Five life winds! | Aswamedha-Parva-Section-23 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 08)
பதிவின் சுருக்கம் : பிராணன், அபானன் முதலிய ஐந்து உயிர்க்காற்றுகளின் சிறப்பைக் குறித்த உரையாடலைத் தமது மனைவிக்குச் சொன்ன பிராமணர்...
பிராமணர், "ஓ! அருளப்பட்ட மங்கையே, ஐந்து வேள்விப் புரோஹிதர்களின் அமைப்பு {விதி} எத்தகையது என்பது தொடர்பாக இந்தப் பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(1) பிராணன், அபானன், உதானன், சமானன் மற்றும் வியானன் ஆகியவையே ஐந்து வேள்விப்புரோஹிதர்கள் என்பதைப் பெருங்கோட்பாடாகக் கல்விமான்கள் அறிகிறார்கள்" என்றார்.(20)
அதற்கு அந்தப் பிராமணரின் மனைவி, "இயற்கையாக ஏழு வேள்விப் புரோஹிதர்கள் இருப்பதாக முன்னர் நான் எண்ணியிருந்தேன். உண்மையில் வேள்விப் புரோஹிதர்களின் எண்ணிக்கை ஐந்தானதைக் குறிக்கும் பெருங்கோட்பாட்டை எனக்கு அறிவிப்பீராக" என்று கேட்டாள்.(3)
பிராமணர், "பிராணனால் பேணப்படும் காற்றானது {வாயுவானது} பின்னர் அபானனாகப் பிறக்கிறது. அபானனால் பேணப்படும் காற்றானது வியானனாகப் பெருகுகிறது.(4) வியானனால் பேணப்படும் காற்றானது உதானனாகப் பெருகுகிறது. உதானனால் பேணப்படும் காற்றானது பின்னர்ச் சமானனாக உண்டாகிறது.(5) நல்லவையான அவை பழங்காலத்தில் முதல் பிறவியான பெரும்பாட்டனிடம், "எங்களில் முதன்மையானவர் யார் என்பதைச் சொல்வீராக. {நீர் குறிப்பிடும்} அந்த நபரே எங்கள் தலைவன் ஆகட்டும்" என்றன.(6)
பிரம்மன், "(உங்களில்) எவன் அழிந்தால் உயிரினங்களின் உடல்களில் உள்ள உயிர் மூச்சுகள் அனைத்தும் அழிவடையுமோ, எவனுடைய நகர்வால் அவை நகருமோ அவனே உங்களில் முதன்மையானவன் ஆவான். நீங்கள் விரும்பிய இடத்திற்குச் செல்வீராக" என்றான்.(7)
பிராணன், "நான் அழிந்ததும், உயிரினங்களில் உடல்களில் உள்ள உயிர் மூச்சுகள் அனைத்தும் அழிவடைகின்றன. நான் அசைவதால் அவை மீண்டும் அசைகின்றன. (எனவே) நானே முதன்மையானவன். இதோ அழியப்போகிறேன் பார்ப்பீர்களாக" என்றான் {பிராணன்}".(8)
பிராமணர் தொடர்ந்தார், "பிறகு பிராணன் அழிந்து மீண்டும் நகரத் தொடங்கியது. அப்போது, ஓ! அருளப்பட்டவளே, சமானனும், உதானனும் இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்,(9) "நாங்கள் இவை அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பதைப் போல நீ இங்கே வசிப்பதில்லை. ஓ! பிராணனே, நம்மில் நீ முதன்மையானவன் அல்ல. அபானன் மட்டுமே உன் ஆளுகைக்குள் இருக்கிறான். மீண்டும் பிராணன் இயங்கத் தொடங்கியதும், அவனிடம் அபானன் பேசினான்.(10)
அபானன், "நான் அழிவடையும் போது, உயிரினங்களின் உடல்களில் உள்ள உயிர் காற்றுகள் அனைத்தும் அழிவடைகின்றன. நான் திரியும்போது அவை மீண்டும் திரிகின்றன. எனவே, நானே முதன்மையானவனாவேன். இதோ அழியப் போகிறேன் பார்ப்பீர்களாக " என்றான் {அபானன்}".(11)
பிராமணர் தொடர்ந்தார், "வியானன் மற்றும் உதானன் ஆகிய இருவரும், இவ்வாறு சொன்ன அபானனிடம், "ஓ! அபானா, நீ முதன்மையானவனல்ல. பிராணன் (மட்டுமே) உன் ஆளுகையின் கீழ் இருப்பான்" என்றனர். பிறகு அபானன் நகரத் தொடங்கியது.(12)
வியானன் மீண்டும் அவனிடம் {அபானனிடம்}, "(உயிர்க் காற்றுகள்) அனைத்திலும் நானே முதன்மையானவன். அதற்கென்ன காரணம் என்பதைக் கேட்பாயாக.(13) நான் அழிவடையும்போது, உயிரினங்களின் உடல்களில் உள்ள உயிர்க்காற்றுகள் அனைத்தும் அழிவடைகின்றன. நான் நகரும் போது, அவை மீண்டும் நகர்கின்றன. (எனவே) நானே முதன்மையானவனாவேன். இதோ நான் அழியப் போகிறேன், பார்ப்பாயாக" என்றான் {வியானன்}".(14)
பிராமணர் தொடர்ந்தார், "பிறகு வியானன் அழிவடைந்து மீண்டும் நகரத் தொடங்கினான். பிராணன், அபானன், உதானன் மற்றும் சமானன் ஆகியோர் இதற்கு,(15) "ஓ! வியானா, நம்மில் நீ முதன்மையானவன் அல்ல. சமானன் (மட்டுமே) உன் ஆளுகையின் கீழ் இருக்கிறான்" என்றனர்.
வியானன் நகரத் தொடங்கியதும், சமானன் அவனிடம் {வியானனிடம்},(16) "நானே உங்கள் அனைவரிலும் முதன்மையானவன் ஆவேன். அதற்கு என்ன காரணம் என்பதைக் கேட்பாயாக. நான் அழிவடையும்போது, உயிரினங்களின் உடல்களில் உள்ள உயிர்க்காற்றுகள் அனைத்தும் அழிவடைகின்றன. நான் நகரும் போது, அவை மீண்டும் நகர்கின்றன. எனவே, நானே முதன்மையானவன். இதோ நான் அழியப் போகிறேன் பார்ப்பாயாக" என்றான் {சமானன்}.(17)
சமானன் நகரத் தொடங்கியதும்,[1] உதானன் அவனிடம் {சமானனிடம்}, "உயிர்க்காற்றுகள் அனைத்திலும் நானே முதன்மையானவன் ஆவேன். அதற்குக் காரணம் என்னவென்பதைக் கேட்பாயாக.(18) நான் அழிவடையும்போது, உயிரினங்களின் உடல்களில் உள்ள உயிர்க்காற்றுகள் அனைத்தும் அழிவடைகின்றன. நான் நகரும் போது, அவை மீண்டும் நகர்கின்றன. எனவே, நானே முதன்மையானவன். இதோ நான் அழியப் போகிறேன் பார்ப்பாயாக" என்றான் {உதானன்}.(19)
[1] வியானன் மட்டுமே சமானனின் கட்டுப்பாட்டில் இருக்கிறான் என்று மற்ற வாயுக்கள் சொன்னதாக இங்கே சொல்லப்படவில்லை. கும்பகோணம் பதிப்பில், "பிறகு, ஸமானன் லயமடைந்தது; மறுபடியும் ஸஞ்சரித்தது. பிராணனும், அபானனும், உதானனும், வியானனும் அந்த ஸமானனை நோக்கி, "ஸமான! நீ சிறந்தவனல்லன். வியானன்தான் உன் வசத்திலிருக்கிறான்" என்றன" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இவ்வரிகள் இருக்கின்றன.
உதானன் அழிந்து, மீண்டும் நகரத் தொடங்கினான். அப்போது பிராணன், அபானன், சமானன் மற்றும் வியானன் ஆகியோர் அவனிடம், "ஓ! உதானா, நம்மில் நீ முதன்மையானவன் அல்ல. வியானன் (மட்டுமே) உன் ஆளுகையின் கீழ் இருப்பான்" என்றனர்".(20)
பிராமணர் தொடர்ந்தார், "அவ்வாறு திரண்டிருந்த அவர்களிடம் உயிரினங்களின் தலைவனான பிரம்மன், "நீங்கள் அனைவரும் சிறப்புள்ளவர்களாகவும், சிறப்பில்லாதவர்களாகவும் இருக்கிறீர்கள். உங்கள் அனைவரிலும் ஒருவர் மற்றொருவரின் குணத்தைப் பெற்றிருக்கிறீர்கள்.(21) நீங்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்குரிய வட்டங்களில் முதன்மையானவர்களாகவும், ஒருவர் மற்றொருவரின் குணங்களைக் கொண்டவர்களாகவும் இருக்கிறீர்கள்" என்றான்.
இவ்வாறே அனைத்து உயிரினங்களின் தலைவன் அங்கே கூடியிருந்த அவர்களிடம் சொன்னான்,(22) "ஒருவன் நிலையாக இருப்பவன்; மற்றொருவன் நகர்பவன். சிறப்புக் குணங்களின் விளைவால் உயிர்க்காற்றுகள் ஐவரும் நகர்கின்றனர். என் தன்மை ஒன்று. அந்த ஒன்றே பல்வேறு வடிவங்களை ஏற்கிறது {ஒருவன் மற்றொருவனுக்கு ஆத்மாவாக இருந்து பல வகைகளில் பெருகுகிறான்}.(23) நீங்கள் ஒருவருக்கொருவர் நட்பாகவும், ஒருவரையொருவர் நிறைவடையச் செய்பவர்களாகவும் ஆகி அமைதியாக விடைபெற்றுக் கொள்வீராக. நீங்கள் அருளப்பட்டிருப்பீராக, நீங்கள் ஒருவரையொருவர் தாங்குவீராக" {என்றான் பிரம்மன்}".(24)
அஸ்வமேதபர்வம் பகுதி – 23ல் உள்ள சுலோகங்கள் : 24
ஆங்கிலத்தில் | In English |