்தின் தலைவா, தேவர்களுக்கு மத்தியில் பெரும்புதிராக {ரகஸ்யமாக} இருப்பது (உனக்கு) அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஓ! பிருதையின் மகனே, இந்த உலகத்தில் உள்ள மனிதனால் எந்த இடத்திலோ, எந்த நேரத்திலோ இது கேட்கப்பட்டதில்லை.(57) ஓ! பாவமற்றவனே, உன்னைத் தவிர வேறு எவனும் இதைக் கேட்கத் தகுந்தவனல்ல. இந்நேரத்தில், குழம்பிய உள் ஆன்மாவைக் கொண்ட ஒருவனால் இஃதை எளிதாகப் புரிந்துகொள்ள இயலாது.(58) ஓ! குந்தியின் மகனே, தேவர்களின் உலகமானது, செயலறத்தைப் பின்பற்றுபவர்களால் {புண்ணியக் கர்மங்களைச் செய்தவர்களால்} நிறைந்திருக்கிறது. {மனிதன் தன்} இறக்கக் கூடிய உடல் வடிவத்தை (செயல்தவிர்க்கும் அறத்தைப் பயில்வதன் மூலம்) விடுவது தேவர்களுக்கு ஏற்புடையதல்ல[19].(59) ஓ! பிருதையின் மகனே, ஒருவன் தன் உடலைக் கைவிடுவதன் மூலம் இறவா நிலையை அடைந்து எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் நித்திய பிரம்ம நிலையே அந்த உயர்ந்த இலக்காகும்.(60) பாவப் பிறவிகளான பெண்கள், வைசியர்கள், சூத்திரர்களும் கூட இவ்வறத்தைப் பின்பற்றுவதன் மூலம் அந்த உயர்ந்த இலக்கை அடைகிறார்கள்.(60) அவ்வாறிருக்கையில், ஓ! பிருதையின் மகனே, பெருங்கல்வி கற்றவர்களும், தங்கள் வகைக்கான கடமைகளில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவர்களுமான பிராமணர்களையும், க்ஷத்திரியர்களையும் குறித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது?[20](62)
[19] "வேள்விகள், அற நோன்புகள் முதலிய பிரவிருத்தி அல்லது செயலறத்தைப் பின்பற்றுவோருக்கான வெகுமதியே சொர்க்கமாகும். எனினும், நிவிருத்தி, அல்லது செயல்தவிர்க்கும் அறத்தைப் பின்பற்றுவோர், ஞானப்பாதையை அடைந்து முக்தியை அடைகிறார்கள். தேவர்கள் முன்னவர்களிடம் இருந்தே தங்கள் வாழ்வாதாரத்தை அடைகின்றனர். எனவே அவர்கள் தேவர்களைவிட உயர்ந்தவர்களாக முக்தி நிலையை அடையும் பின்னவர்களிடம் அவர்கள் பொறாமை கொள்கின்றனர்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "மனிதர்கள் தமக்கு மேலிருப்பதென்னும் இது தேவர்களுக்கு இஷ்டமாக இருக்கவில்லை" என்றிருக்கிறது.[20] கும்பகோணம் பதிப்பில், "இழிவான ஜாதியில் பிறந்தவர்களாயிருந்தாலும், ஸ்திரீகளாயிருந்தாலும், வைஸ்யர்களாயிருந்தாலும், சூத்திரர்களாயிருந்தாலும் (ஆத்மதரிசனமென்னும்) இந்தத் தர்மத்தை அடைந்தால் உத்தம கதியை அடைவார்கள். பார்த்த! பல சாஸ்திரங்களைக் கற்றவர்களும் தமக்குரிய தர்மங்களில் பற்றுதலுள்ளவர்களும், பிரம்மலோகத்தை உயர்ந்த கதியாகக் கொண்டவர்களுமான பிராமணர்களும், க்ஷத்திரியர்களும் உத்தம கதியை அடைவார்களென்பதில் என்ன ஸந்தேஹம்?" என்றிருக்கிறது.
இது {இவ்வறமானது} (சார்ந்திருக்கும்) காரணங்கள்; இஃதை அடைவதற்குரிய வழிமுறைகள்; அதனை முழுமையான அடைவது {சித்தியடைவது} மற்றும் விடுதலை {முக்தி} என்ற பயன் மற்றும் துன்பம் சார்ந்த உண்மைகளில் உறுதியடைதல் ஆகியற்றுடன் விதிக்கப்பட்டிருக்கிறது.(63) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, இதைவிடப் பெரிதான மகிழ்ச்சி நிறைந்தது வேறொன்றுமில்லை. ஓ! பாண்டுவின் மகனே, புத்தி, நம்பிக்கை, ஆற்றலுடன் கூடியவனும், இறக்கக்கூடியவனுமான மனிதன், உலகத்தால் உறுதியென {முக்கியமானதெனக்} கருதப்படுவதை உறுதியற்றதெனக் கைவிட்டு, இந்த வழிமுறைகளின் மூலம் குறுகிய காலத்திலேயே பரம நிலையை அடைவதில் வெல்கிறான்[21].(64,65) இதைவிட உயர்ந்தது வேறொன்றுமில்லை என்பது மட்டுமே சொல்லக்கூடியது. ஓ பிருதையின் மகனே, ஆறு மாத காலம் தொடர் பயிற்சியில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் ஒருவனிடம் யோகம் நிகழ்கிறது" {என்றான் கிருஷ்ணன்}.(66)
[21] கும்பகோணம் பதிப்பில், "பரதஸ்ரேஷ்டனே! இதனிலும் மேலான ஸுகம் வேறொன்றுமில்லை. பாண்டவ! (நீ இதை) ஸ்ரத்தையும், உறுதியுமுள்ளவனாகக் கேட்டாய். எந்த மனிதன் உலகத்தில் பொன், வெள்ளி முதலிய ஸாரமான பொருள்களைப் புல் பூண்டு முதலிய இழிவான பொருள்களைப் போல விட்டுவிடுகிறானோ அவன் இந்த உபாயங்களால் சீக்கிரமாக உயர்ந்த கதியை அடைகிறான்" என்றிருக்கிறது.
அஸ்வமேதபர்வம் பகுதி – 19ல் உள்ள சுலோகங்கள் : 66
ஆங்கிலத்தில் | In English |