Mind and the attributes of senses! | Aswamedha-Parva-Section-22 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 07)
பதிவின் சுருக்கம் : மனத்துக்கும், புலன்களுக்கும் இடையில் நடந்த உரையாடலைத் தமது மனைவிக்குச் சொன்ன பிராமணர்...
பிராமணர், "ஓ! அருளப்பட்டவளே, வேள்விப்புரோஹிதர்கள் எழுவரின் அமைப்பு {விதி} எத்தகையது என்பது தொடர்பாக ஒரு பழங்கதைச் சொல்லப்படுகிறது.(1) மூக்கு {க்ராணம்}, கண்கள் {சக்ஷுஸ்}, நாவு {ஜிஹ்வை}, தோல் {துவக்கு}, ஐந்தாவதாகக் காதுகள் {ஸ்ரோத்ரம்}, மனம் மற்றும் புத்தி ஆகியவை ஒன்றுக்கொன்று மாறுபட்ட தனித்துவம் கொண்ட ஏழு வேள்விப்புரோஹிதர்களாகும்.(2) நுட்பமான வெளியில் வசிக்கும் அவை ஒன்றையொன்று காண்பதில்லை. ஓ! அழகியே, இந்த ஏழு வேள்விப் புரோஹிதர்களையும் அதனதன் இயல்பின்படி அறிந்து கொள்வாயாக" என்றார்.(3)
அதற்கு அந்தப் பிராமணரின் மனைவி, "நுட்பமான வெளியில் இருக்கும் இவை ஒன்றையொன்று காணாமல் இருப்பதெவ்வாறு? ஓ! புனிதமானவரே, அவற்றின் (அவை ஒவ்வொன்றின்) இயல்புகள் என்னென்ன? ஓ! தலைவா, இவற்றை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டாள்.(4)
பிராமணர், "(எந்தப் பொருளின்) குணங்களையும் அறியாதிருப்பது, (அந்தப் பொருளைக் குறித்த) அறியாமையே {அவிஜ்ஞானம்} ஆகும்; அதே வேளையில், அந்தக் குணங்களை அறிவது அறிவாகும் (அறிவு {அபிஜ்ஞதை} என்று அழைக்கப்படுகிறது). இந்த ஏழில் எந்த ஒன்றும் மற்றொன்றின் குணங்களை அறிவதிலோ, புரிந்து கொள்வதிலோ ஒருபோதும் வெல்வதில்லை.(5)
நாக்கு, கண்கள், காதுகள், தோல், மனம் புத்தி ஆகியன மணங்களை உணர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. மூக்கு மட்டுமே அவற்றை உணர்கிறது.(6) மூக்கு, கண்கள், காதுகள், தோல், மனம் மற்றும் புத்தி ஆகியன சுவைகளை உணர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. நாக்கு மட்டுமே அவற்றை உணர்கிறது.(7) மூக்கு, நாக்கு, காதுகள், தோல், மனம் மற்றும் புத்தி ஆகியன நிறங்களை உணர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. கண்கள் மட்டுமே அவற்றை உணர்கின்றன.(8) மூக்கு, நாக்கு, கண்கள், காதுகள், புத்தி மற்றும் மனம் ஆகியன தீண்டல் உணர்வுகளை உணர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. தோல் மட்டுமே அவற்றை உணர்கிறது.(9) மூக்கு, நாக்கு, கண்கள், தோல், மனம் மற்றும் புத்தி ஆகியன ஒலிகளை உணர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. காதுகள் மட்டுமே அவற்றை உணர்கின்றன.(10) மூக்கு, நாக்கு, கண்கள், தோல், காதுகள் மற்றும் புத்தி ஆகியன ஐயங்களை உணர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. மனம் மட்டுமே அவற்றை உணர்கிறது.(11) மூக்கு, நாக்கு, கண்கள், தோல், காதுகள் மற்றும் மனம் ஆகியன (உறுதியான அறிவைத்) தீர்மானிக்கும் உணர்வுகளை உணர்வதில் ஒருபோதும் வெல்வதில்லை {அவை ஒரு தீர்மானத்தை அடைவதில்லை}. புத்தி மட்டுமேஅவற்றை உணர்கிறது {புத்தியே தீர்மானிக்கிறது}.(12)
ஓ! அழகிய மங்கையே, இது தொடர்பாகப் புலன்களுக்கும், மனத்திற்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட இந்தப் பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(13)
மனம், "நானில்லாமல் மூக்கு நுகர்வதில்லை. (நானில்லாமல்) நாக்கானது சுவையை உணர்வதில்லை. நான் இல்லாதபோது, கண்கள் நிறத்தைப் பற்றுவதில்லை, தோல் தீண்டலை உணர்வதில்லை,(14) காதுகள் ஒலியை உணர்வதில்லை. நான் நித்தியமானவனாகவும், பூதங்கள் அனைத்திலும் முதன்மையானவனாகவும் இருக்கிறேன்.(15) வசிப்பதற்கு யாருமில்லாத வெற்று வசிப்பிடங்களைப் போலவும், தழல்கள் தணிக்கப்பட்ட நெருப்பைப் போலவும், நானில்லாத போது புலன்கள் ஒருபோதும் ஒளிர்வதில்லை.(16) ஈரமானவையும், உலர்ந்தவையுமாக உள்ள விறகுகளை (நெருப்பை மூட்டத் தவறுவதைப்) போல, நான் இல்லாமல் புலன்கள் முயன்றாலும், குணங்களையும், பொருள்களையும் உணர்வதில் அனைத்து உயிரினங்களும் தவறுகின்றன[1]" என்றது {மனம்}.(17)
[1] கும்பகோணம் பதிப்பில், "நான் எல்லாப் பூதங்களுள்ளும் மிகச் சிறந்தவனும், ஸனாதனனுமாக இருக்கிறேன். ஜனங்களில்லாத வீடுகள் போலவும், ஜ்வாலை தணிந்த அக்னிகள் போலவும் நானில்லாத இந்திரியங்கள் ஒருபோதும் பிரகாசிக்கிறதில்லை. நானில்லாவிட்டால் எல்லாப்பிராணிகளும் முயற்சியுள்ளவைகளான இந்திரியங்களாலும், குணங்களென்னும் விஷயங்களை ஈரமுள்ளவையும், உலர்ந்தவையுமாயிருக்கிற விறகுகள் (ஒன்றையும் அறியாததுபோல) அறிகிறதில்லை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நான் இல்லாமல் புலன்கள் ஒருபோதும் ஒளிர்வதில்லை. வேள்வி நெருப்பின் தழல்கள் அணைக்கப்பட்ட வெறுமையான வீட்டைப் போலவே அவை இருக்கும். நான் இல்லாமல் எந்த உயிரினத்தாலும் குணங்களின் பொருளை புரிந்து கொள்ள முடியாது. அவ்வுயிரினங்கள் முயன்றாலும், உலராத ஈர விறகைப் போலவே அவற்றின் புலன்கள் இருக்கும்" என்றிருக்கிறது.
இச்சொற்களைக் கேட்ட புலன்கள் {இந்திரியங்கள்}, "உண்மையில், நாங்களோ, எங்கள் பொருட்களோ இல்லாமல் உன்னால் இன்பங்களை அனுபவிக்க முடியுமென்றால் இக்காரியத்தில் நீ நினைப்பதே உண்மையாக இருக்கும்[2].(18) நாங்கள் அழிந்த பிறகு, நிறைவும், உயிர்த்தரிப்பும், உன் இன்பங்களும் தொடருமானால் நீ நினைப்பதே உண்மையாகும்;(19) நாங்கள் அழிந்து, பொருள்கள் இருந்து எங்கள் துணையின்றி உன் விருப்பத்தால் மட்டுமே உன்னால் அவற்றை அனுபவிக்க முடியுமென்றால், நீ நினைப்பதே உண்மையாகும்.(20) மேலும், எங்கள் பொருள்களின் மீது உனக்கு முழுமையான அதிகாரம் இருக்கிறதென நீ கருதினால், நிறத்தை மூக்கின் மூலமாகவும், சுவையைக் கண்களின் மூலமாகவும் உணர்வாயாக.(21) மணத்தைக் காதுகளின் மூலமாகவும், தீண்டலை நாவின் மூலமாகவும் உணர்வாயாக. மேலும் ஒலிகளைத் தோலின் மூலமாகவும், தீண்டலைப் புத்தியின் மூலமாகவும் உண்ர்வாயாக.(22) பலம் நிறைந்தவர்கள் எந்த விதிகளின் ஆளுகையையும் ஏற்பதில்லை. விதிகள் பலவீனமானவர்களுக்காக மட்டுமே இருக்கின்றன. இதற்கு முன் அனுபவிக்கப்படாத இன்பங்களைப் பற்றுவாயாக; (பிறரால்) முன்பே சுவைக்கப்பட்டவற்றில் இன்புறுவது உனக்குத் தகாது.(23)
[2] கும்பகோணம் பதிப்பில், "(மனமே) நாங்களில்லாமல் நீ எங்களுடைய விஷயங்களாகிற போகங்களை அனுபவிப்பாயானால், நீ எண்ணியபடி இஃது இவ்விதமே உண்மையாகும்" என்றிருக்கிறது.
சுருதிகளுக்காக (அவற்றை அடைவதற்காக) ஆசானை நாடி, ஸ்ருதிகளை அடைந்த பிறகு (அவற்றின் விதிகளைப் பின்பற்றுவதன் மூலம்) அவை சொல்லும் கருத்துகளில் வசிக்கும் சீடனைப் போலவே,(24) கடந்த காலத்திலோ, எதிர்காலத்திலோ, உறக்கத்திலோ, விழிப்புநிலையிலோ எங்களால் காட்டப்படும் பொருட்களை உன்னுடையவையென நீ கருதுகிறாய்.(25) மேலும், புத்தி குறைந்த உயிரினங்களின் மனம் திசைத்திரும்பி உற்சாகமற்றதாக இருக்கும்போதும் நாங்கள் எங்கள் பொருள்களில் இயக்கத்தை வெளிப்படுத்தி அவற்றின் {அந்த உயிரினங்களின்} உயிரைத் தாங்கிப் பிடிப்பதும் காணப்படுகிறது[3].(26) ஓர் உயிரினம், கனவுகளில் ஈடுபட்டு, எண்ணற்ற நோக்கங்களை அமைத்துக் கொண்டாலும், அஃது அனுபவிக்கும் விருப்பத்தால் பீடிக்கப்படும்போது, புலன்நுகர் பொருட்களிடம் மட்டுமே ஓடுவதும் காணப்படுகிறது[4].(27) மன நோக்கங்களை மட்டுமே சார்ந்தவையும், உண்மையான புலன் நுகர் பொருட்களின் தொடர்பற்றவையுமான இன்பங்களுக்குள் ஒருவன் நுழையும்போது, விறகு தீர்ந்ததும் தூண்டப்பட்ட நெருப்பைப் போல உயிர்மூச்சுகள் தீர்ந்து அவன் மரணத்தையே சந்திக்கிறான்[5].(28) நாங்கள் எங்களுக்குரிய குணங்களின் தொடர்புடையவர்களாக இருக்கிறோம் என்பது உண்மையே; எங்களில் ஒன்று மற்றொன்றின் குணங்களை அறியாதிருக்கிறோம் என்பதும் உண்மையே. ஆனால், நாங்கள் இல்லாமல் உன்னால் ஒன்றையும் உணர முடியாது. நாங்கள் இல்லாமல் உனக்கு இன்பமேதும் கிடையாது" என்றன {புலன்கள்}.(29)
[3] "சீரற்ற மனத்தை உயிரினங்கள் கொண்டிருந்தாலும், இவ்வாறு எங்களின் மூலம் அவை தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்கின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[4] "மனம் சார்ந்த நோக்கங்களும் கனவுகள் அவனை நிறைவடையச் செய்வதில் தவறுகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[5] கும்பகோணம் பதிப்பில், "பாஹ்யேந்திரியங்களில்லாதது போலிருக்கும் ஹிருதயாகாசத்தில் நாள்தோறும் பிரவேசித்து ஸங்கல்ப போகங்களென்னும் விஷயங்களை அனுபவியாமல் மனம் லயமடைந்திருக்கும்போது ஜ்வலிக்கின்ற அக்னியானது விறகு இல்லாதபோது தணிவது போலச் சாந்தியை அடைகிறான்" என்றிருக்கிறது.
அஸ்வமேதபர்வம் பகுதி – 22ல் உள்ள சுலோகங்கள் : 29
ஆங்கிலத்தில் | In English |