Mind, speech and Jiva! | Aswamedha-Parva-Section-21 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 06)
பதிவின் சுருக்கம் : பத்துப் புலன்களின் குணங்களைக் குறித்தும், மனம், சொல் மற்றும் ஜீவனுக்கிடையில் நடந்த உரையாடலைக் குறித்தும் தமது மனைவிக்குச் சொன்ன பிராமணர்...
பிராமணர், "இது தொடர்பாகப் பின்வரும் பழங்கதை குறிப்பிடப்படுகிறது. பத்து ஹோத்ரிகளின் (ஹோதாக்களின் / வேள்விப்புரோகிதர்களின்) அமைப்பு {விதி} எவ்வகையானது என்பதைப் புரிந்து கொள்வாயாக.(1) ஓ! அழகியே, காதுகள், தோல், இரு கண்கள், நாவு, மூக்கு, இரு கால்கள், இரு கைகள், பிறப்புறுப்பு {உபஸ்தம் / உபத்தம்}, அடியில் உள்ள குதம் {பாயு} மற்றும் வாக்கு ஆகியனவே வேள்வி செய்யும் அந்தப் பத்துப் புரோகிதர்களாகும் {ஹோத்ரிகளாகும்}.(2) ஒலி {சப்தம்}, ஊறு {தீண்டல் / ஸ்பர்சம்}, நிறம் {ரூபம்}, சுவை {ரஸம்}, மணம் {கந்தம்}, வாக்கு, செயல், நடை, உயிர்வித்து {ரேதஸ்}, சிறுநீர், மலம் ஆகியவற்றை வெளியேற்றல் ஆகியவையே பத்து ஆகுதிகளாகும் {ஹவிஸுகளாகும்}.(3)
ஓ! அழகியே, திசைப் புள்ளிகள், காற்று {வாயு}, சூரியன், சந்திரன், பூமி {பிருதிவி}, நெருப்பு {அக்னி}, விஷ்ணு, இந்திரன், பிரஜாபதி மற்றும் மித்திரன் ஆகியவை பத்து (வேள்வி) நெருப்புகள் {அக்னிகள்} ஆகும்.(4) (அறிவு மற்றும் செயல்) புலன்கள் பத்தும் வேள்விப்புரோகிதர்கள் {ஹோத்ரிகள்}. ஆகுதிகள் பத்தாகும். ஓ! அழகியே மனமானது வேள்விக்கரண்டியாகவும், (வேள்வி செய்பவனால் செய்யப்பட்ட நல்ல மற்றும் தீய செயல்கள்) செல்வமாகவும் புலன்நுகர் பொருட்களே இந்தப் பத்து நெருப்புகளுக்குள் இடப்படும் விறகுகளாகவும் இருக்கின்றன[1],(5). எஞ்சியிருப்பது தூய்மையான உயர்ந்த ஞானமாகும். (ஞானத்திலிருந்து) இந்த அண்டமனைத்தும் வேறுபட்டவை என்று நாம் கேள்விப்படுகிறோம்.(6)
[1] "காதுகள் முதலியன வேள்வி நெருப்புக்குள் ஆகுதிகளை ஊற்றும் ஹோத்ரிகள் அல்லது வேள்விப் புரோகிதர்கள். இந்தப் புலன்களின் உணர்வுகளும் இயக்கமும் ஊற்றப்படும் ஆகுதிகள் அல்லது ஹவிகளாக இருக்கின்றன. திசைகள், காற்று முதலியன அவை ஊற்றப்படும் புனித நெருப்பு அல்லது அக்னியாகும். இந்த வாக்கியங்கள் 5ம் ஸ்லோகத்தில் மீண்டும் தொகுக்கப்படுகின்றன. ஸ்லோகம் 3ல் ஹவிஸ் அல்லது ஆகுதிகள் என்று முன்பே சொல்லப்பட்டு இருப்பவையும், நெருப்பில் இடப்பட்டு எரிபடப்போகிறவையும், இங்கே குறிப்பிடப்படும் புலன்நுகர் பொருட்களும் ஒன்றே" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஞானத்திற்குரிய பொருட்கள் அனைத்தும் மனமாகும். ஞானமானது (மனம் அதனுடன் பற்றில்லாதது என்பதை) உணர மட்டுமே செய்கிறது. நுட்பமான வடிவில் பொதியப்பட்டிருப்பவனான அறிபவன் (அல்லது ஜீவன்), உயிர்வித்தால் உண்டாக்கப்படுகிறது திரளுடலுக்குள் வசிக்கிறான்[2].(7) உடலைச் சுமப்பது {இதயம்} கார்ஹபத்ய நெருப்பு ஆகும். அதனிலிருந்து மற்றொன்று உண்டாகிறது. மனமானது ஆஹவனீய நெருப்பாகும். அதனுள்ளேயே காணிக்கை ஊற்றப்படுகிறது.(8) அதனிலிருந்தே வேதம் (அல்லது சொல்) உண்டானது; (அதனிலிருந்தே மனம் உண்டானது); (படைப்பை விரும்பும்) மனமானது தன்னை வேதத்தில் (அல்லது சொல்லில்) நிறுவி கொள்கிறது. அதன் பிறகு குறிப்பிட்ட நிறங்களில் வேறுபடும் வடிவம் (அல்லது நிறம்) எழுகிறது. அது மனத்தை நோக்கி ஓடுகிறது[3]" என்றார் {பிராமணர்}.(9)
[2] கும்பகோணம் பதிப்பில், "சித்தமானது ஸ்ருவமாகவும் (ஸம்ஸ்காரம் அல்லது புண்யபாபங்கள்) தனமாகவும், பரிசுத்தமான ஞானம் மிச்சமாகவும் இருக்கின்றன. ஞானத்தைக் காட்டிலும் வேறான இவை முந்தி ஜகத்தாக ஆயினவென்று கேள்வி" என்றிருக்கிறது.[3] "ஹிருதயம் அல்லது இதயமே கார்ஹபத்ய நெருப்பாகும். அதனிலிருந்து மனம் என்ற மற்றொரு ஆஹவனீய நெருப்பு உண்டாகிறது. இதயம் துளைக்கப்பட்டது. அதனிலிருந்து மனம் எழுந்தது, மனத்திலே சந்திரமாஸ் உதித்து என்பதே ஸ்ருதியின் அறிவிப்பு என நீலகண்டர் இங்கே விளக்குகிறார். ஆஹவனீய நெருப்பு அல்லது மனமானது வாயாகும். அஸ்யமாஹவனீயம் என்பது சுருதியாகும். உணவு அல்லது நெருப்பு அந்த வாய்க்குள் ஊற்றப்பட்டு வாக்காகவோ, சொல்லாகவோ எழுகிறது. வாசஸ்பதி என்பது வேதம் அல்லது சொல்லைக் குறிக்கும். முதலில் சொல் எழுகிறது, படைப்பை விரும்பும் மனமானது அதனில் தன்னை நிறுவி கொள்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஞானத்தை விரும்புகிறவன் எல்லாம் இந்தச் சித்தத்திலிருப்பதாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ரேதஸினால் உண்டான சரீரத்தில் அபிமானமுள்ளவனும், ஸூக்ஷ்மசரீரத்தில் அபிமானமுள்ளவனும் அறிபவனுமான ஜீவன் சரீரத்தில் இருக்கிறான். சரீராபிமானியான ஜீவன் ஹிருதயமென்னும் கார்ஹபத்தியாக்கினியாகிறான். அந்த அக்னியிலிருந்து ஆஹவனீயமென்னும் மனமாகி அக்னி உண்டாகிறது. அதில் ஹவிஸானது ஹோமம் செய்யப்படுகிறது. அதிலிருந்து வேதமென்னும் வாக்குஉண்டாயிற்று. அதை மனமானது பார்த்தது. (அதிலிருந்து) வர்ணமற்றதான பிராணவாயு உண்டாயிற்று. அது மனத்தை அனுஸரித்தது" என்றிருக்கிறது. இதன் அடிக்குறிப்பில், "ரேதஸ் சரீரமாக மாறுகிறது. அந்தச் சரீரத்தில் அதனைத் தரித்துக் கொண்டிருப்பவன், அறிவுள்ள ஜீவன் என்று கொள்ளலாம்" என்றிருக்கிறது.
அந்தப் பிராமணரின் மனைவி, "ஏன் சொல்லானது முதலில் எழுந்தது? மனத்தால் எண்ணப்பட்ட பின்னர் இருப்புக்குள் சொல் எழுந்ததைக் கண்ட பிறகு மனம் எழுந்ததேன்?(10) மதியானது (பிராணனானது) மனத்தில் புகலிடம் கொள்கிறது என்று எந்த அதிகாரத்தை {சாஸ்திர விதியைக்} கொண்டு சொல்லப்படுகிறது? மேலும், கனவற்ற உறக்கத்தில் {ஸுஷுப்தியில்} மனம் தனித்திருந்தாலும், பிராணனானது (அனைத்துப் பொருட்களையும்} உணர்வதில்லையே ஏன்? அப்போது அதைத் தடுப்பதெது?" என்று கேட்டாள்[4].(11)
[4] "கனவற்ற உறக்கத்தில் மனம் முற்றாக மறைகிறது. மனத்தைச் சார்ந்த பிராணன் இருக்கிறதென்றால், அப்போது பிராணனும் மறையாததேன்? மனம் இல்லாத போதே இருப்பில் உள்ள அது, மனத்தில் இருந்து தனிப்பட்ட ஒன்றாகவே காணப்படுகிறது. அவ்வாறு இருக்கிறது எனில், அஃது ஏன் பொருட்களை உணர்வதில்லை? அதன் புரிந்து கொள்ளும் சக்திகளைத் தடுப்பது எது எனப் பொருள் கொள்ள வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பிராமணர், "இத்தகைய தலைமைப் பண்பின் விளைவால் (பிராணனைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து) தலைவனாக இருக்கும் அபானக் காற்று {அபானவாயு}, அதனையும் {பிராணனையும்} தன்னைப் போலாக்குகிறது. (அபானனைப் போலவே ஆகும்) பிராணக் காற்றின் {பிராணவாயுவின்} கட்டுப்படுத்தப்பட்ட இயக்கமே மன இயக்கமெனச் சொல்லப்படுகிறது. எனவே மனமானது பிராணனைச் சார்ந்தே இருக்கிறது (பிராணனோ மனத்தைச் சார்ந்திருப்பதில்லை). எனவே, கனவற்ற உறக்கத்தில் மனம் மறைந்தாலும் பிராணன் மறைவதில்லை.(12) ஆனால், சொல் மற்றும் மனம் குறித்து நீ என்னிடம் கேட்பதால், அவற்றுக்கிடையில் நடந்த உரையாடலை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(13)
பருப்பொருளின் ஆத்மாவிடம் {ஜீவனிடம்} சென்ற சொல் {வாக்கு} மற்றும் மனம் ஆகிய இரண்டும், அவனிடம் {ஜீவனிடம்}, "எங்களில் மேன்மையானவர் யார் என்பதைச் சொல்வாயாக. ஓ! பலமிக்கவனே, எங்கள் ஐயத்தைக் களைவாயாக" என்றன[5].(14)
[5] "பூதாத்மானாம் என்பது பொதுவாகப் பிரஜாபதி என்று பொருள்படும். நீலகண்டரோ, இதற்கு ஜீவன் அல்லது சுயம் எனப் பொருள் கொள்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அச்சந்தர்ப்பத்தில், அந்தப் புனிதமானவன் {ஜீவன்}, "மனமே (மேன்மையானது) என்பதில் ஐயமில்லை" என்றான். அவனிடம் {ஜீவனிடம்} சொல்லானவள், "உன் விருப்பமனைத்தையும் நானே கனியச் செய்கிறேன்" என்றாள்[6].(15)
[6] "புலப்படக்கூடியவையும், புலப்படாதவையுமான விரும்பத்தக்க பயன்கள் சொற்களின் மூலமே அடையப்படுகின்றன. உண்மையில் சொல் என்றால் பொதுவான வாக்கையும், வேத மந்திரங்களையும் குறிக்கும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பிராமணர் {ஜீவனெனும் பிராமணன் சொல்லிடம் சொல்வது என்று கொள்ள வேண்டும்}, "அசைவது, அசையாதது என எனக்கு இரு மனங்கள் இருப்பதை அறிவாயாக. உண்மையில், அசையாதது என்னிடமுள்ளது; அசைவது உன் ஆளுகையில் இருக்கிறது[7].(16) உன் ஆளுகையில் இருப்பதாகக் குறிப்பிடப்படும் மந்திரம், எழுத்து, அல்லது குரல் வடிவில் உள்ளதே {சொல்லே} உண்மையில் அசையும் மனம் என்று சொல்லப்படுகிறது. எனவே, (புறப்பொருளுடன் மட்டுமே தொடர்புடைய மற்றொரு மனமான) நீயே {அசையும் மனமே} மேன்மையானவன்.(17) ஆனால், ஓ! அழகியே {சொல் எனும் அழகியே}, (அனைத்து விருப்பங்களையும் கனியச் செய்வதில்) நீ தானாகவே ஈடுபடுவதால், மூச்சை என்னுள் நிறைத்துக் கொண்டு நான் உன்னைச் சொல்கிறேன்[8].(18) சொல்லெனும் தேவி {சரஸ்வதியான நீ} எப்போதும் பிராணன் மற்றும் அபானனுக்கிடையிலே வசித்து வருகிறாள் {வருகிறாய்}. ஆனால், ஓ! அருளப்பட்டவளே, அபானனில் மூழ்கி, பிராணனிலிருந்து தொடர்பறுத்துக் கொள்வதன் விளைவால் மேல்நோக்கி உந்தப்படும் அவள் {நீ}, பிரஜாபதியிடம் {ஜீவனிடம்} ஓடிச் சென்று, "ஓ! புனிதமானவனே, என்னிடம் நிறைவு கொள்வாயாக" என்கிறாள் {என்றாய்}.(19) அப்போது பிராணன், சொல்லை வளர்த்தெடுத்து மீண்டும் தோன்றுகிறது. எனவே, சொல்லானவள், ஒருபோதும் எதையும் சொல்லாதவளாக ஆழ்ந்த மூச்சை வெளியிடுகிறாள்.(20) சொல்லானவள் எப்போதும் ஒலியுடனும், ஒலியில்லாமலும் பாய்கிறாள். அவை இரண்டில், ஒலியுடன் கூடிய சொல்லைக் காட்டிலும், ஒலியற்ற சொல்லே மேன்மையானவள்.(21) சிறந்த பாலைக் கொண்டுள்ள பசுவைப் போலவே (ஒலியற்ற சொல்லானவள்) பல்வேறு வகைப் பொருள்களைத் தருகிறாள். இவளே, பிரம்மத்தைச் சொல்லும் நித்தியத்தை (விடுதலையை {முக்தியை}) விளைவிக்கிறாள்" {என்றான் ஜீவன்}".(22) ஓ! அழகிய புன்னகை கொண்டவளே, சொல்லானவள், தெய்வீகமானது, தெய்வீகமற்றது என்ற தன்னிரு சக்திகளின் விளைவால் பசுவாகிறாள். சொல்லானவள் இவ்விரு நுட்பமான வடிவங்களில் பாய்வதில் உள்ள வேறுபாட்டைக் காண்பாயாக" என்றார் {பிராமணர்}[9][10].(23)
[7] "இங்கே பேசுபவர் பிராமணர். நீலகண்டரோ மனம் என்ற பெயர் கொண்ட பிராமணர் என இதை விளக்குகிறார். இத்தகைய ஞான விளக்கத்தைக் கொள்வதற்குப் பதிலாக, ஜீவனானது சொல்லிடம் சொன்ன சொற்களை மீண்டும் அந்தப் பிராமணரே சொன்னதாக நாம் கொள்ளலாம். அவர் ஜீவன் சொன்ன சொற்களை மீண்டும் சொல்கிறார். அசையாதன என்பது நீலகண்டரின் விளக்கத்தின்படி, புறப்புலன்களால் பற்றப்பட முடியாததாகும். மேலும், அசைவன என்பன புலன்களுக்கு அப்பாற்பட்ட சொர்க்கம் முதலியனவாகும். புறவுலகமானது, மனத்தின் வெளிப்பாடு மட்டுமே ஆகும் என்று இங்கே சொல்லப்படுகிறது. எனவே, புலன்களால் உண்டாகாமல் மனத்தில் உள்ள கருத்துகள் மட்டுமே அசையும் மனமாகும். அந்த மனமும் சொல்லை, அல்லது சாத்திரங்களைச் சார்ந்திருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். இது தொடர்புடைய கும்பகோணம் உரையை [9]ம் அடிக்குறிப்பில் காண்க.[8] "தெலங்க் அவர்கள் இதை வேறு வகையில் விளக்குகிறார். நான் இதை விளக்க முற்படாமல் சொல்லுக்குச் சொல் பெயர்த்திருக்கிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். இது தொடர்புடைய கும்பகோணம் உரையை [9]ம் அடிக்குறிப்பில் காண்க.[9] 16 முதல் 23ம் ஸ்லோகம் வரை உள்ளவற்றில் 23ம் சுலோகம் மட்டுமே நேரடியாகப் பிராமணர் தமது மனைவியிடம் சொல்லும் வாசகமாக இருக்கிறது. 16 முதல் 22 வரை [7] அடிக்குறிப்பில் கங்குலியே சொல்வது போல ஜீவனிற்கும், சொல்லுக்கும் இடையில் நடந்த உரையாடலாக இருக்கிறது. கங்குலியின் பதிப்பைப் படிக்கையில் இதில் குழப்பமேற்படலாம். எனவே 16 முதல் 23ம் ஸ்லோகம் வரை உள்ள இச்செய்திகளைக் கும்பகோணம் பதிப்பில் முழுமையாகப் பார்ப்போம். அது பின்வருமாறு: "மனமென்னும் {ஜீவனென்னும்} பிராமணர் அதை {வாக்கை} நோக்கி, ஸ்தாவரத்தையும், ஜங்கமத்தையும் என்னுடைய இரண்டு மனங்களாகத் தெரிந்து கொள். (அவைகளில்) ஸ்தாவரமானது என் வசத்திலும், ஜங்கமமானது உன் வசத்திலும் இருக்கின்றன. உனக்கு விஷயமாகும் மந்திரமும், வர்ணமும், ஸ்வரமும் ஜங்கமம் என்னும் மனமாகும். அதைக் காட்டிலும் நீ மேன்மை பெற்றவளாகிறாய். அழகாக இருப்பவளே, ஆகையால், நான் உன்னை அடைந்து க்ஷேமம் பெறத்தக்கவனாகிறேன். ஸரஸ்வதி, ஆகையால், தேறுதல் செய்து கொண்டு சொல்லுகிறேன். பெரிய பாக்கியமுள்ளவளே, பிராணனுக்கும், அபானனுக்கும் நடுவில் எந்த வாக்கானது எப்பொழுதும் இருக்கிறதோ அது ஸந்தோஷத்துடன் என்னையும், பிராணனையும் விட்டுவிட்டுப் பிரம்மாவினிடம் சென்று, "பகவானே, கிருபை செய்யும்" என்று சொல்லிற்று. பிறகு, மறுபடியும் வாக்கை விருத்தி செய்து கொண்டு பிராணன் உண்டாயிற்று. வாக்கானது அதனால் பிராணனை அடைந்து ஒருபோதும் பேசுகிறதில்லை. (அந்த வாக்கானது) கோஷிணியாகவும் {சப்தமுள்ளதாகவும்}, ஜாதநிர்க்கோஷையாகவும் {சப்தமில்லாததாகவும்} எப்பொழுதும் பிரவிர்த்திக்கிறது. அவ்விரண்டனுள்ளும் கோஷிணியைக் காட்டிலும் நிர்க்கோஷையே சிறந்ததாகும். உத்தமமாகப் பிரகாசிக்கும் கோஷிணியானது பசுவைப் போலச் சிறந்த பொருள்களைப் பெருக்குகிறது. உபநிஷத் வார்த்தையான இந்த நிர்க்கோஷையோ சாஸ்வதமும், நித்யஸித்தமுமான மோக்ஷத்தைக் கொடுக்கிறது. சுத்தமான சிரிப்புள்ளவளே, ஸூக்ஷ்மமும், முயற்சியுள்ளவைகளுமான வாக்கு, மனம் இவ்விரண்டினுக்குமுள்ள திவ்யமும் {தேவர்கள் முதலானவர்களை வரவழைக்கக் கூடிய ஸாமர்த்தியம் கொண்டது} அதிவ்யமுமான {வ்யவஹார முதலான ஸாமர்த்தியம் கொண்டது} பிரபாவத்தாலாகிய வேற்றுமையைப் பார்" என்றிருக்கிறது.[10] மேற்கண்ட [7], [8], மற்றும் [9]ம் அடிக்குறிப்புகளையும் மற்ற மன்மதநாததத்தர் மற்றும் பிபேக் திப்ராயின் பதிப்புகளையும் ஒப்புநோக்கி நான் புரிந்து கொண்டது பின்வருமாறு: பிராமணர் தமது மனைவியிடம்,"பிராண வாயுவைக் கட்டுப்படுத்தும் அபான வாயுவானது, பிராண வாயுவையும் தன்னைப் போலாக்கிறது. அபான வாயுவைப் போலவே ஆகும் பிராண வாயுவின் இயக்கமே மனம் என்று சொல்லப்படுகிறது. எனவே, மனமானது பிராண வாயுவைச் சார்ந்தே இருக்கிறது. எனவே மனம் எப்போதும் பிராண வாயுவைச் சார்ந்திருக்கிறது. பிராண வாயு ஒருபோதும் மனத்தைச் சார்ந்திருப்பதில்லை. இதனால்தான் கனவற்ற உறக்க நிலையில் மனம் மறைந்தாலும் பிராணன் மறைவதில்லை. ஆனால் சொல் மற்றும் மனம் குறித்து நீ என்னிடம் கேட்பதால், சொல்லுக்கும், மனத்திற்கும் இடையில் நடந்த சச்சரவை உனக்கு இப்போது சொல்லப் போகிறேன்.(12,13)ஜீவனிடம் சென்ற சொல்லானவளும், மனமானவனும், "எங்களில் மேன்மையானவர் யார் என்பதைச் சொல்வாயாக. ஓ! பலமிக்கவனே, இக்காரியத்தில் எங்கள் ஐயத்தைக் களைவாயாக" என்று கேட்டனர்.(14)அதற்கு ஜீவன், "மனமே மேன்மையானவன் என்பதில் ஐயமேதுமில்லை" என்று சொன்னான்.சொல்லானவள் ஜீவனிடம், "உன் விருப்பமனைத்தையும் நான்தானே உனக்குக் கனியச் செய்கிறேன்" என்றாள்.(15)ஜீவனானவன் சொல்லானவளை நோக்கி, "அசையும் மனம், அசையாத மனம் ஆகியவை என்னுடைய இரு மனங்கள் என்பதை அறிந்து கொள்வாயாக. அசையாத மனம் என்னிடமும், அசையும் மனம் உன் வசத்திலும் இருக்கின்றன.(16) மந்திரம், எழுத்து, குரல் வடிவில் சொல்லான உன்னிடம் உள்ள மனமே அசையும் மனமாகும். அசையும் மனத்தைக் காட்டிலும் சொல்லான நீ மேன்மையானவள்(17). ஓ! அழகியே, எனவேதான் ஜீவனான நான் நலம் பெறுவதற்காக உன்னை {சொல்லைச்} சொல்கிறேன்.(18) சொல்லெனும் தேவியே, நலமுடன் சொல்கிறேன், கேட்பாயாக. ஓ! புனிதமானவளே, பிராண வாயுவுக்கும், அபான வாயுவுக்கும் இடையில் உள்ள சொல்லான நீ ஜீவனான என்னையும், பிராண வாயுவையும் விரைவாக விட்டுவிட்டு மகிழ்வுடன் பிரம்மனிடம் சென்று, "என்னைக் காப்பீராக" என்று சொன்னாய்.(19) அதன்பிறகு பிராணன் வெளிப்பட்டுச் சொல்லான நீ பெருகினாய். அதாவது மூச்சை வெளியிடும்போது சொல்லான நீ வெளிப்பட்டாய்.(20) அதனால்தான் பிராண வாயுவை உள்ளிழுக்கும்போது எந்தச் சொற்களையும் ஒலிக்க முடிவதில்லை. சொல்லான நீ ஒலியுடையவளாகவும், ஒலியற்றவளாகவும் பாய்கிறாய். இவையிரண்டிலும் ஒலியற்றவளாகப் பாய்ந்து வரும்போது மேன்மையானவாளாக இருக்கிறாய்.(21) ஓ! நித்திய பிரம்மத்தைக் குறித்துச் சொல்பவளே, பெருமளவில் பாலைத் தரும் பசுவைப் போன்றவளாக எப்போதும் சிறப்பானளவளாக நீ இருக்கிறாய். ஓ! பாரதி, நீ பசுவைப் போன்றவளே ஆவாய்.(22) ஓ! அழகிய புன்னகை கொண்டவளே, தேவர்களையே வரவழைக்கும் தெய்வீக சக்தியையும், புறச் செயல்களைச் செய்யும் தெய்வீகமற்ற சக்தியையும் கொண்டவளாக நீ இருக்கிறாய். இவை இரண்டினுக்கும் இடையில் உள்ள நுட்பமான வேறுபாட்டைக் காண்பாயாக" {என்று சொல்லிடம் ஜீவன் சொன்னதாகப் பிராமணர் சொன்னார்}.(23) இந்தப் பகுதி உண்மையில் மிக நுட்பமானது. ஆழ்ந்த தியானத்திற்கு உரியது.
அதற்கு அந்தப் பிராமணரின் மனைவி, "பேச விரும்பினாலும், பழங்காலத்தில் {வாக்கியங்கள் உண்டாகாமல் இருந்ததால்} பேச முடியாதவளாக இருந்த சொல்லின் தேவி என்ன செய்தாள்?" என்று கேட்டாள்.(24)
பிராமணர், "பிராணனால் உடலில் உண்டான சொல்லானவள், பிறகு பிராணனில் இருந்து அபானனை அடைந்தாள். பிறகு உதானனாக மாறி, உடலைவிட்டு வெளியேறி, வியானனைக் கொண்டு அனைத்துப் புறங்களையும் சூழ்ந்தாள்.(25) அதன் பிறகு அவள் சமானனில் வசித்தாள். இவ்வகையிலேயே முற்காலத்தில் சொல்லானவள் பேசினாள். மனமானவன் அசைவில்லாதவனாக இருப்பதன் விளைவால் சிறப்படைகிறான். அசைவுள்ளவளாக இருப்பதன் விளைவால் சொல்லின் தேவியும் சிறப்படைகிறாள்" என்றார் {பிராமணர்}.(26)
அஸ்வமேதபர்வம் பகுதி – 21ல் உள்ள சுலோகங்கள் : 26
ஆங்கிலத்தில் | In English |