Sevenfold creation! | Aswamedha-Parva-Section-20 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 05)
பதிவின் சுருக்கம் : பூதங்கள், பிராணன் முதலியவற்றைக் குறித்து ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் நடந்த உரையாடலை அர்ஜுனனுக்குச் சொன்ன கிருஷ்ணன்...
வாசுதேவன் {அர்ஜுனனிடம்}, "ஓ! பிருதையின் மகனே, இது தொடர்பாகப் பழங்கதையில் ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(1) ஒரு குறிப்பிட்ட பிராமணரின் மனைவியானவள், அனைத்து வகை ஞானவிஞ்ஞானங்களில் முழுத் தேர்ச்சியடைந்தவரும், தனியாக அமர்ந்திருந்தவரும், தன் கணவருமான அந்தப் பிராமணரைக் கண்டு, அவரிடம்,(2) "(அறச்) செயல்கள் அனைத்தையும் கைவிட்டு அமர்ந்திருப்பவரும், என்னிடம் கடுமையாக நடந்து கொள்பவரும், {உம்மைத் தவிர வேறு கதி இல்லாதவளான என்னை} எண்ணியுணராதவருமான உம்மைக் கணவராக அடைந்திருக்கும் நான் எந்த உலகத்திற்குச் செல்வேன்?[1](3) கணவனால் அடையப்படும் உலகங்களையே மனைவியும் அடைகிறாள் என நாம் கேள்விப்படுகிறோம். உண்மையில், உம்மைக் கணவராகப் பெற்ற நான் அடையாப்போகும் கதி யாது?" என்று கேட்டாள்.(4)
[1] "’அவிசக்ஷணம்’ என்பது குறைகளுடன் கூடிய தம்மைத் தவிர வேறொரு புகலிடமில்லாத மனைவியே இவ்வாறு கேள்வி கேட்பவள் என்று எண்ணி உணராத கணவர் என்ற பொருளைத் தரும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
இவ்வாறு கேள்வி கேட்கப்பட்டவரும், அமைதியான ஆன்மாவைக் கொண்டவருமான அந்தப் பிராமணர் புன்னகைத்தவாறே அவளிடம், "ஓ! அருளப்பட்ட மங்கையே, ஓ! பாவமற்றவளே, நீ சொல்லும் இந்த வார்த்தைகளால் நான் புண்படவில்லை.(5) பிறரின் உதவியுடன் செய்யப்படுபவதும், (செய்யப்படும் பெருந்திரள் தன்மையால்) காணப்படுபவதும் {கண்ணுக்குத் தெரிவதும்}, உண்மையானதுமான எந்தச் செயலும், செயல்களில் அர்ப்பணிப்புள்ள மனிதர்களால் செய்யப்படுகிறது[2].(6) ஞானம் இல்லாதவர்கள், தங்கள் செயல்களின் மூலம் திரிபுக்காட்சியையே {மாயையே} திரட்டுகின்றனர். ஒருக்கணமும் செயல்களில் இருந்து விடுதலை என்பது இவ்வுலகில் அடையப்பட முடியாததாகும்.(7) பிறப்பு முதல் வேறு வடிவம் அடைவது வரை, உடல், மனம் அல்லது வாக்கால் செய்யப்படும் நல்ல மற்றும் தீய வினைகளை அனைத்து உயிரினங்களும் செய்கின்றன.(8) (சோமச்சாறு மற்றும் ஆகுதிகளுக்கான நெய் போன்ற) புலப்படத்தக்கப் பொருட்களால் வகைப்படுத்தப்படும் அந்த (செயல்) பாதைகள் ராட்சசர்களால் அழிக்கப்பட்டதால், அவற்றில் இருந்து விலகி என் ஆன்மாவின் துணையுடன் உடலில் உள்ள இருக்கையைக் கண்டடைந்தேன்[3].(9) முரண்பட்ட இரட்டைகள் {இருமைகள்} அனைத்தையும் கடந்த பிரம்மம் வசிப்பது அங்கேயே, அக்னியுடன் கூடிய சோமன் இருப்பதும் அங்கேயே; அனைத்து உயிரினங்களையும் தாங்குபவனும், புத்தியைத் தூண்டுபவனுமானவனும் (வாயுவும்) அங்கே இருந்து நகர்ந்து கொண்டிருக்கிறான்[4].(10)
[2] "நான் நீலகண்டரைப் பின்பற்றுகிறேன். தெலங்க் அவர்கள் அர்ஜுன் மிஷ்ரா அவர்களைப் பின்பற்றி, (தீண்டல், காட்சி அல்லது கேள்வி முதலியவற்றால்) பற்றப்படும் எந்தச் செயலும் எனப் பொருள் கொள்கிறார். நீலகண்டரின் படி கிராஹ்யம் என்பது பிறரின் உதவியுடன் செய்யப்படும் தீக்ஷை முதலியவற்றைப் போன்ற செயல்களையே குறிப்பிடுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "கிரஹிக்கத்தக்கதும், பார்க்கத்தக்கதும், கேட்கத்தக்கதுமாக எந்தக் கர்மம் இருக்கிறதோ அதனையே கர்மஞ்செய்பவர்கள் ‘கர்மா, கர்மா’ என்று நிச்சயிக்கின்றனர்" என்றிருக்கிறது.[3] "இந்த இருக்கையானது, அவிமுகம் என்றழைக்கப்படுகிறது என்றும் அது கண் புருவங்களுக்கும், மூக்குக்கும் இடையில் இருக்கிறது என்றும் நீலகண்டர் சொல்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பார்க்கவும், கேட்கவும் கூடிய கர்மங்கள் ராக்ஷஸர்களால் கெடுக்கப்படும்போது அதனால் நான் (வைராக்யமடைந்து) ஆத்மாவுக்கு இருப்பிடமான ஓர் இடத்தைப் புத்தியினால் பார்த்துக் கொண்டேன்" என்றிருக்கிறது.[4] "இந்த இடத்தில் பிரம்மம் இருக்கிறது; இடங்கலை, பிங்கலை இருக்கின்றன; புத்தியைத் தூண்டுபவனும், உயிரினங்கள் அனைத்தையும் தாங்குபவனுமான வாயுவும் அங்கேயே இருக்கிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அவ்விடத்தில் ஸோமன், அக்னியுடன் வஸிக்கிறான். புத்தியைத் தூண்டுகிறவனும், பிராணிகளைத் தரிக்கிறவனுமான வாயு எப்போதும் ஸஞ்சாரம் செய்கிறான்" என்றிருக்கிறது.
பெரும்பாட்டனான பிரம்மனும், பிறரும் அந்த இருக்கையை அடைவதற்காகவே {இடத்திற்காகவே} யோகத்தில் குவிந்து அழிவற்றவனை வழிபடுகிறார்கள். கல்விமான்களும், சிறந்த நோன்புகளையும், அமைதியான ஆன்மாக்களையும் கொண்டவர்களும், புலன்களை முற்றாக வென்றவர்களுமான மனிதர்களும் அந்த இருக்கைக்காகவே முயற்சி செய்கிறார்கள்.(11) மணப்புலனால் {மூக்கால்} அதை {பிரம்மத்தை} நுகர இயலாது; நாவால் சுவைக்கவும் முடியாது; தீண்டல் புலன்களால் தொடவும் முடியாது. மனத்தால் மட்டுமே அஃது அடையப்படுகிறது.(12) கண்ணால் அதை வெல்ல முடியாது. கேள்விப் புலனை {காதுகளை} அது கடந்திருக்கிறது. மணம், சுவை, ஊறு, {ஒலி} மற்றும் வடிவம் ஆகிய குணங்களற்றதாக அஃது இருக்கிறது.(13) அதனிலிருந்தே நன்கு விதிக்கப்பட்ட அண்டம் எழுகிறது, மேலும், அதனிலேயே {பிரம்மத்தையே} அது {அண்டம்} நிலைத்துமிருக்கிறது. பிராணன், அபானன், சமானன், வியானன், உதானன் என்றழைக்கப்படும் உயிர்மூச்சுகள்,(14) அதனிலிருந்தே {பிரம்மத்திலிருந்தே} பாய்கின்றன, மேலும் அதற்குள்ளேயே அவை மீண்டும் நுழைகின்றன. பிராமணன் மற்றும் அபானன் என்ற மூச்சுகள், சமானன் மற்றும் வியானனுக்கிடையிலேயே நகர்கின்றன.(15) ஆன்மா உறங்கும்போது, சமானன் மற்றும் வியானன் ஆகிய இரண்டும் உள்ளீர்க்கப்படுகின்றன. அபானனுக்கும், பிராணனுக்கும் இடையில் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் நிலையில் உதானன் வசிக்கிறது.(16)
எனவே, பிராணனும், அபானனும், உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனைக் கைவிடுவதில்லை. இவ்வாறு உயிர்க் காற்றுகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் மூச்சானது உதானன் என்றழைக்கப்படுகிறது.(17) எனவே பிரம்மத்தை ஓதுபவர்கள் {பிரம்மவாதிகள்} என்னையே தங்கள் இலக்காகக் கொண்டு தவங்களைச் செய்கிறார்கள்[4]. ஒன்றையொன்று வழிங்கி உடலுக்குள் நகர்ந்து கொண்டிருக்கும் அந்த உயிர் மூச்சுகள் அனைத்திற்கும் மத்தியில் ஏழு தழல்களால் ஆன வைஸ்வாநரன் என்றழைக்கப்படும் நெருப்பு {அக்னி} சுடர்விட்டெரிகிறது. மூக்கு, நாக்கு, கண்கள், தோல், ஐந்தாவதாகக் காது,(18,19) மனம் மற்றும் புத்தி ஆகிய இந்த ஏழும் வைஸ்வாநரனுடைய தழலின் ஏழு நாவுகளாக விளங்குகின்றன. முகரத்தக்கது, காணத்தக்கது, பருகத்தக்கது {குடிக்கத்தக்கது}, தீண்டத்தக்கது, கேட்கத்தக்கது,(20) நினைக்கத்தக்கது, புரிந்து கொள்ளத்தக்கது ஆகிய இவையே எனக்கான ஏழு வகை விறகுகளாகின்றன. முகர்வது, உண்பது, காண்பது, தொடுவது, ஐந்தாவதாகக் கேட்பது,(21) நினைப்பது, புரிந்து கொள்வது ஆகிய இவையே ஏழு பெரும்புரோகிதர்களாகும்.(22)
[4] "உலக வாழ்வு உயிர் மூச்சுகளால் ஒழுங்கமைக்கப்படுகிறது. இவை ஆன்மாவுடன் பிசக்கப்பட்டு, தனிப்பட்ட வெளிப்பாடுகளுக்கு வழிவகுக்கின்றன. உதானன் உயிர் மூச்சுகள் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது. உதானன் தவத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்தத் தவமே மறுபிறப்பு சுழற்சிகளை அழித்து, பிரம்மத்திற்குள் உள்ளீர்க்கப்படும் நிலைக்கு வழிவகுக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "படுத்துக் கொண்டிருக்கும் புருஷனைப் பிராணனும் அபானனும் விடுகிறதில்லை. பிராணனைக் கெடுக்காத காரணத்தால் அதனை உதானனென்று சொல்லுகிறார்கள். ஆகையால், பிரம்மவாதிகள் தவத்தை அதனிடமிருந்து உண்டானதாக நிச்சயிக்கின்றனர்" என்றிருக்கிறது.
ஓ! அருளப்பட்டவளே, முகரத்தக்கது, பருகத்தக்கது, காணத்தக்கது, தீண்டத்தக்கது, கேட்கத்தக்கது, நினைக்கத்தக்கது, அறியத்தக்கது என்ற ஏழு நெருப்புகளில், ஏழு வழிகளில் ஏழு ஆகுதிகளை முறையாகக் கைவிடும் வேள்வி செய்பவர்களான கல்விமான்கள், அவற்றைத் தங்கள் கருவறைக்குள் உண்டாக்குகிறார்கள்[5]. பூமி, காற்று, ஆகாயம், நீர், ஐந்தாவதாக ஒளி,(23,24) மனம் மற்றும் புத்தி ஆகிய இவை ஏழும் (அனைத்துப் பொருட்களின்) கருவறைகள் என்றழைக்கப்படுகின்றன. வேள்விக் காணிக்கைகளாக அமையும் குணங்கள் அனைத்தும் நெருப்பில் பிறந்த குணத்திற்குள் நுழைகின்றன;(25) அந்த வசிப்பிடத்திற்குள் வசிக்கும் அவை தங்கள் தங்களுக்குரிய கருவறைகளில் மீண்டும் பிறக்கின்றன. அனைத்துப் பொருட்களையும் எது உண்டாக்குமோ அதில் அவை அழிவுக்காலம் வரை உள்ளீர்க்கப்பட்ட நிலையிலேயே நீடித்திருக்கும்.(26) அதிலிருந்தே மணம் உண்டாகிறது, அதிலிருந்தே சுவை உண்டாகிறது, அதிலிருந்தே நிறம் உண்டாகிறது, அதிலிருந்தே தீண்டலுணர்வு உண்டாகிறது;(27) அதிலிருந்தே ஒலி உண்டாகிறது, அதிலிருந்தே ஐயம் எழுகிறது, அதிலிருந்தே அழிவும் உண்டாகிறது. இவ்விதமாகவே இவை ஏழுவகைப் படைப்புகளாக அறியப்படுகின்றன.(28) இவ்வகையிலேயே இவையனைத்தும் பழங்காலத்தவர்களால் புரிந்து கொள்ளப்பட்டன. ஆகுதிகளின் முழுமையான மூன்று காணிக்கைகள் முழுமையடைந்து ஒளியால் நிறைகிறது[6]" என்றார் {பிராமணர்}.(29)
[5] "மகிழ்ச்சியைத் தரத்தக்க பொருட்களைக் கைவிடுபவர்களால் அவற்றைத் தாங்கள் விரும்பும்போது உண்டாக்கவும் முடியும். பூமியைத் தன் உட்பொருளாகக் கொண்ட மணத்தைக் கைவிடும் ஒருவனால், தான் விரும்பும்போது பூமியை உண்டாக்க முடியும் என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[6] பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஆகுதிகளின் முழுமையான காணிக்கை அவற்றை முழுமையாக்கி, சக்தியால் அவர்களை நிரப்புகிறது" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "மூன்று முழுமையான இறுதி ஆகுதிகளால் முழுமையடைந்தது ஒளியால் நிறைகிறது" என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "இவ்விதம் ஏழுவிதமான ஜன்மாவை அறிகிறார்கள். புராதனர்களான ரிஷிகள் இவ்விதமாகவே அறிந்து கொண்டிருக்கின்றனர். அவர்களோ (எங்கும்) நிறைந்த பிரம்மத்தின் ஆஹுதிகளால் நிறைந்தவர்களும், தேஜஸால் நிறைந்தவர்களுமாக இருக்கின்றனர்" என்றிருக்கிறது.
அஸ்வமேதபர்வம் பகுதி – 20ல் உள்ள சுலோகங்கள் : 28
ஆங்கிலத்தில் | In English |