Birth! | Aswamedha-Parva-Section-18 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 03)
பதிவின் சுருக்கம் : ஜீவன் கருவறையை அடைவது முதலியவற்றைக் குறித்துக் காசியபருக்குச் சொன்ன சித்தர்...
பிராமணர் {சித்தர் காசியபரிடம்}, "ஜீவன் செய்யும் நல்ல மற்றும் தீய செயல்கள் அழிவடைவதில்லை. உடலுக்குப் பின் உடலைப் பெறுவதன் மூலம் அந்தச் செயல்கள் அவற்றுக்குத் தொடர்புடைய கனிகளை {பலன்களை} உண்டாக்குகின்றன.(1) கனி சுமக்கும் மரம், விளைச்சலுக்கான காலம் வரும்போது, பெரும் அளவிலான கனிகளை விளைவிப்பத்தைப் போலவே, தூய இதயத்துடன் அடையப்படும் தகுதியும் {புண்ணியமும்}, (பேரின்பம் எனும்) பயிரைப் பெருமளவில் விளைவிக்கச் செய்யும்.(2) அதே போலவே, பாவம் நிறைந்த இதயத்துடன் செய்யப்படும் பாவம், துன்பமெனும் பெரும்பயிரை விளைவிக்கும். ஆன்மா (அல்லது ஜீவன்), மனத்தை மேலே கொண்டு செயல்படுமாறு தன்னிடமே சொல்லிக் கொள்கிறது.(3) ஜீவன், தான் செய்யும் செயல்கள் அனைத்துடன், காமம் மற்றும் கோபத்தில் மூழ்கி, கருவறைக்குள் எவ்வாறு நுழைகிறது என்பதைக் கேட்பாயாக.(4)
குருதியுடன் கலந்த உயிர்வித்தானது, பெண்களின் கருவறைக்குள் புகுந்து, (அவனது) நல்ல அல்லது தீய செயல்களின் மூலம் பிறந்த (ஜீவனின்) களமாகிறது.(5) அதன் நுட்பம் மற்றும் புலப்படா நிலை ஆகியவற்றின் விளைவால் ஜீவனானது, உடலுக்குப் பின் உடலை அடைந்தாலும் எதனுடனும் பற்று கொள்வதில்லை. எனவே, அது {ஜீவன்} நித்திய பிரம்மம் என்றழைக்கப்படுகிறது[1].(6) அதுவே (ஜீவன், அல்லது பிரம்மமே) உயிரினங்கள் அனைத்தின் வித்தாகிறது. அதன் விளைவாலேயே உயிரினங்கள் உயிருடன் வாழ்கின்றன. கருவில் பகுதி, பகுதியாக அனைத்து அங்கங்களிலும் நுழையும் ஜீவன், மனத்தின் குணத்தை ஏற்றுக் கொண்டும், பிராணனுக்குச் சொந்தமான பகுதிகள் அனைத்துக்குள்ளும் வசித்துக் கொண்டும் (உயிரை {வாழ்வை}) ஆதரிக்கிறது. இதன் விளைவாக மனத்துடன் கூடிய கருவானது தன் அங்கங்களை அசைக்கத் தொடங்குகிறது.(7,8)
[1] "நீலகண்டர் இந்தச் சுலோகத்தை முற்றிலும் வேறு வகையில் விளக்குகிறார். அவரைப் பொறுத்தவரையில், ‘நுட்பம் மற்றும் புலப்படா நிலையின் விளைவால் ஜீவன் எதனுடன் பற்றுக் கொள்ளாமல் இருக்கிறது. அதன் காரணமாக, பிரம்ம அறிவைக் கொண்ட ஒருவன், பிரம்மத்தை அறிந்தவனாகி, தன் விருப்பத்தின் பெரும் நோக்கத்தை அடைந்து, இவ்வாறாவதில் (அனைத்துப் பொருட்களில் இருந்தும் தொடர்பறுந்த நிலையை அடைவதில்) வெல்கிறான்’ என்ற பொருளைச் சொல்கிறார். இந்த விளக்கம் வலிந்து பெறப்படுவதாகத் தெரிகிறது.
உருக்கப்பட்ட இரும்பானது (வார்ப்புக்குள்) ஊற்றப்படும்போது, அந்த வார்ப்பின் வடிவைப் பெறுவதைப் போலவே, ஜீவனும் கருவை அடைந்து அவ்வாறே ஆகிறது.(9) இரும்புத்திரளுக்குள் நுழையும் நெருப்பானது, அதை வெகுவாகச் சுடுவதைப் போலவே, கருவில் வெளிப்படும் ஜீவனும் அவ்வாறே செய்கிறது என்பதை அறிவாயாக.(10) அறையில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கு (அதனுள் இருக்கும் அனைத்துப் பொருட்களையும்) கண்டுபிடிப்பதைப் போல, மனமும், உடலின் பல்வேறு அங்கங்களைக் கண்டுபிடிக்கிறது.(11) முந்தைய உடலில் ஜீவன் செய்யும் நல்ல அல்லது கெட்ட செயல்கள் எதனையும் நிச்சயம் அஃது அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ வேண்டும்.(12) அவ்வாறு அனுபவிக்கவும், சகித்துக் கொள்ளவும் செய்வதன் மூலம் முந்தைய செயல்கள் தீர்ந்து, ஜீவனானது, விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கும் தியானத்தில் உள்ள கடமைகளின் அறிவை அடைவதில் வெல்லும் வரை மீண்டும் மீண்டும் வேறு செயல்களைக் குவிக்கிறது.(13)
ஓ! மனிதர்களில் சிறந்தவனே, இதைப் பொறுத்தவரை, மீண்டும் மீண்டும் நிகழும் மறுபிறவி சுழற்சிகளின் போது, ஜீவனை மகிழ்ச்சியடையச் செய்யும் செயல்களைக் குறித்து நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(14) கொடைகள் {தானம்}, தவம் செய்வது {விரதம்}, பிரம்மச்சரியம், விதிக்கப்பட்டுள்ள விதிகளின்படி பிரம்மம் தரித்தல், தற்கட்டுப்பாடு, அமைதி, அனைத்து உயிரினங்களிடமும் கருணை,(15) ஆசைகளைக் கட்டுப்படுத்தல், கொடூரந்தவிர்த்தல், பிறருக்கு உரியதை அபகரிக்காமல் இருத்தல், போலியான செயல்கள் அனைத்தையும் மனத்தாலும் செய்யாதிருத்தல்,(16) தாய்க்கும், தந்தைக்கும் மதிப்புடன் தொண்டாற்றுதல், தேவர்களையும், விருந்தினர்களையும் கௌரவித்தல், ஆசான்களை வழிபடுதல், இரக்கம், தூய்மை, அனைத்து உறுப்புகளையும் நிலையாகக் கட்டுப்படுத்தல்,(17) நற்செயல்கள் அனைத்தையும் செய்தல் ஆகியவை நல்லொழுக்கமென அமைவதாகச் சொல்லப்படுகிறது. அத்தகைய ஒழுக்கத்திலிருந்தே உயிரினங்கள் அனைத்தையும் நிலையாகப் பாதுகாக்கும் அறம் எழுகிறது.(18) இத்தகைய ஒழுக்கத்தை நல்லோருக்கு மத்தியில் எப்போதும் ஒருவன் காணலாம். உண்மையில், அத்தகைய ஒழுக்கம் அங்கேயே நிலையாக வசிக்கிறது. அமைதியான ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்கள் செய்யும் நடைமுறைச் செயல்களே அறத்தைக் குறிக்கின்றன.(19) நிலையான அறமாக அமையும் நடைமுறைச் செயல்கள் அவர்களுக்கு மத்தியிலேயே வைக்கப்பட்டிருக்கின்றன. அறம் நோற்கும் ஒருவன் ஒருபோதும் துன்ப கதியை அடைய மாட்டான்.(20)
உலகமானது, அறத்தில் இருந்து வீழும்போது, நல்லோரின் ஒழுக்கத்தின் மூலமே அறப்பாதையில் {மீண்டும்} அது நிலைநிறுத்தப்படுகிறது. யோகியானவன் விடுதலையடைகிறான் {முக்தியடைகிறான்}, எனவே அவன் இவர்களை {நல்லோரை} விடவும் சிறந்தவனாக இருக்கிறான்.(21) நீதிமானாகச் செயல்படும் ஒருவன், தான் செய்ய வேண்டியவற்றை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிறப்பாக நீண்ட காலம் செய்து வரும்போதே உலகத்திலிருந்து அவன் வீடுபேறடைவது நிகழ்கிறது.(22) ஓர் உயிரினமானது தான் முந்தைய பிறவியில் செய்த செயல்களின் பலன்களை இவ்வாறே அடைகிறது. இந்தச் செயல்கள் அனைத்தும் காரணமாக அமைவதன் விளைவாகவே ஒருவன், தனது உண்மை வடிவில் இருந்து வேறு பட்ட நிலையில் இவ்வுலகை அடைகிறான்.(23) இந்தக் கேள்வியைப் பொறுத்தவரையில் இவ்வுலகில் ஐயமிருக்கிறது. (ஜீவனால்) ஓருடல் ஏற்கப்படுவது முதலில் எதனால் தீர்மானிக்கப்படுகிறது?(24)
உலகமனைத்துக்குப் பெரும்பாட்டனான பிரம்மன் முதலில் தன் உடலை அமைத்துக் கொண்டு, அதன்பிறகு, அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மூன்று உலகங்களையும் முழுமையாகப் படைத்தான்.(25) முதலில் தன்னுடலை ஏற்றப் பிறகே அவன் பிரதானத்தைப் படைத்தான். அனைத்தையும் எது மறைக்குமோ, உயர்ந்தது என அனைவரும் எதனை அறிந்தார்களோ அந்தப் பிரதானமே உடல்கொண்ட உயிரினங்கள் அனைத்தின் பொருள் காரணமாக அமைகிறது.(26) காணக்கூடிய இஃது {உடல்} அழியத்தக்கதென்றும், மற்றது {காணமுடியாத ஆன்மா} இறப்பற்றது மற்றும் அழிவில்லாதது என்றும் சொல்லப்படுகிறது. (காணப்படக்கூடிய) இது க்ஷரம் (அழியக்கூடியது) என்று சொல்லப்படுகிறது; எனினும், மற்றது {ஆன்மா} இறப்பற்றது (என்றும்) அக்ஷரம் (அழிவற்றது) என்றும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு புருஷனாலும் மொத்தமாகப் பகிர்ந்து கொள்ளப்பட்ட {உடல், ஆன்மா மற்றும் பிரம்மம் ஆகிய} இவை மூன்றும் {உடல் மற்றும் ஜீவன் என்ற} இருமையாக இருக்கின்றன[2].(27) முதலில் (உடல் கொண்ட வடிவில் தோன்றிக்) காணப்பட்ட பிரஜாபதி {பிரம்மன்}, (பிறகு) அடிப்படை பூதங்கள் அனைத்தையும், அசைவற்ற உயிரினங்கள் அனைத்தையும் படைத்தான். இதுவே பண்டைய கேள்வியாகும் {பழைமையான வேதமாகும்}.(28)
[2] "பரந்தவாமிர்தமாக்ஷரம் என்பது அமிர்தம் மற்றும் அக்ஷரத்தைக் குறிக்கிறது. முதல் வரியானது க்ஷரம், அல்லது பொருள் உறை அல்லது உடலைக் குறித்தும் அதன் பிறகு பரம் அல்லது மற்றது குறித்தும் பேசுகிறது. இதில் மற்றது என்பது அமிர்தம் அல்லது தூய்மையான நிலையில் இருக்கும் பிரம்மத்தைக் குறிக்கும் சுத்தீத சைத்தன்யம் என்றும், அக்ஷரம், அல்லது பொருள் உறையில் {உடலுக்குள்} இருக்கும் ஜீவன் என்ற இருவகைகளில் இருக்கிறது. இரண்டாவது வரியில் வரும் திரையம் என்பது க்ஷரம் {உடல்}, அமிர்தம் {பிரம்மம்} மற்றும் அக்ஷரத்தை {ஜீவனைக்} குறிக்கிறது. மிதுனம் என்பது இருமையாகும். ஒவ்வொரு புருஷனும் க்ஷரம் {உடல்} மற்றும் அக்ஷரம் {ஜீவன்} என்ற இருமையில் உண்டானவன் என்று இந்த ஸ்லோகம் சொல்கிறது. தெலங்க் அவர்கள் இந்தச் சுலோகத்தை முற்றிலும் வேறான வகையில் பொருள் கொண்டிருக்கிறார். அவர் திரையானம் என்பதை மொத்தமாகப் புறக்கணித்து மிதனும் என்பதை இணை (ஆண் மற்றும் பெண்) என்று குறிப்பதாகப் பொருள் கொள்கிறார். நான் கண்ட உரைகள் அனைத்தும் திரையானம் என்ற சொல்லைக் கொண்டிருக்கின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "இந்தச் சரீரமானது க்ஷரமென்றும், சரீரத்தைக் காட்டிலும் வேறானதும், அழிவற்றதுமான ஜீவன் அக்ஷரமென்றும் சொல்லப்படுகின்றன. சரீரம், ஜீவன், பிரம்மன் இம்மூன்றினுள் சரீரமும், ஜீவனும் முற்றும் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறாக இருக்கின்றன" என்றிருக்கிறது.
அதில் (உடலை ஏற்றுக் கொண்டதில்), காலம், பல்வேறு உயிரினங்களுக்கு மத்தியில் நிகழ்ந்த குடிபெயர்வுகள், மறுபிறவிகள் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் பெரும்பாட்டன் ஓர் எல்லையை விதித்தான்.(29) நுண்ணறிவு கொண்டவனும், தன் ஆன்மாவைக் கண்டவனுமான ஒரு மனிதன், முற்பிறவிகள் குறித்துச் சொல்வதைப் போலவே நான் சொல்வது அனைத்தும் முறையானவையும், சரியானவையுமாகும்.(30) இன்பமும், துன்பமும் நிலையில்லாதவை என்று சரியான பார்வையில் காண்பவனும், உடலைப் புனிதமற்ற திரட்டாகவும், அழிவை செயற்பாட்டு விதியாகவும் கருதுபவனும்,(31) சிறிய அளவிலான இன்பமும் கூட உண்மையில் துன்பமே என்பதை நினைவுகூருபவனுமான மனிதன், கடப்பதற்கு மிக அரிதான உலகம் சார்ந்த இடம்பெயர்வு எனும் இந்தப் பயங்கரப் பெருங்கடலை {ஸம்ஸரஸமுத்திரத்தைக்} கடப்பதில் வெல்வான்.(32) முதுமை, மரணம் மற்றும் நோயால் துன்புற்றாலும், பிரதானத்தைப் புரிந்து கொள்ளும் ஒருவன், நனவுநிலையுடன் கூடிய உயிரினங்கள் அனைத்தினுள்ளும் வசிக்கும் நனவுநிலையை {சைதன்யத்தைச்} சமமாகப் பார்ப்பான்.(33) பரம இருக்கையை {மேலான கதியை} நாடும் ஒருவன், (வேறு) பொருட்கள் அனைத்திலும் முற்றிலும் பாகுபாடற்றவனாக ஆகிறான். ஓ! மனிதர்களில் சிறந்தவனே, இது தொடர்பாக வாய்மைக்கு ஏற்புடைய வகையில் நான் உனக்கு ஞானத்தைப் போதிக்கப் போகிறேன்.(34) ஓ! கல்விமானான பிராமணா {காசியபா}, அந்த அழிவற்ற இருக்கையை {மேலான கதியை} நான் அறிவிக்கும்போது, சிறந்த ஞானமாக அமைவதை நீ முழுமையாகப் புரிந்து கொள்வாயாக" என்றார் {சித்தர்}.(35)
அஸ்வமேதபர்வம் பகுதி – 18ல் உள்ள சுலோகங்கள் : 35
ஆங்கிலத்தில் | In English |